Thursday, October 25, 2012

காவேரி நதி நீரும் நம் கடமைகளும்

                                                                                                                     -சாவித்திரிகண்ணன்
 
காவேரி டெல்டா பகுதிகள் வற்றிவரண்டு காய்ந்து கொண்டுள்ளன...
ஏமாற்றம், துரோகம், அக்கிரமம்... என அவரவர் மனநிலை சார்ந்து ஆதங்கங்கள் வெளிப்படுகின்றன.
 
குறுவை சாகுபடி பொய்த்து, அறுவடையாக வேண்டிய 5லட்சம் டன் நெல் அம்போவானது! இனி சம்பா சாகுபடியும் சாத்தியமில்லாமல் போனால் 'சாகும்படி' விவசாயிகளை தற்கொலைக்கு தூண்டிய பாவத்தைத் தான் மத்திய, மாநில அரசுகள் ஏற்க வேண்டும். ஆண்டுக்காண்டு காவேரி பிரச்சினை தமிழகத்தை அதிக அளவு அச்சுறுத்தி வருகிறது.
 
காவேரி நதிநீர் கேட்டு நாம் நாற்பதாண்டுகளுக்கும் மேல் பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளோம். உச்சநீதிமன்றங்களின் கதவுகளை மீண்டும், மீண்டும் தட்டிக்கொண்டிருக்கிறோம். நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது. அதில் இடைக்காலத் தீர்ப்பும், இறுதித்தீர்ப்பும் வழங்கப்பட்டன. எதுவும் நடக்கவில்லை. மீண்டும் மத்திய அரசு, காவேரி நதி நீர் அணையம், பிரதமர், உச்சநீதிமன்றம்.... எல்லா தலையீடுகள் நிகழ்ந்தும் பலனில்லை.
 
கடைசியாக கிடைத்த உச்சநீதிமன்ற ஆணையால் கர்நாடகத்தில் கொந்தளிப்பு ஏற்பட்டு, வழங்கப்பட்டு வந்த ஓரளவு தண்ணீரும் ஒரேயடியாக நிறுத்தப்படும் நிலை தோன்றியுள்ளது. இந்த நிலையில் மத்திய அரசும், உச்சநீதிமன்றமும் இனியும் கர்நாடகாவிற்கு அழுத்தம் தருவதும், அப்படியே தந்தாலுமே கூட தண்ணீர் திறந்துவிடப்படுவதும் சந்தேகமே!
 
இந்த சந்தர்பத்திலாவது நாம் நம்மை சற்று சுயபரிசோதனைக்கு ஆட்படுத்தி, இனி நாம் செய்யவேண்டியது என்ன? என்று பார்ப்போம். காவேரியில், கர்நாடகம் தரும் நிலையிலும், நாம் பெறும் நிலையிலும் இருக்கிறோம். தரும் நிலையிலிருக்கும் கர்நாடகா காவேரி நதி தடத்தில் பற்பல சிற்றணைகளை இடையறாது கட்டி வருகிறது. இது மட்டுமின்றி, காவேரியின் உபநதிகளான கபிணி, ஹேமாவதி, சாரங்கி, சொர்ணவதியிலும் அணைகளை ஏற்படுத்தியுள்ளது. இவை அனைத்தும் மத்திய நீர்வள ஆணையத்திடமும், கண்காணிப்பு ஆணையத்திடமும் அனுமதி பெறாமலே கட்டப்பட்டுள்ளன.
 
காவேரியில் தண்ணீர் பெறும் நிலையிலிருக்கும் நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம். காவேரியில் வெள்ளம் பெருக்கெடுத்துவரும் சமயங்களில் அதை தடுத்து பாதுகாக்க தவறி ஆண்டுதோறும் சுமார் 100டி.எம்.சி தண்ணீரை கடலுக்கு தாரை வார்த்துக் கொண்டுள்ளோம்.
 
காவேரி டெல்டா என்பது தமிழகத்தின் 45 சதவிகித விவசாய நிலங்களை உள்ளடக்கிய பகுதி. காவேரி நீரை நம்பி விவசாயம் மாத்திரமல்ல, சென்னை, திருச்சி... உள்ளிட்ட பல பெருநகரங்களும், சிறுநகரங்களும், கிராமங்களும் குடிதண்ணீர் பெறுகின்றன. ஒரளவு மின் உற்பத்தியும் காவேரி நீரிலிருந்து பெற்ற்று வருகிறோம். ஆனால் நாம் நமக்கு கிடைக்கும் காவேரி தண்ணீரை காப்பாற்ற தவறுகிறோம்.
 
சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பே தமிழகத்தின் தலைசிறந்த பொறியாளர்கள் தமிழக அரசிடம் காவேரி நீர் படுகைகளில் குறைந்த பட்சம் 27 தடுப்பணைகளை சிறு,சிறு கதவணைகளை கட்ட வேண்டும் என்று பரிந்துரைத்தனர்.ஆனால் ஒரு சில தான் கட்டப்பட்டன.
 
இத்துடன் தமிழகத்திற்கு கிடைக்கும் மழைநீரை நாம் சரியாக சேமிப்பதில்லை. நம் முன்னோர் காலத்தில் திட்டமிட்டு கட்டப்டட ஏரிகள், குளங்களை தூர்வாறாமலும், அவற்றில் தண்ணீர் சென்று சேராத வண்ணம் ஆக்கரமித்தும் வருகிறோம். இவை நமக்கு நாமே செய்யும் துரோகம், அக்கிரமம், ஏமாற்று ஆகாதா?
 
அதோடு நமது சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்ற படி அனைத்து ஆற்றோர படுகைகளிலும், மற்ற பல இடங்களில் பரவலாகவும் மரம் நடுவதை ஒரு யாகம் போல செய்து நிறைவேற்றினோமென்றால் வருணபகவான் கருணையால் தமிழகம் அதிக மழைபொழிவை பெறுமே!
 
இவை அனைத்தையும் போர்கால நடவடிக்கைகளாக கருதி, மக்களின் பங்களிப்புடன் நமது தமிழக அரசு செய்யுமானால் நிகழ்காலம் மட்டுமின்றி எதிர்காலமும் பயன்பெறும். அத்துடன் நமக்கு கிடைக்கும் குறைந்த ஆற்று தண்ணீரிலுமே கூட தொழிற்சாலை கழிவுகள் கலந்து பாழாவதை கண்டிப்பாக தடுக்கவேண்டும். இருக்கும் நீரை அசுத்தபடுத்தியும், கடலுக்கு தாரை வார்த்தும் வீணடித்துவிட்டு பிறகு பல்லாயிரம் கோடிகள் செலவழித்து கடல்நீரை சுத்திகரிக்க திட்டம் தீட்டுவது என்பது கண்ணை விற்று சித்திரம் வாங்குவதற்குச் சமம்.
 
NDTV -THE HINDU,
EDITORIAL VOICE,
03-10-2012

No comments: