Tuesday, October 23, 2012

அணுஆயுத பரவலுக்கு தடை யாருக்கும் துணிவில்லை

                                                                                                                       -சாவித்திரிகண்ணன்
 
தீவிரவாதம், அணு ஆயுத குவிப்பு.... இந்த இரண்டும் தான் இன்றைய சூழலில் உலக நாடுகளை அதிக அச்சுறுத்தலுக்கு ஆளாக்கி வருகிறது. இதைத்தான் தற்போது நீயூயார்க் நகரில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் 67வது பொதுச்சபை கூட்டத்தில் நமது நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா வெளிப்படுத்தியுள்ளார்.
 
"உலகில் அணு ஆயுதங்கள் கூடாது, அதன் உற்பத்தி தடை செய்யப்படவேண்டும் என்று சொல்லாத நாடுகளே இல்லை எனலாம். ஆனால் துரதிஷ்டவசமாக அப்படிச் சொல்லுகின்ற நாடுகள் தான் அணு ஆயுதகுவிப்பில் நிகரற்று விளங்குகின்றன. ஐக்கிய அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன், பிரான்ஸ், சீனா... ஆகிய இந்த ஐந்து நாடுகளே இன்று ஆயுத குவிப்பில் முன்னணி வகிக்கின்றன ஆனால் இவை ஐந்தும் ஒன்று சேர்ந்து கொண்டு இன்று அணு ஆயுத பரவல் தடை சட்டம் ஒன்றை கொண்டுவந்து அதில் கையெழுத்திட மற்ற நாடுகளை நிர்பந்திக்கின்றன.
 
அப்துல்கலாம் அவர்கள் கூறியது போல இந்தியாவைச் சுற்றியிலுமுள்ள நாடுகள் அணு ஆயுதங்களை குவித்துக் கொண்டிருக்கும் போது இந்தியா மட்டும் அமைதி வழியில் பயணிக்க முடியாது. அதிகாரச் சமநிலையை ஒரளவாவது ஈடுகட்டாமல் அமைதிக்கு உத்திரவாதம் தரமுடியாது. அதனால் தான் அணு ஆயுதத் தடை ஒப்பந்தத்தில் இந்தியா உறுதியாக கையெழுத்திட மறுத்துவருகிறது.
 
உலகில் இன்றைய தினம் 20,000க்கு மேற்பட்ட அணு ஆயுதங்கள் உள்ளன.
இதில் 50சதவிகிதம் அமெரிக்காவிடம் மட்டுமே உள்ளது. அமெரிக்காவிடம் இருக்கும் எண்ணிக்கைக்கு ஒப்பிட்டால் இந்தியாவிடம் ஒரு சதவிகிதம் தான் இருக்கிறது. நமது தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன் கூறியிருப்பது போல, நிச்சய தன்மையற்ற, குழப்பம் நிறைந்த உலகச்சூழலில் அணு ஆயுதங்கள் நமக்கு தவிர்க்க முடியாத பாதுகாப்பாகின்றன.
எனவே தான் இந்தியா முதலில் அணு ஆயுதங்களை குவித்துள்ள நாடுகள் அவற்றை குறைக்கவேண்டும். "இனி உற்பத்தி செய்யமாட்டோம்' என்ற உறுதிமொழியையும் அளிக்கவேண்டும். என்று வற்புறுத்துகிறது.
 
உலக அளவில் அதிகரித்துவிடும் தீவிரவாதத்தை தடுக்க, 'உலக தீவிரவாத புரிந்துணர்வு மாநாடு' விரைவில் நடைபெற உள்ளது. அதை கருத்தில் கொண்டு பேசிய நமது வெளியுறவு அமைச்சர், "தீவிரவாதத்திற்கு எதிராக அனைத்து நாடுகளுமே ஒருமித்த குரல் கொடுக்க வேண்டும். அந்த தீவிரவாதத்தை வளர்த்தெடுக்க இடம், பயிற்சி, நிதி தரும் நாடுகளை மற்ற நாடுகள் புறக்கணிக்க வேண்டும்" என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
 
தீவிரவாதத்திற்கு ஆதரவாக இடம், பயிற்சி தருவதில் பாகிஸ்தானும், நிதி தருவதில் அமெரிக்காவும் ஈடுபடக்கூடாது என்ற வேண்டுகோளாகவே இதை நாம் கருதலாம்!
 
தீவிரவாதிகள் ஆபத்தானவர்கள், ஒழித்துக்கட்டப்படவேண்டியவர்கள் என்பதில் நமக்கு எந்த கறுத்து வேறுபாடும் இல்லை. ஆனால் தீவிரவாதம் உருவாவதற்கு வல்லரசுகளின் அதிகாரப்போட்டிகளும், பேராசைகளும் மிக முக்கிய பங்கு வகிப்பதை நாம் ஒரு போதும் புறக்கணித்துவிட முடியாது. அணு ஆயுத குவிப்பு என்பது உற்பத்தியில் ஈடுபடுகின்ற நாடுகள் உட்பட அனைத்து நாடுகளுக்கும் ஆபத்தானதே. முன்னாள் அமெரிக்க அதிபர் கென்னடி கூறியது போல, "விபத்து, கிறுக்குத்தனம், தவறான மதிப்பீடு என்ற மூன்று அம்சங்களில் உலகிற்கு அணு ஆயுத ஆபத்து எப்போது வேண்டுமானாலும் நிகழலாம்."
 
எனவே ஒவ்வொரு நாடும் இதில் மற்றவர்களுக்கு உபதேசிக்காமல் அவரவர் மனசாட்சியை தொட்டு பார்த்துக் கொள்ளவேண்டும். மூன்றாவது உலகப்போரோ, அணுஆயுத விபத்தோ நிகழுமாயின் இந்த உலகில் புல் பூண்டு உட்பட எந்த ஜீவராசிகளும் ஜீவித்திருக்கமுடியாது.
 
அன்பு, மனிதநேயம், மதம், ஆன்மீகம்... என்ற ஏதேனும் ஒரு சில அம்சங்கள் மனிதனை பேராசைகளிலிருந்தும், அதிகார வெறியிலிருந்தும் ஓரளவு விடுவிக்க துணைபுரிந்த போதிலும், அமைதியை நிலை நாட்டுவதில் உலக மக்கள் அனைவரையும் ஒன்று திரட்டி வல்லரசுகளை பணிய வைக்கவோ, அல்லது மக்கள் எழுச்சியின் காரணமாக வல்லரசுகள் பணியும் சூழலோ உருவாக வேண்டும்.
 
NDTV -THE HINDU,
EDITORIAL VOICE,
02-10-2012

No comments: