Tuesday, October 30, 2012

அதிகரித்து வரும் கொலை குற்றங்கள்

                                                                                                                       -சாவித்திரிகண்ணன்

தமிழகத்தில் அசதாரணமான வகையில் குற்றங்கள், கொலைகள் அதிகரித்துவருகின்றன.
மாநகரங்களெல்லாம் மாபாதகங்கள் அரங்கேறும் களங்களாக காட்சி தருகின்றன.

சென்னையில் ஒரே நாளில் நான்கு இடங்களில் திருட்டுகள் நடந்துள்ளன. இதில் இரண்டு இடங்களிலுமாக 270 சவரன்நகைகள், பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் வருடத்திற்கு சுமார் 20,000 திருட்டு சம்பவங்கள் நடப்பதாக காவல்துறை புள்ளிவிபரங்கள் கூறுகின்றன.
சென்ற ஆண்டு தமிழகத்தில் நடந்தேறிய கொலைகளின் எண்ணிக்கை 1747.

வரலாறு காணாத கலவரம் அல்லது போரில் இவ்வளவு அதிக எண்ணிக்கையில் மனிதர்கள் கொல்லப்படுவதை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் இயல்பான ஒரு சூழலில் இவ்வளவு கொலைகள், குற்றங்கள் நடக்கின்றன என்பது தீவிரமாக விவாதிக்கப்பட்டு தீர்வு காணவேண்டும்.

ஏனெனில் நீதி, நேர்மை, நியாயத்திற்கு கட்டுபட்டு கிடைக்கின்ற வருவாய்க்குள் எளிய முறையால் வாழ்ந்து கொண்டிருக்கும் கோடிக்கணக்கான மக்கள் குழப்பதிற்கும், பயத்திற்கும் உள்ளாகிறார்கள்!

ஆட்சியாளர்களான அரசியல்வாதிகள் கோடிக்கணக்கில் ஊழல்செய்து மக்கள் பணத்தை சூறையாடுகிறார்கள் அதிகாரிகள் தங்கள் பங்குக்கு பலனடைகிறார்கள்.

தொழில் அதிபர்கள் சட்டத்தை வளைக்கிறார்கள். மிகப்பெரிய பொருளாதார குற்றங்களை கமூக்கமாகச் செய்கிறார்கள். பள்ளிக்கூட தலைமை ஆசிரியர் தொடங்கி ஆன்மீகவாதிகள் வரை நெறிபிறழ்ந்து நடக்கும் செய்திகள் சாதரண எளிய மனிதனை சஞ்சலத்தில் ஆழ்த்துகிறது.

மதுபழக்கம் பல தீயசெயல்களுக்கு வித்திடுவதாக இக்குற்றங்கள் தொடர்பான ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எனவே 'டாஸ்மாக்' குறித்த மறுபரிசிலனையை தமிழக அரசு மேற்கொண்டேயாக வேண்டும்.
75சதவிகிதத்திற்கும் மேற்பட்ட குற்றச்செயல்கள் மது போதையால், மதுவின் தேவையால் நடந்துள்ளதாக தெரியவருகிறது.

அறநெறிகள் பிறழ்ந்து கொண்டிருக்கும் சமூகத்தில் உளவியல் நெருக்கடியில் அதிகரித்து குற்றச்செயல்களுக்கு வித்திடும் என்பதே உண்மை குற்றச் செயல்களில் படித்தவர்கள், படிக்காதவர்கள் வித்தியாசமில்லை!

படிக்காதவர்களின் குற்றங்கள் உடல்சார்ந்த வன்முறையாகவும் படித்தவர்களின் குற்றங்கள் அறவுசார்ந்த வன்மமாகவும் உள்ளது.
சைபர் குற்றங்கள் நடப்பதில் உலக அளவில் இந்தியா ஐந்தாவது இடத்தில் உள்ளது.

ரியல்எஸ்டேட், கல்விதிட்டங்கள், அறக்கட்டளைகள், தேர்தல்பிரச்சாரங்கள் போன்றவற்றில் சட்டவிரோத பணபரிமாற்றங்களும், கறுப்புபணமும் கணக்கிடமுடியாதவகையில் நடந்து கொண்டுள்ளன..!

சட்டவிரோத பணபரிமாற்றத் தடுப்பு சட்டம் குறித்த விவாதங்கள் நடந்தேனவேயன்றி சட்டம் நிறைவேற பாராளுமன்றத்தில் ஒப்புதல் கிடைக்கவில்லை.

அப்ரோ ஏசுதாஸ் என்பவர் குறைந்த வட்டியில் கடன் தருவதாக பல கோடி ரூபாய் ஏமாற்றியுள்ளார் என 12,500 பேர் புகார் தந்துள்ளனர். இவ்வளவு பெருந்திரளான மக்களை பகிரங்கமாக ஒருவரால் எப்படி ஏமாற்றமுடிகிறது? அவரது நடவடிக்கைகளை ஏன் காவல்துறை முன்கூட்டியே தடுக்கவில்லை. பிறந்த பச்சிளம் குழந்தைகளைத் திருடிச்செல்லும் கயமை அரசு மருத்துவமனைகளில் எப்படி நடக்கின்றன..?

தமிழகத்தில் காவல்துறை காவலர்களின் எண்ணிக்கையை 88,000த்தில் இருந்து இரு மடங்காக்கினால் கூட இந்த குற்றங்கள் குறைய உத்திரவாதமளிக்க முடியாது.
சட்டங்களால் மாத்திரமல்ல, சகலவழிமுறைகளிலும் ஆராய்ந்து இதற்கு தீர்வு காணவேண்டிய பொறுப்பு நம் அனைவருக்குமே உள்ளது.

NDTV -THE HINDU,
EDITORIAL VOICE,
26-10-2012

No comments: