Thursday, October 25, 2012

காவேரி தண்ணீரும், கபடநாடகங்களும்

                                                                                                                     -சாவித்திரிகண்ணன்

கர்நாடகாவில் காவேரி நீர் பங்கீடு தொடர்பான கொந்தளிப்புச் சூழல் அனைத்துகட்சி அரசியல்வாதிகளாலும் தூண்டிவிடப்பட்டு கடந்த 10நாட்களாக இயல்பு வாழ்க்கையே ஸ்தம்பித்துள்ளது. பத்துநாட்களாக தமிழகலாரிகள் கர்நாடக மாநிலத்திற்குள் செல்லமுடியவில்லை.

பந்த், ஆர்பாட்டம், ஊர்வலம், கடையடைப்பு, உண்ணாவிரம்.... என எல்லாவித போராட்டங்களும் அரங்கேறிக் கொண்டுள்ளன.

16பாராளுமன்ற உறுப்பினர்கள் கர்நாடகாதரப்பில் பிரதமர் மன்மோகன்சிங்கை சந்தித்து தமிழகத்திற்கு தண்ணீர் விட இயலாத நிலைபற்றி அரைமணிநேரம் பேசியுள்ளனர். இத்துடன் மத்திய அமைச்சர்கள் எஸ்.எம். கிருஷ்ணா, மல்லிகார்ஜீனகார்கே, கே.எச்.முனியப்பா ஆகியோரும் பிரதமரைச் சந்தித்து கர்நாடக தரப்பு நிலைமைகளை பிரதரமரிடம் ஒரு மணிநேரம் விளக்கியுள்ளனர்.

இவ்வளவுக்குப் பிறகு, 'நான்மட்டும் விட்டுவிடுவேனா வாய்ப்பை?' என கர்நாடக முதல்வர் ஜெகதீஸ் ஷெட்டரும் பிரதமரை சந்திக்கிறார்.
ஆனால் பாதிக்கப்பட்ட தமிழகத்தில் இந்த பதட்டங்கள் இல்லை. தமிழக எம்.பி.களோ, மத்திய அமைச்சர்களோ, முதல்வரோ, மாநில பொதுப்பணித்துறை அமைச்சரோ யாருமே தலைநகரில் காவேரி நீர்பிரச்சினை குறித்து எந்த நடவடிக்கைகளிலும் ஈடுபடவில்லை.

நமது தமிழக முதல்வர் உத்தரவிற்கிணங்க வழக்கறிஞர்கள் உச்சநீதிமன்றத்தில் உயிர்ப்போடு வாதாடி வருகின்றனர்!
நீதி, உண்மைக்கு சாதகமாகத் தான் இருக்கிறது. அந்த உண்மை நம்தரப்பில் வலுவாக இருக்கிறது! அதையும் விட இயற்கையும் இப்போது நமக்குச் சாதகமாக திரும்பிவிட்டது.

கர்நாடகத்தில் தற்போது மழை ஆரம்பித்துவிட்டது. கிருஷ்ணராஜசாகரில் மளமளவென்று தண்ணீரின் அளவு கூடி 104 டி.எம்.சியை எட்டிவிட்டது. அதனால் தான், "நமக்குத் தரமாட்டேன்" என்று வாதம் வைத்த கர்நாடக தரப்பு வக்கீல் வாய் தவறி ஓர் உண்மையை உச்சநீதிமன்றத்தில் ஒத்துக்கொண்டார்.

"உச்சநீதிமன்றம் 9,000 கன அடி தான் திறந்துவிடச்சொன்னது. ஆனால் கடந்த சில நாட்களாக 12,000 கன அடி நீர் நாங்கள் திறந்து விட்டிருக்கிறோம்
கர்நாடகத்தில் இவ்வளவு களேபரங்களை நடத்தி, எங்களுக்கே தண்ணீர் இல்லை என்று கூறிய நிலையில், ஏன் 12,000கன அடி திறந்துவிடப்பட்டது...? காரணம்; கர்நாடகத்தின் காவிரி நீர் பிடிப்பு பகுதி சரிவாக உள்ளது. மழை பொழியும் போது அவர்களால் தண்ணீரை ஒரளவுக்கு மேல் தேக்கி வைக்க இயலாமலே திறந்துவிடுகின்றனர்.

ஆக, உண்மை நிலவரம்; இனிவரப்போவது மழைக்காலம் என்பதால் காவேரியில் நாம் கேட்காமலே தண்ணீர் கரைபுரண்டு வந்து கொண்டிருக்கும் என்பதே!
அதே சமயம் கர்நாடகத்தில் உள்ள மக்களிடம், "தண்ணீராவது, தமிழகத்திற்காகவது ஒரு சொட்டு தண்ணீர் கூட விடமாட்டோம்ல..." என்று சொல்ல வேண்டிய நிர்பந்தம் அனைத்து கட்சிகளுக்கும் ஏற்பட்டுள்ளது. இது அவர்களே ஏற்படுத்திக் கொண்டது. அதைத்தான் டெல்லி வரை வந்து அரங்கேறிக் கொண்டுள்ளனர் இந்த நாடகத்தை!

நம்மைப் பொறுத்தவரை தற்போது கிடைக்கும் தண்ணீர் ஒன்றரை மாதத்திற்கு முன்பே கிடைத்திருந்தால் அது விவசாயத்திற்கு - குறிப்பாக சம்பா சாகுபடிக்கு பேருதவியாக இருந்திருக்கும்! இப்போது நம் பகுதியிலும் நல்ல மழைப்பொழிவு ஆரம்பித்துள்ளையடுத்து மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 20,000 கன அடிக்கு மேல் தண்ணீர் வந்து கொண்டுள்ளது.

'காலத்தே செய்வது தான் பயிர்' - காலம் கடந்தால் எல்லாமே பாழ்!
அடுத்த ஒரிரு மாதங்கள் காவேரி டெல்டா விவசாய நிலங்கள் மழைவெள்ளத்தில் மூழ்கும் நிலைமைகளையும் சந்திக்க உள்ளோம்! - வழக்கம்போல்!

எனவே, இடர்பாடு ஏற்படும் தருணங்களில் தண்ணீரை எவ்வாறு பகிர்ந்து கொள்வது என, ஏற்கெனவே மத்திய நீர்வள ஆணையமும், காவேரி கண்காணிப்பு கமிட்டியும் உருவாக்கி தந்த பார்முலாவை கர்நாடகம் அமல்படுத்தியிருந்தால் இந்த கஷ்டங்களில்லை! தவிப்புகளில்லை, நீதிமன்ற அலைச்சல்களில்லை....!

ஆனால், பாழாய்போன அரசியல் பல அநீதிகளுக்கு அடிக்கோளிட்டுவிடுகிறது.
எனவே பிரதமர், ஏற்கெனவே கூறியது போல், 'தேசிய தண்ணீர் கொள்கை' விரைவில் வகுக்கப்பட்டு தண்ணீர் விநியோக விஷயமாக இனி இரு மாநிலங்களையும் அந்நியப்படுத்தி, தேசிய அமைப்பு அதில் முழுப்பெற்பேற்க வேண்டும்.

நிலத்தடி நீரை பொது சொத்தாகி நீர் நிர்வாகத்தை வளப்படுத்தவேண்டும் இது நடக்கமுடியாதது அல்ல. ஏற்கெனவே யமுனை நதி உத்திரபிரதேசம், ஹிமாச்சலபிரதேசம், டெல்லி, ஹரியானா, உத்தரிகாண்ட் என ஐந்தாறு மாநிலங்களில் அமைதியாக பங்கிடப்பட்டு வருகிறது. காரணம், அது மத்திய நீர்வளத்துறையின் நேரடி கண்காணிப்பில் நடக்கிறது.
அதே சூழ்நிலை காவேரி நீர் பங்கீட்டிலும் நடந்து, கர்நாடகா, தமிழகம், புதுச்சேரி, கேரளம் ஆகியவை உரியமுறையில் பலன்பெறவேண்டும்!

NDTV -THE HINDU,
EDITORIAL VOICE,
09-10-2012

No comments: