Thursday, October 18, 2012

வரவேற்கதக்க அறிவிப்புகள்

                                                                                                                       -சாவித்திரிகண்ணன்
 
அக்டோபர் - 2 - மகாத்மா காந்தி பிறந்த தினம் நெருங்கி வருவதைத் தொடர்ந்து தமிழக அரசு தரப்பிலிருந்து சில நல்ல அறிவிப்புகள் வந்து கொண்டிருக்கின்றன.
 
அக்டோபர் மாதத்திலிருந்து மேலும் எட்டு மாவட்டங்களில் புகையிலை தடுப்பு மற்றும் கட்டுபாடு நடவடிக்கைகளை மேற்கொள்ள விருப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. ஏற்கெனவே சென்னை, காஞ்சிபுரம், வேலூர், திருவள்ளூர் மாவட்டங்களில் பொது இடங்களில் புகைபிடிக்கத் தடை அமலானதைத் தொடர்ந்து சிகரெட் மற்றும் புகையிலைப் பயன்பாடு குறிப்பிடதக்க அளவில் குறைந்துள்ளதைக் கருத்தில் கொண்டே இவ்வறிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
 
பொது இடங்களில் புகைபப்பிடிப்பது, பான்பராக் போன்றவைகளை பயன்படுத்துவது தொடர்பாக இது வரை ஆறுலட்சத்திற்கும் மேற்பட்டவர்களிடமிருந்து அபாரதத்தொகையாக சுமார் 67,33,000வசூலிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்தே நெல்லை, கன்யாகுமரி, கடலூர், பெரம்பலூர், அரியலூர் திருச்சி, திருவாரூர், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களிலும் அண்ணல் காந்தி பிறந்தநாள் நெருங்குவதன் அடையாளமாக இந்த நடவடிக்கைகள் விரிவுபடுத்தப்பட்டுளளது.
 
அதோடு 2012ம் ஆண்டிலேயே அனைத்து கல்வி நிறுவனங்களையும் புகையில்லா கல்வி நிறுவனங்களாக அறிவிக்கப்படுவதுடன், மெல்லும் வகை புகையிலைக்கும் தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதால் அறிவிப்பும் மிகவும் வரவேற்கத்தக்கதாகும்!
 
தேசிய புகையிலை தடுப்பு சட்டத்தை வலுப்படுத்தும் விதமாக தமிழக அரசு இந்நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது இத்துடன் மதுவிலக்கு என்ற இலக்கை நோக்கி பயணிக்கும் விதமாக டாஸ்மாக் மதுவிற்பனையை தற்போது 12மணிநேரம் என்றுள்ளதை எட்டுமணிநேரமாக குறைக்கும் அறிவிப்பும் வெளிவர உள்ளதாக அரசுவட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
 
அதீத மதுபெருக்கத்தின் விளைவாக தமிழக அரசுக்கு ரூ 20,000கோடி வருமானம் கிடைத்துவரும் போதிலும், இதன் எதிர்வினையாக குடியினால் பல குடும்பங்கள் நடுத்தெருவிற்கு வந்து கொண்டிருக்கும் நிலைமைகளை தமிழக முதல்வர் கவனத்தில் கொண்டே இந்த முடிவுக்கு வந்திருக்ககூடும்!
 
மதுபெருக்கத்தால் குடிப்பவர்களின் உடல்நலம் சீர்கெட்டு அரசு மருத்துவமனைகளில் குடிகார நோயாளிகளின் கூட்டம் கட்டுபடுத்தமுடியாத வகையில் அதிகரித்து வருவதையும், குற்றம், கொலை, விபத்துகள் பெருகி வருவதையும் மது எதிர்ப்பாளர்கள் குறிப்பாக காந்திய இயக்கத்தினர் புள்ளி விபரங்களுடன் அரசின் கவனத்திற்கு எடுத்துச் சென்றதன் விளைவாகவும் மதுவிற்பனை தொடர்பான மறுபரிசிலனைக்கு தமிழக அரசு ஆளாகியிருக்ககூடும்.
 
காந்திய அமைப்புகள், தமிழருவிமணியன், குமரிஆனந்தன், டாக்டர்.ராமதாஸ், பழ.நெடுமாறன், வைகோ போன்ற தலைவர்களும் தமிழகத்தில் மதுவிலக்கோரி பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். கடந்த ஒராண்டாக மது எதிர்ப்பு தொடர்பான ஊர்வலங்கள், உண்ணாவிரதங்கள், கருத்தரங்கள், மாநாடுகள், ஆர்பாட்டங்கள், கையெழுத்து இயக்கங்கள்.... என பற்பல அரங்கேறிவருகின்றன இவ்வித போராட்டங்களுக்கு தாய்குலத்தின் அமோக ஆதரவு பெருகிவருவதையும் தமிழக அரசு கவனத்தில் கொண்டிருக்கும் என நாம் நம்பலாம்.
 
வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக மேலும் சில கறாரான நடவடிக்கைகள் மதுவிற்பனை தொடர்பாக தமிழக அரசு எடுக்குமானால் அது ஆளும்கட்சிக்கு தாய்குலத்தின் பேராதரவை பெற்றுத்தரும் என்று நிச்சயம் நம்பலாம்!
 
இதன்மூலம் சீரழியத் தொடங்கியுள்ள இளம் தலைமுறை காப்பாற்றப்படும். குடும்பங்களில் சச்சரவுகள், துன்பங்கள் குறைந்து அமைதி திரும்பும். எல்லாவற்றிக்கும் சிகரமாக இழந்து கொண்டிருக்கும் உழைக்கும் திறனையும், ஆர்வத்தையும் பாட்டாளிவர்க்கம் மீட்டெடுக்கும். இதனால் நாடும், வீடும் ஒரு சேரப் பலடையும்.
 
விஷன் - 2023 என்ற தொலைநோக்கு திட்டத்தின் ஓர் முக்கிய அம்சமாகவும் இதைக் கருதலாம். ஏனெனில் மதுபெருக்கம் நிறைந்துள்ள ஒரு சமூகத்தில் சமூக, பொருளாதார, கலாச்சரா தளத்தில் எந்த ஒரு மேம்பாடும் நிச்சயம் நிறைவேறாது.
 
எனவே, புகையிலை தொடர்பாகவும், மதுதொடர்பாகவும், தமிழக அரசு மேற்கொண்டுவருகிற அனைத்து முயற்சிகளையும் வரவேற்பதும், ஒத்துழைப்பு தருவதும் நம் ஒவ்வொருவரின் கடமையாகும்!
 
NDTV -THE HINDU,
EDITORIAL VOICE,
28-9-2012

No comments: