Wednesday, October 17, 2012

கூட்டுறவு சங்க தேர்தல்கள்

                                                                                                                       -சாவித்திரிகண்ணன்
உச்சநீதிமன்ற உத்தரவின் நிர்பந்தத்தால் 12 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழகத்தில் கூட்டுறவு சங்கதேர்தலை நடத்த தமிழக அரசு முன்வந்துள்ளது. இதையடுத்து தமிழக அரசியல்களம் பரபரப்படைந்துள்ளது.
தமிழகத்தில் மொத்தம் 10,442கூட்டுறவு சங்கங்கள் உள்ளன.ஒவ்வொரு சங்கத்திற்கும் குறைந்தபட்சம் 11 இயக்குநர்கள் வீதம் தேர்ந்தெடுக்கப்பட உள்ள இயக்குநர்கள் எண்ணிக்கை மட்டுமே ஒரு லட்சத்து சொச்சம்! இவை தவிர பத்தாயிரத்திற்கு மேற்பட்ட தலைவர்கள், துணை தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.
மக்களின் வாழ்க்கையோடும், பொருளாதாரத்தோடும் பின்னிப்பிணைந்துள்ள கூட்டுறவு அமைப்புகள் என்பவை மக்களால் மக்களுக்காக நடத்தப்படுபவை. விவசாயம், நெசவு, பால், விற்பனை நிலையங்கள்... என பற்பல தளங்களில் மக்கள் ஒன்று சேர்ந்து உழைத்து தங்கள் பொருளாதாரத்தையும், வாழ்க்கைத் தரத்தையும் உயர்த்தி கொள்ள உதவும் உன்னதமான அமைப்பே கூட்டுறவு.
'கூட்டுறவே நாட்டுயர்வு' என்பது வெற்று கோஷமல்ல. நூறுசதவிகித நிதர்சனம். அப்படிபட்ட கூட்டுறவு அமைப்புகளில் பொறுப்புக்கு வருபவர்கள் நேர்மையானவர்களாக ஆளுமைத்திறன் உள்ளவர்களாக, அனைவர் நலனையும் கருத்தில் கொண்டு செயல்படவேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு.
ஆனால் துர்அதிர்ஷ்டவசமாக கடந்த நாற்பதாண்டுகளாக கூட்டுறவு அமைப்புகளில் அரசியல்கட்சிகள் மற்றும் அரசின் அத்துமீறிய குறுக்கீடுகள் ஏற்பட்டு கூட்டுறவு அமைப்புகளின் நோக்கமே சிதைக்கப்பட்டு சீர்குலைந்துள்ளது.
கூட்டுறவு அமைப்புகளின் செயல்பாடுகளுக்கு ஓர் இலக்கண பூமியாக தமிழகம் கருதப்பட்ட காலம் ஒன்றிருந்தது. அப்போது வெளிநாட்டுக்காரர்கள் தமிழகம் வந்து கூட்டுறவு அமைப்பு செயல்படும் விதத்தை பார்த்து கற்றுச் சென்றனர் அந்த பொற்காலம் மீண்டும் திரும்ப வேண்டும்.
கூட்டுறவு சங்கத் தேர்தல்களில் முறைகேடுகளையும், அராஜகங்களையும் அரங்கேற்றிய கரை படிந்த கடந்த காலங்கள் தற்போதும் நிகழக்கூடாது என்பதே கூட்டுறவு விரும்பிகள், சமூகார்வலர்களின் தவிப்பு எதிர்பார்ப்பு.
ஏனெனில் கூட்டுறவு அமைப்புகளின் நேர்மை, நாணயம் என்பதே பல கோடிமக்களின் நிகழ்கால வாழ்க்கையை தீர்மானிக்கிறது.
தற்போது தமிழகத்தின் பல ஊர்களிலுமிருந்து அதிரச்சிகரமான செய்திகள் வந்த வண்ணமுள்ளன. நாள்தோறும் கூட்டுறவு அமைப்புகளின் முன்பு மக்கள் போராட்டம் நடத்திவருகின்றனர். கூட்டுறவு அமைப்புகளில் புதிய உறுப்பினர்களாவற்கான விண்ணப்பம் மக்களுக்கு கிடைப்பதில்லை. அது ஆளும் கட்சியினர் வசம் மொத்தமாக ஒப்படைக்கப்பட்டு அவர்கள் மட்டுமே உறுப்பினராகும் நிலை எங்கெங்கும் ஏற்பட்டுள்ளதாக எதிர்கட்சிகள் புகார் தெரிவிக்கின்றன.
கூட்டுறவு என்பது மக்கள் அமைப்பு. இது எந்த ஒரு கட்சிக்கும் மட்டுமே உரியதல்ல அனைத்துகட்சியினருக்கு மாத்திரமல்ல, கட்சிக்கு அப்பாற்பட்டவர்களுக்குமானதே கூட்டுறவு.
நவம்பர் மாதம் நடக்க உள்ள தேர்தலுக்கு இப்போதே அடிதடி, அராஜகம், வெட்டு, குத்து ஆரம்பித்துவிடும் அறிகுறி பரவலாகத் தென்படுகிறது. சென்ற ஆட்சியில் இதே சூழல் நிலவியதையடுத்து தேர்தல்கள் அதிரடியாக நிறுத்திவைக்கப்பட்டது.
'கூட்டுறவு அமைப்புகளில் குளறுபடிகள் வேண்டாம்' என்று கடந்த தனது ஆட்சிகாலங்களில் கூட்டுறவு தேர்தல்களையே நடத்தாமல் இருந்தார் தமிழக முதல்வர் ஜெயலலிதா. ஆனால் தற்போது உச்சநீதிமன்ற உத்தரவு தம்ழகத்தில் கூட்டுறவு இயக்கங்களின் செயல்பாட்டுக்கு புத்துயிர் ஏற்படுத்தும் என்பது பரவலான நம்பிக்கை!
கூட்டுறவு அமைப்புகள் கொள்ளை கூடாரங்களாக மாறுமேயானால் அது ஆட்சிக்குத் தான் அவப்பெயர் சேர்க்கும். அது அடுத்த நாடாளுமன்ற சட்டமன்ற தேர்தல்களிலும் பெரும் பாதிப்பைத் தரும்.
இந்த உண்மைகளை கருத்தில் கொண்டு தமிழக முதல்வர் வரப்போகிற கூட்டுறவு சங்கத்தேர்தல்கள் நியாயமாக நடைபெறுவதற்கு உறுதியான அடித்தளம் போடவேண்டும். தேர்தல் முறையாக நடந்து தகுந்தவர்கள் பொறுப்புக்கு வந்தால் ஊழல், முறைகேடுகளுக்கு துவக்கத்திலேயே முற்றுபுள்ளி வைத்தது போலாகும்!
தமிழக தேர்வாணைய ஊழல்குளறுபடிகளை களைய ஒரு நேர்மையான நிர்வாகத் தலைமையை உருவாக்கியதைப்போல கூட்டுறவு அமைப்புகள் விஷயத்திலும் நேர்மையான நிர்வாகத்தை முதல்வர் உறுதிபடுத்தவேண்டும்.
NDTV -THE HINDU,
EDITORIAL VOICE,
27-9-2012

No comments: