Tuesday, October 16, 2012

கூலிப்படை கொலைகள்

                                                                                                                       -சாவித்திரிகண்ணன்
 
நாளுக்குநாள் கொலைகள் அதிகரித்து வருகின்றன.
அதில் பெரும்பாலானவை கூலிப்படைகளால் செய்யப்பட்ட கொலைகளாக உள்ளன. தொழில் தகராறு, நிலத்தகராறு, கடன்பிரச்சினை, கட்சிபிரச்சினை என்பதையும் கடந்து தற்போது குடும்ப பிரச்சினைகளிலும் கூலிப்படையை ஏவி கொலை செய்வது பெருகி வருகிறது.
 
பணத்திற்காக கொலைசெய்யும் இந்த கூலிப்படைக் கூட்டத்தை 'Habbitual offenders'- அதாவது, கொலைக்குற்றத்தை வழக்கமாகக்க கொண்டவர்கள்' என்று சட்டம்.. வரையறுக்கிறது. இவர்களுக்கு இந்திய குற்றவியல் சட்டத்தின் படி கடுமையான தண்டனைகள் வழங்க இடமில்லை. எனவே கொலை செய்தவர்கள் கைதானால் சில நாட்களிலோ, சிலமாதங்களிலோ விடுதலை செய்யப்பட்டுவிடுகின்றனர். இது மேன்மேலும் கொலை செய்து பணம் ஈட்டும் தைரியத்தை அவர்களுக்கு வழங்குகிறது.
 
இந்தச் சூழலில் தான் தற்போது மதுரை உயர்நீதிமன்றத்தில் ஒரு கொலை வழக்கில் சம்மந்தப்பட்ட இரு குற்றவாளிகளைக் குறிப்பிட்டு இவர்கள் பற்பல கொலைகளிலும் சம்மந்தப்பட்டதை சுட்டிக்காட்டிய நீதிபதிகள், "இது போல் கொலை செய்யும் கூலிப்படைகள் பெருகினால் மக்களின் பாதுகாப்பு என்னாவது? இவர்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கவேண்டும் ஆகவே கடந்த 10ஆண்டுகளில் தமிழகத்தில் ஆட்கடத்தல், கொலை தொடர்பான புள்ளிவிபரங்களை நீதிமன்றத்தில் சமர்பிக்கவேண்டும்" என உள்துறை செயலாளருக்கும், டி.ஜி.பிக்கும் உத்திரவிட்டுள்ளனர் நீதிபதிகள்.
 
சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு மும்பையில் தான் இது போன்ற கூலிப்படை ஏவிய கொலைகள் நடந்தன. ஆனால் தற்போது அங்கே பெருமளவு கட்டுபடுத்தப்பட்டுள்ளது. காரணம், மகாராஷ்டிராவில் கொண்டு வரப்பட்ட அமைப்பு ரீதியான திட்டமிட்ட கொலையை தடுக்கும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்ட சட்டமேயாகும்!
 
பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் கொண்டுவரப்பட்ட தொழில்முறை குற்றவாளிகளை கொலை செய்வதை பழக்கமாக கருதிய குற்றவாளிகளை - தண்டிக்கும் சட்டத்தை நமது சுதந்திர இந்திய அரசாங்கம் வாபஸ் பெற்றது. மனித உரிமை ஆர்வலர்கள் குரல் ஒரு புறமும், சுதந்திர இந்தியாவில் அவர்கள் திருந்தி வாழவேண்டும் என்ற நல்நோக்கமும் அன்றைக்கு காரணமாகச் சொல்லப்பட்டன. ஆனால் இன்றைக்கு சூழ்நிலை வெகுவாக மாறியுள்ளது.
 
முன்பு ஒரு குறிப்பிட்ட சாதியினரை குற்றப்பரம்பரையாக கருதும் நிலை இருந்தது இன்றோ குற்றம், கொலை செய்வதில் எந்த சாதியும் விதிவிலக்கல்ல என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
 
பொறுமை, விட்டுக்கொடுப்பது, பேச்சுவார்த்தையில் தீர்ப்பது, நியாயத்தை எடுத்துச் சொல்லும் பெரிய மனிதர்கள், சகிப்புத்தன்மை, குடும்பகௌரவம், பண்பாடு போன்றவை குற்றங்கொலைகளை ஆபூர்வசெய்திகளாக அன்று கருத வைத்தன. ஆனால் அந்தச் சூழல்கள் இன்று இல்லாமல் போனதோடு நுகர்பொருள் வெறிகொண்ட கலாச்சாரம் பெருகிவருவதும். ஒரு புறம் செல்வச்செழிப்புகள் குவிவதும், மறுபுறம் வறுமை கோரதாண்டவமாடுவதும் குற்றச் செயல்கள் பெருக காரணமாகிவிட்டன.
 
எம்.கே.பாலன், திருச்சி ராமஜெயம், முன்னாள் அமைச்சர்கள் ஆலடிஅருணா, தா.கிருஷ்ணன், வெங்கடாச்சலம் .... போன்ற அரசியல்வாதிகளுமே கூட கூலிப்படைகளின் பலிகடீக்கள் தானே! புத்தர், மகாவீர், காந்தி... என அகிம்சையின் புதல்வர்கள் தோன்றி அரும்பெரும் பண்புநலன்களை, தாக்கத்தை உருவாக்கியதேசத்தில் இன்று கணவன் - மனைவி சகோதரர்களுக்கிடையிலான சண்டைகளுக்கு கூட கூலிப்படை கொலை தீர்வாக பார்க்கப்படுகிறது.மடாதிபதிகள், பிஷப்புகள் தொடங்கி மாணவர்கள் வரை கூலிப்படை, ஏவிய குற்றசாட்டுக்கு ஆளாவது நமது கலாச்சார - பண்பாடு வறுமையைத் தான் பறைசாற்றுகின்றன.
 
இதற்கு உடனடி பரிகாரம் தொழில்முறை கொலைகாரர்கள் வெளியில் நடமாடத வகையில் மிகக்கடுமையான சட்டத்தை உருவாக்குவது தான்! தொழில்முறை கொலைகாரர்கள் சுதந்திரமாக நடமாடும் நாட்டில் மக்களுக்கு பாதுகாப்பில்லை நீதிமன்றத்தின் தலையிடு மட்டுமல்ல, மக்கள் மன்றத்தின் எழுச்சியும், விழிப்புணர்வும் அதிகரித்தால் தான் இப்படி ஒரு சட்டம் சாத்தியமாகும்.
 
ஏனெனில் நீதிமன்றமும் சட்டத்தை அமல்படுத்தும் அமைப்பு தான். ஆனால் சட்டமன்றமும் நாடாளுமன்றமும் தான் சட்டத்தை உருவாக்குகின்றன. அந்த மன்றங்களில் இடம் பெற்றுள்ள அரசியல்வாதிகள் பலரும் கூட கொலை குற்றங்களில் சம்பந்தப்பட்டவர்களாயுள்ளனர். கூலிப்படை கொலையாளிகளை வளர்ப்பவர்களாக உள்ளனர். அதனால் அவர்கள் சுலபத்தில் உடன்படமாட்டார்கள் என நாம் பின்வாங்கத் தேவையில்லை.
 
வாள் எடுத்தவன் வாளால் அழிவான் என்பது முதுமொழி யார் எவரை விடவும், வன்முறையை பிரயோகிப்பவர்களே நிம்மதியற்றும் பாதுகாப்பு தேடியும் வாழ்பவர்களாக இருப்பார்கள். எனவே வன்முறையை கைவிட அவர்களுக்கும் கூட இச்சட்டம் வாய்ப்பளிக்கட்டுமே!
 
NDTV -THE HINDU,
EDITORIAL VOICE,
26-9-2012

No comments: