Thursday, October 4, 2012

சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு


                                                                                                                   -சாவித்திரிகண்ணன்

"இது நடக்கவே நடக்காது நடக்கவிடமாட்டோம்..." என சுதேசி ஆர்வலர்களும், சில்லறை வியாபாரிகளும் சிலிர்த்தெழுந்து போராடிய, 'சில்லறை வர்த்தகத்தில் அந்நியமுதலீடு' தற்போது அமலாகப்போகிறது!
சுமார் பத்தாண்டுகள் தடுத்தும், தாமதப்படுத்தியும் நடந்த போராட்டங்களை மீறி தற்போது அமலாவதற்கான அடிப்படைகாரணம், WTO எனப்படும் உலகவர்த்தக கழகத்தின் நிர்பந்தமும், அமெரிக்கா தொடர்ந்து தந்துவந்த அழுத்தமுமேயாகும்!

சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு இரு அம்சங்களை உள்ளடக்கியதாகும் முதல் அம்சம் ஒரு நிறுவன சில்லறை வர்த்தகத்தை 100சதவிகிதம் அனுமதிக்கிறது. இரண்டாவது அம்சம் பல நிறுவன சில்லறைவர்த்தகத்தை 51% அனுமதிக்கிறது. இந்த இரண்டாவது அம்சம் காலப்போக்கில் 100% மாக மாறும் என நிச்சயம் நாம் நம்பலாம்!

இது தவிர்த்து, விமானத்துறையில் 49%மும், காட்சி ஊடகத்தில் 79%மும், அந்நிய முதலீடு அனுமதிக்கப்பட்டுள்ளதும் விவாதத்திற்குரியதே! சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டுக்கு எதிராக சென்ற ஆண்டு பாராளுமன்றம் பத்துநாட்கள் முடக்கப்பட்டது. மம்தாவின் மிரட்டலுக்கு மத்திய அரசு மண்டியிட வேண்டியதாயிற்று. பா.ஜ.கவின் எதிர்ப்பை கண்டு சற்றே பயந்தது போல் பின்வாங்கியது காங்கிரஸ்!
ஆனால் அது காலம் கனிவதற்கே காத்திருந்தது.
ஐந்து மாநில சட்டசபை தேர்தலுக்குப்பிறகு இதை எப்படியும் அமல்படுத்தி விடலாம் என தற்காலிகமாக பின்வாங்கியது காங்கிரஸ் அரசு. 'பாம்பின் கால் பாம்பறியும்' என்பது போல இதை எதிர்க்கும் கட்சிகளை எப்படிச் சமாளிப்பதென காங்கிரசுக்குத் தெரியும்.

இன்று, 'அந்நிய முதலீடா?' என ஆர்பரிக்கும் பா.ஜ.கவின் ஆட்சிகாலத்தில் தான் அன்றைய வர்த்தகத்துறை அமைச்சர் முரசொலிமாறன் 100சதவிகிதம் அந்நிய முதலீட்டை ஆதரிக்கும் வண்ணம் திட்டங்களை தீட்டியதோடு, இந்திய சந்தையில் விற்பனைக்கு மறுக்கப்பட்டுவந்த - அனுமதித்தால் உள்ளூர் உற்பத்தியாளர்கள் கடுமையாக பாதிப்படைவார்கள் என கருதிய - பல அந்நிய பொருட்களை அனுமதித்தார். ஆக, 'சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு' என்பது பா.ஜ.க போட்டவிதை! அதை காங்கிரஸ் வளர்த்தெடுக்கிறது அவ்வளவே!

இன்றைக்கு பா.ஜ.க இதை எதிர்க்கிறது என்றால் சுமார் நான்குகோடி சில்லறை வியாபாரிகள் மற்றும் அவர்களது குடும்பத்தாரின் வாக்கு வங்கியை கருதியே! காங்கிரஸ் எதிர்கட்சியாயிருந்தாலும் இன்றைய பா.ஜ.கவின் பாத்திரத்தையே செய்திருக்கும். அது போல மம்தாவின் எதிர்ப்பு என்பது மேற்குவங்கத்தில் ஏற்கெனவே கம்யூனிஸ்டுகளால், 'சில்லறைவர்த்தகத்தில் அந்நிய முதலீட்டை எதிர்க்கும் வகையில் கட்டமைக்கப்பட்ட மக்களின் மனநிலைக்கு பயந்துதானே அன்றி, வேறு உறுதியான கொள்கை தெளிவோ, முடிவோ அல்ல.

சில்லறை வர்த்தகத்தை பொறுத்தவரை அது இந்தியாவில் 12லட்சம் கோடி லாபத்தை கோடிக்கணக்கான சுயத்தொழில் முனைவோருக்கு பகிர்நதளித்துக் கொண்டுள்ளது. இனி இந்த லாபத்தில் 25% முதல் 50% வரை அந்நிய முதலீட்டாளர்களான வால்மார்ட், பிளாக்பெர்ரி, டெஸ்கோ போன்றவற்க்கு சென்றுவிடும். சிலகோடி சுயதொழில் முனைவோர் இருக்கும் தொழிலை இழந்து விடக்கூடும்..
அதில் சில லட்சம் பேர் அந்நிய நிறுவனத்தில் வேலை பெறக்கூடும்!
மொத்தத்தில் இதில் அதிக பலடையப் போவது அந்நிய நிறுவனங்களே!
உதாரணத்திற்கு பெப்சி, கோக் வருகைக்கு முன்பு இந்தியா முழுக்க ஆங்காங்கே ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுதேசி குளிர்பான நிறுவனங்கள் சுபிட்சமாக இயங்கின!
இன்றைக்கு அதில் 90%க்கும் மேல் தொலைந்து போய்விட்டன. ஆனால் கோக்கும் பெப்பசியும் நமது இயற்கை நீராதாரங்களை உறிஞ்சி எடுத்து, இதில் ரசாயணப் பொடிகளை கலந்து தந்து சுமார் ஒரு லட்சம் கோடி லாபத்தை எடுத்துச் செல்கின்றனர். எனவே முதலீடு செய்யும் எந்த அந்நிய நிறுவனமும் அந்தந்த நாட்டின் வளங்களை முழங்கிவிடும் என்பதே வரலாறு.

தற்போது எதிர்க்கும் மாநிலங்கள் காலப்போக்கில் அந்நிய முதலீட்டை ஆதரித்து விடும் எனவும் நாம் நம்பலாம். அதே போல் தற்போது 30% இந்திய சந்தையில் கொள்முதல் செய்தும், 70% அந்நிய சந்தையில் கொள்முதல் செய்தும் இங்கே கடைவிரிப்பவர்கள் காலப்போக்கில் இந்தியச் சந்தையையே அந்நியமயமாக்கிவிடக்கூடும் வாய்ப்புகளும் உள்ளன!

முன்பு வணிகம் செய்ய வந்தவர்கள் தான் இந்த நாட்டை வசப்படுத்தி 200 ஆண்டுகளுக்கும் மேல் ஆட்சி செய்தனர். அடிமைப்படுத்தினர். இந்த கடந்த கால வரலாறு கற்று தந்த பாடங்களை மனதில் நிறுத்தி வலிமையான கட்டுப்பாடுகளையும், சட்டத்திட்டங்களையுமாவது உருவாக்கி இங்குள்ள விவசாயிகள், உற்பத்தியாளர்கள், சிறுவியாபாரிகள் நலனை காக்க மத்திய, மாநில அரசுகள் முன்வரவேண்டும்!


NDTV -THE HINDU,
EDITORIAL VOICE,
17-9-2012

No comments: