Wednesday, October 3, 2012

குலைநடுங்க வைக்கும் குழந்தைகள் மரணம்!


                                                                                                                     -சாவித்திரிகண்ணன்

குழந்தைகள் மரணம் தொடர்பாக ஐ.நாவின் யூனிசெப் கொடுத்துள்ள தகவல்கள் நமக்கு அதிர்ச்சியையும், அவமானத்தையும் தருகின்றன.
குழந்தைகள் என்பவை கடவுளின் அம்சம்!

மனிதநேயத்தை இழந்து கொண்டிருக்கும் மானுட சமூகத்திற்கு அதை மீட்டெடுக்க வந்த தேவதூதர்களே குழந்தைகள்!

குழந்தைகளற்ற உலகம் கற்பனைசெய்ய இயலாத அளவுக்கு வெறுமையாகவும், குரூரமாகவும் மட்டுமே இருக்க முடியும்!
ஆனால் அப்படிப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த குழந்தைகளை பேணிபாதுகாப்பதில் இந்த சமூகமும், அரசும், குடும்பங்களும், தனிநபர்களும் காட்டும் அலட்சியத்தாலும் பொறுப்பின்மையாலும் தான் குழந்தைகள் இறப்பு சம்பவிக்கின்றன!

யூனிசெப் அறிவிப்பின் படி ஒவ்வொரு நாளும் 5வயதுக்குட்பட்ட 19,000 குழந்தைகள் இறந்து கொண்டிருக்கின்றன! இந்த வகையில் இந்தியாவில் தான் அதிக எண்ணிக்கையில் குழந்தைகள் இறப்பு உள்ளது.
சென்ற ஆண்டு மட்டும் இந்தியாவில் 15.55 லட்சம் குழந்தைகள் இறந்துள்ளன என்று யூனிசெப் கூறியுள்ளது. இந்தப்பட்டியலில் நமக்குப் பிறகு தான் வறுமையில் உழலும் ஆப்பிரிக்க நாடுகளான நைஜிரியா, காங்கோ போன்றவை உள்ளன என்பது கவனிக்கத்தக்கது.

குழந்தைகளை உலகிலேயே அதிகமாகக் கொண்டாடும் நாடும் இந்தியா தான்!
கொலை செய்யும் நாடும் இந்தியா தான் என்றால் இது மிகையல்ல! வறுமை, ஊட்டச்சத்தின்மையால் தான் நமது நாட்டில் ஏராளமான குழந்தை மரணங்கள் சம்பவிக்கின்றன!

குழந்தைகளின் ஊட்டச்சத்தின்மை குறைவுக்கு பெருமளவில் குடும்பத்தலைவனே காரணமாகும்! இந்தியாவில் கோடானுகோடி குடும்பங்களில் குழந்தைக்கு கொடுக்க பாலில்லாத நிலையிலும் குடும்பத்தலைவர்கள் மது அருந்தி கலாட்டா செய்வது சர்வசாதாரணம். கர்ப்பிணி பெண்கள் பசி பட்டினியில் வாட கணவன்மார்கள் மது தரும் போதை மயக்கத்தில் ஆட என்றுள்ள ஒரு சமூகச் சூழலில் குழந்தைகள் பிறக்கும் போதே நோஞ்சானாகப் பிறப்பது தவிர்க்கமுடியாததே!

இப்படிப் பிறக்கும் குழந்தைகளை முழுக்க, முழுக்க வளர்த்தெடுக்கும் பொறுப்பு அந்த ஏழைத் தாயை மட்டுமே சார்ந்ததாகிவிடுகிறது.
காடு, கழனியிலும், கட்டிட வேலைகளிலும், அரசி மண்டிகளிலும், பல வீட்டுவேலைகளிலும் ஈடுபட்டு தன் குழந்தைக்கு பாலூட்டவும் நேரமின்றி பரிதிவிக்கும் ஏழைத்தாய்கள் ஏராளமானோர் உள்ளனர்.

இது ஒரு புறமிருக்க, இந்தியாவில் தடுப்பூசி மருந்துகளால் ஆண்டுதோறும் இறக்கும் குழந்தைகளின் மரணங்கள் கொஞ்சநஞ்சமல்ல. அதுவும் டாக்டர்.அன்புமணி ராமதாஸ் மத்திய சுகாதாரத்துறை அமைச்சராயிருந்தபோது இந்தியாவில் பன்னெடுங்காலமாக  தடுப்பூசி மருந்துகளை தயாரித்து வந்த பொதுத்துறை நிறுவனங்களை மூடிவிட்டு, அந்நிய நாட்டு நிறுவனங்களிடமும், தனியார் நிறுவனங்களிடமிருந்தும் தடுப்பூசி மருந்துகளை தருவிக்க தொடங்கியதிலிருந்து இந்த குழந்தை மரணங்கள் மிகவும் அதிகரித்தது..., இவை நமது நாடாளுமன்றத்திலும் எதிரொலித்தது.

இதோடு நமது அரசு மருத்துவமனைகளின் அலட்சியத்தால் அடிக்கடி கொத்து கொத்தாக சம்பவிக்கும் குழந்தை மரணங்கள் கொஞ்சநஞ்சமல்ல....! சென்றவருடம் மேற்குவங்க அரசு மருத்துவமனைகளிலும்,இந்த ஆண்டு ஜூலைமாதம் திருப்பதி அரசு மருத்துவமனையிலும் இன்குபெட்டர் குறைபாட்டால் இறந்த குழந்தைகள் ஏராளம்! அப்போது மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் குலாம்நபி ஆசாத், "நாடு முழுவதும் இது போன்ற சம்பவங்கள் நடக்கத்தான் செய்கின்றன" என்றார் இயல்பாக!

குழந்தைகள் மரணம் குறித்த ஆய்வுகளின்படி, நெருங்கிய உறவுக்குள் திருமணம் செய்வது மிகச்சிறிய வயதில் குழந்தை பெறுவது, கர்ப்பகாலத்தில் பசிபட்டினியாய் இருப்பது, ஐந்து வயதுவரை குழந்தைகளுக்கு சத்தான உணவுகள் தராதது, போலியான மற்றும் ஆபத்தான தடுப்பூசி மருந்துகள், சாலைவிபத்துகள், பெற்றோர்களின் அலட்சியப்போக்குகளால் ஏற்படும் விபரீத குழந்தை மரணங்கள் மலேரியா, வயிற்றுப்போக்கு... போன்ற பல காரணங்களால் குழந்தைமரணங்கள் சம்பவிக்கின்றன.

இந்தியாவில் ஆண்டுக்கு இரண்டுகோடியே 60லட்சம் குழந்தைகள் பிறக்கின்றன. இதில் 10சதவிகித குழந்தைகளை இவ்விதம் நாம் பறிகொடுக்கின்றோம் என்றால், இருக்கும் குழந்தைகளில் 60 சதவிகித குழந்தைகளை ஆரோக்கியமற்ற வகையில் ஆளாக்குகிறோம்! அவை நோஞ்சான்களாகவே வளர்கின்றன!
குழந்தைகள் வளர்ப்பு மற்றும் பாதுகாப்பு தொடர்பான  அக்கறை சமூகம்,குடும்பம், அரசு என அனைத்து மட்டத்திலும் வலுப்பெறவேண்டும்! பசி மற்றும் வறுமையால் வாடும் குழந்தைகளை காணும் போது யார் பெற்ற குழந்தையோ என அலட்சியப்படுத்தி நகராமல், ' அது ஆண்டவனால் நம் நெஞ்சின் ஈரத்தை ஆராய்வதற்காக அனுப்பப்பட்டது என ஒவ்வொருவரும் எண்ணத் தொடங்கினால் குழந்தைகள் மரணத்திற்கே இப்பூவுலகில் இடமில்லை!

NDTV -THE HINDU,
EDITORIAL VOICE,
13-9-2012


No comments: