Saturday, October 13, 2012

வரவேற்போம் 3 1/2 ஆண்டு மருத்துவ படிப்பை!

                                                                                                                       -சாவித்தரிகண்ணன்
 
மத்திய சுகாதார அமைச்சகம் பரிந்துரையின் படி மூன்றரை ஆண்டுக்கான டாக்டர் படிப்புக்கு இந்திய மருத்துவ கவுன்சில் அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதில் மூன்றாண்டு மருத்துவம் முடித்த மாணவர்கள் ஆறுமாதம் மாவட்ட மருத்துவமனைகளில் பயிற்சி பெற்று கிராமப்புறங்களில் செயல்படும் ஆரம்ப சுகாதார மருத்துவமையத்தில் பணிபுரிவார்கள்.
 
இது பல விதத்தில் மக்களின் மாபெரும் வரவேற்பை பெறும் என்பதில் சந்தேகமில்லை. ஏனெனில் இது நீண்டகால எதிர்பார்ப்பு.
 
ஒரு பக்கம் டாக்டர்கள் பற்றாகுறை. மறுபக்கம் போலி மருத்துவர்கள்... என சிக்கித் திணறும் ஏழை எளிய மக்கள் பகுதிகளுக்கு இத்திட்டம் ஒரு வரப்பிரசாதம்.
 
ஐந்தரை ஆண்டுகள் படிக்கும் எம்.பி.பி.எஸ் டாக்டர்களை விட இந்த டாக்டர்களுக்கு சமூகதளத்தில் சற்று குறைவான கௌரவமே கிடைக்கும். குறைவான வருமானமே நிர்ணயிக்கப்படும் என்பதைக் கடந்து, நோயிலும், துன்பத்திலும் உழலும் மக்களை பொறுத்த அளவில் அவர்களை அதிலிருந்து மீட்டெடுப்பவர் தெய்வத்திற்கு நிகராகும். ஒரு டாக்டர் நோயாளியிடம் காட்டும் அக்கறை, அன்பு, கருணைக்கு முன்பு அவர் பெரிய படிப்பு படித்தவரா, சிறிய படிப்பு படித்தவரா என்பதெல்லாம் அடிபட்டுவிடும்.
 
இதற்கு நல்ல உதாரணம் ஒரு முறை உத்திரபிரதேசத்தின் சாதாரண ஒரு சிற்றூரில் சாலை விபத்தில் உயிருக்கு போராடும் 17பேர் கொண்டு வரப்பட்டனர். அப்போது அங்கு பணியிலிருந்த ஒரு சில டாக்டர்கள் தலைமையில் வார்டுபாயும், நர்சுகளும் சேர்ந்து ஆபரேசன் செய்து அனைவரும் காப்பாற்றப்பட்டனர். உயிர் பிழைத்தவர்கள் அனைவரும் தங்களை காப்பாற்றியவர்களுக்கு கண்ணீர் மல்க நன்றி கூறினர்.
 
மற்றொரு முக்கிய அம்சம் எம்.பி.பி.எஸ் டாக்டர்களை பெரும்பாலானவர்களைப் போல இந்த டாக்டர்கள் மக்களிடமிருந்து தங்களை அந்நியப்படுத்தி கொள்ளமாட்டார்கள் என நம்பலாம். ஏனெனில் இந்த வித டாக்டர்கள் அநேகமாக சாதாரண மக்களிடமிருந்து உருவாகிவரக்கூடும்!
 
நம்நாட்டில் தற்போது இருக்கும் டாக்டர்களின் எண்ணிக்கையைக் காட்டிலும் இரு மடங்கு டாக்டர்கள் தேவைப்படுகிறார்கள். தற்போதிருக்கும் மருத்துவ கல்லூரிகள் மூலம் இத்தேவை நிறைவேற இருபதாண்டுகள் கடந்தாலும் போதாது. அதற்குள் மக்கள் தொகையும் அதிகரித்துவிடும்!
 
இந்த மூன்றரை ஆண்டு டாக்டர்கள் படிப்பில் ஆங்கில மருத்துவம் மாத்திரம் இல்லாமல் இந்திய மருத்துவமுறையின் முக்கிய கூறுகளும் கற்றுத் தரப்படவேண்டும். கிராமப் புறங்களில் பன்நெடுங்காலமாக பாம்புக்கடி, தேள்கடியும் எப்படி எதிர்கொண்டு வாழ்கிறார்கள் என்பது தெரியவேண்டும்.
அத்துடன் தற்போது தமிழிலேயே மிகச்சிறந்த மருத்துவ நூல்கள் வெளிவந்திருக்கும் நிலையில் டாக்டர் படிப்பை அந்தந்த மாநில மொழியிலேயே படிக்க விரும்புவர்களுக்கு வாய்பளித்து அவர்களை இச்சமூகத்திற்கு நன்கு பயன்படுத்தலாம்!
 
டாக்டர்கள் மட்டுமே போதுமானதல்ல. டாக்டர்களை விட அதிகமாக செவிலியர்களும், மக்கள் நலப்பணியாளர்களும் உருவாக வேண்டும். இதற்கு டாக்டர் பாபாஆம்தேவ், டாக்டர். பிரகாஷ்ஆம்தேவ், சமூகசேவகர் பங்கர்ராய் போன்றவர்கள் அவரவர் தளங்களில் ஏற்படுத்தியிருக்கும் மருத்துவ புரட்சிகளை அரசு முன்மாதியிராகக் கொள்ளவேண்டும்.
 
தன் உடல் நலன் மற்றும் மனம் குறித்த அடிப்படையான விழிப்பணர்வை ஒவ்வொரு மனிதனும் பெறும் வகையில் மருத்துவர்களின் செயல்பாடு இருக்கவேண்டும். மாறாக உடல் நலன் மற்றும் மனம் குறித்து மக்களுக்கு இருக்கும் அறியாமையே தங்களின் மூலதனமாக கருதும் மருத்துவர்கள் என்ன படிப்பு படித்து என்ன பயன்? படிக்காத போலி மருத்துவர்கள் ஒரு புறம் என்றால் படித்த போலி மருத்துவர்களையும் அல்லவா மக்கள் சகித்துக் கொள்ள வேண்டி இருக்கிறது...!
 
எனவே வரப்போகும் சில எதிர்ப்புகளை பொருட்படுத்தாமல் ஏழை, எளிய மக்களின் நலன்கருதி இந்த மூன்றரை ஆண்டு டாக்டர் படிப்பை மத்திய அரசு உறுதியோடு, சிறப்போடும் அமல்படுத்தவேண்டும்.
 
NDTV -THE HINDU,
EDITORIAL VOICE,
24-9-2012

No comments: