Friday, August 3, 2012

இயற்கைவேளாண்மைக்கான கதவுகள் திறக்கிறது



                                                                                                                        -சாவித்தரிகண்ணன்
"தமிழ்நாட்டில் கடும் உரத்தட்டுப்பாடு நிலவுகிறது.
இந்நிலையில் மத்திய அரசு ஆண்டுக்காண்டு நமக்கு தரும் உரத்தை மேன்மேலும் குறைத்துக் கொண்டு வருகிறது. இதனால் விவசாய உற்பத்தி பெரிதும் பாதிக்கப்படுகிறது"

என்று நம் தமிழக முதல்வர் ஜெயலலிதா மத்திய அரசிற்கு - குறிப்பாக பிரதமருக்கு - கடிதம் எழுதியுள்ளார்.

தமிழகத்திற்கு மாத்திரமல்ல, எல்லா மாநிலங்களுக்குமே கடந்த இரண்டாண்டுகளாக மத்திய அரசு உர ஒதுக்கீட்டை குறைத்துள்ளது. காரணம் என்ன?

சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், இயற்கை விஞ்ஞானிகள், இயற்கைவேளான்துறை சமூக ஆர்வலர்கள்... போன்ற தரப்பிலிருந்து நமது மத்திய அரசுகக்கு ஒரு எச்சரிக்கை தொடர்ந்து தரப்பட்டு வந்தது. அதைத் தொடர்ந்து 2010ஆம் ஆண்டு மத்திய அரசு இயற்கை உர வேளாண்மைக்கான தேசியதிட்டம் ஒன்றை அறிவித்தது. இது மேற்படி அனைத்து தரப்பினராலும் வரவேற்கப்பட்டது.

"பசுமை புரட்சி என்ற பெயரில் நமது நாட்டில் விவசாய உற்பத்தியை அதிகரிக்க நிலங்களில் கோடிக்கணக்கான டன் ரசாயண உரங்களை கொட்டினோம். இதனால் உற்பத்தி அதிகரித்த தென்னவோ உண்மை! ஆனால் நிலவளம் கடுமையாக பாதிக்கப்பட்டுவிட்டது. விளைநிலங்கள் பல மலட்டு தன்மை கொண்டவைகளாகிவிட்டன! சுற்றுச்சூழல் மாசுப்பட்டுவிட்டது. எனவே ரசாயண உரப்பயன்பாட்டை படிப்படியாக குறைக்காவிட்டால் இந்திய வேளாண்மை முற்றிலும் அழிந்துவிடும். ஆகவே இனி ரசாயண உரங்களுக்கு மானியம் குறைக்கப்படும்! இயற்கை உரத் தயாரிப்புகள் ஊக்கப்பபடுத்தப்படும்" என்றது மத்திய அரசு.

இதைத் தொடர்ந்தே தற்போதைய நிலைமைகள்!

இந்தச் சூழலை தமிழக அரசு சாதகமாகப் பயன்படுத்தி இயற்கை உர உற்பத்தியில் சாதனை படைக்கவேண்டும். அதற்கான சூழல் வெறெந்த மாநிலத்தை விடவும் தமிழகத்தில் தான் சாதகமாக உள்ளது.
ஆம்.! இயற்கை வேளாண்மை குறித்த விழிப்புணர்விலும், இயற்கை உரத்தயாரிப்பிலும் இந்தியாவிலேயே தமிழகம் தான் முதலிடம் வகிக்கிறது.
தமிழக அரசு இனி உரம் வேண்டும் என்று மத்திய அரசிடம் மடிப்பிச்சை கேட்கும் நிலை அடியோடு மாறி, இங்கேயே இயற்கை உர உற்பத்தியில் தன் நிறைவு பெற வேண்டும்.

தமிழகத்தில் 93-94 ஆண்டுகளில் வேளாண் உற்பத்தி 25% மாக இருந்தது. அது தற்போது 11% மாக குறைந்துள்ளது. காரணம் ஆண்டுதோறும் சுமார் 30லட்சம் மெட்ரிக் டன் ரசாயண உரங்களை நமது நிலங்களில் கொட்டி நமது நிலத்தை நாம் பாழ்படுத்தி விட்டோம்.
ரசாயண உரங்கள் பெட்ரோலிய பொருட்களில் இருந்தும் கந்தகம், பாஸ்பரஸ், நைட்ரஜன் போன்ற தாதுக்கலவைகளாலும் தயாரிக்கப்படுகிறது.
இவற்றை வெளிநாட்டிலிருந்து அதிக விலைகொடுத்து வாங்கி நமது விளைநிலங்களில் போடுகிறோம். இதனால் மண்ணிலுள்ள மண்புழு போன்ற விவசாயத்திற்கு தேவையான நுண்ணுயிர்கள் அழிந்து, விவசாயம் பாழானது தான் நாம் கண்ட பலன்! அத்துடன் சுற்றுச்சூழல் பெரிதும் கெட்டு, விவசாயத்திற்கு நன்மை செய்யும் பூச்சிகள், பறவையினங்கள் கூட அழிந்துவருகின்றன.

இந்தியா மட்டுமல்ல, அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள், சீனா போன்றவையும் தற்போது இயற்கை உர உற்பத்தியில் தீவிர கவனம் செலுத்த தொடங்கியுள்ளன.
உணவக கழிவுகளிலிருந்து உரம் தயாரிப்பதில் சீன அரசு மும்மரம் காட்டுகிறது. அது போல் நாமும் உணவகக்கழிவுகள், காய்கறி, பழங்களின் கழிவுகள் ஆடு.மாடு, கோழி போன்றவற்றின் கழிவுகள், இழை,தழை, சருகு, தானியங்கள் போன்றவற்றிலிருந்து தொழு உரம், பசுந்தாள் உரம், தென்னைநார் கம்போஸ்ட் உரம், பிண்ணாக்கு உரம், உயிரி உரங்கள்... போன்றவைகளை செலவில்லாமலும் அல்லது மிகக்குறைந்த செலவிலும் உருவாக்கலாம்.

இதற்காக அரசு திட்டங்கள் தீட்டட்டும். கூட்டுறவு முறையில் இயற்கை உர உற்பத்தியில் ஈடுபடுவோரை ஊக்கப்படுத்தட்டும்! இயற்கை கழிவுகளை உரமாக மாற்றினால் சுற்றுச்சூழல், சுகாதாரப் பிரச்சினைகள் தீரும். ரசாயண உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு செலவிடப்பட்ட பல்லாயிரம் கோடி ரூபாய் மிச்சமாகும்! உரத்திற்கான பெரும் செலவுகள் குறைந்தால் விவசாயிகள் கடனாளியாக மாட்டார்கள். தற்கொலைகள் தவிர்க்கப்படும்! இயற்கைவழி வேளாண்மைக்கான காலம் கனிந்துவிட்டது!

                                                                                                                               NDTV -THE HINDU,
                                                                                                                               EDITORIAL VOICE,
                                                                                                                               JULY 2012

No comments: