Friday, August 3, 2012

விலைப்பேசப்படும் மருத்துவக் கல்வி


                                                                                                                       -சாவித்திரிகண்ணன்

தமிழகத்தில் மருத்துவ கல்லூரிகளில் சேர்வதற்கான கலந்தாய்வு நடந்து கொண்டிருக்கிறது.
இந்த ஆண்டு எம்.பி.பி.எஸ் ரேங்க் பட்டியலில் 200க்கு 200 மதிப்பெண் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை 16.
200க்கு 199, மற்றும் 198 பெற்றவர்களோ இன்னும் அதிகம்!
இதனால் மருத்துவக்கல்லூரிகளில் சேர கடும் போட்டி நிலவுகிறது.

இரண்டாயிரத்து சொச்சம் இடங்களுக்கு 40,000 விண்ணப்பங்கள்!
மிக நல்ல மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு கூட அரசு கல்லூரிகளில் இடம் கிடைப்பது அரிதினும் அரிது.
அரசு கல்லூரிகளின் எண்ணிக்கை மொத்தம் 18 தான்!
அதில் உள்ள மொத்த இடங்கள் 1,823 தான்
இதில் பொது பிரிவில் கட் ஆப் மதிப்பெண் 198.50
பிற்படுத்தப்பட்ட பிரிவுக்கு கட் ஆப் மதிப்பெண் 197.50
மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவுக்கு கட் ஆப் மதிப்பெண் 196
தாழ்த்தப்பட்ட பிரிவுக்கு கட் ஆப் மதிப்பெண் 192
இதில் அரை மார்க் குறைந்தாலும் அரசு கல்லூரியிலே இடம் கிடைக்காது.

அரசு கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ் படிப்பிற்கு 12 ஆயிரத்து சொச்சம் வாங்கப்படுகிறது.
அதுவே தனியார் கல்லூரிகளில் 2,30,000த்திலிருந்து 2,80,000வரை ஆண்டு கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
இது தவிர லேப் கட்டணம் போன்ற சில பிரிவுகளிலும் தனி கட்டணங்கள் வசூலிக்கப் படுகின்றன.
ஆக, தனியார் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ் படித்து முடிக்க ஐந்து ஆண்டுகளுக்கான மொத்த கட்டணம் ரூ 20 லட்சம் ஆகும்.

இந்த வருடம் நீதிபதி பாலசுப்பிரமணியன் குழு தனியார் மருத்துவகல்லூரி கட்டணத்தை அதிரடியாக 30,000 ரூபாய் உயர்த்தி உள்ளது.
உயர்த்தப்பட்ட கட்டணம், படித்துக் கொண்டிருக்கும் பழைய மாணவர்களையும் கட்டுப்படுத்தும் என்கிறார்கள்.
ஆக, ஆண்டுக்காண்டு அதிகரிக்கும் கட்டணங்களை மனதில் கொண்டு மருத்துவகல்வி முடிக்க ஒரு மாணவர் ரூ 20லட்சத்திற்கும் மேலாக செலவிட வேண்டும்!

இதில் கொடுமை என்னவென்றால் அரசு ஒதுக்கீட்டில் தனியார் கல்லூரிகளில் சேரும் நல்ல மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கும், நிர்வாக ஒதுக்கீட்டில் குறைந்த மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கும் ஒரே கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

அப்படியென்றால் அரசு ஒதுக்கீடு என்ற ஒன்றிற்கான அவசியம் தான் என்ன? என்ற கேள்வி எழலாம்!

இந்த கேள்விக்கு அரசாங்கத்தால் நேர்மையாக பதில் சொல்ல முடியாது! காரணம் - நிர்வாக ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களிடம் ரூ 25 லட்சத்திலிருந்து 50லட்சம் வரை நன்கொடை பெறப்படுகிறது. இப்படி பெறுவது சட்டப்படி குற்றம். ஆயினும் அனுமதிக்கப்பட்டே வருகிறது. இந்த நன்கொடையிலிருந்து அரசு ஒதுக்கீட்டில் வரும் மாணவர்கள் விதிவிலக்கு பெறுகிறார்கள்.
எப்படிபார்த்தாலும் இன்று கோடீஸ்வர குடும்பத்து பிள்ளைகளே தனியார் மருத்துவ கல்லூரிகளில் படிக்க முடியும் என்பதே யதார்த்தம்!

இந்தச் சூழலில் இப்படி பணத்தை கொட்டித் தந்து படிப்பவர்களிடம் தேசிய கிராமப்புற சுகாதாரதிட்டத்தின் படி ஒராண்டு கட்டாய கிராமப்புற சேவையை அரசு எப்படி வலியுறுத்த முடியும்?
அல்லது நகரங்களிலே பணியாற்றினாலே கூட மனிதாபிமான மருத்துவ சேவையைத் தான் எதிக்க முடியுமா?
இவர்கள் போட்ட பணத்தை எடுக்க மனிதாபிமானமற்ற வழிமுறைகளை மருத்துவ சேவைகளில் கையாள மாட்டார்கள் என்பதற்கு யார் உத்திரவாதம் தர முடியும்? இப்போதே இதற்கு பல உதாரணங்கள் உள்ளன!
நினைத்தாலே நெஞ்சம் பதை பதைக்கிறது.
மருத்துவ கல்வி கிடைத்தற்கரிய கல்வியாக இருப்பதால் தான் இந்த நிலைமைகள்!
இந்தியா முழுமைக்குமே மொத்தம் 355 கல்லூரிகள் தான் உள்ளன. இதில் உள்ள மொத்த இடங்கள் 45,569.
ஒரு வேளை கூடுதல் மருத்துவ கல்லூரிகள் துவங்க தனியார்களை அனுமதித்தால் கல்விகட்டணங்கள் வெகுவாக குறையும். அதே சமயம் கல்வித் தரமும் குறைந்து விடும். இதனால் மருத்துவ துறையின் மாண்பும் கெட்டுப்போகும்!

ஆக அரசே கூடுதல் மருத்துவகல்லூரிகளை துவக்க வேண்டும். தற்போதுள்ள கல்லூரிகளைக் காட்டிலும் இரு மடங்கு கல்லூரிகள் தேவை! அவற்றில் எம்.பி.பி.எஸ் மட்டுமின்றி மாற்று மருத்துவமுறைகளான சித்தா, ஆயுர்வேதா இயற்கை மருத்துவம், ஹோமியோபதி, அக்குபஞ்சர்... உள்ளிட்ட அனைத்து மருத்துவகல்விக்கும் வாய்ப்பளிக்க வேண்டும்! இயன்றவரை மருத்துவகல்விக்கு தனியார் முதலாளிகளிடமிருந்து பாதுகாப்பளிக்க வேண்டும்!



                                                                                                                               NDTV -THE HINDU,
                                                                                                                               EDITORIAL VOICE,
                                                                                                                               6-07-2012

No comments: