Monday, August 27, 2012

மலை - இயற்கை தந்த வரம்




                                                                                                                       -சாவித்திரிகண்ணன்

ஒசோன் படலத்தில் ஓட்டை விழுந்து கொண்டிருக்கிறது
பூமி வெப்பமயமாகிக்கொண்டு வருகிறது.

காற்று அசுத்தமாகிறது,
நாட்டில் வறட்சி வாட்டி வதைக்கிறது
என்றெல்லாம் நாம் அடிக்கடி பேசுகிறோம், அனல்பறக்க விவாதிக்கிறோம். இதற்கெல்லாம் காரணம் நமக்கு இயற்கை அன்னை தந்த பெரும் அருட்கொடையான மலைவளம், காடுவளம் போன்றவற்றை காப்பாற்றத் தவறியது தான்!

இது குறித்த நமது அறியாமைகள் அகன்று அக்கரைகள் மிகும் வண்ணமாக நமது மேற்கு தொடர்ச்சி மலையை உலகின் பாரம்பரியமிக்க இயற்கை பிரதேசமாக ஐ.நாவின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பு அறிவித்துள்ளது.

இதற்காக இந்தியாவின் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிக்கு வந்து ஆய்வு செய்த ஐ.நாவின் இயற்கை சுற்றுச்சூழல் நிபுணர்கள், "மேற்குத்தொடர்ச்சி மலையின் இயற்கை எழில்வளம் தங்களை பெருவியப்பில் ஆழ்த்தியதாக தெரிவித்துள்ளனர்.

ஆம். நாம் அறியத் தவறிய பாரம்பரிய உன்னதங்கள் பலவற்றை நமக்கு வெளிநாட்டார் தான் அவ்வப்போது அறியச் செய்கின்றனர்.

நாம் அறிந்துகொள்ள வேண்டிய பல அரிய மற்றும் அற்புத தகவல்கள் மேற்குதொடர்ச்சி மலை குறித்து உள்ளன.

1600கி.மீ நீளமும், 1,74,700 சதுர கீ.மீட்டர் பரப்பளவும் கொண்ட மேற்குதொடர்ச்சி மலை குஜராத் மாநில எல்லையான தப்தியில் தொடங்கி மகாராஷ்டிரா, கோவா, கர்நாடகா, கேரளா, வழி தமிழகம் வந்து கன்னியாகுமரியில் முடிவடைகிறது.
இந்த மலையிலிருந்து இந்திய மக்களுக்கு நீர் ஆதாரமாகத் திகழும், மக்களின் உணவுக்கு உத்திரவாதமளிக்கும் நதிகளான நர்மதா, தப்தி, கிருஷ்ணா, கோதாவரி, காவேரி போன்றவைகளும், தாமிரபரணி, பவானி, வைகை, பெரியாறு, மணிமுத்தாறு, அமராவதி.... போன்ற பல ஆறுகளும் உற்பத்தியாகின்றன.

இந்த மேற்குத்தொடர்ச்சி மலையில் அற்புதமான அரியவகை தாவரங்கள் பல்லாயிரக்கணக்கில் உள்ளன. அதில் பல மருத்துவக்குணம் கொண்ட மூலிகை தாவரங்களாகும்!
மேலும் 600வகை பறவையினங்கள், 800வகை மரப்பாசிகள், 600வகை பூஞ்சைகள் நூற்றுக்கு மேற்பட்ட பாலூண்ணிகள் நூற்றுக்கு மேற்பட்ட நீர்நிலம் வாழும் உயிர்கள், சிங்கம்,புலி, யானை, மான், வரையாடு போன்ற விலங்குகள், இலை உதிர்காடுகள், ஊசி இலைகாடுகள்.... போன்றவை உள்ளன. ஆகவே தான் இது உலக அளவில் பல்லூயிர் வளம் மிக்க இடங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.

மேற்குத்தொடர்ச்சி மலையில் 10க்கும் மேற்பட்ட தேசியவனப்பூங்காக்கள் அமைக்கப்பட்டு, விலங்கினங்களுக்கான சரணாலயங்கள் உள்ளன. மூணாறு, கொடைக்கானல், ஊட்டி போன்ற சுற்றுலாதளங்களும், ஆனைமலை, அகத்தியமலை போன்றவைகளும் மேற்குத்தொடர்ச்சி மலையில் தான் வருகின்றன.

நாம் முக்கியமாக உணரவேண்டியது என்னவென்றால் இந்த மேற்குதொடர்ச்சி மலை இல்லையென்றால் இப்பகுதியில் மனித இனமே வாழமுடியாது என்பது தான்!

பருவமழையை தருவிக்கும் ஆற்றல், மிதமான வெப்ப நிலையை - அதாவது உயிர்கள் வாழ்வதற்கான தட்பவெப்ப நிலையை பராமரிக்கும் ஆற்றல் கொண்டது இம்மலை!

புல், பூண்டு, பூச்சி, தாவரங்கள், பறவையினங்கள், விலங்குகள் போன்ற உயிரின பரவல் முறை இருந்தால் தான் இந்த பூமி மனித இனம் வாழ்வதற்கே தகுதிபடைத்ததாகும்!

இயற்கையின் பேராற்றலையும், பேரழகையும் இங்கே நாம் காணும் போது இது தான் இறைவனின் சாம்ராஜ்ஜியமோ என்ற பிரமிப்பு நமக்கு ஏற்படும்!
எனவே கிடைத்தற்கரிய இந்த இயற்கை பொக்கிஷத்தை நாம்பாதுகாக்க வேண்டும்.

இப்பகுதிகளில் அடிக்கடி சமூகவிரோதிகாளல் ஏற்படுத்தப்படும் காட்டுத்தீ ஈடு செய்யமுடியாத இழப்புகளை உருவாக்குகிறது.
மேலும் விலங்குகள், பறவையினங்கள் சட்டவிரோதமாக வேட்டையாடப்படுகின்றன. பாலித்தீன், பிளாஷ்டிக் கழிவுகள் மண்வளத்தை பாதிக்கின்றன.
ஐ.நாவின் அறிவிப்பு இது குறித்து விழிப்புணர்வை நமக்கு ஏற்படுத்தட்டும். காடுவாழ்ந்தால் தான் நாடும், நாமும் வாழமுடியும்!

                                                                                                                               NDTV -THE HINDU,
                                                                                                                               EDITORIAL VOICE,
                                                                                                                                9-07-2012



No comments: