Friday, August 3, 2012

பவானி ஆறு


                                                                                                                       -சாவித்திரிகண்ணன்

மற்றும் ஒர் ஆற்று பிரச்சினை - இதுவும் நம்
மலையாள சகோதரர்களிடமிருந்தே வருகிறது.

முல்லைபெரியாறு அணைக்கு முட்டுக்கட்டை கொடுத்து கடந்த நாற்பதாண்டுகளாக தென்மேற்கு தமிழகத்தை திணற அடித்துக் கொண்டிருக்கும் கேரளா தற்போது பவானி ஆற்றின் ஒட்டத்தில் பாதிப்பை ஏற்படுத்த திட்டம் தீட்டுகிறது.

பவானி என்பது தமிழகத்தின் இரண்டாவது பெரிய ஆறாகும்! அதுவும் தமிழகத்தின் நீலகிரி மாவட்டத்தில் உற்பத்தியாகிறது. சுமார் 217 கிலோமீட்டர் பயணிக்கும் பவானி ஆறானது 87% தமிழகத்திலும் 9% கேளத்திலும் 4% கர்நாடகாவிலும் ஒடுகிறது.

நீலகிரியிலிருந்து பாலக்காடு மாவட்டத்திற்குள் நுழைந்து அங்குள்ள கேரளமக்களின் தாகத்தை தணித்துக் கொண்டிருக்கும் பவானியை நாம் இதுவரை தடுத்து நிறுத்த நினைத்ததில்லை. நாம் பக்தவச்சலம் சாகரில் ஒரு தடுப்பணை கட்டினால் பாலக்காடு பரிதவிக்க நேரிடும்! ஆனால் அப்படி ஒரு எண்ணம் கூட நமக்கு எழுந்ததில்லை.
தற்போது பாலக்காடு அருகில் அட்டப்பாடி பள்ளத்தாக்கில் அணைகட்ட மும்மரம் காட்டுகிறது கேரளா! 30 ஆண்டுகளுக்கு முன்பு சுமார் 20கோடி செலவில் இப்படி ஒரு திட்டத்தை கேரளா முன்வைத்த போதே தமிழகம் அதை எதிர்த்து தடுத்து நிறுத்தியது.

முதலாவது அங்கே ஒர் அணைகட்டி தண்ணீர் எடுக்கவேண்டிய தேவையே இல்லை கேரளாவிற்கு! ஆனால் மின்சாரம் தயாரிக்கப்போகிறோம் என்கிறது கேரளா! அதோடு பவானி ஆற்றை பாரதப்புழா ஆற்றில் திருப்பிவிடும் நோக்கும் அதற்குள்ளது.

"அட்டப்பாடியில் அணை அவசியமில்லை" என கேரளாவின் சுற்றச்சுழல் ஆர்வலர்கள் கூறுகின்றனர். அப்பகுதியின் வனவளம் பாதிப்படையும். ஆதிவாசிகள் இடம்பெயர நேரிடும்! ஆனாலும் இதை பொருட்படுத்தாமல் அங்குள்ள ஆதிவாசி குடும்பங்களை அப்புறப்படுத்தி வருகிறது கேரள அரசு.

இப்படி ஒரு அணை கேரளா கட்டிவிடுமானால் கோவை, திருப்பூர், ஈரோடு போன்ற மாநகராட்சிகளும் பல நகராட்சி, பேரூராட்சிகளும் குடிநீருக்கே வழியின்றி வறண்டுவிடும். இத்துடன் இப்பகுதியில் ஒடும் சிறுவாணி ஆறு சிறைவைக்கப்பட்டுவிடும். பவானிசாகர் பாலைவனமாகிடும். பவானி ஆற்றை நம்பியிருக்கும் பல இலட்சம் ஏக்கர் நிலங்களிலுள்ள பயிர்கள் பாதிக்கப்படும். சுருக்கமாகச் சொல்லவேண்டுமென்றால் தமிழகத்தின் மேற்கு மாவட்டங்கள் கேரளாவின் இத்திட்டத்தால் சர்வநாசமாகிவிடும்!

குடிதண்ணீரும், உணவுதரும் விவசாயமும் தான் ஆற்றுநீரில் மனிதகுலத்திற்கு முக்கிய தேவையாகும்! அதற்குப் பிறகு தான் மின்சாரத்தேவை - அதுவும் உபரித்தண்ணீரைக் கொண்டு உற்பத்தி செய்யவேண்டியதாகும்!

கேரளா தனக்கான மின்தேவையை அது மேற்குநோக்கி கடலுக்கு வீணாக தாரைவார்க்கும் ஆயிரக்கணக்கான டி.எம்.சி நீரிலிருந்து தயாரிக்கும் வாய்ப்பு பல உண்டு.
இது ஏதோ தேவையில்லாமல் தமிழக மக்களை அச்சப்படுத்தவும், ஆத்திரப்படுத்தவும் செய்யும் திட்டம் போலவே தெரிகிறது..!

இப்படி ஒவ்வொன்றிலும் பிரச்சினை, முட்டுகட்டை என நம் அண்டை மாநில சகோதரர்கள் அச்சுறுத்துவார்களேயானால்
தேசிய ஒற்றுமை கேள்விக்குள்ளாகிவிடும்.
இந்திய இறையாண்மையை இருள் சூழ்ந்துவிடும்!
மனித உறவும், நாகரிகமுமே மலினப்பட்டுவிடும்...

இதில் காங்கிரஸ், கம்யூனிஸ்டு, பா.ஜ.க போன்ற தேசிய இயக்கங்கள் ஒட்டு அரசியலைத் தவிர்த்து ஒற்றுமைக்கும், உண்மைக்கும் துணை நிற்க வேண்டும்.
இந்திய அரசு இதே வேடிக்கை பார்க்காமல் முளையிலேயே கிள்ளி எறியவேண்டும்!

                                                                                                                               NDTV -THE HINDU,
                                                                                                                               EDITORIAL VOICE,
                                                                                                                                July 2012.

No comments: