Tuesday, July 10, 2012

காங்கிரஸூக்கு ஏற்பட்டுள்ள பின்னடைவு

 -சாவித்திரிகண்ணன் 

ந்திர இடைத்தேர்தல் காங்கிரஸ் கட்சிக்கு அதிர்ச்சி வைத்தியம் தந்துள்ளது, இந்த அதிர்ச்சி வைத்தியம் காங்கிரஸை மீட்டெக்குமா? அல்லது இருப்பதையும் இழக்கச்செய்யுமா? என்பது இனி அது தன்னை சுயபரிசோதனைக்கு ஆட்படுத்திக்கொள்வதில் தான் இருக்கிறது. 

ஆந்திராவில் காங்கிரஸூக்கு ஆகப்பெரும் தலைவராகத் திகழ்ந்து கட்சியை தன் கட்டுக்கோப்பான தலைமையின் கீழ் வைத்திருந்தவர் y.s ராஜசேகரரெட்டி! இவரது மகன் ஜெகன்மோகன் ரெட்டியைத் தான் காங்கிரஸ் கட்சி வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தார் எனக்கூறி கைது செய்து சிறையில் அடைத்துள்ளது. 

காங்கிரஸின் குற்றச்சாட்டில் 100 சதவிகித உண்மை இருக்கலாம். இதை மக்களும் கூட மறுக்கமாட்டார்கள். ஆனால் ஜெகன்மோகன்ரெட்டி என்பவர் எப்படி இத்தனை சொத்துகளைக் குவித்தார். அவர் முதலமைச்சராயிருந்த அப்பாவின் ஆசியோடு தான் மேற்படி சொத்துகளை குவித்தார். அந்த அப்பாவை - ராஜசேகரரெட்டியைத்தான் - காங்கிரஸ்கட்சி ஆந்திரத்தில் கட்சியின் அடையாளமாகக் கருதியது! இன்று அவரது மகன் மீது காங்கிரஸ் வைக்கும் குற்றச்சாட்டு என்பது ஜெகன்மோகன்ரெட்டியைவிடவும் ராஜசேகரரெட்டிக்கே அதிகமாகப் பொருந்தும். இதனால் அம்பலப்பட்டு போயிருப்பது காங்கிரஸின் ஊழல் முகம் தானேயன்றி வேறில்லை. 

ஜெகன் மோகன் ரெட்டி மீதான நடவடிக்கைகள் என்பவை அரசியலில் தார்மீக நெறிகளை கட்டிக் காப்பாற்றவே காங்கிரஸ் எடுத்தவை என்பதை ஆந்திர வாக்களர்கள் நம்பத்தயாரில்லை.ஏனெனில் காங்கிரஸ் கட்சியில் அவர் அங்கம்வகித்தபோது தான் அத்தனை சொத்துகளையும் குவித்தார். அப்போது அதனை தடுக்கவோ, தண்டிக்கவோ காங்கிரஸ் தலைமை முயற்சிக்கவில்லை. இவை யாவும் ஆந்திர மக்களுக்கு தெரியாததல்ல. எனவே காங்கிரஸ் கட்சிக்கு ஜெகன்மோகனை தண்டிக்கும் தார்மீகத் தகுதியில்லை என்பதையே இடைத் தேர்தலில் காங்கிரஸுக்கு தந்த பின்னடைவு மூலம் ஆந்திர மக்கள் உணர்த்தியுள்ளனர். 

அடுத்தததாக இன்று ஜெகன்மோகன் ரெட்டியை ஒரு ஹீரோவாக, வருங்கால எதிர்பார்ப்பாக மாற்றிய பெருமையும் காங்கிரசையே சாரும்! தேர்தல் நேரத்தில் தன் எதிரியை தேடிச்சென்று காலில் விழுந்து வெற்றிக்கனிகளை கொடுத்ததற்கு ஒப்பாகும் ஜெகனை ஜெயிலில் தள்ளியது! ஆத்திரம், அதிகாரபலம் இவை இரண்டும் காங்கிரஸின் கண்களை மறைத்ததோடு தன் தலையில் தானே மண்ணை அள்ளிப் போட வைத்துவிட்டது. 

 அது சரி; தன்னைத் தானே சீரழித்துக் கொள்வது; உத்தம தலைவர்களை உதாசினப்படுத்தி ஊழல் தலைவர்களை வளர்த்தெடுப்பது என அகில இந்திய ரீதியில் காங்கிரஸ் என்று முடிவெடுத்ததோ அன்று தொடங்கி காங்கிரஸ் தன் முடிவை நோக்கி முன்நகர்ந்த வண்ணமே உள்ளது. 

ஜெகனின் வெற்றி அவருக்கு காங்கிரஸிடம் சரிக்கு சமமாக உட்கார்ந்து பேரம் பேசும் தகுதியை பெற்றுத் தந்துவிட்டது என்றே நம்பலாம்! 
இந்தப் பேரத்தில் மாநிலத் தலைமை கைமாறினால் ஜெகன் காங்கிரஸில் ஐக்கியமாகலாம்! அல்லது என்.டி.ராமராவைப் போல் காங்கிரஸ் எதிர்ப்பு ஒட்டுகளை அறுவடைசெய்யும் ஒரே மையத்தலைமையாக ஆந்திர அரசியலில் விஸ்வரூபம் எடுக்கலாம்! 
எது நடந்தாலும் அது காங்கிரஸ் தலைமையின் கைங்கரியத்தால் நடந்தது என்பதே சர்வ உண்மையாகும்! 

ஒரு காலத்தில் ஆந்திரத்தில் அப்பழக்கற்ற காங்கிரஸ் தலைவர்கள், பெரும் தியாகிகள் நிறைந்திருந்தனர். பட்டாபி சீதாராமையா, சஞ்சீவரெட்டி, ஆந்திரகேசரி பிரகாசம், நாகேஸ்வரராவ் பந்துலு, காளேசுவரராவ்... என்ற அந்த பட்டியல் கண்ணியத்திற்கு எடுத்துக் காட்டானது. இன்றைய காங்கிரஸ் தலைவர்களின் யோக்கியதைகளைப் பற்றி நாம் சொல்லவேண்டியதேயில்லை மக்களை முட்டாளாக்க முடியாது. 

NDTV -THE HINDU,
EDITORIAL VOICE,
15-6-2012

1 comment:

Anonymous said...

I have a doubt whether there is a "underground understanding " between congress and jegan. they may be playing this game only till election and then join their hands together...lets wait and see. This is politics :)