Thursday, July 19, 2012

அதிகரிக்கும் தற்கொலைகள்

-சாவித்திரிகண்ணன்

பார்க்கும்போது பதறவைக்கிறது
கேட்கும்போதே அதிரவைக்கிறது நாளும்,
நாளும் நடந்துகொண்டிருக்கும் நிகழ்வாகிவிட்டன தற்கொலைகள்!

உலகில் தற்கொலை செய்பவர்களின் எண்ணிக்கையில் இந்தியாவிற்குத் தான் முதலிடம்! சென்ற ஆண்டு இந்தியாவில் தற்கொலை செய்துகொண்டவர்களின் எண்ணிக்கை 1,35,585. இது அதிரவைக்கும் புள்ளிவிபரம்!
தற்கொலை செய்து கொள்வதற்கு விரக்தி, வேதனை, கைவிடப்பட்ட நிராதரவு நிலை, தோல்வியில் துவண்டுபோதல், பொய்த்துப்போன நம்பிக்கை.... போன்ற பற்பல உணர்வுகள் காரணமாகின்றன.

எனினும் தற்கொலைக்கு இரண்டு முக்கிய காரணங்கள்.
1.சமூக,பொருளாதார காரணிகள்!
2. தனிமனிதனின் மனநிலை மற்றும் குடும்பத்தின் உறவு சிக்கல்கள்! விவசாயிகள் தற்கொலை, அரசியல் காரணங்களுக்காக தற்கொலை, பொருளாதார வீழ்ச்சியால் தற்கொலை போன்றவற்றிக்கு அரசும், சமூகமும் காரணமாகின்றன. குறிப்பாக அரசியல் காரணங்களுக்கான தற்கொலைகளில் தமிழகம் தான் உலகத்திற்கே ஒரு முன்னோடியாகத் திகழ்கிறது.

அரசியல் தலைவர்களின் மரணங்களின் போதும், இலங்கைபிரச்சினை, மொழிப் போராட்டங்கள் போன்றவற்றின் போதும் உணர்ச்சிகளால் உந்தப்பட்டு நிகழும் தற்கொலைகள் தமிழக அரசியல்களத்தில் வீரமரணங்களாக சித்தரிக்கப்பட்டு வருகின்றன!

மத்திய, மாநில அரசுகளின் பொறுப்பற்ற பொருளாதார கொள்கைகள், அரசியல்வாதிகளின் அதீத சுயநலத்தால் பெருகிவரும் ஊழல்கள், பெரும் கார்பரேட் நிறுவனங்களின் மனிதாபிமான சுரண்டல் போன்றவை மக்களை ஏழ்மையில் தள்ளி, இளைஞர்களை வேலையில்லா திண்டாட்டத்தில் விரக்தியுரவைத்து தற்கொலைக்கு தள்ளுகின்றன!

  சென்ற ஆண்டு மதுபழக்கத்தால் விரக்தியுற்று மாண்டவர்கள் மட்டுமே 16 சதவிகிதம்! இந்த தற்கொலைக்கு தனிநபர்களை மாத்திரமல்ல, அரசாங்கத்தையும் நாம் பொறுப்பாளியாக்கலாம்! சென்ற ஆண்டு விவசாயிகளின் தற்கொலை எண்ணிக்கை மட்டுமே 14,000 இதற்கு அரசின் விவசாய கொள்கைகளும், பொருளாதார அணுகுமுறைகளுமே முக்கிய காரணம்! பரிட்சையில் தோல்வி, காதலில் தோல்வி, குடும்ப உறவுகளில் சிக்கல் போன்றவைக்கு அந்தந்த தனிமனிதர்களின் மனோதிடம், குடும்பத்தின் கலாச்சாரம், பண்பாட்டுசூழல் போன்றவை காரணங்களாகும்!

கடந்த சில ஆண்டுகளாக பெண்களை விட ஆண்களே அதிகமாகத் தற்கொலை செய்துகொள்கிறார்கள் என்ற புள்ளிவிபரங்கள் காலங்காலமாக கட்டமைக்கப்பட்டுள்ள ஆண்கள் பலசாலிகள், வீரர்கள் என்ற மதிப்பீடுகளை ஆட்டம் காண வைத்துவிட்டது.

தற்கொலைகளைத் தவிர்ப்பது குறித்து உலகெங்கும் பல ஆய்வுகள் நடக்கின்றன.
தற்கொலைகளை ஊடகங்கள் வெளிச்சம் போட்டு காட்டுபோது அவை வேகமாக அதிகரிப்பதாக அந்த ஆய்வுகள் அறுதியிட்டு உறுதிபடுத்தியுள்ளன.

"எனவே தற்கொலை செய்திகளை தவிர்த்திடுங்கள்" என்று உலகம் முழுமையுமுள்ள மனநல மருத்துவர்கள் பலர் ஊடகங்களுக்கு உருக்கமான வேண்டுகோளை விடுத்த வண்ணமுள்ளனர்.

அன்பு, அரவணைப்பு, மன்னிக்கும் மனோபாவம், பிறர்தேவையறிந்து உதவும் தயாளகுணம், கருணை, இறைநம்பிக்கை போன்றவைகள் சமூகதளத்தில் மேலெழுந்து வரும் போது தற்கொலைகள் பெருமளவு தவிர்க்கப்படும்!

சகமனிதனின் துன்ப துயரங்களில் அக்கரை கொள்ளாத சுயநலமனிதர்கள் ஒவ்வொருவருமே தங்களைச் சுற்றி நிகழும் தற்கொலைகளுக்கு ஒரு மறைமுக காரணகர்த்தாக்களாக இருக்கிறார்கள் என்பதே உண்மை!

ஆக, தற்கொலைகளை தவிர்க்கச் செய்யும் பொறுப்பும், கடமையும் அரசு, சமூகம், குடும்பம், தனிமனிதன் என எல்லாத் தரப்புக்குமே உரியதாகும்! ஆன்மீகத்தில் அதி உன்னத நிலையடைந்த பல மகான்களை பிரசவித்த நமது தேசத்தில் சமீபகாலங்களாக ஆன்ம பலம் குன்றி வருவதன் அறிகுறியே அதிகரிக்கும் தற்கொலைக்கு காரணமாகும்!

NDTV -THE HINDU,
EDITORIAL VOICE,
2-07-2012.

No comments: