Wednesday, July 11, 2012

இருள்விலகட்டும் ஒளிபரவட்டும்

  -சாவித்திரிகண்ணன்

ந்தியாவிலேயே கிட்டத்தட்ட 100 சதவிகித கிராமங்களுக்கும் மின்சாரம் விநியோகிக்கும் மாநிலம் தமிழ்நாடு தான்! வட இந்தியாவிலோ இது 60 அல்லது 70 சதவிகிதம் அளவே சாத்தியமாகியுள்ளது.

தமிழகத்தில் மின்சாரம் பயன்படுத்தும் குடும்பங்களும், நிறுவனங்களுமாக சுமார் 2கோடி 4லட்சம் வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளது தமிழக மின்வாரியம். அனல்மின்நிலையம், புனல் மின்நிலையம், காற்றாலை, அணுமின்நிலையம் என பலவிதமின் உற்பத்திகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்ட போதிலும் தமிழகத்தில் மின்பற்றாக்குறை என்பது சுமார் 3,000 மெகாவாட்டாக உள்ளது.

இதனை ஈடுகட்ட வெளிமாநிலங்களில் இருந்தும், தனியார்களிடமிருந்தும் கூடுதல் பணம் கொடுத்து தமிழக அரசு மின்சாரம் பெற்று வருகிறது. இந்த வகையில் தமிழக மின்வாரியத்திற்கு பல்லாயிரம் கோடி இழப்பு ஏற்படுகிறது.

தமிழக மின்வாரியத்திடம் மின்உற்பத்திக்கான பரந்துபட்ட கட்டமைப்பு உள்ளது. மிகப்பெரும் மனித ஆற்றல் உள்ளது. சுமார் 90,000 ஊழியர்கள் பலம் கொண்டது நம் வாரியம். மின்உற்பத்தியில் பல்லாண்டுகால அனுபவமும், அளப்பறிய ஆற்றலும் கொண்டவர்கள் தமிழக மின்பொறியாளர்கள்.

ஆனால் 1990களில் தொடங்கி தனியார் மின்உற்பத்தியை தமிழக அரசு ஊக்குவித்தது. இதில் தவறுகாண ஒன்றுமில்லை. ஆனால் தனியார்களைக் கொண்டே தமிழக மின்உற்பத்தி தேவைகளை சமாளிக்க முடியும் என தமிழக அரசு கருதி கடந்த சில ஆண்டுகளாக மின் உற்பத்திக்கான முதலீட்டை முடக்கி கொண்டது.

தனியார் நிறுவனங்களுக்கு தாராள சலுகைகள் பல வழங்கப்பட்டு, இடவசதி உட்பட அனைத்தையும் ஏற்படுத்தித் தந்து மின்உற்பத்தியை எதிர்பார்க்கிறது அரசு.

தனியார்களால் எதிர்பார்த்த அளவு உற்பத்தி செய்யமுடியவில்லை. அதோடு அவர்கள் உற்பத்தி செய்த மின்சாரத்தை மிக கூடுதல் விலை நிர்ணயித்து தமிழர் அரசிற்கு வழங்குகின்றனர். அதாவது தனியார்களிடம் பெறும் மின்சாரமானது அரசு உற்பத்தி செய்யும் மின்சாரத்தை விடவும் 100% அதிக விலையில் உள்ளது. இதனால் ஆண்டுக்காண்டு கூடுதல் விலைகொடுத்து மின்சாரம் பெற்ற வகையில் தமிழக மின்வாரியத்திற்கு சுமார் 20,000கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளது. ஆனபோதிலும் தனியாரை பெருமளவு நம்பும் போக்கே இன்றும் தொடர்கிறது. இதனால் அரசுக்கு அளவற்ற இழப்பு அதிகரித்த வண்ணமுள்ளது.

நம்நாட்டில் அரிசியை உற்பத்தி செய்யும் விவசாயியோ, கரும்பு விவசாயியோ, பால்பண்ணை வைத்து பால்தரும் விவசாயிகளோ தங்களுக்கு கட்டுப்படியாகக் கூடிய விலையை நிர்ணயிக்க முடியாது. அப்படியிருக்க அரசு உதவிகளால் மின்உற்பத்தி செய்யும் தனியார்கள் மட்டும் அதிக விலை நிர்ணயித்துக் கொள்வது, விந்தையிலும் விந்தை.

அரசு மின்உற்பத்தியில் கூடுதல் முதலீட்டை போட முன்வரவேண்டும். மின்உற்பத்த்திக்கான முதலீடு அனைத்து தொழில்வளர்ச்சிக்குமான 'ஆக்சிஜன்' என்பதே உண்மை!

தமிழக மின்வாரியத்திற்கு தேவையான ஊழியர்கள் 1.36லட்சம். இதல் சுமார்40% பற்றாக்குறையோடு செயல்படுகிறது மின்வாரியம். மின்வாரியத்தில் அரசின் முதலீடு அதிகரித்தால் ஆள்பற்றாக்குறை அகலும். அதோடு மின் திருட்டும், மின் இழப்பும் நிகழாவண்ணம் ஆள்பலத்தோடு கண்காணிப்பை பலப்படுத்தலாம்! தமிழகம் மின்உற்பத்தியால் தன்னிறைவை பெறும் காலம் விரைவில் கைக்கூடட்டும்.
NDTV -THE HINDU,
EDITORIAL VOICE,
19-6-2012.  

No comments: