Tuesday, July 10, 2012

கலகத்தில் பரிதவிக்கும் கர்நாடக பா.ஜ.க அரசு

 -சாவித்திரிகண்ணன் 

ண்ணியக் குறைவான அரசியல் நாடகங்கள் கர்நாடக மாநிலத்தில் அரங்கேறிக் கொண்டுள்ளது. 
 கர்நாடகாவில் பா.ஜ.கவிற்குள் நடக்கும் உள்குத்து சண்டைகளை நீண்டநாட்களாக முடிவுக்கு கொண்டுவரமுடியாமல் தவிப்பதன் மூலம் பா.ஜ.க தேசிய தலைமையின் பலஹீனம் பகிரங்கமாக வெளிப்பட்டுள்ளது. 

பாரதிய ஜனதாகட்சிக்கு தென் இந்தியாவில் முதன்முறையாக கிடைத்த அரிய வாய்ப்பை - அரியணைச் சண்டைகள், நாளும் அரங்கேறும் அமளிதுளிகளின் மூலம் அந்தக் கட்சியே பாழ்படுத்திக் கொண்டுள்ளது. 

 20008 - மே மாதம் கர்நாடகாவில் பா.ஜ.க ஆட்சி பொறுப்பேற்றது. முன்னதாக மதச்சார்பற்ற ஜனதாதளக் கட்சியுடன் இணைந்து அது ஆட்சியில் பங்கு பெற்று இருந்தது. இரு கட்சிகளுக்குமான உடன்பாட்டின்படி இருபது மாதங்களுக்குப் பிறகு பா.ஜ.கவிற்கு முதலமைச்சர் பதவியை விட்டுத்தர மறுத்தார் குமாரசாமி. இதனால் பா.ஜ.க ஏமாற்றப்பட்டது. எனவே இதையடுத்து நடந்த தேர்தலில் மக்களின் அநுதாபத்தால் பா.ஜ.க அரியைணை ஏறியது. 

காங்கிரசிற்கு மாற்றாக தூய்மையான அரசியலை தரப்போகிறோம் என்ற பா.ஜ.க, பதவிக்கு வந்தவுடன் பற்பல ஊழல் புகார்களில் சிக்கியது. இதில் முதலமைச்சராயிருந்த எடியூரப்பாவின் மீதும் ஏகப்பட்ட புகார்கள். அதில் குறிப்பாக அரசுநிலத்தை தன் மகன்களுக்கு மிக குறைந்த விலைக்கு ஒதுக்கி பதவியை துஷ்பிரயோகம் செய்ததும், சட்டவிரோத சுரங்க நடவடிக்கைகளுக்கு துணைபோனது அவரை பதவி இழக்கச் செய்தன. 

 இந்த நிகழ்வு கர்நாடகத்தில் மட்டுமல்ல, பா.ஜ.கவின் அகில இந்திய இமேஜையே ஆட்டம் காணவைத்தது. ஊழலை எதிர்ப்பதற்கோ, காங்கிரசை குறைகூறுவதற்கோவான பா.ஜ.கவின் தார்மீகத் தகுதி கேள்விக்குள்ளானது - எடியூரப்பாவால்! 

ஆனால் எடியூரப்பாவை சுலபத்தில் முதலமைச்சர் பதவியிலிருந்து விலக வைக்க முடியவில்லை பா.ஜ.கவின் தேசியத் தலைமைக்கு! லோக் ஆயூக்தா நீதிமன்றத்தின் தெளிவான தீர்ப்பே எடியூரப்பாவின் பதவியை பறித்தது. அதன் பின்பும் எடியூரப்பாவால் அடையாளம் காட்டப்பட்டவரான சதானந்தா கௌடாவைத் தான் முதலமைச்சராக்கினார்கள். ஆனால் அந்தோ பரிதாபம்! 

தன் கைப்பாவையாக சதானந்தகௌடாவை கையாளலாம் என்ற எடியூரப்பாவின் நம்பிக்கை பொய்த்தது. அதோடு 'மிஸ்டர் கிளின்' இமேஜ் பெற்றவரான சதானந்த கௌடாவின் அமைதியான, ஆக்கபூர்வமான அரசியல் செயல்பாடுகள் அவருக்கு மக்களிடையே ஆதரவு பெறக் காரணமாயிற்று. 

இதனை பொறுக்கமுடியவில்லை எடியூரப்பாவிற்கு ! மீண்டும் தானே முதல்வராக முயன்றார். முடியவில்லை. இதனால் தற்போது ஜாதி அரசிலைக் கையிலெடுத்துள்ளார். 

கர்நாடகத்தில் பெரும் வாக்கு வங்கி கொண்ட தனது லிங்காயத்து சமூகத்தைச் சேர்ந்த ஜெகதீஸ் ஷெட்டரை முதலமைச்சர் பதவிக்கு முன்நிறுத்தி சதானந்த கௌடாவை சாயக்கத் துடிக்கிறார். எடியூரப்பாவை பொறுத்தவரை அவர் மக்கள் ஆதரவை பெருமளவு இழந்துவிட்டார். ஊழலுக்கு ஒர் உதாரணபுருஷராக, கட்சித் தலைமைக்கு, கட்டுப்படாத கலகக்காராக சுயநல அரசியலின் சூத்திரதாரியாக, சாதி அரசியல் சாயம் கொண்டவராக, காங்கிரஸ் கட்சியோடு கள்ள உறவுகொண்டிருப்பவராக அல்லது கைகோர்க்கத் துடிப்பவராக பல பரிமாணங்களில் மக்கள் மனங்களில் பதிவாகிவருகிறார். இத்தனைக்குப் பிறகும் பா.ஜ.க தலைமை ஒரு உறுதியான நிலைபாடு எடுக்க முடியாமல் திணறுவது - திடசித்தமில்லாத தேசியத் தலைமையின் வெற்றிடத்தை உறுதிபடுத்துகிறது. 

கர்நாடக மாநிலத்தில் கடும் வறட்சியால் மக்கள் பரிதவிக்கிறார்கள். ஆனால் இன்னும் பத்துமாதமே ஆயுள் கொண்ட ஒரு ஆட்சிக்கு இத்தனை கலகங்கள் தேவையா? சட்டசபையை கலைத்துவிட்டு, சரியான மாநிலத் தலைமையை அறிவித்து தேர்தலை எதிர்கொண்டு மக்கள் தீர்ப்புக்கு தலைவணங்குவதே நல்லது! 

NDTV -THE HINDU,
                                                                                                          EDITORIAL VOICE,
 3-7-2012

No comments: