Sunday, April 8, 2012

ஜெயலலிதா ஆட்சி,ஜனநாயகத்தின் அரசியலா?அரண்மனை அரசியலா?
-சாவித்தரிகண்ணன்அறுபதாண்டுகளைக் கடந்துவிட்டோம் - அடிமைத் தளையிலிருந்து விடுபட்டு! ஆயினும், 'இன்னும் சுதந்திரக் காற்றை சுவாசிக்கும் சுயமரியாதையை நம் மக்கள் பெறவில்லையோ...' என்ற ஆதங்கமே ஏற்படுகின்றது.அரண்மனை அரசியல் கோலோச்சிய மன்னராட்சி காலத்தில் அரசரின் அந்தபுரத்து நாயகிகளும், அரசியின் அந்தரங்கத் தோழிகளும் அவர் தம் குடும்பங்களும் அரசவை மண்டபத்தில், அரசு காரியங்களில் ஆதிக்கம் செலுத்தும் அதிகார மையங்களாகத் திகழ்ந்ததுண்டு. அதை தட்டிக்கேட்கும் வகையறியாது தவறுகளுக்கு தாங்களும் உடன்படுவதும், வெண்சாமரம் வீசி வியந்தோதுவதும் படித்த புலவர்கள் முதல் பாமரர் வரை வழக்கமாயிருந்தது.தற்போது தமிழக அரசியலில் நடந்துகொண்டிருக்கும் நிகழ்வுகளைப் பார்த்தால் அந்தக்கால அரண்மனை அரசியலின் நீட்சியாகவேத் தெரிகிறது.மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனநாயக வழிமுறைகளில் ஆட்சி அதிகாரத்தை சுவைத்துக் கொண்டிருக்கும் தமிழகமுதல்வர் ஜெயலலிதா தன்னை பட்டத்து ராணியாக பாவித்து செயல்படுகிறார்.'எந்தக் கேள்வியும் யாரும் கேட்கக்கூடாது, கேட்டால் அது கேட்பவர்களுக்கு விபரீதமாக முடியும்' என்பது அவரது அன்றாட அணுகுமுறையாயுள்ளது. பஸ்கட்டணமா? அதை பதறித்துடிக்கும் அளவுக்கு உயர்ந்தது!


மின்கட்டணமா? அதை ஷாக்' கடிக்கும் படி ஏறறு!


சட்டம் ஒழுங்கா? அது எதிர்கட்சிகளை ஒடுக்குவதற்கும் எத்தர்கள் ஏற்றம் பெறுவதற்குமானது...


என்று எடுத்தேன், கவிழ்த்தேன் என அதிரடி அராஜக அரசியலை அரண்மனை அரசியலின் மனோபாவத்தில் அரங்கேற்றுகிறார்.மக்கள் பிரச்சனைகளை விவாதித்து விளக்கம் பெறவேண்டிய சட்டசபையை ஜால்ரா சபையாக்கி, எதிர்கட்சிகளை ஏளனம் செய்து, ஊடகங்களை ஊமையாக்கி, உண்மைகளை ஊனபடுத்தி, போராடுபவர்களை பொய்வழக்கில் சிறையில் தள்ளி... நடந்து கொண்டிருப்பது ஜனநாயக ஆட்சியல்ல.எந்த தகுதியில் ஒருவர் அமைச்சராக்கப்பட்டார்? எதற்காக அவர் நீக்கப்பட்டார்... என்பதை சம்பந்தபட்ட அமைச்சரிலிருந்து எவருமே அறிந்து கொள்ள முடியாத வகையில் -- எத்தனை முறை தான் என எண்ணி நினைவில் வைத்துக்கொளளமுடியாத வகையில் -- அடிக்கடி அமைச்சர வையை மாற்றி அமைப்பது அரண்மனை அரசியலுக்கே உரிய குணாம்சம் தான்!அதே போல் உயர்பதவி வகிக்கும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், ஐ.பி.எஸ் அதிகாரிகள் போன்றவர்கள் தங்கள் பணிகளை செய்யமுடியாத வணணம் பந்தாடப்படும் பதுமைகளாகிப் போனார்கள். அரசு இயந்திரம் ஸ்தம்பித்து மக்கள் பணிகள் தேக்கமடைந்து ஒவ்வொரு துறையும் பின்னடைவை கண்டு வருகின்றன.


ஜனநாயக ஆட்சி என்பது ஒரு கூட்டுச் செயல்பாட்டின் பண்பட்ட வடிவம், அதில் அவரவரும் அவரவர் பங்களிப்பை தரும் போது அது முழுமைபெறும். ஆனால் இங்கோ அனைத்து அதிகாரங்களும் ஒருங்கே குவிமையப்படுத்தப்பட்ட ஒற்றை அதிகாரமையமாக செயல்படுகிறார் ஜெயலலிதா.பல அமைச்சர்களுக்கு தங்கள் துறைகளைப் பற்றிய கோப்புகள் கூட கடைசி நேர கையெழுத்துக்காக மட்டுமே காட்டப்படுகிறது. எல்லோமே முதலமைச்சர் மேஜைக்கு வந்துவிடுகின்றன. அமைசசர்கள் எல்லாம் காட்டிய இடத்தில் கையெழுத்துபோடும் பாக்கியமே(?) பெரும் பேறாக கருதிவிடுகின்றனர். அவர்களை பொருத்த வரை பொறுப்புசுமையற்ற அதிகாரமும், பொல்லாவழிகளில் வரும் பணமும் போதுமானதாயிருக்கிறது.சமீபத்திய தமிழக அரசின் பட்ஜெட் மக்களை இந்த அரசு எந்த அளவுக்கு பிச்சைகாரர்களாகக் கருதி செயல்படுகிறது என்பதற்கு அத்தாட்சியாகும். மொத்தவருவாயில் 40 சதவிகிதத்திற்கும் மேல் இலவச திட்டங்களுக்கு அள்ளி இறைத்த ஒரே அரசு ஜெயலலிதா அரசு தான்!ஏழை, பணக்காரன் வித்தியாசமின்றி அனைவருக்கும் இலவச அரிசி தர ரூ 4,900 கோடி அதே போல் அனைவருக்கும் மிக்சி, கிரைண்டர், மின்விசிறி தர ரூ 2,000 கோடி.. என மிகப்பெரும் இலவசப் பட்டியல்!


இந்தியா போன்ற வளரும் நாடுகளில் ஏழைகளின் பெயரால் போடபடும் திட்டங்களும் அதற்காக ஒதுக்கப்படும் பல்லாயிரம் கோடி பணமும் ஆட்சியாளர்களையும் அதிகாரிகளையும் வளமாக்கி ஏழைகளை என்றென்றும் வறுமையிலேயே ஆழ்த்தி வைக்கின்றன. அதுவும் 1990களுக்குப் பிறகு மாநிலங்களே வெளிநாடுகளில் கடன் பெற முடியும் என்ற சூழல் உருவான பிறகு தான் இலவசங்கள் வகைதொகையன்றி வழங்கப்பட்டுவருகின்றன. இந்த வகையில் பதவியேற்ற பத்தே மாதத்தில் ஜெயலலிதா அரசு சுமார் ரூ 30,000கோடியை வெளிநாட்டுக் கடனாகப் பெற்று இது வரை எந்த அரசும் போகாத எல்லைக்குப் போய்க் கொண்டிருக்கிறது . தற்போதுள்ள தமிழ்நாடுஅரசின் மொத்த வெளிநாட்டுக் கடன் சுமார் 1கோடி 35ஆயிரத்தை தொட்டுவிட்டது. அதோடு இந்த கடனுக்கு வருவாயில் சுமார் 10 சதவிகிதம் வட்டி கட்டும் சுமையும் சேர்கிறது.


இதற்குப் பிறகு 43 சதவிகிதத்தை அரசு ஊழியர்கள், அதிகாரிகளின் சம்பளமாக கொடுக்கவேண்டிய சூழலில், மக்கள் வளர்ச்சிகான திட்டங்களுக்கு என்னதான் ஒதுக்கமுடியும்?மத்திய அரசுநிதி, மானியம், வெளிநாட்டுக்கடன்.. என்று எல்லாமும் பெற்றும் 19,832க்கு நிதிபற்றாக்குறை பட்ஜெட் போட்டுவிட்டு, வருவாய் உபரியாக ரூ.2,376 என்று வாய்ஜாலம்போடுவது எவ்வளவு பெரிய பித்தலாட்டம்.மக்கள் வெறும் வயிறோடும், வாயோடும் மட்டும் வாழவில்லை. அவர்கள் உழைக்கும் சக்தியையும், அறிவுத்திறனையும் பெற்றவர்கள். ஆக இவற்றை சமூக, பொருளாதார மேம்பாட்டுக்கு சரியாகப் பயன்படுத்தி நாட்டின் வளத்தையும், மக்களின் வாழ்க்கை தரத்தையும் உயர்த்துவதே ஒரு நல்ல அரசாங்கமாக இருக்க முடியும். அந்த நோக்கம் இந்த அரசுக்கு இருப்பதற்கான அறிகுறியே இல்லாத போது,


விஷன் 2023 என்று தமிழ்நாட்டை இந்த தரணியிலேயே 'நம்பர் ஒன்' மாநிலமாக்கிடுவேன் என்ற பித்தலாட்ட பேத்தல் வேறு!'விஷூன் 2023' இலக்கு என்பதில், 'ஒவ்வொரு தனிமனிதரின் சம்பாதிக்கும் அளவை ஆறுமடங்கு அதிகரித்திடுவோம்' என்கிறார் தமிழக முதல்வர். அது உழைக்கும் மக்களின் பங்களிப்பில் அல்லவா சாத்தியமாகும்? தமிழகத்தில் சம்பாதிக்கும் ஆண்மகன்களின் உழைப்புத்திறனை, உடல்நலத்தை 'டாஸ்மாக்' என்ற மது அரக்கன் உறிஞ்சிக்கொண்டிருக்கிறான்.உலகத்திலேயே அதிகமாக மது நுகர்கின்ற பிரதேசமாக தமிழ்மண்ணை உருமாற்றியதில் ஜெயலலிதாவின் பங்களிப்பு அசாத்தியமானது.'2003 ல் மதுபான விற்பனையை அரசே மேற்கொள்ளும்' என்ற விநோத முடிவை - மக்கள் விரோத அணுகுமுறையை - அமல்படுத்தியவர் ஜெயலலிதா. அப்போது மதுவின் மூலமான அரசுவருமானம் ரூ 3693 கோடியாக இருந்தது. அவர் 2006ல் ஆட்சியில் இருந்து இறங்கியபோது அதைனை இருமடங்காக்கியிருந்தார். 2011ல் மீண்டும் அவர் ஆட்சிக்கு வநதபோது 15,000 கோடியாக இருந்த மதுவருமானம் தற்போது ஒராண்டிற்குள் ரூ 18,000 என்ற இலக்கை தொட்டுள்ளது இன்னும் ஓராண்டிற்குள் அதன் லாபம் 20,000த்தை எட்டவேண்டும் என்ற இலக்கையும் நிர்ணயித்துள்ளார். சாராயபணத்தை அள்ளுவதில் இவ்வளவு வேகமும், வெறியும் ஏன்? உண்மையில் அரசு கஜானாவிற்கு வருவதற்கு இணையான பணம் சாராய தொழிற்சாலை முதலாளிகளின் சாம்ராஜ்ஜியங்களில் சேர்கிறது. அப்படியான சாம்ராஜ்ஜியத்தின் நிழல் உரிமையாளர்களாக சசிகலாவும் அவரது உடன்பிறவா அக்காவும் உள்ளதை மறுக்க முடியுமா?'அம்மா' என்று அழைக்கப்படுபவர் அதற்கான அருகதையாக கருணை, இரக்கம், குடிமக்களின் மீதான பரிவை கொண்டிருக்க வேண்டாமா? சாராய பெருக்கத்தால் தமிழகத்தை சரிவு பாதையில் தள்ளிக் கொண்டிருக்கும் தமிழகமுதல்வர் 'விஷன் 2023' என்று மாய்மாலம் செய்வதைக் கண்டு ஏமாற எவரும் தயாரில்லை.கூடன்குளத்தில் அணுஉலைக்கு எதிராக தங்களைத் தாங்களே அணுஅணுவாய் வருத்திக்கொண்டு உண்ணாநோன்பிருந்து எளியகிராமக்களுக்களும் சமூக ஆர்வலர்களும் போராடினார்கள். அது பொதுநலன் பொதிந்த போராட்டம்.சமீபகால தமிழகவரலாற்றில் பொதுநலனுக்காக இந்தளவு தார்மீக ஆவேசத்தோடு பெருந்திரளான மக்கள் - அதுவும் தளரா மன உறுதியுடன்- போராடிய சம்பவம் என்று குறிப்பிட்டு சொல்ல வேறொன்றில்லை.200 நாட்களுக்கும் மேலாக அலை அலையாய் திரண்டு, அன்ன ஆகாரம் துறந்து அறப்போராட்டம் நடத்திய அம்மக்களை சென்று பார்க்க 'அம்மா' என்றழைக்கப்படும் ஆட்சித் தலைமைக்கு அக்கறை இல்லை, ஆனால் ஒரு சாதாரண சங்கரன் கோயில் தொகுதி இடைத்தேர்தலுக்கு அமைச்சரவை பட்டாளத்தையே அனுப்பி வைத்து, அரசு காரியங்களையே ஸ்தம்பிக்க வைத்து, தானும் அங்கே சென்று ஒட்டுபிச்சை எடுப்பதற்கு எந்த தயக்கமும் இல்லை , எந்த 'ஈகோவும் தடுக்கவில்லை முதல்வரை!மக்கள் நலன், பொதுநலன் சார்ந்த விவகாரங்களென்றால் எட்டாத உயரத்தில் ஏறி நின்று கொண்டு பார்ப்பது, தனக்கு ஆதாயம் என்றால் சாதாரண அற்ப விவகாரம் என்றாலும் சளைக்காமல் எவ்வளவு கீழே இறங்கி வருவது என சுயநலத்தின் உச்சத்தை தொட்டவர் தான் ஜெயலலிதா! ஆக, ஜனநாயக அரசியலுக்கான சமரசத்தையும் செய்து கொண்டு, அரண்மனை அரசியலையும் அப்படியே தக்கவைத்துக் கொள்வது இந்த அக்ரஹாரப்பெண்மணிக்கே உரித்தான சமார்த்தியம்!


மக்களின் குரலுக்கு மதிப்பில்லை....


பத்திரிக்கை சுதந்திரத்திற்கு பாதுகாப்பில்லை.....


என்பதெல்லாம் ஜெயலலிதா நடத்தும் அரண்மனை அரசியலின் அணுகுமுறைகள்.


அதோடு இப்போது நீதிமன்ற உத்தரவுகளையும் உதாசினப்படுத்தும் போக்கை சாலைப் பணியாளர்கள் விவகாரம் தொடங்கி சகலவிவகாரங்களிலும் பார்க்கலாம்!"நான் அரசி, நான் ஆணையிட்டால் அனைவரும் அடிபணிந்தாக வேண்டும் அரசிக்கு யார் உத்திரவிடுவது? நீதிமன்றத்திற்கு அந்த அதிகாரம் உண்டா? என்ன? நீதிமன்றங்கள் எனக்கு உத்திரவிடுவதா? உத்திரவிடுவதும், தீர்ப்பு வழங்குவதும் அரசிக்கு மட்டுமே உரியது. என் விருப்பு வெறுப்பு சார்ந்து தான் நாட்டுநலன், மக்கள் தலையெழுத்து தீர்மானிக்கப்படும். அகில உலகத்தாலும் ஆராதிக்கப்படும் அண்ணா நூற்றாண்டு நூலகத்தை இடித்து தள்ளுவேன். செம்மொழி ஆய்வு மையத்தை சீரழித்து மூடுவேன், ஆயிரம் கோடி செலவில் உருவாக்கப்பட்ட தலைமைச் செயலக கட்டிடத்தை அழிக்காமல் விடமாட்டேன், சமச்சீர்கல்வியை சமாதிக்கு அனுப்புவேன் இன்னும் என்னென்னவோ.... எல்லாம் செய்வேன் பொறுக்க வேண்டியது மக்கள் கடன்..." என்கிற ரீதியில் செயல்படுவது ஜனநாயக அரசியலே அல்ல. ஜனநாயகத்தின் பெயரால் நடத்தப்படும் அரண்மனை அரசியலாகும்.மாற்றம் வேண்டி மக்கள் போட்ட ஒட்டுக்கு என்ன பலன்கள்?


மின்பற்றாகுறை மிரள வைக்கிறது


மணல் கொள்கைகளால் இயற்கைவளம் சுரண்டப்படுகிறது.


சமச்சீர்கல்வி அமலாகத்தில் சர்ச்சை செய்து நான்கு மாத பள்ளிப்படிப்பே ஸ்தம்பித்துப் போனதுஅரசு கேபிள் நிர்வாக அராஜகத்தால் காட்சி ஊடக சுதந்திரம் காலுக்கடியில் மிதிபடுகிறது. பத்திரிக்கை சுதந்திரம் பறிபோய் காவல்துறை போயஸ் தோட்டத்தின் பூம்பூம் மாடாகிப் போனது.சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது.இவை போதாது என்று இரு தோழிகளின் கண்ணாம்பூச்சி விளையாட்டால் தமிழகமே தத்தளிக்கிறது.உன்னதமான நட்புக்கு எத்தனையோ உதாரணங்கள் உலக வரலாற்றில் உள்ளன. காவியங்களிலும் காணக்கிடைக்கின்றன. ஆனால் இந்த உடன்பிறவா சகோதரிகளின் நட்பு ஊரை அடித்து உலையில் அள்ளவா தள்ளுகிறது? அந்தரங்கமான நட்பு ஆராதனைக்குரியது - அது சந்தி சிரிக்கும் வண்ணம் சர்ச்சைக்கு இடம் கொடாது.'பெற்ற அன்னையை பக்கத்தில் வைத்திருந்தால் உற்றார் உறவினர் அண்டி வந்து உதவிகேட்பர் அதனால் அரசநீதி கெடுமோ? நெடும் பழி சேருமோ' என்று கண்ணியம் தவறாத கர்மவீரர் காமராசரை முதல்வராக கண்ட தமிழ்த்திருநாட்டில் தான் இன்றைய முதல்வர் ஒரு கொள்ளைகார கும்பலுக்கே தன்வீட்டிலும், ஆட்சியிலும் அடைக்கலம் கொடுக்கின்ற அவலம் நேர்ந்திருக்கிறது.தர்மம், நீதி நெறிமுறைகள், பொதுவாழ்வு சார்ந்த அறங்கள் என எதற்கும் உடன்படாத - சுயநலமே குறிக்கோளாய் சொத்து சுகங்களை சுருட்டி விழுங்கிய - உடன்பிறவா சகோதரியின் குடும்பம்- எம்.ஜி.ஆர் தன் வேர்வையாலும், தொண்டர்களின் ரத்தாலும் உருவாக்கிய கட்சியையும், அவர் பெயரால் நடக்கும் ஆட்சியையும் ஆட்டி படைத்துக் கொண்டிருக்கிறது என்றால் முதலில் தண்டிக்கப்படவேண்டியது அக்கட்சிக்கும், ஆட்சிக்கும் தலைமை வகிப்பவர் தானே! ஆனால் கூட்டாளிகளை தண்டித்துவிட்டு தலைவர் மட்டும் தப்பித்துக் கொள்கிறாரே? தண்டிக்கபடவேண்டிய தலைவரே தண்டிக்கும் அதிகாரத்தை கொண்டிருப்பது கோமாளித்தனமல்லவா?இவர்களுக்குள் சண்டை போட்டாலும் கட்சியும், ஆட்சியும் அல்லாடுகிறது!


இவர்கள் ஒன்று சேர்ந்தாலும் கட்சியும், ஆட்சியும் அல்லாடுகிறது!


நடந்திருப்பது இருவருக்கிடையிலான சண்டையா? ஊடலா?


கட்சி பதவிகள் பேரம் பேசப்பட்டதும், கவுன்சிலர் பதவி தொடங்கி அமைச்சர் பதவி வரை ஏலம் போனதும், அத்தனை அரசு துறைகளிலும் ஊடுருவி உடன்பிறவா சகோதரி குடும்பம் மக்கள் பணத்தை வாரிசுருட்டியதும், அதிகார துஷ்பிரயோகத்தால் நாடு அல்லோகலப்பட்டதும் ஜெயலலிதாவை பொறுத்தவரை ஒரு பொருட்டே அல்ல..."என்பதவிக்கே குறி வைக்கிறீர்களா..." என்று, தான் பாதிப்பிற்காளானது மட்டுமே அக்காவின் கவலை...!!


ஐயோ எனக்கு எதுவுமே தெரியாதே. உன் நலன் தானே என் நலன்..." என்பது தங்கையின் சமாதானம்!


தமிழ்நாட்டில் ஒரு படம் நூறுநாள் ஒடினாலே வெற்றி. அதனால் இந்த அக்கா- தங்கை நாடகம் நூறுநாட்கள் நடந்த வகையில் வெற்றியோ வெற்றி. பார்வையாளர்களான மக்களே பரிதாபத்திற்குரியவர்கள். பல்லாண்டுகளாக இந்த கூடாநட்பால், கேடாய் போனது நாட்டு நலன்கள்.அழுத்தி வைக்கப்பட்டுள்ள மக்கள் மனதிலுள்ள தர்மாவேசம் பொங்கி எழும் காலம் வெகுதூரத்தில் இல்லை. அப்போது இந்த அரண்மனை அரசியல் தூக்கி எறியப்படும்.