Monday, July 12, 2010

ராவணன்

மணிரத்தினத்தின் முழுமையற்றபடைப்பு

-சாவித்திரிகண்ணன்

ராமாயணத்தில் வரும் இலங்கை அரசன் ராவணன் சிவபக்தன் பல உயரிய நற்குணங்கள் கொண்டவள் என நாம் அறிவோம். அந்த கோணத்தில் மணிரத்தினத்தின் சினிமாவில் வரும் 'வீரா' என்ற ஆதிவாசியின் கதாபாத்திரம் உருவாக்கபபட்டுள்ளது. என்பதால் ராவணன் என்று படத்திற்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது.

ஆனால் புராணத்தில் வரும் ராவணனைப்போல் வீரா, போலீஸ் அதிகாரி தேவ் பிரகாசின் மனைவி ராகிணியை ஆசைப்பட்டு தூககி வரவில்லை. ஒப்படைகக மறுத்து அதன் விளைவாக சாவைத் தேடிக் கொள்ளவுமில்லை ராவணன் எனற இந்த திரைப்படத்தில் மணிரத்தினம், புராண காலத்திய கதாபாத்திரங்களின் சாயலோடு நவீன மனிதர்களைப் பொருத்தி கதை சொல்லியிருக்கும் உத்தி சுவாரஷ்யமானது தான்!

கதை நாயகன் வீராவின் பாத்திர உருவாக்கத்தில் வீரப்பனின் சாயல் இருக்கிறது.

ஆதிவாசிகளுக்கும், போலீஸ் அதிகாரவர்க்கத்துமான மோதல்களில் மாவோயிஸ்ட் போராடடத்தின் சாயல் தெரிகிறது.

இந்த இரண்டு பிரச்சினைகள் பற்றிய ஆழமான சமூக பின்புலத்தை உணராத அறியாமை திரைக்கதை போக்கில் வெளிப்படுகிறது.

அசத்துகின்ற தொழில் நுட்பங்கள், மிரட்டுகின்ற காட்சி போக்குகள், நுட்பமான எடிட்டிங், மணிரத்தினத்தின் முத்திரை பதிக்கும் இயக்கம் அனைத்துமே கதை, திரைக்கதை வலுவாக அமைக்கப்படாததால் பயனற்று விடுகிறது.

அதென்ன மணிரத்தினத்தின் படங்களில் வரும் கேரக்டர்கள் எல்லாமே ஒரே ரீதியான ஸ்டீரியோ டைப் வசனங்களை பேசுகிறார்கள். குறிப்பிட்ட சில உணர்ச்சி வெளிப்பாடுகளை பிரதிநிதித்துவப் படுத்துகிறார்கள். தன் பட கதாபாத்திரங்களுக்குள் தானே நுழைந்து கொண்டு ஆக்கிரமித்து வருவதை மணிரத்தினம் எப்போது தான் தவிர்ப்பாரோ புரியவில்லை.

எதற்காக போலீஸ் கூட்டம் வீராவின் தங்கை கல்யாண வைபவத்தில் நுழைந்து வீராவைச் சுடவேண்டும்? அவன் தங்கையை கடத்தி கற்பழிக்க வேண்டும்? காரணமே புரியாமல் பார்வையாளர்கள் தத்தளிக்கிறார்கள். சமாதானம் பேச வரும் வீராவின் தம்பியை எடுத்த எடுப்பில் எந்த பேச்சோ, பேரமோ இன்றி போலீஸ் அதிகாரி சுட்டுத்தள்ளுவது என்பது நம்புபடியாக இல்லை. போலீஸ் அதிகார வர்க்கம் மிகவும் கொடூரமானது என்று வலிந்து சொல்லப்படும் முயற்சியாகத் தான் தெரிகிறது.

இவற்றையெல்லாம் தவிர்த்து படத்தில் ரசிக்கத் தக்க அம்சங்கள் நிறையவே உள்ளன.முதலில் கொடூரமானவனாகத் தான் நினைத்த வீராவின் உன்னத நற்குணங்களால் படிப்படியாக ராகிணி கவரப்படுவதும், கடத்தி வரப்பட்ட பெண்ணின் அழகு, வசீகரம், பேச்சு நடத்தைகள் போன்றவை வீராவின் மனதில் ஏற்படுத்தும் தாக்கத்தையும், தடுமாற்றத்தையும் கடந்து அவன் கம்பீரமான ஆண்மகனாக கடைசிவரை நிலை தடுமாறாமல் இருப்பதும் கவிதையாகச் சொல்லப்பட்டிருக்கிறது.இந்த கதாபாத்திரங்களில் விக்ரமும், ஐஸ்வர்யாராயும் மிக நுட்பமான தங்கள் நடிப்பாற்றலை வெளிப்படுத்தியுள்ளனர்.

போலீஸ் அதிகாரியோடு மோதி அவனை வீழ்த்தும் நிலையில், வீரா பேசும் ஒரு வசனம் அதி அற்புதம். "உன் அழகான மனைவிக்காக உன்னை கொன்றுவிடலாம் அல்லது உனக்கு உயிர்பிச்சை தரலாம்." எனக்கூறி போலீஸ் அதிகாரியை காப்பாற்றுவான் வீரா. ஆனால் அவ்வளவு உயர்ந்த குணம்படைத்த வீரா, "நாங்க எச்சிக்கை தான் ஆனா உன்மனைவி சொக்க தங்கம்" என வசனம் பேசுவது கொஞ்சமும் பொருத்தமில்லை. வசனம் எழுதிய சுகாசினியின் 'மேட்டுக்குடி பார்வை' தான் இதில் வெளிப்படுகிறது. மேலும் 'நாங்கள் ஒடுக்கப்பட்டவர்கள்' என வீரா பேசும் வசனத்தைத் தவிர ஒடுக்கப்பட்ட மக்களின் பிரச்சினைகள் எதுவும் படத்தில் சொல்லப்படவில்லை.

ஐஸ்வர்யாராயின் வசீகரிக்கும் அழகும், விக்ரமின் சிறப்பான நடிப்பும், சந்தோஷ்சிவன், மணிகண்டன் என்ற இருவரின் அபார கேமிரா திறமையும், கடைசி 20 நிமிஷ விறுவிறுப்பான காட்சி அமைப்புகளும் இந்தப்படத்தை தூக்கி நிறுத்த போதுமானதாக நம்பிவிட்டார் மணிரத்தினம்!