Monday, January 4, 2010

சிவசேனாவை தனிமைப்படுத்துவோம்

-சாவித்திரிகண்ணன்

ஜனநாயக நாடடிலே அதன் பரந்து விரிந்த நெகிழ்வு தன்மையிலே எவ்வளவுக்கெவ்வளவு சிறப்புகள் உள்ளனவோ அவ்வளவுக்கு ஆபத்தும் மறைந்தே உள்ளன.

சிவசேனையும், அதுபோட்ட குட்டியுமான மகாராஷ்டிரா நிர்மாண்சேனாவும் நாகரீக உலகத்திலே வாழத்தகுதியற்ற படு பிற்போக்குத்தனமான, காலாவதியாகிப் போன காட்டுமிராண்டித்தன கலாச்சராத்தை தூக்கிபிடித்து திரிந்தாலும் கூட இந்த நாட்டிலே அவற்றிற்கு எந்த தடையுமில்லை. கூட்டம் சேர்க்க முடிந்தால் மாநில சட்ட மன்றத்திலும் , மத்தியில் பாராளுமன்றத்திலும் இடம்பெறும் வலிமை இருந்துவிட்டால் பிறகு ஒரு போதும் அவ்ர்களை கட்டுபடுத்த முடியாது என்ற அவலமான நிலைமை தொடர்ந்து விடுகிறது.

யோசித்து பார்த்தால் இந்தியாவை மொழிவழிமாநிலமாக கூறுபோட்டு நமது முன்னோர்கள் பெரும் முட்டாள்தனம் செய்துவிட்டார்களோ என்று தான் அங்கலாய்க்க வேண்டியுள்ளது.

550 சமஸ்தானங்களாகப் பிரிந்து கிடந்த இப்பெரும் நிலப்பகுதியை பிரிட்டிஷார் தான்- அல்லது அந்நிய ஆக்கிரமிப்பாளர்கள் தான் - ஐக்கிய இந்தியாவாக அடையாளப்படுத்திக் கொள்ள உதவினார்கள். அப்படி உருவாகிவிட்ட இந்தியாவை மொழி, இன, பிரதேச உணர்வுகள் உருத்தெரியாமல் கலைத்துவிடுமோ என்ற கவலைதான் ஏற்படுகிறது. அதனால் தான் சுதந்திரம் பெற்ற பின்பு பண்டித ஜவஹர்லால் நேரு இந்தியாவை ஐந்து பெரும் மாநிலங்களாகப் பிரித்து, ஏற்கெனவேயிருந்த அதன் இயல்பு மாறாமல் தொடரச் செய்யலாம் என திட்டமிட்டார். அதன் படி சென்னை ராஜதானிக்குள் தென்னிந்தியாவின் கணிசமான பகுதி பல்லின கலாச்சார பரிமாணத்துடன் பரிமளித்திருக்கும். இன்றைய மொழிவாரி மாநில பிரிவினையால் காவேரி, பாலாறு, முல்லையாறு... என தீராப் பிரச்சனைகளால் திணறிக் கொண்டிருக்கிறோம்.

அதேபோல பம்பாய் ராஜதானி அப்படியே தொடர்ந்திருக்குமானால் மகாரஷ்டிராவும், குஜராத்தும், கர்நாடகம், மத்திய பிரதேத்தின் சில பகுதிகளும் பிரிட்டிஷ் ஆட்சிலிருந்ததைப் போலவே தொடர்ந்திருக்கும். பல மொழி பேசுகின்ற பல்லின, பன்முக கலாச்சார கூட்டிணைவு அரசியல் நிர்பந்தங்களோடு ஐக்கியமாயிருக்கும்.

1960-ல் பம்பாய் ராஜதானியிலிருந்து மகாராஷ்டிர, குஜராத் என பிரிந்தது. மராத்திய பேசும் மக்களின் போராட்டங்களால் மகாராஷ்டிரா கட்டமைக்பட்டது. அதனால் தான் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், 'மும்பை, இந்தியர்கள் அனைவருக்கும் சொந்தமானது' என்றதற்கு பதிலடி தந்த பால்தாக்கரே, 'மராத்தி மக்கள் போராடியது உனக்குத் தெரியுமா? அதில் 105பேர் உயிர் தியாகம் த்நதது தெரியுமா? அப்போது நீ பிறக்கவே இல்லையே...'' என்றார்.

ஆனால் இந்தியா உருவாதற்கு இதைக்காடிலும் அதிக மராத்தியர்கள் உயிர்தியாகம் செய்துள்ளனரே... அப்படி இந்தியா உருவானதால் தானே மராத்தியர்கள் தங்களுக்கென்று ஒரு மாநிலத்தைப் பெறமுடிந்தது.

ஒவ்வொரு இனத்திற்கும் தங்கள் பழம்பெருமைகளைச் சொல்ல நிிறைய இருக்கலாம். ஆனால் அந்தப் பழமையிலேயே தங்கிவிடுவது தான் பேராபத்து. இலங்கை மண்ணில் தமிழர்கள் அந்த பெரும் தவறைச் செய்ததால் தான்- தங்களை நவீன உலகிற்கேற்ப புதுப்பித்துக் கொண்டு ஒன்று கலக்க முடியாததால் தான்- தங்கள் பெருமைகளை இழந்து பெரும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

மராத்தியர்களின் காவலர்களாக தங்களை அடையாளப்படுத்திக் கொண்டிருகின்ற தாக்கரேக்கள் தான் மராத்திய மக்களின் மாபெரும் பின்னடைவிற்கு காரணமாகிக் கொண்டிருக்கறார்கள் என்பதை அந்த மக்கள் உணர்வதற்கு நாளாகாது.

ஹிந்துக்களை காப்பாற்றுகிறோம் எனறு புறப்பட்ட இந்துத்துவ அமைப்புகளாலும், பாரதீய ஜனதா கட்சியாலும் தான் இந்துக்கள் பாதுகாப்பற்ற நிலைக்கு தள்ளப்பட்டு, கோயில்களுக்கும், புனித தலங்களுக்கும் போலீஸ் பாதுகாப்பு தேவைப்படும் சூழல் உருவாகியுள்ளது. எந்த ஒரு தீவிரவாததன்மை கொண்ட அமைப்புகளாலும் அந்தந்த இன, மத, மொழி மக்களுக்கு தீமைகளே தவிர நன்மைகளில்லை.

1966-ல் சிவசேனை பால்தாக்கரேவால் தொடங்கப்பட்ட போதே தேசிய சக்திகள் அதன் அபாயத்தை உணரத்தவறிவிட்டன. அதன் முதல் தாக்குதல் மும்பையில் பெரும்பாலான தொழிற்சாலைகளையும், வியாபார ஸ்தலங்களையும் வைத்திருந்த குஜராத்திகள், மார்வாடிகள் மீது பாய்ந்தது. அந்த தொழிற்சாலைகளாலும், வியாபார நிறுவனங்களாலும் மும்பையின் வளர்ச்சியை, மக்களுக்கு ஏற்பட்ட, வாய்ப்பு வசதிகளை எண்ணிப் பார்க்காமல் வன்மத்தை விதைத்தார் பால்தாக்கரே.

இதே பாணியைத் தான் ஆரம்ப காலத்தில் தமிழ்நாட்டில் தி.மு.க முயன்று தோல்வி கண்டது.

பிறகு தென்இந்திய மக்களுக்கு எதிரான வன்முறைகளைத் தூண்டினார் பால்தாக்கரே. மும்பையில் உயர் நிர்வாகம் தொடங்கி அடிதட்டு வேலைகளைச் செய்வது வரை பல தளங்களிலும் தென்னிந்திய மக்கள் குறிப்பாகத் தமிழர்கள் சிறப்பாக பணியாற்றி வந்தனர். இவர்களால் மும்பை அடைந்த நன்மைகள் ஏராளம். ஆனால் குறுகிய கண்ணோட்டத்தில் மராத்தியர்களின் வேலைவாய்ப்புகள் பறிபோவநதாக பால்தாக்கரே பிரச்சாரம் செய்தார். உண்மையில் மும்பை மக்களின் பல்வேறு தேவைகளை நிறைவேற்றி அதனை வளர்ச்சி பாதைக்கு கொண்டு சென்றவர்கள் அங்கு குடியேறிய மற்ற மாநில மக்கள் தான்! ஆனால் எதிர்மறை பிரச்சாரம் தான் எளிதில் மக்களை வென்றெடுத்து விடுகிறது.

அதன்பிறகு கம்யூனிஸ்ட் தொழிற்சங்கங்களுக்கு எதிராக களத்தில் இறங்கினார். சாதி, மத, இன பேதத்திற்கு அப்பால் தொழிலாளர்கள் என்ற உண்ர்வில் ஒன்றுபட்டிருந்த தொழிற்சங்க அமைப்புக்ள் சிவசேனாவின் வளர்ச்சிக்கு சரிபட்டு வருமா? 1970-ல் கம்யூனிஸ்ட் கட்சியின் தாதர் தொகுதி எம்.எல்.ஏ சிவசேனாவால் கொலை செய்ய்ப்பட்டார். அன்றைய தினம் காங்கிரஸ் நினைத்திருந்தால் சிவசேனாவை தடை செய்யப்பட்ட இயக்கமாக அறிவித்திருக்கலாம். நியாயமாக அப்படி தடைசெய்திருக்க வேண்டும். ஆனால் தங்கள் அரசியல் எதிரியான கம்யூனிஸ்டுகள் தாக்கப்படுவதில் காங்கிரஸ் உள்ளுற மகிழ்ச்சி அடைந்ததோ, என்னவோ? சிவசேனாவை

முளையிலேயே கிள்ளி எறிந்திருந்தால் இன்று அதன்வழித்தோன்றலான மகாராஷ்டிர நவநிர்மாண் கட்சி பிறந்திருக்குமா? அதன் உறுப்பினர்கள் சட்டமன்றத்திற்குள்ளேயே தனது தாய் மொழியும் தேசிய மொழியுமான இந்தியிலே அபுஆஸ்மி பதவி பிரமாணம் எடுத்ததை எதிர்த்து கொலைவெறி தாககுதலை சட்டமன்றத்திகுள்ளேயே நிகழ்த்தி இருப்பார்களா...?

தாக்கரேக்களின் வளர்ச்சிக்கு, கட்டுப்பாடற்ற வன்முறை வெறியாட்டங்களுக்கு காங்கிரஸ், பாரதிய ஜனதா உள்பட அனைத்து தேசிய இயக்கங்களும் பொறுப்பாக வேண்டும். இஸ்லாமியர்களுக்கு எதிரான வன்முறை வெறியாட்டங்களை சிவசேனா முன்னெடுத்தது என்பது அது பா.ஜ.கவுடன் அரசியல் கூட்டணி அமைக்க தொடங்கியதிலிருந்து தான் விஸ்வரூபம் எடுத்தது.அதன் பிறகு தான் மும்பை மட்டுமல்ல, இந்தியாவே ஒரு நிம்மதியிழந்த நாடாகிவிட்டது. மராத்திய கலாச்சாரத்தை, பழம்பெருமைகளை தூக்கிபிடிப்பதினால் சிவசேனாவை மற்ற கட்சியிலுள்ள தேசியவாதிகளான மராத்தியர்கள் ஏதோ ஒரு வகையில் அங்கீகரித்து விடுகின்றனரோ...?

சட்ட மன்றத்திற்குள்ளேயே கொலைமுயற்சியில் ஈடுப்ட்ட நான்கு எம்.எல்.ஏக்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்திருக்க வேண்டாமா? அந்த கட்சி தடை செய்யப் பட்டிருக்க வேண்டாமா? இந்தியாவின் ஒருமைப்பாட்டிற்கு எதிரானவர்களை இருமபுக்கரம் கொண்டு ஒடுக்கியிருக்க வேண்டாமா? இப்படிச் செய்வதற்கு காங்கிரசுக்கும், தேசியவாத காங்கிரசுிக்கும் என்ன தயக்கம் வேண்டிகிடக்கிறது?

இந்துத்துவ கொள்கையின் கூட்டாளி என்பதாலேயே உத்திரபிரதேசம், பீகார் மாநில தொழிலாளர்களை மும்பையில் சேனாக்கள் தாக்குவதில் பா.ஜ.க உடன்படுகிறதா? ஏன் சட்ட மன்றத்திலே இந்தியிலேயே பேசி உறுதி மொழி எடுக்க மற்ற தேசிய கட்சிகளின் உறுப்பினர்கள் துணியவில்லை...? அபுஆஸ்மிக்கு ஏற்பட்ட அவமானம் ஒவ்வொரு இந்தியனுக்கும் ஏற்பட்ட அவமானம் தானே? அவர் மீது விழுந்த அடி இந்திய ஜனநாயகத்தின் பன்முகத் தன்மையின் மீது விழுந்த பலமான தாக்குதலல்லவா?

1992-லே பாபர் மசூதி இடிப்பை தொட்ர்ந்து நடந்த மும்பை கலவரத்திற்கு, அதில் இஸ்லாமியர்கள் கொடூரமாக கொல்லப்பட்தற்கு பால்தாக்கரே தான் பின்ணணியில் இருந்தார் என்று நீதிபதி கிருஷ்ணா தெளிவாக 2000 ஆம் ஆண்டு தீர்பளித்தார். பால்தாக்கரே கைது செய்யப்பட்டு, தண்டிக்கப் பட்டிருக்க வேண்டாமா?

'வாலாண்டியர்ஸ் டே' கொண்டாடினால் இளம் காதலர்களை தாக்குவார்கள், ஆபாசமாக நடிக்கிறார் என்று நடிகை கரினாகபூர் வீட்டின் முன்பு போராட்டம் நடத்துகிறார்கள். தீபாமேத்தாவின் 'fire' படம் திரையிட்ட போது தியேட்டர்களை தாக்கினார்கள்! அடடா இந்த காட்டுமிராண்டிகளுக்கு யார் கலாச்சார காவலர் பணியைத் தந்தது? ஏன் இந்த தாக்குதல்களை கட்சி சின்னமான வில் அம்பை ஏந்திக் கொண்டு செய்திருக்கலாமே!

2006ஆம் ஆண்டு ஜீ தொலைகாட்சி அலுவலகத்தை தாக்கிய சிவசேனாவினர் தொடர்ந்து பல மீடியாக்களை தாக்கிவந்ததில் தற்போது ஐ.பி.என் தொலைக்காட்சி அலுவலகம் சூறையாடப்பட்டுள்ளது. அதன் ஊழியர்கள், நிருபர்கள், ஆசிரியர் தாக்கப்பட்டுள்ளனர். அனைத்து இந்தியர்களும் இந்த இரு சேனாக்களையும் தடைசெய்ய வேண்டும் என்பதில் ஒன்று பட வேண்டும் குறிப்பாக மராத்தியர்க்ள தங்கள் மானம், மரியாதைகளை மீட்டெடுக்க சேனாக்களை தனிமைபடுத்த வேண்டும்.

மராத்திய மக்கள் வேறு மாநிலங்கள் சென்று பணிசெய்வதை மற்ற மாநிலத்தவர்கள் எதிர்க்க ஆரம்பித்தால் நிலைமை என்னாவது? அப்படி கோவா, ஹரியானா, பஞ்சாப், டெல்லி, தமிழகம், ஹிமாச்சலபிரதேசம் போன்ற இடங்களில் மராத்தியர்கள் கணிசமாக புலம்பெயர்ந்து வேலைபார்ப்பதன் அடிப்படையில் தானே சிவசேனா இந்த மாநிலங்களின் சட்ட மன்ற தேர்தலில் கூட போட்டியிடுகிறது.

இன்னும் எத்தனை அநீதி, அட்டுழியங்கள், அராஜகங்கள் நடக்க போகின்றனவோ? அதையெல்லாம் தடுத்து நிறுத்த இயலாமல் வெறுமனே கண்டனம் தெரிவிப்பது கண்துடைப்பல்லவா?

சேனாக்கள் தேர்தலில் போட்டியிட தடைவிதிக்க வேண்டும். அந்த கட்சிகளின் எலலாவித அங்கீகாரமும் ரத்து செய்யபட்டு பால்தாக்கரேயும், ராஜ்தாக்கரேயும் மனிதகுல விரோதிகளாக அறிவிக்கப்பட்டு கைது செய்ய வேண்டும்.

பால்தாக்கரேயின் சச்சின் குறித்த விமர்சனத்திற்கு சரமாரியாக எழுந்த எதிர்வினைகளைத் தொடர்ந்து மராத்தியர்களே கூட அவரது அறிக்கைக்கு மெளனம் சாதித்தையடுத்து தற்போது அவரது எடுபிடிகள் சில சச்சினை சீண்டி பிராபல்யம் தேடுகின்றனர்.

சிவசேனா எம்.பி.யான சஞ்சய் ராவ், 'சச்சினுக்கு இனி மராத்திய கிரிக்கெட் வீரர்கள் ஒத்துழைக்க மாட்டார்கள் என்றும் சுனில் கவாஸ்கரே உண்மையான மராத்தியன் என்றும் அறிவித்துள்ளார்.

சுனில் கவாஸ்கள் கேப்டனாக இருந்த போது சுமார் சரிபாதியளவுக்கு தன் டீமில் மராத்திய விளையாட்டு வீரர்களை வைத்துக் கொண்டாராம். கவாஸ்கர் ஒரு நேர்மையான மஹாராஸ்டிரியனராக இருந்ததால் தான் ஒட்டுமொத்த இந்தியாவும் அவரை நேசித்ததாம். ஆனால் டெண்டுல்கர் அப்படியிலலை என்று சிவசேனை எம்.பி. விளக்கம் தருகிறார்.

இந்த அறிவிப்பினால் இப்போது கவாஸ்கரை காலி செய்துவிட்டார் சஞ்சய் ராவ் என்று தான் கூற வேண்டும்.

இவ்வளவு நாளும் இந்திய மக்களுக்கே பொதுவான விளையாட்டு வீரராக அறியப்பட்டிருந்த கவாஸ்கர் இப்போது தான் கடந்த காலங்களில் ஒரு மராத்திய வெறியராக இருந்திருக்கிறாரோ... என்று நாட்டு மக்களை எண்ண வைத்து விட்டார் சிவசேனை எம்.பி. எந்தெந்த ம்ராத்தியரெல்லாம் இனி இந்தியாவுக்கு எதிராக மராத்திய நலன்களை மட்டுமே கவனத்தில் கொள்வார்களோ அவர்கள் மட்டும் சிவசேனாவின் நற்சான்றிதழ் பெறமுடியும் என்பதே சிவசேனாவின் நிலைபாடு. இது ஒட்டுமொத்த இந்திய மக்களையும் மராத்தியர்களுக்கு எதிராக மாற்றிவிடத் துடிக்கும் மனோபாவம். யானை தன் தலையில் தானே மண்ணள்ளி போட்டுக் கொண்ட கதையாகத் தான் இது முடியும். ஆகவே மராத்திய மக்கள் இந்த கோணல் புத்தி கோமாளிகளை, மனித குல எதிரிகளை தங்களிடமிருந்து தனிமைப்படுத்திட ஒட்டு மொத்த இந்திய மக்களும் துணை நிற்போமாக.