Monday, September 7, 2009

சேவாலயா முரளிதரன் நம்பதகுந்தவரா?

-சாவித்திரிகண்ணன்

சமீப காலமாக எனக்கு இந்த So called social workers பற்றிய கசப்பான அனுபவங்கள் தொடர்ந்து கொண்டிருக்கிறது. 24 வருடங்களாக பத்திரிக்கை துறையில் இயங்கி கொண்டிருக்கும் எனக்கு அடிக்கடி அரசியல் வாதிகளை விமர்சிப்பது தவிர்கக முடியாததாகிறது. இப்படி அடிக்கடி நெகடிவ்வான அம்சங்களையே பார்க்கவும், எழுதவும் வேண்டித் தொலைகிறதே..... என சற்றேனும் பாசிடிவ்வாக, இயங்கி கொண்டிருக்கும் சமூக ஆர்வலர்களை, அவர்களின் செயல்பாடுகளை எழுதி உற்சாகமும், நம்பிக்கையும் ஏற்படுத்தலாமே என தோன்றியதின் விளைவாக ஒரு சிலரைப்பற்றி எழுதியுள்ளேன். ஆனால் விளம்பரமும், புகழும் இந்த சமூக ஆர்வலர்களை எப்படியெல்லாம்.... சந்தர்பபவாத சுயமோகிகளாக உருவாக்கிவிடுகிறது என்று அனுபவங்கள் வாய்க்கும் போது எச்சரிக்கை உணர்வே மேலோங்குகிறது.

பத்திரிக்கைதுறையில் நான் மிகவும் மதிக்கும் பத்திரிகையாளர்களில் ஒருவர் ஆர்.சபிமுன்னா. சபிமுன்னா ஜீனியர் விகடனின் வட இந்திய நிருபராக உள்ளார். பத்திரிகை துறையை மக்களுக்கு பயனளிக்கும் துறையாக பயன்படுத்தவேண்டும் என்ற கருத்திற்கு ஒத்திசைந்த நண்பரான சபிமுன்னா சமீபத்தில் ஜீனியர் விகடனில் ஒரு செய்தி எழுதினார். அதில் சாய் என்ற எட்டுவயது சிறுவன் ஒரு கூட்டத்தாரால் கடத்தப்பட்டு கொடுமைபடுத்தப்பட்ட நிலையில் அங்கு பணியாற்றிய தமிழ் போலீஸ் அதிகாரி மலர்விழியால் காப்பாற்றப்பட்டதாக எழுதியிருந்தார். இது ஜீனியர்விகடனில் பிரசுரமாகியும் சிறுவனின் பெற்றோர்களை கண்டடைய முடியவில்லை. இது சமயத்தில் தி.நகர் காந்தி கல்வி நிலையத்திற்கு வந்திருந்த சேவாலயா அறங்காவலர் முரளிதரனிடம் இந்த செய்தியைச் சொன்னேன். அவர் உடனே, "நான் ஜீனியர் விகடனை பார்க்கவில்லை. நான் அந்த சிறுவனை சேவாலயத்தில் வைத்து வளர்க்க விரும்புகிறேன். அதற்கு நீங்கள் நிருபரிடம் பேசி உதவ வேண்டும் என்றார்.

அடுத்தநாள் நான் நண்பர் சபிமுன்னாவிடம் சேவாலயா முரளிதரன் விருப்படுவதை தெரிவித்தேன். எங்கள் இருவருக்குமே தமிழ் பேசும் சிறுவன் தமிழ்ச்சூழலில் வளர்வது தான் உகந்ததாயிருக்கும்.அவன் தமிழ்நாட்டிற்கு வரும்பட்சத்தில் அவன் கூறிய தி.நகரில் அவன் வசித்த இருப்பிடத்தை காணவழியுண்டு என்றும் மனதில் பட்டது. ஆனால் சேவாலயா முரளிதரன் சில சர்ச்சைகளில் சிக்கி ஏற்கெனவே அவர் மீதான அபிப்ராயங்கள் பழுதுபட்டிருந்தது. இதை கருத்தில் வைத்து, 'எங்கள் அலுவலகத்தில் பேசி அனுமதி வாங்கிவிட்டுச் சொல்கிறேன்' என்றார். பிறகு ஒரு நாள் என்னைத் தொடர்பு கொண்ட சபிமுன்னா, "எங்கள் அலுவலகத்தில் கொஞ்சம் தயங்கினார்கள். நான், நாம் பேசியபடி எடுத்துக்கூறி சம்மதிக்க வைத்தேன். சாவித்திரிகண்ணன் வேறு பலமாக ரெக்கமண்ட்' செய்கிறார் என்றேன். 'அப்படியா? சாவித்திரிகண்ணன் தவறான ஆளைச் சொல்வதற்கு வாய்பில்லை. சரி செய்யுங்கள்' என பச்சைகொடி காட்டிவிட்டனர்." என்றார்.

இதையடுத்து நான் முரளிதரனிடம் சபிமுன்னா செல்நம்பரைக் கொடுத்து பேசச் சொன்னேன். இவ்வாறாக உருவான தொடர்பில் முரளிதரனின் ஆசையை நிறைவேற்ற சபிமுன்னாவும் களத்தில் இறங்கினார். இதற்கிடையே அந்தப்பகுதியின் தமிழ் போலீஸ் அதிகாரி மலர்விழி இடமாற்றலானதில் சிறுவனை தமிழகத்திற்கு அழைத்து வருவதில் தொய்வு ஏற்பட்டது. முரளிதரனின் வேண்டுகோளை அங்கிருந்த அரசு சிறுவர் காப்பகம் பொருட்படுத்தவில்லை. சிறுவன் கடத்தப்பட்டு ஆறுமாதமானதில் அவன் இந்தியை ஒரளவு பேசக்கற்றுக்கொண்டு இயல்பாக வளையவர ஆரம்பித்துள்ளான். எனவே பெற்றோர்கள் கேட்டால் ஒழிய தருவதாயில்லை என்ற நிலைபாட்டிலிருந்தனர் அபனாகர் என்ற அரசு சிறுவர் இல்லத்தினர். ஆயினும் சபிமுன்னா நேரிலேயே பத்திரிக்கை புகைப்படக்காரரை அனுப்பி பேசியதோடு பீகாரில் ஒரு சில ஐ.ஏ.எஸ். அதிகாரிகளின் சிபாரிசையும் பெற்று சாயை தமிழகத்திற்கு அனுப்பும் இசைவை பெற்றார். இவ்வளவு முயற்சிகளையும் செய்து, முரளிதரன் டெல்லிக்கு 'பிளைட்டில்' வந்திறங்குவதாயும், தான் கார் ஏற்பாடு செய்து அவரை அலிகார் அழைத்துக் கொள்வதாயும், அவர் சிறுவனோடு திரும்புவதற்கான ரிடர்ன் டிக்கெட் உட்பட எடுத்திருப்பாதாகவும் எனக்குத் தகவல் தந்தார். நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். அதே சமயம் முரளிதரனிடமிருந்து எனக்கு எந்த தகவலுமில்லை. அதனால் நானே அவரைத் தொடர்பு கொண்டேன். உடனே முரளிதரன், "கண்ணன் நான் திரும்பி வந்தவுடன் உடனே பிரஸ்மீட் வைக்க வேண்டும், முடியுமல்லவா?" என்றார்.

நான், "எதற்காக பிரஸ்மீட்" என்றேன்.

அவரால் பதில் சொல்லமுடியவில்லை.

தொடர்ந்து நானே, "சார் நம்முடைய நோக்கம் சிறுவனை பெற்றோரிடம் ஒப்படைப்பது. சிறுவனின் மனநிலை அறிந்து பேசி அவனது விருப்பபடி பெற்றோரைக் கண்டடைவது. இந்த முயற்சி பலனளிக்காவிட்டால் சேவாலயாவில் பாதுகாப்புடன் வளர்ப்பது. பிரஸ்மீட்டிற்கு ஏன் அவ்வளவு அவசரம்?" என்றேன்.

இதைக்கேட்ட முரளி , ஒரு நிமிடம் அமைதியாக இருந்து,

"சரி, நான் பார்த்துக்கறேன்..." என்றார்.

இந்த பதிலுக்கு என்ன அர்த்தம் கொள்வது என அப்போது எனக்கு விளங்கவில்லை. பிறகு முரளி புறப்பட்டு சென்றார். அவர் வந்து சேர்ந்ததை சபிமுன்னா எனக்கு தெரிவித்தார். அதன்பிறகு இரண்டு நாள் கழித்து சபிமுன்னாவிடமிருந்து போன். "முரளிதரன் சென்னை வந்து சேர்ந்திருக்கணுமே உங்களை எதுவும் தொடர்புகொண்டு பேசினானா...? என்றார். எனக்கு சற்றே அதிர்ச்சி. சபிமுன்னா ஒரு மிகச்சிறநத பண்பாளர். மனிதாபிமானி, "பேசினானா..? என்கிறாரே.. என்பதால் "ஏன் என்னாச்சு?" என்றேன்.

"என்னாச்சா, வந்து சேர்ந்ததிலிருந்து அவன் செய்த ஜபர்தஸ்து,அலட்டல் தாங்க முடியலைப்பா. ஏதோ அவன் தன்னை ஒரு வி.ஐ.பி போலவும், நான் என்னவோ அவனை வரவேற்று உதவக்கடமைப்பட்டவன் போலவும் நடந்து கொண்டான். இங்கு அலிகாரில் மிகச்சிறந்த தொண்டு செய்யும் ஃபாதர் ஒருவரை அவனுக்கு நான் அறிமுகப்படுத்தினேன். ஃபாதர் பிளாட்பாரத்தில் அநாதையாகத் திரியும் குழந்தைகளைக் கண்டெடுத்து குளிப்பாட்டி, உணவளித்து படிக்க வைக்கிறார். நாங்கள் மிகவும் மதிக்ககூடிய அவரிடமே இவன் தன்னை மிகப்பெரிய ஆளாக காட்டிக்கொள்வதில் முனைப்பு காட்டினான். சந்திப்பவர்களிடமெல்லாம், "நான் மூன்று தலைமுறைக்கு சொத்து சேர்த்துவிட்டேன். இனியும் எதற்கு சம்பாதிக்கவேண்டும் என்று தான் டாடாகன்சல்டன்சியில் வேலையை ராஜீனாமா செய்துவிட்டு பொதுச்சேவைக்கு வந்தேன்" என தம்பட்டமடித்தான். ஆனால் அவன் வந்ததிலிருந்து சாப்பாடு, போக்குவரத்து, தங்கும் வசதி உள்ளிட்ட பெருமளவு செலவை நானே செய்தேன்.

இதெல்லாம் போகட்டும் என்று விட்டுவிடலாம். ஆனால் அங்கே அந்த சினுவனை பார்த்தலிடத்து ஒரு வார்த்தை அந்த குழந்தையிடம் கனிவாகப் பேசவில்லை. அக்கரையோடு விசாரிக்கவில்லை. நான் அந்தச் சிறுவனிடம் பக்கத்தில் அமர்ந்து கனிவாகப்பேசிய போது அவனது தாய்மொழி தெலுங்கு என்றும் ஒரளவே தமிழ் தெரிந்துள்ளான் என்றும் அறியவந்தது. அப்போது local press reporters, photographers வந்தார்கள். உடனே இவன் (முரளிதரன்) அந்த குழந்தையை வலுக்கட்டாயமாக என்னிடமிருந்து இழுத்து மடியில் அமர்த்திக்கொண்டு press photographers க்கு போஸ் கொடுத்தான். பிறகு என்னடாவென்றால், ஏதேதோ 'பில்டப்' பண்ணி பேட்டி தந்தான். பத்திரிக்கையாளர்கள் சென்ற பின்பு நான், 'என்ன சார் இநத மாதிரி பிகேவ் பண்றீங்க.." என்றேன். அதற்கு அவன் ஏதேதோசொல்லி சமாளித்து அசடுவழிந்தான்.

உடனே நான், இதே மாதிரி சென்னை சென்று பத்திரிக்கையாளர்களை அழைத்து இவன் பேச வாய்ப்புண்டு என ஊகித்துக்கொண்டேன். இநத சந்தரப்பத்தை மிகப்பெரிய விளம்பரத்திற்கான வாய்ப்பாக கருதும் அவனது உள்நோக்கம் எனக்கு விளங்கிவிட்டது. எனவே அவனிடம், நீங்கள் சென்னை சென்றதும் அவசரப்பட்டு பிரஸ்மீட் வைத்துவிடாதீர்கள், ஜூனியர்விகடன் எடுத்த முயற்சியால் தான் இநத் செய்தி வெளியானது. எனவே எங்கள் ஒத்துழைப்பில் நீங்கள் சிறுவனை தமிழகம் அழைத்து வந்த செய்தி ஜீனியர்விகடனில் தான் முதலாவதாக பிரசுரமாக வேண்டும். அதற்காக ஒரு சிலநாள் பொறுத்த பிறகு பிரஸ்மீட் வைத்துக்கொள்ளுங்கள். முதலில் பையனிடம் விவரமாகப்பேசி அவன் இருப்பிடத்தையும், பெற்றோரையும் முயற்ச்சியை மேற்க்கொள்ளுங்கள்" என முரளியிடம் கேட்டுக்கொண்டேன். என்றார்.

ஆனால் சென்னை வந்ததும் உடனே பிரஸ்மீட் வைத்து விட்டார் முரளி. மிகக்குறைவான பத்திரிக்கையாளர்களே அதில் கலந்து கொண்டனர். ஆனால் கலந்து கொள்ளாத பத்திரிக்கைகளுக்கு இவரே செய்தி அனுப்பி, தொலைபேசியிலும் தொடர்புகொண்டு செய்தியை போகும்படி கேட்டுள்ளார் (ஆனால் சபிமுன்னாவிற்கு முரளிதரனின் மனைவி புவனேஸ்வரி, "முரளியிடம் கலந்தாலோசிக்காமல் தான் அவசரப்பட்டு பிரஸ்மீட் வைத்தாக்கூறி ஒரு மன்னிப்பு கடிதம் emailசெய்துள்ளார்) தினமலர், தினமணி, தினகரன், Deconchornical, ஈநாடு, ராஜ் டி.வி, தமிழன் டி.வி..... என ஏகப்பட்ட மீடியாக்களில் செய்தி!

ஒரு சாகஸ வீரனின் வெற்றிக்களிப்போடு சிறுவனை மீட்டுவந்த செய்தியை அதில் விதந்தோதியிருந்தார் முரளிதரன். அதோடு கூடவே அதில் அந்த சிறுவனை பச்சை குழந்தையை தூக்குவது போல் இரு கைகளிலும் படுக்கவைத்த நிலையில் போட்டாவிற்கு போஸ். இப்படி தூக்க கூடிய வயதிலோ, உடல்நிலையிலோ அவன் இல்லை என்பதெல்லாம் யார் கேட்பது? விளம்பரமோகம் தலைக்கேறிவிட்டால் விவஸ்தைக்கு அங்கே இடமேது? பிரசுரமாகிய எதிலும் ஜீனியர்விகடனோ, சபிமுன்னாவோ ஒரு வார்த்தை, ஒரு வரி கூட இல்லை.

இப்படியொரு பிரஸ்மீட்டை நடத்துவது பற்றியோ, நடத்திய பிறகோ கூட முரளிதரன் எனக்கு தகவல் தரவில்லை. சரி, இது போகட்டும் என்றால் சேவாலயா சார்பில் மாதாமாதம் ஒரு நியூஸ்லெட்டர் publish செய்கிறார்கள். இதை பிரிண்டாக மட்டுமன்றி ஏராளமானோருக்கு இ.மெயிலிலும் அனுப்புகிறார்கள். அதன் முதல் பக்கத்திலும் இந்த கதை தான். அதை முரளிதரனே எழுதியுள்ளார். அதன் முதல் paragraphபே ஒரு சுவாரசியமான திகில் கதை போல ஆரம்பமாகிறது. அதில் ஒரிடத்தில் இவர் ஜீனியர்விகடனைப் பார்த்து செய்தி அறிந்து விகடன் அலுவலகத்தில் கேட்டு விசாரித்து சபிமுன்னாவின் தொலைபேசி எண் கண்டடைந்து சென்றதாக குறிப்பிட்டுள்ளார். இப்படி ஒரு பொய்யை சேவாலயாவின் அதிகாரபூர்வமான நியூஸ்லெட்டரில் எழுதவேண்டிய தேவை என்னவோ? என்னை முழுமையாக இருட்டிப்பு செய்ததில் எனக்கு ஒரு துளியும் இழப்பில்லை. ஏனென்றால் அந்த நீயூஸ்லெட்டர் சேவாலயாவின் நன்கொடையாளர்களுக்குத்தான் செல்கிறது. அவரகளிடம் ஒரு பரிபூரணமான வீரனாக, சேவையாளனாக தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும் முனைப்பு அவருக்கு மேலோங்கி இருப்பதை தான் அந்த செய்தியின் தொனி உணர்த்துகிறது. ஆனால் முரளிதரன் முற்றிலும் உண்மைக்கு மாறான ஆள் என்பதை எனக்கு உணர்த்திவிட்டது. இந்த பிரஸ்மீட் நடத்திய கையோடு முரளிதரன் வெளியூர் சென்றுவிட்டார். அந்தச்சிறுவன் தெலுங்கு சரளமாகப் பேசியதை அறிந்து சேவாலயாவில் வேலைசெய்யும் ஒரு சிலர் தெலுங்கில் பேசியதில் அவன் குறிப்பிட்ட தி.நகரும், விவேகானந்தர் பள்ளியும், ராமச்சந்திர தியேட்டரும் எங்கிருக்கிறது என இணையத்தளம் கூகுளில் போட்டு பார்த்துள்ளனர். அவன் குறிப்பிட்ட தி.நகரும், விவேகானந்தா பள்ளியும், விஜயவாடா என்று அறியவந்து விஜயவாடா போலீஸ் ஸ்டேசனைத் தொடர்புகொண்டதில் ஆந்திரா போலீஸ் மூலம் சிறுவனின் பெற்றோர் கிடைத்துவிட்டனர். மிகவும் நல்ல விசயம் தான். ஒரு தவறான ஆளின், தவறான உள்நோக்கங்களையும் மீறி சூழ்நிலைகளால் சில நல்ல விசயங்களும் நடந்தேறிவிடுகின்றன.

பிறகென்ன மீண்டும் ஒரு பிரஸ்மீட், சுயபிரதாபங்கள்..... நடக்கட்டும், இந்த பிரஸ்மீட்டிற்கான தகவலை எனக்கு sms செய்திருந்தார் முரளி. முரளிக்கும் ஜெர்மன்இந்தியரான ராஜகோபாலுக்கும் இடையில் ஏற்பட்ட பிரச்சினைக்காக எத்தனையெத்தனை முறை எனக்கு போன் செய்து மணிக்கணக்கில் புலம்பி உதவி கேட்டிருக்கிறார். ஒரு முறை முரளி வீடுதேடிவந்தும் உதவிகேட்டார். அப்போது சேவாலயாவின் பெயர் கெட்டு விடக்கூடாது என்பதற்காக நான் எடுத்தக்கொண்ட முயற்சிகள் கொஞ்சநஞ்சமல்ல. இதில் எனக்கு நெருக்கமான ஒரு சில நண்பர்களின் நட்பிலேகூட விரிசல் ஏற்பட்டது. என்பதெல்லாம் நினைவுக்கு வந்தது. அவருடைய குற்ற உணர்வு தான் அவர் என்னோடு போன் பேச தடையாய் இருந்திருக்கக்கூடும் என நினைத்து கொண்டேன். (பிறகு சபிமுன்னா நீங்கள் கண்ணனுக்கு எதுவுமே பேசவில்லை போலிருக்கிறதே என கேட்டதினால் என் லைனுக்கு வந்தார்).

என்னையும், சபியையும் பொறுத்தவரை பத்திரிக்கைதுறையை எப்போதும், ஏதேனும் நல்லகாரியத்திற்கு பயன்படுத்தவேண்டும் என்று எங்களிடம் மேலோங்கியிருந்த உணர்ச்சிகளை மட்டும் முரளிதரன் அழகாக 'கேப்பிடலைஸ்' செய்து கொண்டார்.

'ஏதோ நமக்குத் தான் எதையும் செய்ய நேரம் கிடைக்கவில்லை. அப்படி செய்பவர்களுக்குகாவது பணம் அனுப்பவேண்டும்' என்று சேவாலயாவிற்கு நாள்தோறும் நன்கொடை தந்து கொண்டிருக்கும் ஆயிரக்கணக்கான மக்களின் தார்மீக நல்லெண்ங்களை 'கேப்பிட்டலைஸ்' செய்து கொண்டதைப் போல! விவேகானந்தர், மகாத்மாகாந்தி, பாரதியார் போன்ற 'Icon'களை மார்க்கெட்டிங்கிற்கு பயன்படுத்தும் யுக்தியைப் போல!

வேஷமென்றால் ஒரு நாள் வெளுக்கதானே வேண்டும்.

இந்தக்கட்டுரையை 7-09-09 தேதியில் வெளியிட்ட பிறகு சமீபத்தில் எனக்கு கிடைத்த ஒரு தகவல்; சேவாலயா முரளிதரன் அவசரப்பட்டு அல்லது விளம்பர மோகத்திற்கு ஆசைப்பட்டு pressmeet நடத்தியதில் சிறுவன் சாயை எங்கள் பிள்ளைதான் என்று சொந்தம் கொண்டாடி ஒரு சிலர் சேவாலயத்திற்கு வந்துவிட்டனர். நல்லவேளையாக அந்த நேரம் அங்கே முரளிதரன் இல்லாதது கடவுள் கிருபையே! (இருந்திருந்தால் இன்னொரு pressmeet அல்லவா உடனே நடத்தி குழந்தையை ஒப்படைத்திருப்பார்....) வந்தவர்களிடம் சேவாலயா ஆசிரியர் குழுவினர் தீரவிசாரித்ததிலும், சிறுவன் சாய்க்கும் வந்தவர்களை தெரியாததாலும் உஷாரான ஆசிரியர்கள் அவர்களை விரட்டிவிட்டனர். அதன் பிறகே சிறுவனிடம் தெலுங்கு பேசத்தெரிந்த ஆசிரியர்கள் பேசி அவன் குறிப்பிடுவது தி.நகரல்ல, ஸ்ரீநகர் என்றும் அது ஆந்திராவில் விசாகப்பட்டினத்திலுள்ள அனகாபள்ளியில் உள்ளதென்பதையும் கூகுள் மூலமாக கண்டறிந்தனர்.

இந்தக்கட்டுரையை நான் எழுதியது சேவாலயா என்ற நிறுவனத்திற்கு எதிராக கருத்துருவாக்கம் செய்வதற்கல்ல. மாறாக பொதுத்தொண்டுக்கு வருபவர்கள் ஒரளவிற்காகவது தன்னடக்கம். உண்மை, எளிமையோடு இருக்க வேண்டும் என்று மக்கள் எதிர்பார்ப்பார்கள் என்பதை புரிந்து கொள்ளவேண்டும். அவ்வளவே.

விமர்சிப்பவர்கள் மீது கோபப்பட்டு, மேன்மேலும் பொய்யும், புரட்டும் பேசுவதை தவிர்த்து தன்னைத்தானே உள்முகமாகப்பார்த்து தெளிவது தான் முரளிதரனுக்கு நல்லதாகும்.

வள்ளுவர் குறளொன்றை நினைவுபடுத்த விரும்புகிறேன்.

பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற

செய்யாமை செய்யாமை நன்று!