Tuesday, June 9, 2009

விடுதலை புலிகளின் வீழ்ச்சி

விடுதலை புலிகளின் வீழ்ச்சி
இலங்கை தமிழர்கள் வாழ்வில் மறுமலர்ச்சி
-சாவித்திரிகண்ணன்
"விடுதலை புலிகள் அழித்தொழிக்கப்பட்டு விட்டனரே..... இனி இலங்கை வாழும் தமிழர்களுக்கு யார் பாதுகாப்பு?"
"விடுதலைப் புலிகளை யாராலும் வீழ்ததமுடியாது. வேலுபிள்ளை பிரபாகரன் மரணிககவில்லை, மறைந்திருக்கிறார். சமயம் வரும் போது வெளிப்பட்டு தனி ஈழத்தை வென்றெடுத்தே தீருவார்....
"முதலில் சொல்லப்பட்ட கூற்று, விடுதலைப்புலிகளின் மிதமான ஆதரவாளர்களிடமிருந்து வெளிப்படுதென்றால், இரண்டாவது கூற்று விடுதலைபுலிகளின் தீவிர ஆதரவாளர்கள் சார்ந்தது.
ஆக மொத்தத்தில் விடுதலைப்புலிகள் தான் இலங்கையில் உள்ள தமிழர்களை துன்பங்களிலிருந்து பாதுகாக்கவல்லவர்கள் என்ற கருத்தே இரு கூற்றுகளில் இருந்தும் வெளிப்படுகிறது.
இது முற்றிலும் தவறானது.
இலங்கையில் அன்றிலிருந்து இன்று வரை சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழர்கள் அடைந்து கொண்டிருக்கும் அளவற்ற இழப்புகளுக்கும், பெரும் துன்பங்களுக்கும் பிரபாகரனும் அவரை ஒதத பயங்கரவாத இயக்கத்தினருமே காரணமாவர்.
உலக வரலாற்றில் பயங்கரவாதத்தை கையிலெடுத்த சர்வாதிகாரிகளான இட்லர், இடிஅமீன், போல்பார்ட் போன்றவர்கள் தங்கள் இனத்தின் காவலர்களாகவே தங்களை அடையாளப்படுத்தினர். ஆயினும் அவர்கள் தான் தங்கள், தங்களது இனங்களின் பேரழிவுகளுக்கே காரணகர்தாக்களாகினர். பிரபாகரனும் இநத வரலாற்று உண்மைக்கு வழுவாத சாட்சியமாகத் திகழ்கிறார்.
இலங்கை தீவில் தமிழ் இனம் சிறந்தோங்கி செழிப்பாக வாழ்ந்த இனமாகும்! இலங்கையின் மொதத நிலப்பரப்பில் மூன்றில் ஒரு பகுதியை தமிழ்களே ஆக்கிரமித்திருந்தனர். கல்வி, அரசுபதவிகள், கலாச்சாரம் என அனைத்திலும் தமிழர்களே அதிக பிரதிநிதித்துவம் பெற்றிருந்தனர். இலங்கையில் வாழ்ந்து கொண்டிருநத இநதியத் தமிழர்கள், இஸ்லாமியத் தமிழர்களைத் தவிர்த்த வெறும் 12.6 சதவிகித இலங்கைத் தமிழர்களே பெரும் செல்வாக்கோடு இவை அனைத்தையும் அனுபவித்து வாழ்ந்தனர்.
இலங்கை சுதந்திரம் பெற்றபோது அப்போதைய பாராளுமன்றத்தில் சிங்களர்கள் எண்ணிக்கை57, இலங்கைத்தமிழர்கள் எணணிக்கை15, இந்திய தமிழர் எண்ணிக்கை 14, இஸ்லாமியர் எண்ணிக்கை 8 என்று இருந்தது.
இந்த சூமூகச்சூழல் கெட்டு இனவெறி இருத்தரப்பிலும் எழுந்ததால் தான் இலங்கையின் அமைதியே பாழ்ப்பட்டது.
இலங்கையில் உளள விகிதாச்சார கணக்கின்படி 74 சதவிகிதம் பெரும்பான்மையாக இருநத சிங்களர்கள் அதற்கேற்ப கல்வி, வேலைவாய்ப்பு, அரசபதவிகள் போன்றவற்றில் பிரதிநிதித்துவம் பெறாமல் பெருமளவு பின்தங்கி இருந்தனர். பொருளாதாரத்திலும் கூட சிங்களர்களைக் காட்டிலும் தமிழர்களே பெரும் சிறப்போடு திகழ்ந்தனர்.
அதாவது குறைநத எண்ணிக்கையாயிருந்த தமிழர்கள் இலங்கையில் அதிக பலன்களைப் பெற்று திகழ்வதோடு அதிகார மையங்களையும் ஆக்கிரமித்திருப்பதாக சிங்களர்கள் கருதத்தொடங்கினார்கள்.
எனவே தாழ்வு நிலையிருநத பெரும் பான்மை சமூகத்தை தூக்கிவிட்டு இநத ஏற்றத்தாழ்வுகளை சமன்படுத்தும் பொறுப்பு சுதந்திரமான இலங்கையின் சவாலாக அமைந்தது. இநத சவாலுக்கு தமிழ்தரப்பிலிருந்த தலைவர்கள் ஒத்துழைகக முன்வரவில்லை. அவர்கள் தமிழர்களுக்கு மட்டுமே தலைவர்களாக இருநதனர். மாறாக பின்தங்கியிருநத பர்நதுபடட சிங்கள இனத்தின் மீது அக்கரையும், அனுதாபமும் கொண்டு விட்டுகொடுத்து, சமன்பாட்டிற்கு ஒத்துழைத்திருப்பார்களாயின பெரும்பான்மை சமூகத்தின் பொறாமையையும், வெறுப்பையும், முளையிலே கிள்ளியெறிந்துவிட்டு அவர்களது அன்பையும், ஆதரவையும், சிறுபான்மையினரான தமிழர்களுக்கு நிரந்தரமாக தக்க வைத்திருகக கூடும்.
சர். பொன்னம்பலம் ராமநாதன் போன்ற ஒரு சில - சிங்களர் தமிழர் இணைப்புக்கு பலமான பாலமாக விளங்கிய - தலைவர்கள் இதில் மேற்கொண்ட முயற்சிகள் தந்தை செல்வா என்றழைக்கப்பட்ட செல்வநாயகம் போன்ற தீவிர தமிழ் இன உணர்வு சார்ந்தவர்களால் புரிந்து கொளளப்படாமல் புறக்கணிக்கப்பட்டது பெரும் துரதிஷ்டமே!
திரு.பண்டாரநாயகா போன்ற சிங்கள இனத்தை பிரதிநிதித்துவப் படுத்திய - லண்டனில் பாரிஸ்டர் பட்டம் பெற்று திரும்பிய - தலைவர் தனது ஆரம்பகாலத்தில் தமிழர்கள் மீது கரிசனத்துடன் இருந்ததாகத் தெரியவருகிறது. ஆனால் பின்னாளில் அவரும் நிதானம் தவறிவிட்டார்.
1943-ல் இலங்கை மந்திரிகள் குழு இலங்கை பாராளுமன்றத்தில் இந்தியத் தமிழர்களுக்கு 15 இடங்கள் தரப்படவேண்டுமென சிபாரிசு செய்தது. அந்த சிங்களர்கள் ஏன் மனம்மாறி 1949-ல் இந்திய தமிழர்கள் பத்துலட்சம் பேரின் பிரஜா உரிமையை பறித்தனர் என்பது ஆயுவுக்கு உட்படுத்த வேண்டிய கேள்வியாகும்.
இலங்கையில் சுதந்திரம் பெற்ற முதல் இருபத்தைந்தாண்டுகள் இரு தரப்பிலும் இனவெறி கொழுந்துவிட்டு எரிந்தது. இதில் பெரும்பான்மை சமூகத்தவரான சிங்களரிடம் ஆட்சி அதிகாரபலம் இருந்ததால் தமிழர்கள் பெரும் பாதிப்புக்குள்ளாயினர். ஆனால் அப்போது தமிழர்கள் வன்முறை வழியை தேர்ந்தெடுக்கவில்லை ஜனநாயகத்திற்கு உட்பட்டே தங்கள் எதிர்ப்புகளை ஆழுத்தமாக வெளிப்படுத்தினர். 1976 வரையிலும் கூட தனி ஈழக்கோரிக்கை என்ற கருத்தாக்கம் வலுப்பெறத் தொடங்கவில்லை.
இலங்கைத் தமிழர்கள் தங்களை விஷேச சிறப்பு பெற்ற தனி இனமாகக் கருதியதையும், தங்கள் கலாச்சாரம் மற்றும் மத நம்பிக்கைகளில் சிறிதும் சமரசமற்ற ஆழ்ந்த பிடிப்புள்ளவர்களாக இருந்ததையும் அங்கீகரித்து, அரவணைத்துச் செல்லும் மனப்பக்குவம் சிங்களதரப்பு அரசியல் தலைமைகளுக்கு இல்லாமல் போனது பெரும் துரதிஷ்டமே!
அதே சமயம் தமிழர்கள் நடைமுறைவாழ்வில் சிங்களமொழியை துச்சமாக மதித்ததையும், சிங்களர்களைபுறக்கணித்ததையும், தங்களோடு வாழும் சிங்களர்களைக் காட்டிலும், தாங்கள் பிறந்து வளர்ந்த ஒன்று பட்ட இலங்கையைக் காட்டிலும் தமிழ்நாட்டு தமிழர்களையும், இந்தியாவையும் அதிகமாக நேசித்ததையும் சிங்கள மக்களால் ஜீரணிக்க முடியவில்லை.
இலங்கைத்தமிழர்கள் இங்கு நம்மோடு வாழ்ந்தாலும் அவர்களது உடல் தான் இலங்கை மண்ணில் உலவுகிறதேயன்றி அவர்களின் உயிரும், ஆன்மாவும் தமிழ்நாட்டு தமிழர்களைச் சார்ந்தும், இந்தியாவின் பால் ஈர்க்கப்பட்டும்இருக்கிறதே என்ற ஆதங்கம் காலப்போக்கில் கோபமாக, வெறுப்பாக மாறியது சிங்கள இன மக்களுக்கு!
இந்தச்சூழலில் கல்வித்துறையில் இலங்கை அரசாங்கம் கொண்டுவந்த சட்டம் தமிழ் மாணவர்களை, இளைஞர்களை பெரிதும் கோபப்படுத்தியது. பொறியியல் கல்லூரிகளில் சிங்களமாணவனுக்கு 228 மதிப்பெண் எடுத்தாலே போதுமானது என்றும், ஆனால் தமிழ் மாணவர்கள் 250 மதிப்பெண் எடுத்தால் தான் வாய்ப்பு என்பதுமான சட்டம் போடப்பட்டது. ஆயினும் 40 சதவிகிதத்திற்கு மேலான தமிழ் மாணவர்கள் பொறியியல் கல்லூரிகளில் இடம் பெற்றனர் என்பதை கவனிக்குமிடத்து பின்தங்கியுள்ள சிங்களமாணவர்களை தமிழ்மாணவர்களுக்கு சமமாக தூக்கிவிடுவதற்காக இப்படி ஒரு சடடம் அரசாங்கம் கொண்டுவர எண்ணியிருக்ககூடும் என்ற புரிதலுக்கு நாம் வரலாம்.
ஆனால் இந்த சட்டத்தை எதிர்த்த மாணவர்கள் கடுமையாக அடக்குமுறைக்கு உள்ளானதையும், பெரும் சித்தரவதைகளுக்கு ஆளானதையும், அதுவும் ஆண்டுக்கணக்கில் விசாரணையின்றி சிறையில் தள்ளப்பட்டதையும் அடுத்து ஆயுதம் தாங்கிய அதிகாரமையத்திற்கு எதிரான இளைஞர்கள் இயக்கம் தன் எழுச்சியாக உருவானது. ஆட்சியாளர்களின் கொடிய அடக்கு முறையிகளிலருந்து விடுபடுவதற்கு இம்மாதிரியான இளைஞர்களின் எழுச்சி தேவையான ஒன்று தான் என சாதாரண தமிழ்மக்களில் இருந்து பெரிய தலைவர்கள் வரை நம்பி ஆதரவளிகக ஆரம்பித்தனர்.
சிவகுமாரன், சத்தியசீலன், சபாலிங்கம் போன்றவர்கள் தமிழ் இளைஞர்கள் மத்தியில் வன்முறைக்கு வித்திட்ட முன்னோடிகள். 1971-ல் குட்டிமணி, ஜெகன் போன்றவர்கள் போராளிகளுக்கான இயக்கத்தை தொடங்கினார்.
1974-ல் 'செட்டி' என்றழைக்கப்பட்ட தனபாலசிங்கம் தமிழ் புதிய புலிகள் என்ற ஒரு இயக்கத்தை ஆரம்பித்தார். இவர் எநத ஒரு அரசியல் சிந்தனைபோக்கு கொண்டவருமல்ல. மக்கள் இயக்கங்களில் பங்கெடுததவருமல்ல. ஆனால் வன்முறை வழியில் பணம் அதிகம் ஈடடலாம் என்ற குறிக்கோளோடு சில கொள்ளைகளையும், கொலைகளையும் நிகழ்த்தியவர், இவரால் ஆரம்பிக்கப்பட்ட இநத இயக்கத்தில் தனது 20வது வயதில் சேர்ந்தார் பிரபாகரன். செட்டி கைதானபிறகு 1976-ல் பிரபாகரனே இதன் தலைவராகி இயக்கத்தின் பெயரை'தமிழிழ விடுதலைப்புலிகள்' என மாற்றிவைத்தார்.
இலங்கை மண்ணில் தமிழ்நாட்டைச்சேர்நத சோழப்பேரரசர்கள் படைநடத்தி ஒட்டுமொத்த இலங்கையையும் சிங்கள அரசர்களையையும் தங்கள் ஆட்சியின் கீழ்கொண்டுவந்து சிங்கள அரசர்களையும், மக்களையும் ஆட்டி படைத்தார்கள் என்பது கடந்த கால வரலாறு. அநதச் சோழர்களின் அரச சின்னம் தான் புலிக்கொடி என்பது நினைவு கூறத்தக்கது.
விடுதலைப்புலிகள் இயக்கத்தை ஆரம்பிப்பதற்கு முன்பே புத்தூர் வங்கி கொள்ளை, யாழ்பாண மேயராகவிருந்த ஆல்பிரட் துரையப்பா கொலை போன்ற சட்டவிரோத சாகஸ செயல்களின் மூலம் பிரபலமாகிவிட்டார் பிரபாகரன்.
பிரபாகரனின் இந்த சாகஸங்களைத் தொடர்ந்து சந்தேகத்தின்பேரில் தமிழ் இளைஞர்கள் ஏராளமானவர்கள் இலங்கை அரசால் கைது செய்யப்பட்டு சித்திரவதைக்களானார்கள்.
இதே காலகட்டத்தில் டெலோ, பிளாட், ஈராஸ், இ.பி.ஆர்.எல்.எப் போன்ற சுமார் 36 இயக்கங்கள் தமிழ் இளைஞர்கள் மத்தியில் உருவானது.
ஒரே இலட்சியம் என்று சொல்லிக்கொண்ட இவ்ர்களால் ஒன்றிணைந்து செயல்படமுடியவில்லை. ஆளாளுக்கு கொலை, வங்கிக்கொள்ளை, ஆள்கடத்தல் என ஈடுபட்டனர். எல்லா தீய செயல்களுக்கும் சிங்கள இனவெறியைக் காரணம் காட்டி நியாயம் கற்பித்தனர்.
சிங்களர்களுக்கு எதிராக தொடங்கப்பட்ட போராளி இயக்கங்களிடையேபோட்டி, பொறாமை தலைதூக்கி தங்களுக்கு தாங்களே எதிரிகளாக ஒருவரை ஒருவர் கணக்கில்லாமல் சுட்டுக்கொண்டனர்.
போட்டி போராளிகளை மட்டுமின்றி அவர்களுக்கு உதவிசெய்யும் குடும்பத்தாரையும் கூட மின்கம்பத்தில் கட்டிவைத்து சித்திரவதைகள் செய்து கொன்றனர்.
இந்த வகையில் தன் சகபோராளி இயக்க தலைவர்கள், உறுப்பினர்கள் அனைவரையும் சகட்டுமேனிக்கு கொன்று குவித்து தன்னை மட்டுமே தமிழர்களின் ஏகோபித்த பிரதிநிதியாக வன்முறையால் நிலைநிறுத்திக் கொண்ட இயக்கம் தான் தமிழிழ விடுதலைப்புலிகள்.
சிங்கள அரசால் கொல்லப்பட்ட போராளிகளின் தொகையைவிட இயக்கங்களால் கொல்லப்பட்ட தமிழ்போராளிகளின் எண்ணிக்கையே அதிகம் என்கிறார் தமிழ் ஈழ போராட்ட இயக்கங்களின் முன்னோடியான சி.புஷ்பராஜா.
தமிழிழ விடுதலை புலிகள் அமைப்பு தோன்றிய பிறகு அது ஒவ்வொரு இடங்களிலும் நிகழ்த்திய கொலை வெறி ஆட்டங்களின் கொடூர எதிர்வினைகளை ஒட்டுமொத்த இலங்கை தமிழ் சமூகமும் அனுபவிக்க வேண்டியதாயிற்று.
உதாரணத்திற்கு 1983 ஜீலை 23ல் பலாலி- யாழ்பாணசாலையில் 13 சிங்கள ராணுவ வீரர்கள் புலிகளால் கொடூரமாகக் கொல்லப்பட்டனர். இதன் எதிர்வினையாக வெடிதத பெரிய கலவரத்தில் 3000 தமிழர்கள் கொல்லப்பட்டனர். 18,000தமிழர்கள் வீடுகளை இழந்தனர், 1,50,000தமிழர்கள் அகதிகளாயினர்.
1985-ல் இந்திய அரசின் இடையறாத முயற்சியில் இலங்கை அரசு பணிந்து போராளி இயக்கங்களுடன் திம்புவில் பேச்சுவார்த்தை நடத்த சம்மதித்தது. திம்புவில் இரண்டாவது கடடபேச்சு நடந்து கொண்டிருந்த நிலையில் இப்பேச்சுவார்த்தைகளை சீர்குலைக்க விரும்பிய விடுதலைப்புலிகள் இலங்கை ராணுவமுகாமில் குண்டுவெடித்தனர். இதைத்தொடர்ந்து ஏற்படட கலவரத்தில் 200 தமிழர்கள் பலியாயினர். பேச்சுவார்த்தையும் தடைப்பட்டுவிட்டது.
1980களில் தமிழகத்தில் ஈழப்போராட்டத்திற்கு ஏற்பட்ட தீவிர ஆதரவு அலைகளாலும், நிர்பந்தத்தாலும் மட்டுமின்றி 1981-ல் மாவடட அபிவிருந்தி சபை தேர்தல்களை இலஙகை அரசு கையாண்ட மோசமான அணுகுமுறைகள், அதிகாரப் பரவலில் காட்டி வந்த அவநம்பிக்கை போன்றவை காரணமாக இந்திய அரசு இலங்கை தமிழர்களுக்கு உதவ முன் வந்தது.
இலங்கை போராளி இயக்கங்களுக்கு இந்தியா அளப்பரிய நிதி உதவியும், ஆயுதப் பயிற்சியும் தந்தபோதிலும் கூட இலங்கையை இரண்டாக பிரிக்கும் நோக்கத்திற்கு இந்தியா உடன்படாது என்பதையும், பயிற்சியின் நோக்கம் இனவெறி அழிவுகளிலிருந்து தமிழர்களை பாதுகாப்பதோடு, ஒரு பலம் பொருந்திய நிலையில் தமிழர்கள் பேச்சுவார்த்தை நடத்தினால் அதில் பலன்கிடைக்கும் என்பதாலும் தான் என விளக்கப்பட்டது.
என்ற போதிலும் இந்தியாவின் நம்பிக்கைகள் தகர்ந்தது. தமிழர்களுக்கான உரிமைகளை படிப்படியாக இலங்கை அரசிடம் பேச்சுவார்த்தை நடத்தி சாதிக்கமுடியுமென்று நம்பிக்கை கொள்வதற்கு சாத்வீக வழியில் வந்தவர்கள்அல்லவே போராளிகள்!
1987-ல் ஜெவர்ததனே - ராஜீவ் ஒப்பந்தம் கையெழுத்தானது. இனி இலங்கை மண்ணில் நிரந்தரமான நல்லிணக்கம் உருவாகிடும் என இந்தியா மெய்யாகவே நம்பியது.
ஆனால் அனைத்து போராளி இயக்கங்களும் இதற்கு உடன்பட்ட நிலையில் விடுதலைப்புலிகள் மட்டும் இணங்கமறுத்தனர்.
தனிநாடு என்பதற்கு தடை ஏற்படுமானால் இலங்கை அரசை மட்டுமல்ல, இந்திய அரசையும் எதிர்ப்போம் என அவர்கள் நடைமுறையில் நிருபித்தனர்.
இதன் விளைவு தமிழ்மக்களின் நண்பனாக, பாதுகாவலனாக சென்ற இந்திய அமைதிப்படையை தனது சதித்திட்டங்களால் தமிழர்களுக்கு எதிரானதாக மாற்றினர் விடுதலைப்புலிகள்.
இந்திய ராணுவவீரர்கள் சுமார் 1300பேர் இலங்கை மண்ணில் கொல்லப்பட்டனர். இலங்கை அரசால் அல்ல. தமிழர்களை பிரதிநிதித்துவ படுத்துவதாகக் கூறப்பட்ட விடுதலைப்புலிகளால்!
எந்த இலங்கை அரசை கொடுங்கோலனாக அடையாளப்படுத்தி இந்திய அரசிடம் நிதிஉதவியும்,இந்திய ராணுவத்திடம் ஆயுதப்பயிற்சியும் விடுதலைப் புலிகள் பெற்று கொண்டனவோ அந்த இந்திய ராணுவத்தை அந்த கொடுங்கோல் இல்ஙகை அரசின் நிதிஉதவி, ஆயுததளவாடங்களை பெற்று இலங்கை மண்ணில் கொன்றனர்.அவை போதாதென்று தமிழகம் வரை துரத்தி வந்து 1991-ல் ராஜீவ்காந்தியை கொன்றொழித்தனர். இந்திய ராணுவத்தை எதிர்க்க துணைபுரிந்த பிரேமதாசாவையும் 1993-ல் கொன்றுவிட்டனர்.
இந்தியாவிற்கு அனுசரணையாக இருந்ததாக சந்தேகப்பட்டே சீறிசபாரத்தனிம், பத்மநாபா,அமிர்தலிங்கம், யோகேஸ்வரன்...போன்ற நானூறுக்கும் மேற்பட்ட இலங்கைத்தமிழ் தலைவர்களைக் கொன்றனர்.
இந்திய உளவு அதிகாரிகளோடு நெருக்கமாக இருந்தார் என்று சந்தேகித்தே தன் இயக்கத்தின் மாபெரும் தளபதியான மனத்தையாவையும், நூற்றுக்கணக்கான அவரது ஆரதவாளர்களையும் கொன்றார் பிரபாகரன்.
தங்களின் நோக்கங்களுக்கு இந்தியா எதிரானது என்பது விடுதலைபுலிகளின் உள்ளார்ந்த ஆழ்நத நம்பிக்கை. எனவே தான் தமிழகத்தில் தமிழிழ ஆதரவாளர்கள் இந்திய அரசுக்கு எதிராக பலவிதமாக பேசி தமிழகமக்களை மூளைச்சலவை செய்கின்றனர்.
இதனால் தான் தமிழகத்திலுள்ள தமிழிழ ஆரதவாளர்கள் வேறெந்த நோக்கத்தையும் விட, வேறெந்த பிரச்சாரத்தையும் விட இந்திய இறையாண்மைக்கு எதிரான பிரச்சாரத்தை தமிழக மக்கள் மத்தியில் இடையறாது செய்து விடுகின்றனர்.
இலங்கையில் தமிழ் ஈழம் உருவாவது போல் இந்தியாவில் தமிழ் தேசிய தன்னாட்சி மலரவேண்டும் என்பது இவர்களின் தணியாத பேராசையாகும்! இந்திய அரசு தமிழர்களுக்கு எதிரானது என்ற பிரச்சாரம் வலுப்பட்டு தமிழ் மக்கள் நம்பிவிட்டால் தங்கள் நோக்கம் நிறைவேறிவிடும் என்பது இவர்களின் திட்டம்.
நல்லவேளையாக இவர்களின் நோக்கத்தை புரிந்து கொண்ட தமிழக மக்கள் தேர்தலில் இவர்களை நிராகரித்துவிட்டனர். இங்கே பிரிவினைவாதத்திற்கோ வன்முறைக்கோ ஆதரவில்லை என்பதை நிருபித்துவிட்டனர்.
இந்தியாவில் மட்டுமல்ல, இலங்கையில் உள்ள பெரும்பாலான தமிழர்களும் கூட தங்கள் நாடு இரு கூறுகளாகப் பிரிந்து சீர்கெடவும், ஏகாதிபத்திய வல்லரசுகளுக்கும் பலியாவதையும் விரும்பவில்லை.
தனிஈழம் என்பது யதார்த்ததில் கொஞ்சம் கூட ஏற்கமுடியாத ஒரு கற்பனைவாதம் என்ற நிதர்சனத்தை அனுபவ பூர்வமாக, மிக அழுத்தமாக இலங்கைத் தமிழர்கள் உணர்ந்துவிட்டனர்.
இலங்கையில் மொத்தம் 24 மாகாணங்கள். இதில் தமிழர் பிரதேசம் என்று சொல்லக்கூடிய வடக்கு கிழக்கு மகாணங்களில் வசிக்கும் தமிழர்களைக் காட்டிலும் மிக அதிகமானவர்கள் சிங்கள மக்கள் வாழும் பிரதேசங்களில் அவர்களோடு இரண்டற கலந்து வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.
அது மட்டுமல்ல, இநத வட கிழக்கு மாகாணங்களில் வசிக்கும் தமிழர்களில் குறிப்பாக கிழக்கு மாகணத்தில் வாழ்பவர்கள் தனிதமிழ் ஈழத்தை விரும்பவில்லை. ஏனெனில் இவர்கள் கிழக்கு மாகணத்தில் இஸ்லாமியர்களோடும், சிங்களமக்களோடும் இணக்கமாக வாழ்ந்து பழக்கப்பட்டுவிட்டார்கள், யாழ்பாணத்தமிழர்கள் ஆதிக்கவாதிகள் என்பது அவர்களின் அனுபவம் கூறும் உண்மை!
மேலும் தமிழ் பிரதேசங்களில் வசிக்கும் தலித்மக்களும் யாழ்ப்பாண உயர் சாதி ஆதிக்கசக்திகளின் பிடியில் வாழ்வதை அடியோடு வெறுக்கின்றனர். தனிஈழம் பற்றி பேசினாலே இலங்கையில் உள்ள தலித் மக்கள், அடிமைகளும், எஜமானர்களும் சேர்ந்து தனி ஈழம் கட்டமைக்க முடியாது" என்கிறார்கள்.
தமிழ்பேசும் இஸ்லாமியமக்களில் 70 சதவிகிதத்தினர் தமிழ் ஈழபிரதேசத்திற்கு வெளியே சிங்கள இன மக்களோடு வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். தமிழ் இனவெறி ஆதிக்க சக்திகளால் இலங்கை வாழ் இஸ்லாமியர்கள் அடைநத இன்னல்களையும், இழப்புகளையும் எழுத ஒரு அத்தியாயம் போதாது. ஆக அவர்களும் தனி ஈழத்திற்கு உடன்படவில்லை.
மலையகத்தமிழர்களாகிய இந்தியாவம்சாவழித்தமிழர்களோ என்றுமே இலங்கை தமிழ் ஆதிக்க சக்திகளால் அங்கீகரிக்கப்பட்டதில்லை. அவர்களும் தனிஈழத்திற்கு வெளியில் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள்.
இந்நிலையில் யாருக்காக தனிஈழம் கோரிக்கை வைக்கப்படுகிறது என்ற கேள்விக்கு தமிழ்ஈழ ஆதரவாளர்கள் என்ன பதில் சொல்லமுடியும்?
தமிழ்ஈழ ஆதரவாளர்கள் கூறுவது போல் சிங்களமக்கள் அனைவருமே தமிழர் விரோதிகளோ, எதிரிகளோ அல்ல. அவர்களுக்கிடையிலும் சில இனவெறி அமைப்புகள் உண்டு. ஆனால் அவை பெரும்பான்மை சிங்களர்களின் ஆதரவை பெற்றவையல்ல.
1956ல் பண்டாரநாயகா தமிழர் உரிமைகளை பறிக்கும் சில சட்டங்களைக் கொண்டுவந்தார்.சிங்கள இனவெறிக்கு வித்திட்டு கலவரங்களை உருவாக்கினார். 1958தேர்தலில் சிங்களமக்கள் அவரை தேர்தலில் தோற்கடித்தனர்.1994ல் சந்திரிகா இலங்கை தமிழர்களுக்கு உரிமைகள் தந்து சிங்களர்- தமிழர் சமாதான சகவாழ்வுக்கு பாடுபடுவேன் என்றார். சிங்கள மக்கள் அவரை தேர்ந்தெடுத்தனர்.
அதே போல் அவரும் விடுதலைப் புலிகளுடனான சமாதான முயற்சிகளுக்கு சாத்தியப்பாடான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டார்.
தமிழ் மக்களும் சந்திகாவின் முயற்சிகளை அன்பு மேலோங்க வரவேற்றனர். இலங்கை அரசு அதிகாரிகள் தமிழர் பகுதிகளுக்கு பேச்சுவார்த்தை நடத்தச் சென்றபோது தமிழ்மக்கள் ஆர்பாட்ட வரவேற்பளித்து ஆரத்தழுவி வந்திறங்கிய வானூர்தியை முத்தமிட்டு ஆனந்தித்தனர்.
ஒன்றல்ல, இரண்டல்ல, நான்குமுறை விடுதலைப்புலிகளை தேடிவந்து பேசினார்கள் இலங்கை அதிகாரிகள். ஏறத்தாழ 40 முறை சந்திரிகா பிரபாகரனுக்கு கடிதங்கள் எழுதி மன்றாடினார். விடுதலைப்புலிகளின் வில்லங்கமான நிபந்தனைகளையெல்லாம் கூட நிறைவேற்றி இறங்கிவந்தார்.
இதனால் தமிழ்மக்கள் மிகுந்த நம்பிக்கை கொண்டனர். அவர்கள் இலங்கைஅரசை ஆதரிக்கும் மனநிலைக்குச் செல்வதை புலிகள் விரும்பவில்லை. எனவே தொடர்ந்து சமாதான முயற்சிகளுக்கு ஊறுவிளைவிக்கும் வகையில் அரசாங்கத்தின் கப்பல்களை குண்டு தாக்கி அழித்தனர். சிங்கள மக்கள் வாழும் பகுதிகளில் பயங்கரவாதச் செயல்களை அரங்கேற்றிர். இதற்கு எதிர்வினையாற்றவேண்டிய கட்டாயத்திற்கு சந்திரகா அரசாங்கத்தை தள்ளினார்.
வழக்கமாக அரசு எடுக்கும் எதிர்வினை நடவடிக்கைகளில் இருந்து தாங்கள் தப்பித்துக்கொண்டு அப்பாவிமக்களை பலியாக்கினார். அரசாங்கத்தை மக்களுக்கு எதிரானதாக அடையாளப்படுத்தி தங்கள் சர்வாதிகாரத்தை தொடர்ந்து தமிழர் பகுதிகளில் நிலைநாட்டினர்.
ரணில்விக்கிரசிங்கேவும் இலங்கையில் அமைதியை முன்னெடுப்பேன் என்று சொன்னதாலேயே சிங்கள மக்களால் ஆதரிக்கப்பட்டு அரியணை ஏறினார். ஏற்கெனவே சந்திரிகா அரசானது பல கசப்பான அனுபவங்களைபெற்றதையடுத்து விடுதலைப்புலிகள் இயக்கத்தை தடைசெய்திருந்தது. ஆனால் ரணில் விடுதலைப்புலிகளின் மீதான தடையை நீக்கி உறுதியாக சமாதானத்தை நிலைநாட்டினார். இதில் கொடுமையான விஷயம் என்னவென்றால் அரசாங்கம் விடுதலைப்புலிகளின் மீதான தடையை நீக்கியபோதிலும், விடுதலைப்புலிகள் மறற தமிழ் இயக்கங்களின் மீதான தடையை கடைசிவரை விலக்கிகொள்ளவில்லை.
சமாதான முயற்சிகளில் சமரசமின்றி ஈடுபட்ட ரணில்விக்கிரமசிங்கேவிற்கு தங்கள் கட்டுப்பாட்டிலிருக்கும்தமிழர்கள் வாக்களிக்காத வண்ணம் விடுதலைப்புலிகள் கட்டளையிட்டனர்.
இதனால் "விடுதலைப் புலிகளை இராணுவத்தை கொண்டு ஒடுக்கி இலங்கையை பயங்கரவாத அபாயத்திலிருந்து மீட்டெடுப்பேன்" என சூளுரைத்த ராஜபக்ஷேக்கு சிங்களமக்கள் ஆரதவளித்தனர்.
ஏனெனில் அநத அளவுக்கு இலங்கையில் விடுதலைப்புலிகள் பயங்கரவாதத்தை அரங்கேற்றி மக்களின் வெறுப்பை சம்பாதித்துவிட்டனர். புத்ததுறவிகள், இஸ்லாமிய மத பெரியோர்கள், இந்துமத குருமார்கள், கத்தோலிக்கபாதிரியார்கள்.... என யாருமே தப்பவில்லை விடுதலைப்புலிகளின் பயங்கரவாதச்செயல்களுக்கு!
ஜனநாயகவாதிகள், அறிவுஜீவிகள், சமூகசேவகர்கள், கல்வியாளர்கள், அரசியல்வாதிகள், அதிகாரிகள் தொடங்கி சாதாரண பொதுமக்கள் வரை தினசரி புலிகளுக்கு பலியாயினர். தமிழ்மக்கள் மத்தியில் வாழ்ந்த உன்னதமான அனைத்து பிரமுகர்களும் கொல்ல்ப்பட்டுவிட்டனர்.
இந்நிலையில் ராஜபக்சே எடுத்த முயற்சிகள் வெற்றிபெற்று விடுதலைப்புலிகள் வீழ்த்தப்பட்டுள்ளனர். ஆயுதங்களை ஒப்படைத்து சரணடைந்து தமிழ்மக்களை காப்பற்ற முயற்சிக்காத புலிகள் கடைசிகடடத்தில் வெள்ளைகொடி தாங்கி பிரபாகரனை காப்பாற்ற முயன்றனர். அது பலிக்கவில்லை.
விடுதலைப் புலிகளின் வீழ்ச்சி என்பது தமிழர்கள் வாழ்வின் மறுமலர்ச்சி என்பதை இனி நிருபிக்கவேண்டிய பொறுப்பு இலங்கை அரசுக்குள்ளது. இந்திய மக்களும், இந்திய அரசும், சர்வதேச சமூகமும் இதைத்தான் இலங்கை அரசிடம் எதிர்ப்பார்க்கின்றன.
இந்த நம்பிக்கையை பரிபூரணமான இதயசுத்தியோடு நிறைவேற்றி
தமிழர்கள் - சிங்களர்கள் இடையே சமமான நல்வாழ்வை உறுதிபடுத்தாமல், தன் கூட்டாளிகளான சிங்கள இனவெறியாளர்களின் எதிர்பார்ப்பிற்கு ராஜபக்ஷே பணிந்து விட்டால் அவரது முடிவு பிரபாகரனுக்கு நேர்ந்ததை விடவும் மோசமானதாகிவிடும்!