Thursday, March 12, 2009

இலங்கை பிரச்சசை தீர்வு என்ன?

-சாவித்திரிகண்ணன்

"ஐயகோ தமிழ் ஈழம் பற்றி எரிகிறதே..."

"தமிழர்கள் கொத்துக் கொத்தாய் கொல்லப்படுகிறார்களே..."ஒண்ட இடமின்றி, உண்ண உணவின்றி இரண்டு லட்சம் மக்கள் பட்டினியால் துடிக்கிறார்களே...." என்ற குரல்கள் கடந்த ஆறேழு மாதங்களாக தமிழகமெங்கும் ஆங்காங்கே ஒலித்துக் கொண்டிருக்கின்றன.

இதைத்தொடர்ந்து இலங்கையில் இம்சைக்குள்ளாகும் மக்களுக்கு ஆதரவான பல்வேறு வகையிலான போராட்டங்கள், பல்வேறு அமைப்புகளால் நடத்தப்பட்டு வருகிறது.

இதற்கிடையே, "இலங்கையில் போர்நிறுத்தம் ஏற்படவேண்டும். அதற்கு இந்தியா உத்தரவிடவேண்டும். ஆனால் இந்திய அரசோ வாளாயிருக்கிறது. தமிழக காங்கிரஸோ இன்னும் ராஜீவ்கொலையை மட்டுமே பேசிக் கொண்டிருக்கிறதேயன்றி இலங்கை தமிழர்கள் மேல் அனுதாபம் கொள்ள மறுக்கிறது...." என்ற குற்றச்சாட்டுகளும் பரவலாக வைக்கப்பட்டுவருகிறது. இலங்கையில் பெரும் இம்மைக்குள்ளாகியிருக்கும் தமிழ்மக்களுக்கான இரக்க உணர்வுகளும், இதில் இந்தியா ஏதாவது தலையிட்டு அங்கே நடக்கும் அக்கிரமங்கள் முடிவுக்கு வராதா? என்ற ஆதங்கங்களும் அலட்சியப்படுத்த தக்கவையல்ல. மிகவும் நியாயமானவை, இயல்பானவை. இதில் மாற்றுக் கருத்துக்கே இடமில்லை.

ஆனால் இதில் எதுவுமே நடக்க முடியாத ஒரு சூழல் அங்கே நிலவுகிறது. அந்த யதார்த்தை உணர மறுத்தோ, மறைத்தோ கட்டமைக்கப்படும் உணர்ச்சி கொந்தளிப்பு பயனற்றது என்பது மட்டுமல்ல, ஆபத்தானது பல உள்நோக்கங்களை உள்ளடக்கியது.

இலங்கையில் ஒரு நிரந்தர அமைதி நிலவ, அங்கே தமிழர்கள், சிங்களர்கள் உள்ளிட்ட சகல இனமக்களும் நிம்மதியாய் வாழ, இந்திய அரசு இடையறாது சுமார் 26 ஆண்டுகளாக ஈடுபட்டுவருகிறது. இப்போதும் ஈடுபட்டுளளது. அண்டை நாடான இலங்கையின் இனப்பிரச்சனை ஒரு முடிவுக்கு வராமல் இழுபறியாகிக் கொண்டிருப்பதில் இந்தியாவை விட அதிக கவலைப்படும் நாடு வேறெதுவாக இருக்கமுடியும்...? அதுவும் இலங்கை தமிழர்களின் துயரம் தமிழகத்தில் எதிரொலித்து தமிழகத்தின் இயல்புவாழ்க்கையை ஸ்தம்பிக்குமளவுக்கு போவதையும் இந்திய அரசு கவனிக்காமல் இல்லை.

தனித்தமிழ் ஈழம் தான் ஒரே தீர்வு என்கிறார்கள் விடுதலைப்புலிகள். கடந்த 26 ஆண்டுகளாக இந்தியாவும், பிறகு நார்வேயும் பலமுறை அரசியல் தீர்வுக்கான பேச்சுவார்த்தைக்கு இரு தரப்பையும் இணங்க வைத்துப் பார்த்தாயிற்று. ஆனால் இந்த 26 வருட அனுபவத்தில் விடுதலைப் புலிகள் தாங்கள் பலஹீனமடையும் போது பேச்சுவார்த்தைக்கு உடன்படுவார்கள். அநத அவகாசத்தில் ஆயுதங்களை வாங்கி குவிக்கவும், இயக்கத்திற்கு புதிய நபர்களை கொண்டு வரவும் பயன்படுத்திக் கொள்வார்கள். தங்கள் தேவைகள் முடிந்ததாக கருதினால் பேச்சுவார்த்தையை முறித்துக் கொண்டு குண்டு வெடிப்புகளில் இறங்கி விடுவார்கள்.

பேச்சுவார்த்தை என்பதையும், போர்நிறுத்தப்படவேண்டும் என்பதையும் ஒரு போர்வையாக பயன்படுத்திக் கொள்ளும் போர் தந்திரமாக தொடர்ந்து விடுதலைப் புலிகள் பயன்படுத்துவதால் தான் சமாதான முயற்சியில் ஈடுபட்ட நாடுகளெல்லாம் சலிப்படைந்துவிட்டன.

இது தான் நாங்கள் எதிர்பார்க்கும் அரசியல் தீர்வு.... என்று பகீரங்கமாக அறிவித்து இந்த தீர்வு எட்டப்படும் பட்சத்தில் இனி ஜனநாயக நீரோட்டத்தில் இணையத் தயார். அதற்கான மனந்திறந்த உரையாடலுக்கு இந்தியா ஏற்பாடு செய்யவேண்டும் என்று புலிகள் தரப்பில் இதுவரை அறிவிக்கவில்லை.

இங்கே புலிகளை ஆதரிப்பவர்களும், தமிழ் ஈழத்தில் மக்கள் சாகிறார்களே என கூப்பாடு போடுபவர்களும், அநத மக்களை காப்பாற்றுவதற்காகவேனும் புலிகளிடம் கோரிக்கை வைக்க துணியவில்லை. ஏனெனில் புலிகள் எவர் கோரிக்கைகளையும் நிராகரிக்கக் கூடியவர்கள் என்பது இவர்களுக்கும் தெரியும்.

1986 வரைக்குமான இலங்கை பிரச்சினை என்பது வேறு, இப்போதைய இலங்கை இனப்பிரச்சினையின் பரிணாமவளர்ச்சி என்பது முற்றிலும் வேறானது என்ற புரிதல் நமக்கு அவசியம்.

இலங்கை தமிழர் பிரச்சினை என்பது இந்தியாவின் தேசியப்பிரச்சினை என பகிரங்கமாக அன்று அறிவித்தார் இந்திராகாந்தி. அன்று அதற்கான பந்த் தமிழகத்தில் அறிவிக்கப்பட்டபோது அதில் மத்திய அரசும் பங்கேற்று மத்திய அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை, ரயில் விமான சேவைகள் ரத்து, ஏனெனில் இந்திய மக்களும் இந்த துக்கத்தில் பங்கெடுக்கின்றனர் என அறிவித்தவர் இந்திராகாந்தி.

இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக மற்ற நாடுகளின் ஒத்துழைப்பை கோரியவர் இந்திராகாந்தி. 1983 - ல் ஐ.நா. சபையில் இலங்கைத் தமிழர் பிரச்சினையை தமிழரான பண்ருட்டி ராமச்சந்திரன் பேச ஏற்பாடு செய்தது அன்றைய இந்திய அரசு.

"இலங்கைத் தமிழர் பிரச்சினை இந்தியா முழுவதையுமே கவலையில் ஆழ்த்துகிறது" என கூறி பிரதமராயிருந்த காலகட்டம் முழுமையிலும் பெரும் பிரயத்தனங்களில் ஈடுபட்டவர் ராஜீவ்காந்தி.

இலங்கை அரசுக்கு அமெரிக்கா உதவி புரிவதற்கு ராஜீவ்காந்தி கண்டனம் தெரிவித்த காலகட்டங்கள் உண்டு.

போரில் தமிழர்கள் பாதிக்கப்பட்ட போது அன்றைய இலங்கை அரசின் விருப்பதிற்கு மாறாக பலமுறை கப்பல்களிலும், விசைப்படகுகளிலும், விமானங்கள் மூலமாகவும் ஆயிரக்கணக்கான டன் உணவுப்பொருட்களை விநியோகித்தார் ராஜீவ்காந்தி.

1987-ல் தமிழக காங்கிரஸ் தனது சொந்த நிதியாக ஒரு கோடியை இலங்கை தமிழர்களுக்கு தந்தது.

அன்று முதல் இன்று வரை பல லட்சம் இலங்கை தமிழ் அகதிகளுக்கு இந்தியாவில் புகழிடம் தந்து உணவும், உறைவிடமும் வழங்கிவருகிறது இந்திய அரசு. இதையெல்லாம் இப்படி பட்டியல் போட்டு சொல்வதால் இலங்கை பிரச்சினையில் நான் காங்கிரஸ் ஆதரவாளனோ என வாசகர்கள் தீர்மானிக்க வேண்டாம்.

எனக்கு இலங்கை பிரச்சினையிலான இந்திய அரசின் அணுகுமுறைகளில் சில மாற்று கருத்துகள் நிச்சயமாக உள்ளன.ஆனால் வள்ளுவரின் வாக்கின் படி,குணம்நாடி, குற்றமும் நாடி அவற்றில் மிகைநாடிமிக்க கொளல்என்பதை நினைவில் கொண்டே எழுதுகிறேன்.

இலங்கைத் தமிழர் பிரச்சினை என்பது இலங்கை அரசின் பேரினவாதப் போக்கால் தான் உருவானது என்பதிலும், முதல் 25 ஆண்டுகள் செல்வநாயகம், அமிர்தலிங்கம் போன்ற மிதவாதத் தலைவர்கள் அரசியல் தீர்வுக்கு ஆர்வம் காட்டிய போது அலட்சியம் காட்டிய சிங்கள அரசின் இனவெறி அணுகுமுறையே ஆயுத போராட்டத்திற்கு அடிகோலியது என்பதிலும் நமக்கு மாற்று கருத்து இல்லை.

அதனால் தான் அன்று இந்தியா ஈழப் போராளிகுழுக்களுக்கு தார்மீக உதவியை தந்தது. ஆயுதப் பயிற்சியும், அளப்பரிய நிதிஉதவிகளும் அன்றைக்கு இலங்கை போராளிகளுக்கு இந்தியா வழங்கிய போது, அது சர்வதேச நெறிமுறைகளுக்கு எதிரானது மட்டுமல்ல, சார்க் கூட்டமைப்பு நாடுகளின் தீர்மானத்திற்கு எதிரானது என்பதை உணர்திருந்த போதிலும், இலங்கை அரசின் இனவெறிபோக்கே இந்தியாவின் நிலைபாட்டிற்கு நியாயம் கற்பிக்க உதவியது எனலாம்.

எனவே இந்தியாவின் தலையீட்டிற்கு பணிய வேண்டிய நிர்ப்நதம் இலங்கை அரசுக்கு ஏற்பட்டதை த் தொடர்ந்து "அனெக்சர் சி' எனப்படும் திட்டத்தை இந்தியா இலங்கை அரசுக்கு வழங்கியது. மீண்டும் ராஜீவ்காந்தி காலத்தில் நட்வர்சிங், பா.சிதம்பரம் போன்றவர்கள் இலங்கையில் இனப்பாகுபாடற்ற ஆட்சிமுறைக்கான ஒரு திட்டத்தை தயாரித்தளித்தனர்.

அதை ஏற்கும்படி அன்றைய இந்திய பிரதமர் ராஜீவ்காந்தி ஜெயவர்த்தனாவை இணங்க வைத்தார். 1987 ஜீலை 29-ல் இந்திய இலங்கை ஒப்பந்தம் கையெழுத்தானது. இது சிங்களர் மத்தியில் ஏற்படுத்திய கொந்தளிப்பின் விளைவாக, விஜயமுனி என்ற சிப்பாய் ராஜீவ்காந்தியை துப்பாக்கி மட்டையால் மண்டையை பிளக்க முயன்றபோது ராஜீவ்காந்தி சுதாரிந்துக் கொண்டு உயிர்தப்பினார்.

'உண்மையில் இலங்கை பிரச்சினைக்கு அது ஒரு இறுதியான தீர்வல்ல' என்ற போதிலும் அது ஒர் நல்ல ஆரம்பம் என்பதில் சந்தேகமேயில்லை. ஒரு ஒப்பந்ததிற்கு உடன்பட்ட மாத்திரத்தில் இரு இனங்களுக்கிடையிலான 2500 வருடப் பகை உடனடியாக முடிவுக்கு வந்துவிடாது. எனினும் போர் இரு தரப்பிலும் அளப்பரிய இழப்புகளையும், அதற்கும் மேலாக ஒரு சலிப்பையும் உருவாக்கி, சாதாரண மக்கள் இரு தரப்பிலுமே நிம்மதியான வாழ்வுக்கு ஏங்கினார்கள் என்பது உண்மை.

ஆனால், அநத ஒப்பந்தத்தை ஒரு ஆரம்பமாகக் கருதி ஆரோக்கியமான சூழலுக்கு அடிகோல வேண்டிய பொறுப்புணர்ச்சியை முற்றிலும் தட்டிக் கழித்தனர், விடுதலைப்புலிகள்.

அந்த ஒப்பந்தத்திற்கு உடன்பட்ட மற்ற போராளிகுழுக்களை வேட்டையாடினர். ஆங்காங்கே பயங்கரவாதச் செயல்களை அரங்கேற்றினர். அமைதிக்கு முயன்ற இந்திய ராணுவத்தை அவமானப்படுத்தும் சூட்சமான திட்டங்களை மக்களை நிர்பந்தித்து அரங்கேற்றினர். இறுதியில் புலிகள் இலங்கையின் சிங்கள அரசியல் சூழலில் ஜெயவர்த்தனேக்கு எதிர்நிலையில் இருந்த பிரேமதாசாவுடன் கூட்டு சேர்ந்து கொண்டு இந்திய அரசை இழிவுபடுத்தினார்கள்.

எந்த இன எதிரிகளுக்காக புலிகள் இந்தியாவின் உதவியை நாடினார்களோ, பெற்றார்களோ, நன்கு அனுபவித்தார்களோ அநத எதிரிகளோடு கடைசியில் கைகோர்த்துக்கொண்டு இந்திய அரசை இழிவுபடுத்தியது என்பது ராஜீவ்காந்தியின் கொலைக்கு ஈடான பெரும் கொடுமையாகும்.

இந்திய அரசின் அமைதி முயற்சிகள் தோல்வி அடைந்தது என்பது ராஜீவ்காந்தியின் தோல்வியல்ல. இந்திய அரசின் தோல்வி. இந்திய மக்களின் நல்லெண்ண முயற்சிகளுக்கு கிடைத்த தோல்வி. இந்த கசப்பான அனுபவம் தான் இந்திய அரசு நிர்வாகத்திற்கு இன்று வரை இதயத்தில் ஆழமாக பதிந்துவிட்டது எனலாம்.

ராஜீவ்காந்தி கொலை என்பது விடுதலைப் புலிகளது பயங்கரவாதச் செயல்களின் ஒரு அம்சம்.

1986-ல் சகோதர இயக்கங்களுக்கு தடைவிதித்து தங்களது அழித்தொழிப்பு நடவடிக்கைகளை ஆரம்பித்த விடுதலைப் புலிகள் இது நாள் வரை இலங்கை தமிழ் தலைவர்கள், முக்கியஸ்தர்கள் என நானூறுக்கு மேற்பட்டவர்களைக் கொன்றுள்ளனர். ஆயிரக்கணக்கான சக தமிழ்போராளிகளைக் கொன்றுள்ளனர். போரில் விருப்பமில்லாத அப்பாவி தமிழ் மக்களின் குடும்ப குழந்தைகளை நிர்பந்தித்து போர் முனைக்கு அனுப்பி இது வரை 24,000 பேரைக் கொன்றுள்ளனர். போருக்கு தங்கள் குழந்தைகளை அனுப்ப மறுக்கும் பெற்றோர்களுக்கும் கொடுமையான சித்திரவதைகளை செய்துள்ளனர். போர்களத்திற்கு வலிந்து அனுப்பபட்ட தமிழ்மக்களின் இளஞ்சிறார்கள் பலர் வன்முறைச் செயல்களில் ஈடுபட மனமின்றி சயனைடு குப்பிகளை உட்கொண்டு தங்களைத் தாங்களே அழித்துக் கொண்ட சம்பவங்கள் அநேகம்..!!

தனது இயக்கத்திலுள்ளவர்கள் காதலித்தாலே அவர்களுக்கு மரணதண்டனையை அரங்கேற்றும் புலிகளின் தலைவர் பிரபாகரன் தான் மட்டும் மதிவதினி என்ற இன்னொருவரை காதலித்த பெண்ணை கடத்திக் கொண்டு வந்து கல்யாணம் செய்ததிலும், இவ்வளவு உக்கிரமான போர்களுக்கு இடையிலும் மூன்று குழந்தைகளை பெற்றெடுத்து, அவர்களை போருக்கு பலியாக்காமல் நல்ல முறையில் வளர்த்திருப்பதிலுமிருந்து அவருடையயோக்கியதையை புரிந்து கொள்ளலாம்.

தமிழ்மக்களின் விடுதலைக்காக போராடுகிறோம் என தலையெடுத்து இன்று அந்த மக்களையே நிரந்தரபிணைக் கைதிகளாக்கி, சொல்லொணா கொடுந்துயரத்திற்கு ஆளாக்கிவரும் விடுதலைப் புலிகளின் கொடுமைகள் குறித்து தமிழகத்திற்கு வந்துள்ள அகதிகள் தரும் தகவல்கள் நெஞ்சை உறையவைக்கின்றன".

இது மட்டுமின்றி சர்வதேச தளத்தில் அவர்கள் நிகழ்ந்தி கொண்டிருக்கும் அரசியல் படுகொலைகளாலும் ஈழத்தமிழர்கள் புலம்பெயர்ந்துள்ள நாடுகளில் அவர்களை மிரட்டி காசுபறித்ததிலும், பல சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதிலும் இன்று அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, கனடா....உள்ளிட்ட சுமார் 32 நாடுகளில் விடுதலைப் புலிகள் இயக்கம் தடைசெய்யப்பட்டுள்ளது.

இலங்கையிலே தமிழ் இளைஞர்கள் முதன் முதலாக போராட்டக்களம் இறங்கிய போது தமிழர்கள் பிரச்சினைக்காகசிங்களமக்களில் நடுநிலையாளர்கள், அறிவு ஜீவிகள், மனித உரிமை ஆர்வலர்கள், இலங்கை கம்யூனிஸ்ட்கட்சி, டிராட்ஸ்கியக் கட்சி, சமசமாஜகட்சி.... போன்ற தரப்பின் ஆதரவுக்குரல்கள் இருந்தன. அன்றைய போராளிகளின் லட்சியமாக "சோஷலீச தமிழ் ஈழம்" இருந்தது.

ஆனால் ஒரு உன்னதமான விடுதலைப் போராட்டம் திசைமாறி பயங்கரவாத இயக்கமாக பரிணாமம் பெற்றபின்பு அது பொதுமக்கள் கூடும் இடங்களான சந்தைகள், பஸ்நிலையங்கள், புத்தவிகாரர்கள், மசூதிகள்... என தொடர்ந்து குண்டுவெடிப்புகளை நிகழ்த்தி அப்பாவி சிங்கள மக்களை அபரிமிதமாக தொடர்ந்து கொன்று குவித்ததில் சிங்களமக்களிடமிருந்த கொஞ்ச நஞ்ச ஆதரவையும், அனுதாபத்தையும் இழந்துவிட்டது.

விடுதலைப் புலிகளின் வெறிச் செயல்களால் ஏற்பட்டுள்ள எதிர்வினையானது சிங்கள மக்களை இனவெறிக்கு தூண்டிவிட்டு ஒற்றுமைகொள்ள வைத்து, அதன் விளைவே இன்று ராஜபக்சே போன்றவர்கள் ராணுவபயங்கரவாதத்தை அரங்கேற்ற காரணமாயிற்று!

இதன் மூலம் தங்களின் தமிழ் ஈழ இலட்சியத்தை தாங்களே படுகுழிக்குள் தோண்டி புதைத்துவிட்டு தங்கள் தலையில் தாங்களே மண்ணள்ளி போட்டுக் கொண்டதோடு தங்களை நம்பிய மக்களையும் தாங்கொணாத துயரத்திற்கு ஆட்படுத்திவிட்டனர் புலிகள்!

சுமார் ஒரு லட்சத்து அறுபதாயிரம் மக்களை பலிகொடுத்து, ஆறுலட்சம் மக்களை அகதிகளாக்கி அந்நியநாடுகளில் புலம்பெயரச்செய்து, சொந்தமண்ணிலேயே பல லட்சம் மக்களை அகதிமுகாம்களுக்கு ஆட்படுத்தியது தான் கடந்த 30 ஆண்டுகளாக விடுதலைப் புலிகள் நடத்திய வேள்வியாகும்.

உண்மையில் இன்று இலங்கையில் வாழும் தமிழ் மக்கள் உடனடியாக வேண்டுவது அமைதியான வாழ்க்கையை, நிரந்தரமான நிம்மதியை! அப்படிப்பட்ட தொரு வாழ்க்கையை மக்களுக்கு அமைத்துத் தருவதற்கு மக்களைநேசிக்கும் தலைமை தேவை.

பிரச்சினைகளை பேச்சுவார்த்தைகளால், நுட்பமான ராஜதந்திர அணுகுமுறைகளால் வென்றெடுக்கும் விவேகம் பொருந்திய தலைமை தேவை.எப்போதும், எல்லாக் காலங்களிலும் ஆயுதங்களும், அழித்தொழிப்புகளுமே வெற்றியை தீர்மானிப்பதில்லை. ஆயுதத்தை எடுக்கும் சந்தர்ப்பத்தை தெரிந்தவர்களுக்கு ஆயுதத்தை கீழே வைக்கும் ஆன்மபலம் அவசியமாகும்!நேபாளத்தில் 'மாவோயிஸ்டுகள்' ஜனநாயகப் பாதைக்கு திரும்பிவிட்டனர். பாலஸ்தீனத்தில் பன்நெடுங்காலம் போராடிய 'ஹமாஸ்கள்' தேர்தல் பாதையை தேர்ந்தெடுத்துவிட்டனர்.

ஆப்கானிஸ்தானில் அமெரிக்காவின் நுழைவுக்குப் பிறகு ஏற்பட்ட அவலங்களும், அழிவுகளும் முடிவின்றித் தொடர்கிறது. தாலிபான்களால் தருவிக்கப்பட்ட துயரமல்லவா அது?

காஷ்மீரில் தீவிரவாத பாதைக்கு தீர்வு தேடத் தொடங்கிவிட்டனர் மக்கள் என்பதற்கு ஆதாரமாக தேர்தலில் மக்கள் காட்டிய உற்சாகம் தெளிவு படுத்திவிட்டது.

இலங்கையில் கடந்த 30ஆண்டுகளாக தமிழ்மக்கள் போராளிகளுக்காக தங்கள் சொத்து, சுகங்களை இழந்து, பெற்ற குழந்தைகளை காவுகொடுத்து நிம்மதியற்ற நிலைமைகளை எவ்வளவு நாள் சகித்துக் கொள்ள முடியும்?

கடந்த 30ஆண்டுகளாக பேச்சுவார்த்தைகளுக்கான எல்லா பிரயத்தனங்களையும் பிரயோஜனமில்லாலாக்கியதில் விடுதலைப் புலிகளுக்கும் பொறுப்பிருக்கிறதா இல்லையா?

தென்னாப்பிரிக்காவில் வெள்ளை நிறவெறி கொடுங்கோண்மை அரசுக்கு எதிரான நெல்சன்மண்டேலாவின் அறவழிப்போராட்டம் ஒரு காலகட்டத்திற்குப் பின் கனிந்தா? இல்லையா?

ஒரு காலத்தில் கறுப்பர் இன மக்கள் ஒட்டுரிமையற்றவர்களாக ஒடுக்கப்பட்ட அமெரிக்காவில் இன்று கறுப்பினத்தைச் சார்ந்த, இஸ்லாமியராகப் பிறந்த பாரக்ஒபாமா பார்வியக்க அதிபரானதற்கு என்ன காரணம்? வெள்ளையின மக்களைக் கூட அன்பால் வென்றெடுத்த சாதுர்யமல்லவா அவரது வெற்றியை சாத்தியப்படுத்தியது.

ஆனால் விடுதலைப்புலிகளோ ஆயுதபலத்தால் தங்கள் சொந்தமக்களையே அந்நியப்படுத்திக் கொண்டனர்.தமிழ்பேசும் இஸ்லாமியமக்கள் 75,000பேரை அதிரடியாக தங்கள் சொந்த மண்ணிலிருந்து அப்புறப்படுத்தி அகதிகளாக்கினார்கள்.

சாதி ஒழிப்பு போராட்டங்களை முன்னெடுத்த, தீண்டாமைக் கொடுமைகளுக்கெதிராகத் தீரத்துடன் போராடிய தலித் இளைஞர்களை சுட்டுக்கொன்று துப்பாக்கி முனையில் சாதி ஆதிக்கத்தை தூக்கி பிடித்தவர்களல்லவாபுலிகள்?

மலையகத் தமிழர்களை ஒரு போதும் மனிதர்களாகக் கூட மதித்ததில்லையே விடுதலைப்புலிகள்...!!

மட்டத்தட்டியே வைக்கப்பட்ட மட்டக்களப்பு தமிழர்கள் இனி குட்டக்குட்ட குனியமாட்டோம் என்று கட்டவிழ்த்து வந்து தங்கள் தனித்துவத்தை நிலைகாட்டிக் கொண்டது தானே அண்மைக் கால வரலாது?இத்தனை தமிழ்மக்களையும் புறந்தள்ளிவிட்டு விடுதலைப்புலிகள் அமைக்கத் துடிக்கும் தனி ஈழதேசம் என்பது மக்களுக்கானதா?அவர்களது சர்வாதிகாரத்தை சாத்தியப்படுத்திக் கொள்வதற்கானதா?

உண்மையில் இன்று தமிழ்மக்களில் 50சதவிகிதத்திற்கும் அதிகமனோர் இவர்கள் அமைக்கத்துடிக்கும் தமிழ் ஈழத்திற்கு வெளியே சிங்கள மக்கள் வாழும் பகுதிகளில் அவர்களோடு இரண்டறக் கலந்துஇருபத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்ற யதார்த்தத்தை புறக்கணிக்க முடியுமா?

இங்கே புலிகளுக்கு வக்காலத்து வாங்கும் அரசியல் தலைவர்கள் புலிகள் தான் தமிழர்களின் பாதுகாவலர்கள் என்ற மாயத்தோற்றத்தை உருவாக்கப் படாதபாடுபடுகிறார்கள்.

இது உண்மைக்கு முற்றிலும் மாறானது.

இந்திய அரசின் தலையீட்டினால் இலங்கையில் 48மணிநேர போர் அவகாசம் ஏற்பட்டபோது போர்பகுதிகளிலிருந்து தப்பித்து வெளியேறத் துடித்த தமிழர்களை துரத்தி,துரத்தி கொன்றவர்களல்லவா விடுதலைப்புலிகள்?இவர்களிடமிருந்து தப்பித்து வந்த தமிழ்மக்கள் இந்த உண்மைகளை உரத்துக் கூறியும் இன்னும் தமிழ் மக்களை எத்தனை காலம் புலிகளின் புறநானூற்று வீரம் பேசி மயக்கி கொண்டிருக்க முடியும்?

மிகச்சமீபத்தில் (மார்ச் 9) போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 500மெட்ரிக் டன் உணவு பொருட்களை சுமந்து வந்த கப்பலை சுற்றி வளைத்து சுட்டுதள்ளி, உணவுபொருட்களை கடலுக்குள் கவிழ்த்திய விடுதலை புலிகளின் மனிதாபிமானத்தை என்னென்பது?

ஏற்கெனவே உலகவர்த்தக மையம், இலங்கை மத்தியவங்கி, தலதாபுத்த கோயில், காத்தான்குடி, ஏறாவூர் மசூதிகள் போன்றவற்றில் நிகழ்த்திய நூற்றுக்கும் மேற்பட்ட தற்கொலைத் தாக்குதல்களும், குண்டுவெடிப்புகளும் போதாதென்று மார்ச்10ந்தேதி மாத்திறை ஜீம்மா மசூதி அருகே மீலாதுநபி ஊர்வலத்தில் நடத்திய தற்கொலைத் தாக்குதல்களையும் கூட தமிழக விடுதலைப் புலி ஆதரவாளர்கள் தன்நிகரற்ற வீரம் என புகழ்வார்களா?

இதில் புலிகளை ஆதரிக்கும் புதிய வரவாக தமிழக பா.ஜ.க கட்சியும் புலிகள் ஆதரவாளர்களோடு கூட்டு சேர்ந்துள்ளது. இந்தியாவில் பயங்கரவாதத்தை ஒடுக்க வேண்டும் என கூக்குரலிடும் பா.ஜ.கவினர், உலகின் மிக மோசமான பயங்கரவாத சக்தியான புலிகளை ஆதரிப்பது ஏன்?

இலங்கை பிரச்சனையை வெறுமனே பௌத்தமதத்திற்கும், இந்து மதத்திற்குமான போராக பார்க்கும் பா.ஜ.க மற்றும் இந்து அமைப்புகளின் குறுகிய பார்வை மிகவும் ஆபத்தானது.

இலங்கையில் சிங்களபௌத்த இன.மதவெறியே இல்லை என்று நாம் வாதாடவரவில்லை. ஆனால் ஒரு இனவெறிக்கெதிரான மற்றொரு இனவெறியோ, ஒரு மதத்திற்கு எதிரான மற்றொரு மதவெறியோ பிரச்சனைகளை மேன்மேலும் வளர்க்கவே உதவுமேயன்றி தீர்வாகாது.

இன்று இலங்கைத் தமிழர்களுக்காக வைகோ நடத்திய போராட்டத்தில் கலந்து கொண்டு மத்திய அரசை குறை கூறுகிறார் அத்வானி. மத்தியில் பா.ஜ.க ஆட்சி செய்த காலகட்டங்களில் இந்தியாவில் விடுதலைப் புலிகள் மீதான தடையை இரண்டாண்டுகளுக்கொரு முறை மீண்டும் நீடித்த கட்சிதான் பா.ஜ.க.

இன்று காங்கிரஸ் அரசை குற்றவாளி கூண்டில் ஏற்றத்துடிக்கும் பா.ஜ.க ஆட்சியில் இலங்கை அரசோடு இந்திய அரசுக்கு இருக்கும் ராஜ்ஜிய உறவுகள் ரத்து செய்யப்பட்டிருந்ததா என்ன? ஐ.என்.எஸ. சரண்யூ என்ற போர் கப்பலை 2001ஆம் ஆண்டு பா.ஜ.க அரசு இலங்கை அரசுக்கு வழங்கியதை மலினமான தேர்தல் அரசியலுக்கு உள்ளாக்கினால் அது சரியாகுமா?

கடந்த 30 ஆண்டுகளாக இலங்கை அரசுக்கும், இந்திய அரசுக்குமான ராஜிய உறவுகள், இராணுவ புரிந்துணர்வு பரிவர்த்தனைகள், கொடுக்கல் வாங்கல் , கூட்டு ராணுவ பயிற்சி...... போன்றவற்றை குறுகிய அரசியல் ஆதாயத்திற்காக மேடைகளில் பேசுவது மிகவும் பொறுப்பற்ற அணுகுமுறை.

இப்படி வாதிடுவதால் சிங்கள அரசின் பேரினவாதத்திற்கு இந்தியா துணைபோகலாம் என கூறுவதாகிவிடாது. இந்தியா மட்டுமல்ல இலங்கைக்கு உதவி செய்யகூடிய அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன், நார்வே போன்ற மற்ற நாடுகளும் கூட பல்வேறு சமயங்களில் இலங்கை அரசை இனப்பிரச்சனைக்கு இணக்கமான அரசியல் தீர்வை தரும்படி நிர்பந்திக்கத்தான் செய்கின்றன.

இதன் விளைவாக இலங்கை அரசின் அணுகுமுறைகளில் சில மாற்றங்கள் உருவாகி இனப்பிரச்சனைக்கு இணக்கமான தொரு சூழல் கனிந்த போதெல்லாம் புலிகள் அதை புறந்தள்ளி பயங்கரவாத பாதையை தேர்ந்தெடுத்துக்கொண்டனர்.

இன்றைக்கு புலிகளின் பயங்கரவாதமே ராஜபட்சேயின் அரசபயங்கரவாதத்திற்கு நியாயம் கற்பிக்க காரணமாயிற்று. ஆக, இன்னொரு நாட்டிலே செயல்படும் ஒரு பயங்கரவாத இயக்கத்திற்கு ஆதரவாக இந்திய அரசு தன்னுடைய பாதுகாப்புநலன்களையோ, ராஜதந்திர உறவுகளையோ மாற்றி அமைக்க நாம் கோருவது நடைமுறையில்பலனளிக்காது. இந்தியாவில் காங்கிரஸ் மட்டுமல்ல, பா.ஜ.க வோ, அல்லது மூன்றாவது அணியோ ஆட்சிக்கு வந்தால் கூட அது இலங்கை பிரச்சினையில் இன்றைய அரசு கடைபிடிக்கும் கொள்கைக்கு மாறாக நிச்சயமாக இராது.

எனவே விடுதலைப் புலிகளிடம் பிணைக் கைதிகளாகவுள்ள இரண்டுலட்சம் தமிழர்கள் மீட்கப்படவேண்டும் அதற்கு தமிழகத்திலுள்ள அனைத்து இயக்கங்களும் குரல் கொடுக்கவேண்டும்.

இலங்கையில் வடக்கு, கிழக்கு பகுதியில் வாழும் தமிழர்கள், மலையகத் தமிழழர்கள், இஸ்லாமியர்கள், தலித்துக்கள், கிறிஸ்த்துவர்கள்.... என அனைத்து தரப்பினரின் உரிமைகளையும் உள்ளடக்கிய ஒரு பேச்சுவார்த்தை பரந்து விரிந்த தளத்தில் நடைபெறவேண்டும் அதில் விடுதலைப் புலிகள் மட்டுமல்ல, அவர்களால் தடைசெய்யப்பட்டுள்ள ஈராஸ், பிளாட், EPDP, TMVP...... உள்ளிட்ட அனைத்து இயக்கங்களும் பங்குபெற வேண்டும். அந்த சூழ்நிலையில் இலங்கை அரசை இனபாகுபாடற்ற சுமூகச் சுழலுக்கு உடன்பட வைக்க இந்திய அரசு நிர்பந்திக்க வேண்டும். இதுவே இலங்கை இனப்பிரச்சினைக்கு தீர்வு தேடத்துடிக்கும் மனிதாபிமானமுள்ளவர்களின் எதிர்பார்ப்பாகும்.