Saturday, April 5, 2008

பிழைப்பு அரசியலும்,பேதலிக்கும் தேசியமும்

-சாவித்திரி கண்ணன்

இவ்வளவு கீழ்தரமாக நமது அரசியல்வாதிகள் செயல்படக்கூடும் என்று மொழிமொழியாக மாநிலப்பிரிவினை நடந்தபோது யாரேனும் நினைத்திருப்பார்களா?

ஆனால் பிரதமர் நேரு நினைத்திருக்க கூடும் என்று தான் தோன்றுகிறது. அதனால் தான் இந்தியா சுதந்திரமடைந்தபோது மொழிவழி மாநிலப்பிரிவினையை அவர் தீவிரமாக எதிர்த்தார். அதற்கு மாற்றாக மொத்த இந்தியாவையும் நிலம் மற்றும் நிர்வாக வசதிற்கேற்ப ஐந்தாக பிரிக்கலாம் என்ற திட்டத்தை ஆதரித்தார்.

அதன்படி இந்தியாவை வடக்கு, கிழக்கு, மேற்கு, மத்தியபகுதி, தட்சிணப்பிரதேசம் என ஐந்தாக பிரிப்பது பலவகைகளிலும் அனுகூலமாயிருக்கும் என்றார்.

ஆனால் இந்தியா முழுக்க அதிகாரத்திற்காக தவம் கிடந்த அரசியல்வாதிகளும், மொழிஉணர்வாளர்களும் மொழிவழிமாநிலம் தேவையென்று பெரும்போரட்டத்தில் இறங்கினர்.

வங்கம்,வங்க மக்களுக்கே,

பஞ்சாப் பஞ்சாபியருக்கே,

ஆந்திரா தெலுங்கர்களுக்கே,

என்ற குரல்கள் தீவிரமடைந்தபோது நேரு, ''மொழி வழி மாநில கோரிக்கையாளர்களுடன் தெருச்சண்டைக்கும் தயார்'' என்றார். தமிழகத்திலும் ம.பொ.சி போன்றவர்கள் காங்கிரஸிற்குள்ளேயே தீவிரமாக மொழிவழி மகாணத்திற்காக அணிதிரட்டியபோது காமராஜரும், ராஜாஜியும் அதனை எதிர்த்தனர்.

அன்றைய சென்னை ராஜதானியிலே ஆந்திராவின் பெரும்பகுதிகளும், மலையாள பிரதேசங்களும், கர்நாடகாவின் கணிசமான பகுதிகளும் இருந்தன.''அந்த நிலை அப்படியே தொடர்ந்திருக்க கூடாதா?'' என்று வரலாற்றை திரும்பி பார்த்து வருந்தாமல் இருக்கமுடியவில்லை.

மொழிவழி மாநில பிரிவினைக்கு உடன்பட்டதால் சுதந்திரமடைந்த பின்பு சுமார் பத்தாண்டுகள் எல்லை பிரச்சினைகளுக்கே எல்லா ஆற்றலும், கவனமும் வீணடிக்கப்பட்டது.

அடுத்ததாக 60களில் தொடங்கி ஆற்று நீர் பிரச்சினை அல்லோலகலப்படுகிறது. இது இன்றும் தீர்ந்த பாடில்லை.

முல்லை பெரியாறு பிரச்சினை வட தமிழகத்தை பாலைவணமாக்கி கொண்டுள்ளது. காவேரி பிரச்சினையோ தீர்வுக்கே உட்படாமல் திசைமாறிப் பயணப்பட்டுவிட்டது.

ஒகேனக்கல் தண்ணீரில் கூட்டுக்கூடிநீர்திட்டம் என்பது கர்நாடகம் நமக்களிக்கும் கவேரி தண்ணீரை கடலில் வீணடிப்பதற்கு மாற்றாக குடிதண்ணீருக்குப் பயன்படுத்தும் திட்டம் தான்!

பெரும்மழை, வெள்ளம் ஏற்படும் காலங்களிலெல்லாம் தமிழகத்திற்கு கிடைக்கும் காவேரி நீரில் கணிசமான அளவு கடலில் வீணாகிறது. ஏற்கெனவே திருச்சி, தஞ்சை போன்ற மாவட்ட மக்களுக்கெல்லாம் காவேரி நீரே குடிநீராகி தாகம் தீர்த்து கொண்டுள்ளது.

வறட்சியில் வாடும் தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட மக்களுக்கு இப்போது 1334 கோடியில் திட்டமிட்டிருக்கும் கூட்டுக் குடிநீர் திட்டம் என்பது முப்பதாண்டுகளுக்கு முன்பே செயல்படுத்தியிருக்கவேண்டிய ஒன்றாகும்!

இப்போது தமிழகத்தின் தலையாய பிரச்சினையே பக்கத்து மாநிலங்கள் காட்டும் பகை உணர்வை சமாளிப்பதாகிவிடட்டது.

தேசிய இனங்குளுக்கு சுயநிர்ணய உரிமை வேண்டும் என்று கேட்க முடிந்தவர்கள் அதற்கேற்ப தங்களை தகுதிபடுத்திக்கொள்ளவில்லை.

''சுதந்திரம் பெறுவதற்கே இந்தியர்களுக்கு இன்னும் தகுதிபிறக்கவில்லை...'' என்று 1947-ல் அறுதியிட்டு சொன்னாரே பெரியார் ஒருவகையில் அது சரிதானோ என்றும் நினைக்கத்தோன்றுகிறது.

''என்னிடம் அனுமதி கேட்டு ஏன் செயல்படவில்லை'' என்கிறது கர்நாடக தரப்பு.

''1998-ஆம் ஆண்டு பெங்களுரு குடிநீர் திட்டம் தயாரானபோதே தமிழகமும் தன்பங்குக்கு காவேரி நீரில் குடிநீர்திட்டங்களை செயல் படுத்திக்கொள்ளலாம் என இரு மாநிலமும், மத்திய அரசும் இணைந்து நடத்திய முத்தரப்பு பேச்சு வார்த்தையில் ஒப்புக்கொள்ளப்பட்டதுதானே!'' என்பது தமிழகத்தின் வாதம்!

மேலும் ஒகேனக்கல் என்பது தமிழகத்திற்கானது என்று சந்தேகமில்லாமல் ஒத்துக்கொள்ளப்பட்டு இதுநாள் வரை உரிமை அனுபவித்து வரும்சூழலில் ஓட்டு அரசியல் இந்தியதேசிய இறையாண்மைக்கே வேட்டு வைக்கும் வகையில் விஸ்வரூபமெடுத்துக் கொண்டிருக்கிறது.

முதலில் தேர்தல்கள் முக்கியமா? தேசியம் முக்கியமா? என்று தேசிய கட்சிகள் திட்டவட்டமான ஒரு முடிவுக்கு வந்துவிட்டால் நாட்டுக்கு நல்லது.

கர்நாடத்தில் ஒருவேஷம், தமிழகத்தில் ஒருவேஷம் என்று போட்டுக் கொண்டு இனியும் காலந்தள்ள முடியாது.

2005 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியின் கர்நாடக முதல்வர் தரம்சிங் ஒகேனக்கல் பிரச்சினையை கையில் எடுத்தார். தேர்தல் முடிந்ததும் கைவிட்டார். இப்போது பா.ஜ.கவின் எடியூரப்பாவால் இது ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

'தமிழர்மீது துவேஷம்' என்பது கர்நாடக அரசியலில் கதாநாயக அந்தஸ்து கோரும் அரசியல்வாதிகளால் கனல் மூட்டிவளர்க்கப்பட்டு வருகிறது. இதன் விளைவு தமிழகத்திலிருந்து வரும் பேருந்துகளை அடித்துநொறுக்குவது, தமிழ்திரைப்படங்கள் ஓடும் திரையரங்குகளை தாக்குவது, தமிழ் தினசரி அலுவலகங்களை தாக்குவது, தமிழ்சங்கத்தை தாக்குவது, தமிழ்சேனல்களை முடக்குவது என தறுதலையாய் தாண்டவமாடுகிறது.

இதன் எதிர்வினை தமிழகத்திலும் ஆரம்பித்துவிட்டது. கர்நாடகத்தை சேர்ந்தவர்கள் நடத்தும் சில ஹோட்டல்கள் தாக்கப்பட்டுள்ளன.

கன்னடபள்ளிகள் மீதான தாக்குதல்,கன்னட சேனங்களின் தடை, தமிழ்திரைப்பட கலைஞர்கள் ஒருநாள் உண்ணாவிரதம் போன்றவற்றால் பரஸ்பர பகை உணச்சிகளே மேலோங்குகின்றன.

ஆனால் இப்போது நாம் திட்டவட்டமாக ஒரு தீர்வை எடுத்தாக வேண்டும். தேசியத்தை கட்டிக்காக்க முடியாவிட்டால் அந்த தேசிய கட்சிகளில் தமிழர்கள் அங்கத்தினர்களாக தொடர்வதில் அர்த்தம் தான் என்ன?

மார்ச் 20ந் தேதி எடியூரப்பா ஒகேனக்கல் வந்து பிரச்சினை ஏற்படுத்திய போது, ''அவரை சந்தித்து உண்மை நிலையை விளக்குவோம் ''என்ற தமிழக பா.ஜ.க வினரால் இன்றுவரை அதை செயல்படுத்தமுடியவில்லை

அகில இந்திய தலைமையும் இந்த அநியாயத்தை வேடிக்கைபார்க்கிறது. அதேபோல் திமிழககாங்கிரசார் தமிழக சட்டமன்றத்திலும் பத்திரிக்கைகளிலும் மட்டுமே தங்களை வெளிப்படுத்த முடிகின்றதேயன்றி கர்நாக காங்கிரஸாரிடமோ , டெல்லி தலைமையிடமோ உண்மைகளை உரத்துச்சொல்ல முடியல்லை.

இது தான் கம்யூனிஸ்டுகளின் நிலைமையும்!

அரசியல் பிழைப்பாகி போய்விட்டது என்றால், அரசியல்வாதிகளிடமிருந்து பிழைத்துக் கொள்வது பற்றி மக்கள் யோசிக்கவேண்டியதாகிவிடும்

No comments: