Monday, October 29, 2007

ஞாநி எழுதியது சரிதானா?

-சாவித்திரிகண்ணன்
'விருப்பப்படி இருக்கவிடுங்கள் என்று ஆனந்தவிகடனில் ஞாநி எழுதிய கட்டுரை பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 'இது நயவஞ்சகமான கட்டுரை' என, கவிஞர் இளையபாரதியின் முன்முயற்சியில் தீம்புனல் அமைப்பு தமிழின் மிக முக்கிய படைப்பாளிகளைக் கொண்டு சென்னையில் கண்டன கூட்டம் நடத்தியது.
"அவர் அப்படி என்ன தவறாக எழுதிவிட்டார்... இவ்வளவு வயதான கருணாநிதி இன்னும் தன் உடம்பை வருத்திக் கொள்ளவேண்டுமா...? என்றுதானே ஆதங்கப்பட்டார்..?" ஒரு எழுத்தானுக்கு கருத்துச் செல்லும் உரிமை இல்லையா? மாறுபட்ட கருத்தை சொன்னால் கூட்டம் போட்டு மிரட்டுவதா..? இதெல்லாம் ரொம்ப அதிகமாக இருக்கிறதே...?"
"இன்றைக்கு அவர் விமர்சிக்கப்படுவதை பொருட்படுத்தாமல் இருந்தால் இதே நிலைமை மற்ற எழுத்தாளர்களுக்கும் அல்லவா ஏற்படும்...?"
"ஞாநி இருப்பதை போல கருணாநிதி ஒய்வு எடுக்கவேண்டும் என்பதிலேயே எனக்கு முழுக்க,முழுக்க உடன்பாடுதான்!" இது போன்ற எதிர்வினைகளையும் நான் எதிர்கொண்டேன்.
சரி, ஞாநியின் இந்தக் கட்டுரை நியாயமான எழுத்துதானா? என்று பார்ப்போம். இந்தக் கட்டுரையின் ஆரம்பம் முதல் இறுதிவரை கருணாநிதி மற்றவர்களால் -அதாவது குறிப்பாக அவரது குடும்பத்தாராலும், கட்சிக்காரர்களாலும்- நிர்பந்தப்படுத்தி வேலை வாங்கப்படுவதாகவும், அவரது விருப்பதிற்கு மாறாக அவர் முதலமைச்சர் பொறுப்பேற்க நிர்பந்திக்கப்பட்டிருப்பதாகவும் உருகி, உருகி எழுதப்பட்டுள்ளது. "அவர் வதைக்கப்படுவதை, வதைபடுவதை பார்த்துக் கொண்டு இருக்க பொறுக்க வில்லை..." என்றும் கட்டுரையாளர் குமுறுகிறார். "யார் நிமித்தம் அவர் இந்த முட்கிரிடத்தை தரித்திருக்கவேண்டும்..." என்றும் கேட்கிறார். இதில் ஏதேனும் உண்மை உள்ளதா?
கருணாநிதி ஒய்வுக்கான வயதுடையவர் என்பதில் யாருக்கும் இருவேறு கருத்துக்கு இடமில்லை. ஆனால் கருணாநிதி நீண்டநெடுங்காலம் அரசியல் அதிகார மையத்தில் திளைப்பவர் -இடைவிடாது அதிலே உழல்பவர், அரசியல் அதிகாரத்தை கைகொள்ளுவதிலே தான் பலத்தையும், ஊக்கத்தையும் பெறுகிறார். கட்டுரையிலேயே உள்ளது போல் ஒருநாளைக்கு 18மணிநேரம் உழைப்பதிலே உற்சாகமும், இன்பமும் கொள்பவராக இருக்கிறார். தன் இறுதி மூச்சுள்ளவரை தமிழக அரசியலின் அச்சாணியாக இருப்பதில் விடாப்பிடியாக,விருப்பமுள்ளவராகத் தான் அவர் வெளிப்படுகிறார். விருப்பப்படி தான் மாநிலத்திலும், மத்தியிலும் ராஜதந்திர அரசியல் நடத்தி செல்வாக்கின் உச்சத்திலேயே சிலிர்ப்போடு உலாவருகிறார். தன் விருப்பத்தை, வெளிப்படுத்துவதிலும், செயல்படுத்துவதிலும், அடைந்தே தீருவது என்பதிலும் இன்றும் பல அரசியல்வாதிகளுக்கு முன்மாதிரியாக விளங்கி கொண்டிருக்கிறார்.
இப்படிப்படட ஒருவருக்கு ஒய்வு தருவது தான் தண்டனையாகும் 'தான் ஒய்வுக்குரியவல்ல.. அப்படி யாரும் தன்னை நினைக்கக் கூட அனுமதிக்க முடியாது' என்பதாக, எல்லாம் தன்னை மையப்படுத்தி சுழல்வது என காய்நகர்த்திக் கொண்டிருக்கிறார் கருணாநிதி.
இப்படிப்பட்டவரை அழகிரியும், ஸ்டாலினும், கனிமொழியும் ஏதோ சாட்டை எடுத்துக் கொண்டு வேலைவாங்குவது போலவும், கட்சி நிர்பந்திப்பது போலவும் ஞாநி எழுதியிருப்பது உண்மைக்கு மாறானது. அதுவும் அவருக்கே அவரைப்பற்றி தெரிந்து கொள்ள முடியாத ஒன்றை, அவருக்கு நெருக்கமானவர்களே உணரத் தவறிய ஒன்றை தான் எடுத்துச் சொல்லி புரியவைப்பது போல உருக்கமாகவும், சென்டிமெண்டாகவும் எழுதியிருப்பது நேர்மையான அணுகுமுறையல்ல.
ஆனால் கருணாநிதி அரசியலில் இருந்து ஓய்வு பெறவேண்டும் என்றும், அவர் ஆற்றல் மிக்க அடுத்த தலைமையை உருவாக்கி அவர்களிடம் பொறுப்பை ஒப்படைத்திருக்க வேண்டும் என்றும் ஞாநி கருதுவாரேயானால் அதை நேர்படச் சொல்லி இருக்கலாம். இதில் பலருக்கு உடன்பாடு இருக்கவாய்ப்பண்டு. இதை யாரும் மேடை போட்டு பேசியோ, இவ்வளவு தீவிராக எதிர்த்தோ எழுதியிருக்க மட்டார்கள்.
ஆனால் இல்லாத ஒரு சூழலை மிகவும் நுட்பமாக, வஞ்சமாக, உருக்கமாக எழுதி கட்டமைக்க முயலுவது கயமைத்தனம் தானே... இந்த நிலையில், 'பேசாப் பொருளை பேச நான் துணிந்தேன்' என்று பாரதியை துணைக்கழைக்கிறார். பாரதியார் புதிய ஆத்திசூடியில், 'நேர்படப்பேசு', 'பொய்மை இதழ்' 'வெடிப்புறப்பேசு' என எழுதியுள்ளார். பாரதியை கொண்டாடுவது போல் தோற்றம் காட்டும் ஞாநியிடம் இந்த குணம் எதுவுமில்லையே...
இருந்திருந்தால் , அமெரிக்காவில் சிகிச்சை பெற்றுத் திரும்பி பேசமுடியாமல் ஒய்வு தேவைப்படும் நிலையிலிருந்த எம்.ஜி.ஆரை அவரது கட்சிக்காரர்கள் நிர்பந்தித்து முதலமைச்சர் பொறுப்பு ஏற்க வைத்தபோது இப்படி ஒரு உருக்கமான கட்டுரை எழுதியிருப்பார். இருந்திருந்தால், தான்எங்கு தங்கியிருக்கிறேன், என்னசெய்கிறேன் என்ற வெளிப்படைத் தன்மை இல்லாமல் அடிக்கடி ஹைதராபாத், மாமல்லபுரம் பங்களா, குளிர்வாசஸ்தலங்கள் எனச் சென்றுவிடும் ஜெயலலிதாவை, 'நிரந்தர ஒய்வு எடுத்துக் கொள்ளவேண்டியது தானே' என்று கேட்கத் துணிந்திருப்பார்.
அ.தி.மு.கவிலிருந்து வெளியேற்றப்படடவர்களிடமிருந்தும் அ.தி.மு.கவிற்குள்ளே இருப்பவர்களிடமிருந்தும் அவ்வப்போது புழுக்கமாக வெளிப்படும் ஒரு சொல்லாடல் "ஜெயலலிதா, 'சசிகலா குடும்பத்தின் சூழ்நிலைக் கைதியாக இருக்கிறார்" என்பதாகும். 'சசிகலா குடும்பத்தினரால் ஜெயலலிதா சூழ்நிலைக் கைதியாக இருக்கிறாரா இல்லையா?' என்பதை ஆராயத் துணியாதவர் அந்த குற்றச்சாட்டை சற்றும் நியாயமில்லாமல் கருணாநிதி மீது வைக்கவேண்டிய நோக்கம் என்ன?
மேலும், இது நாள்வரை கருணாநிதியைப்பார்த்து, "குடும்ப அரசியல் செய்பவர், வாரிசை பதவியில் அமர்த்த துடிப்பவர்" என்று விமர்சனம் வைத்துவிட்டு, இன்று தி.மு.க வினரிடமே' ஸ்டாலினை முதலமைச்ராக்க உங்களுக்கு என்ன தயக்கம்' என்று சிபாரிசு செய்வது ஏன்? ஸ்டாலின் முதலமைச்சராவதில் ஞாநிக்கு எப்போது உடன்பாடு ஏற்பட்டது?
ஒர் அரசியல் விமர்சகராக அவர், கருணாநிதியின் முதுமை காரணமாக தமிழக அரசு நிர்வாகம் எப்படி பாதிப்புக் குள்ளாகிறது... என்றோ, அதனால் மக்கள் பெற்றுவரும் இன்னல்கள் எவை என்றோ, ஆதாரங்களைத் திரட்டி எழுதியிருப்பாராயின் அந்த கருத்திலே நானும் உடன்படத் தயங்கமாட்டேன்.
இந்த கட்டுரைக்கு, "என்விருப்பபடி கருணாநிதியை இருக்கவிடுங்கள்' என்று தலைப்பட்டிருக்கலாம் ஞாநி. ஆனந்தவிகடன், "விருப்பப்படி எழுதிக் கொள்ளுங்கள்...' என்று ஞாநியிடம் பெருந்தன்மை காட்டியதற்காக அவர் விரும்பத்தகாத விளைவுகளை, தர்மசங்கடத்தை விகடனுக்கு ஏற்படுத்தி தந்திருக்க வேண்டாமே...!

Monday, October 22, 2007

கண்ணதாசனை பேச மறுத்தார் கவிஞர்(?) பா.விஜய்

சாவித்திரிகண்ணன்
காலத்தால் அழியாத திரைப்படங்களை காற்றில் மிதந்துவரும் காவியங்களாய் தமிழ் உலகிற்கு தந்து சென்றவர் கவியரசர் கண்ணதாசன். கவிஞரின் பாடல்களுக்கு இசை வடிவம் தந்த அவரது இணைபிரியாத நண்பரும், இசை அமைப்பாளருமான எம்.எஸ். விஸ்வநாதன் அவர்கள் கண்ணதாசன்-விஸ்வநாதன் அறக்கட்டளை சார்பில் ஆண்டுதோறும் கவியரசர் பிறந்த தினத்தன்று விழா கொண்டாடி வருகிறார்.
இந்த ஆண்டு இவ்விழாவிற்கு கிருஷ்ணராஜ வாணவராயர் தலைமை தாங்கினார். துக்ளக் ஆசிரியர் சோ, ஏ.வி.எம்.சரவணன், மலேசியா பாண்டித்துரை, எஸ்.பி.முத்துராமன், கவிஞர் சாமி பழனியப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட இந்த நிகழ்விற்கு சிறப்பு பேரூரையாற்ற கவிஞர்(?) பா.விஜய் அழைக்கப்பட்டிருந்தார். கவனிக்கவும் அவர் மட்டுமே சிறப்புரை; ஆகவே, மேற்படி பெரியவர்களின் பேச்சுக்குப்பிறகு கவிஞர் பா.விஜய் சிறப்புரையாற்ற ஒலிபெருக்கி முன் வந்தார். முதலில் மேடையில் அமர்ந்திருக்கும் பெரிய வி.ஐ.பிகளின் மேல் தான் வைத்துள்ள மரியாதையை வெளிப்படுத்தும் வகையில் விரிவாகப்பேசினார். பிறகு மேடைக்கு கீழே உட்கார்ந்துள்ள கவிஞர் வாலி உள்ளிட்ட வி.ஐ.பிகளையும் வியந்து புகழ்ந்தார். பிறகு தன்னைப்பற்றியும், தன்னுடைய சாதனைகள் பற்றியும் கூறினார். பிறகு முதல்வர் கருணாநிதி தனக்கு கவிஞர் கண்ணதாசன் விருது வழங்க இருப்பது பற்றியும் கூறினார். தான் நடிகராக அவதாரமெடுத்துள்ளதையும் கூறினார்.(நவீன ரஷ்ய இலக்கியத்தின் பிதாமகனான மக்சீம் கார்க்கியின் உன்னதமான புரட்சிகர நாவல் தாய். உலகில் அதிகபட்ச வாசக நெஞ்சங்களை வசீகரித்த இந்த நாவலை கவிதை நடையில் எழுதுவதாக, அது கவிதையாகவும் இல்லாமல், கட்டுகோப்பான கதையாகவுமில்லாமல் சிதைத்தார் கருணாநிதி அதை இப்போது சினிமாவாகவும் எடுத்து சீரழித்து திருவதென்று அதில் பா.விஜயையும் கதாநாயகனாக்கியுள்ளனர். இதை பிறகு விவாதிப்போம்)எப்போது இவர் கவிஞர் கண்ணதாசனைப் பற்றி உணர்வுபூர்வமாக சொல்லப் போகிறார் என்ற எதிர்பார்ப்புகள் கூடிய நிலையில் ஒரு சிலவரிகளில் அவரைப் பற்றிப் பேசும் தகுதி எனக்கு இன்னும் இல்லை" என்று கூறி பேச்சை முடித்துக்கொண்டார். கவிஞர் பா.விஜய். தமிழ்நாட்டில் ரிக்ஷா தொழிலாளி தொடங்கி காய்கறிகாரக் கிழவி வரை கண்ணதாசன் பாடல்களால் தங்களுக்கு ஏற்பட்ட தாக்கங்களை, அனுபவரீதியாக, உணர்வுபூர்வமாக சர்வசாதரணமாக பேசிவிடுவார்கள். நாள்தோறும் பேசிக்கொண்டும் இருக்கிறார்கள்.
இன்றைய திரைப்பாடலாசிரியர்களில் யாருமே கவிஞர் கண்ணதாசனின் தாக்கம் இல்லாமல் பாட்டெழுத வந்திருக்கவே வாய்ப்பில்லை என்பது மறுக்கமுடியாத நிதர்சனம். அப்படியிருக்க பா.விஜய் அவர்களை கவியரசர் எப்படி பாதிக்காமல் போனார் என்பது பார்வையாளர்கள் அனைவரிடமிருந்தும் முணுமுணுப்பாக வெளிப்பட்டதைக் காணமுடிந்தது.
"அரிய ஒரு வாய்ப்பை இப்படி அலட்சியப்படுத்திவிட்டாரே.... "என்றனர் சிலர்.
"இவரு காரியக்கார மனுஷன். இருக்கிறவங்க அத்தனைப்பேரையும் 'ஐஸ்' வைத்து அழகாக பேசினார். தன்னைப்பற்றியும் 'பில்டப்' பண்ணிக்கிட்டாரு. இல்லாத கண்ணதாசனைப் பற்றிப்பேசி அவருக்கென்ன பிரயோஜனம்னு நினைச்சிருக்கலாம்..." என்றனர் மற்றும் சிலர்.
"கவிஞர் வைரமுத்துவையும் பேச அழைத்திருந்தோம். பா.விஜய் பேசும் மேடையில் நான் பேசவிரும்பவில்லை..." என வைரமுத்து கூறிவிட்டார்." என வருத்தப்பட்டுக்கொண்டார் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களில் ஒருவர். அந்தக்காலத்தில் கவிஞர். கண்ணதாசன் போன்றவர்களெல்லாம் இது போன்ற நெளிவு, சுளிவுகற்ற நிதர்சனமான மனிதராகத்தான் இருந்துள்ளனர்.
கவிஞர் உணர்ச்சிப்பிழம்பானவர். விளைவுகளைப்பற்றி கவலைப்படமாட்டார். லாப நஷ்டங்களை யோசிக்கமாட்டார்.
அவருடைய கோபத்திற்கு அன்றைக்கு திரையுலகில் கோலோச்சிக் கொண்டிருந்த நடிகர்கள் சிவாஜி கணேசன், எம்.ஜி.ஆர், கலைவாணர் என்,எஸ்.கே,கலைஞர் கருணாநிதி.... என யாருமே விதிவிலக்கில்லை. தான் மிகவும் மதித்துபோற்றிய பெருந்தலைவர் காமராஜரிடம் வேறுபாடு ஏற்பட்ட போதிலும் கூட அதை வெளிப்படுத்த தயங்காதவராகவே வாழ்ந்தார் கண்ணதாசன்.
கவிதை என்றும் தொழில்நுட்பம் கைவரப்பெற்றவர்கள் எல்லோரும் கவிதை எழுதலாம். நிறைய வாய்ப்புகள் பெறலாம், சம்பாதிக்கலாம். ஆனால் உண்மையில் கவிதையாகவே வாழ்வது என்பது கண்ணதாசனுக்குத்தான் சாத்தியமானது.
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரமும், கண்ணதாசனும் ஒருவருக்கொருவர் கடும் போட்டியாளர்களாக பார்க்கப்பட்ட காலத்தில் கூட இருவருக்குமிடையே ஆரோக்கியமான தோழமை நிலவியது.
'பாகப்பிரிவினை படத்தில் தனக்கு தாலாட்டுப்பாடல் எழுதவராது' என்ற பட்டுக்கோட்டை, "அண்ணன் கண்ணதாசன் தான் தாலாட்டை அழகாக எழுதுவார். அவரிடமே கேட்டு வாங்குங்கள்" என்றும் சொன்னார். "ஏன் பிறந்தாய் மகனே ஏன் பிறந்தாயோ..
நான் பிறந்த காரணத்தை
நானே அறியும் முன்பு..."
என்று கவிஞர் எழுதிய பல்லவியை பார்த்துவிட்டு, கண்ணதாசன் மீதிருந்த கோபத்தை, பழைய சச்சரவுகளை மறந்துவிட்டு அவரை கட்டியணைத்து உச்சி முகர்ந்தாராம் சிவாஜி.
இதற்குப் பிறகு தான் சிவாஜி படமென்றால் பாடல்கள் கண்ணதாசன் என்பது எழுதப்படாத விதியானது. இந்த பாலத்தை உருவாக்கிய பட்டுக்கோட்டையாரோ தன் பலத்தை மட்டுமே நம்பி இருந்தார். யார் வாய்ப்பையயும் கெடுத்து தனக்கு வாய்ப்பை உருவாக்கி கொண்டவரல்ல அவர்.
அதனால் தான் அவர் இறந்த போது கலங்கி மனம் துடித்து கண்ணதாசன் இப்படி எழுதினார்.
கல்யாண சுந்தரனே
கண்ணியனே! ஓர் பொழுதும்
பொல்லாத காரியங்கள்
புரியாத பண்பினனே
தன்னுயிரைத் தருவதனால்
தங்கமகன் பிழைப்பானோ?
என்னுயிரைத் தருகின்றேன் எங்கே என் மாகவிஞன்?
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் மறைவால் ஏற்பட்ட சூனயத்தை, என்னைக் கொண்டே சினிமா உலகம் நிரப்பிற்று. அதில் எனக்கு ஆவணம் வரவில்லை.
ஆசையே பெருக்கெடுத்தது... என் ஆயுள் காலம்வரை மறக்க முடியாத பெயர் கல்யாணசுந்தரம். என்றவர் கண்ணதாசன்.
தமிழ் திரை உலகில் நீண்ட நெடிய வரலாற்றில் மதுரகவிபாஸ்கரதாஸ்,பாபநாசம் சிவன் தொடங்கி உடுமலை நாராயணகவி, மருதகாசி, தஞ்சைராமய்யாதாஸ், கு.மா. பாலசுப்பிரமணியன்,கே.பி,காமாட்சி, கம்பதாசன், கு.சா.கிருஷ்ணமூர்த்தி, முத்துலிங்கம்... என எவ்வளவோ பிரபல பாடல்களை எழுதி குவித்தவர்கள் இருந்துள்ளனர்.
கவிஞர் வாலியும் கூட கண்ணதாசனைவிட அதிக பாடல்களை எழுதிவிட்டார். ஆனால் அவர் கண்ணதாசனின் நகல் போல வலம் வந்ததால், 'ஒரிஜினாலிட்டி' இல்லாதவராகவே அறியப்பட்டார்.
"மெட்டுக்கள் கருத்தரித்து மெல்லவே இடுப்புநோக துட்டுக்குத் தகுந்தவாறு முட்டையிடும் பெட்டைகோழி" என்று தன்னைத்தானே விமர்சிக்கவும் வாலி தயங்கியதில்லை. இந்த சுயம் உணர்தலே அவரை இவ்வளவுகாலம் வெற்றிகரமான திரைப்படலாசிரியராக்கியுள்ளது எனலாம்.
எவ்வளவு தான் வாய்ப்புகள் பெற்றாலும், புகழ் கிடைத்தாலும், விளம்பரங்களில் மிதந்தாலும் 'கவிஞன்' என்பதாக வெகுசிலரைத் தான் காலம் அங்கீகரிக்கிறது.

இசையில் சிறந்த தமிழகத்தில் இசைபல்கலைக் கழகம்

சாவித்திரிகண்ணன்
சமீபத்தில் கலைஞரின் 'உளியின் ஒசை' என்ற திரைப்படத்துவக்க விழாவில் இசைஞானி இளையராஜாவின் வேண்டுகோளை ஏற்று தமிழக முதல்வர் கருணாநிதி, இசைப்பல்கலைக் கழகம் ஒன்றை தமிழகத்தில் நிறுவ இசைவு தெரிவித்துள்ளார்.
"இந்த இசைப்பல்கலைக்கழகம் தமிழகம், இந்தியாவுக்கு மட்டுமல்ல உலகம் முழக்க இருப்பவர்களுக்கும் பயன்படும் வகையில் அமைக்கப்படும்" என்று முதல்வர் கூறியுள்ளது கவனிக்கத்தக்கது. இசையானதுமொழி எல்லைகளைக் கடந்தது என்றவகையில் இந்த அறிவிப்பு பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது. அதே சமயத்தில் உலகிலேயே தமிழிசை தான் மிகவும் தொன்மையானது என்பதும், தமிழர்கள் தங்கள் வாழ்க்கையோடு இசையையும் இணைத்து இசைபட வாழ்ந்தவர்கள் என்பதும் உலகில் வேறு எவருக்குமில்லாத சிறப்பாகும்.
மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே முதல் தமிழ்சங்கம் கண்டபோதே இசைச்சங்கமும் கண்டது தான் தமிழினம். அக்கால இலக்கியங்களில் இசைப்ற்றிய அரியசெய்திகள் உள்ளன. துயில் எழுந்தும் பாடுவதற்கு சிலவும், நண்பகலில் பாடுவதற்கு பத்துப்பண்களும், இரவுக்கேற்ற இனிய பண்கள் எட்டு என்றும் தமிழறிஞர்கள் கூறுகின்றனர். 'சரிகமபதநி'- என்பதற்கு சட்சமம், ரிஷபம், காந்தாரம், மத்திமம், பஞ்சமம், தைவதம், நிசாதம் என்பதே அர்த்தம். இது தமிழில் குரல், துத்தம், கைக்கிளை, உழை, இனி, விளரி, தாரம் என ஏற்கெனவே விவரிக்கப்பட்டுள்ளது என்பதே தமிழ்இசை ஆராய்ச்சியாளர்களின் கூற்றாகும்.
நமது பக்தி இலக்கியங்களான தேவாரம், திருவாசகம, திருவருட்பா போன்றவையாவுமே இசைவடிவங்கள் தாம்! சிலப்பதிகாரம் மணிமேகலை உள்ளட்டவையும் வெறும் காவியங்களல்ல. இசைக் காவியங்கள் தாம்!
பிறந்த குழந்தைக்கு தாலாட்டு, நாற்றுநாட்டால் ஒரு பாட்டு, ஏர்உழுதால் ஒரு பாட்டு, நெசவுநெய்தால் ஒரு பாட்டு, செத்தால் ஒப்பாரி என தமிழர்களின் வாழ்வே இசை மயம்தான்! அப்படிபட்ட தமிழ்நாட்டில் தமிழிசை மறக்கப்பட்டுக் கொண்டுள்ளது. மறைந்து கொண்டுமுள்ளது. இவற்றை மீட்டெடுக்கும் முயற்சியாக இந்த இசைப்பல்கலைக் கழகம் திகழவேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.
"சங்கீதத்திலும், சாகித்தியத்திலும் சிறந்த வித்வான்கள் பலர் தமிழில் கீர்த்தனைகள் இயற்றி உள்ளனர். அவற்றை பாடவோ, பாராட்டவோ யாரும் இல்லாததால் காலப்போக்கில் இவை போன்ற ஆயிரக்கணக்கான கீர்த்தனங்கள் அழிந்துபோயின" என 100 ஆண்டுகளுக்கு முன்பே தமிழ்தாத்தா உ.வே.சாமிநாதய்யர் வருத்தப்பட்டுள்ளார்.
நமது மார்கழி மாத இசைவிழா கச்சேரிகளில் சங்கீத மும்மூர்த்திகளான தியாகய்யர், முத்துசாமி தீட்சிதர், சாமா சாஸ்திரிகள் போன்றவர்களின் தெலுங்கு பாடல்களையே பெரும்பாலும் பாடுகிறார்கள். தவறில்லை. அதே போல் தமிழ் மூம்மூர்த்திகளான முத்துதாண்டவர், மாரிமுத்துபிள்ளை, அருணாச்சல கவிராயர் மற்றும் கோபாலகிருஷ்ண பாரதியார், கனம்கிருஷ்ணய்யர், மகாகவிபாரதி ஆகியோர்களின் பாடல்களையும் பாடவேண்டும் என்று ரசிகமணி டி.கே.சி, ராஜாஜி, கல்கி, பாரதிதாசன், செட்டிநாட்டரசர் போன்றவர்கள் வலியுறுத்தி வந்துள்ளனர். எனினும் இது இன்று வரை கைகூடவில்லை.
1943-ல் செட்டிநாட்டரசர் முயற்சியில் தமிழ்இசைச் சங்கமம் ஆரம்பித்தது முதல் ஏதோ ஒரளவு தமிழ்இசையும் காப்பாற்றப்பட்டு வருகிறது. சுதா ரகுநாதன், கே.ஜே.ஜேசுதாஸ், மதுரை டி.என்.சேஷகோபாலன், சீர்காழி சிவசிதம்பரம்... போன்ற இசைக்கலைஞர்கள் தமிழிசைக்கு தக்க பங்களிப்பை தந்துகொண்டுள்ளனர். பா.ம.க தலைவர் டாக்டர்.ராமதாசும் தமிழ்இசைக்கு வருடந்தோறும் மேடை அமைத்து வாய்ப்பு தந்து கொண்டிருக்கிறார்.ஆனால் அரசாங்கம் சார்பில் இதற்கான முயற்சிகள் இதுவரை எடுக்கப்படவில்லை. இனி இநத இசைப்பல்கலைக்கழகமாவது மறைந்து கொண்டிருக்கும் தமிழிசைக்கு மறுவாழ்வு தரவேண்டும். உலகமெல்லாம் தமிழிசையின் பெருமைகளை கொண்டு செல்லவேண்டும். நாட்டுபுற இசைக்கு நல்லதோர் எதிர்காலம் ஏற்படுத்தவேண்டும்.
கர்நாடக சங்கீதம், இந்துஸ்தானி இசை, மேற்கத்திய இசை,... போன்ற எல்லா இசை பிரிவுகளுக்கும் தனிதனித்துறை உருவாக்கப்பட்டு அவை தழைத்தோங்க, பல சந்ததிகளுக்கு சங்கிலி தொடர் போலச் செல்ல இசைப் பல்கலைகழகம் விதையூன்ற வேண்டும்!
உலக முழுவதுமுள்ள இசையை தமிழர்களுக்கு அறிமுகம் செய்யவேண்டும். இசைஞானி இளையராஜா அவர்களையே இநத இசை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக முதல்வர் நியமித்தால் அவர் தமிழர்களின் கனவையெல்லம் தரணியெங்கும் சாத்தியப்படுத்தி விடுவார்.

காந்தியும், தமிழர்களும்

சாவித்திரிகண்ணன்
'சத்யாக்கிரகம்' சென்ற நூற்றாண்டின் வரலாற்றில் சிதைக்க முடியாததோர் மாபெரும் வெற்றிப் பதிவாகிவிட்டது. சத்யம் என்றால் உண்மை. அது அன்பை அடியொற்றியதாகும்.
ஆக்கிரகம் என்றால் உறுதி வாய்ந்த சக்தி. 'சத்யாகக்கிரகம்' என்பதற்கு உண்மையின் ஆற்றல்' என்று பொருள். நம்மை எதிரியாக எண்ணுபவர்களை அன்பு, தூய்மை, பணிவு, நாணயத்தால் வென்றெடுப்பதே சத்யாகிரகமாகும்.
இருபதாம் நூற்றாண்டில் சத்யாகிரகத்தை உலகிற்கு சாத்தியப்படுத்தியவர் அண்ணல் காந்தியடிகள். 1906 செப்டம்பர் 11ல் அது பரிணமித்தது. தென்ஆப்பிரிக்காவில் ஜோகன்ஸ் பர்க் நகரில் எம்பயர் தியேட்டரில் திரளாக குழமியிந்த இந்தியர்கள் மத்தியிலே அண்ணலால் அறிமுகப்படுத்தப்பட்டதே சத்யாகிரகம்.
இனவெறிக்கு எதிராக தென்ஆப்பிரக்காவில் காந்தி ஒரு தீவரமான நிலைபாட்டை எடுக்க காரணமாய் அமைந்தவர் பாலசுந்தரம் என்ற தமிழரேயாவார். இனத்துவேஷத்தின் காரணமாக அடித்து நொறுக்கப்பட்ட பாலசுந்தரம், இந்திய வழக்கறிஞரான காந்தியை அணுகி கண்ணீர் மல்க விவரித்ததிலிருந்து காந்திக்கு தென் ஆப்பிரிக்காவில் ஒப்பந்தகூலிகளான இந்தியர்கள் படும் இன்னல்கள் தெரியவந்தது. பாலசுந்திரத்திற்காக வாதாடி அவரை பாதுகாத்ததின் மூலம் காந்தி தென்ஆப்பிரிக்காவில் வாழ்ந்த தமிழர்களின் நம்பிக்கை நட்சத்திரமானார்.
தென்ஆப்பிரிக்கத் தமிழர்களுக்காக 'இந்தியன் ஒபினியன்' என்ற இதழை தமிழிலும் நடத்தினார். இக்கால கட்டத்தில் தமிழ் கற்க ஆரம்பித்த காந்தி, அன்றைய தமிழகத்தின் செய்திகள் மற்றும் தலைசிறந்த பிரமுகர்களை இந்தியன் ஒபினியனில் எழுதிவந்தார்.
தமிழகத்தில் திலகருக்கு இணையாக மாபெரும் தேசபக்த எழுச்சியை உருவாக்கிய வ.உ.சி பற்றியும், சிறைமீண்டு சிதம்பரனார் செய்து வந்த தொண்டுகள் பற்றியும் மிக உயர்ந்த அபிப்ராயம் கொண்டிருந்த காந்தி, தென்னாப்பிரிக்காவிலிருந்து நிதிதிரட்டி தென்நாட்டு திலகருக்கு அனுப்பி உதவினார்.
தென்ஆப்பிரிக்கசத்யாகிரகம் அங்கு குடியேறிவாழ்ந்த இந்தியர்களுக்காக ஆரம்பிக்கபட்டதென்றும், போராட்டத்தில் கலந்து கொண்டவர்களில் தமிழர்களே மிகுதியானவர்கள் என்றும் காந்தியடிகள் தமது சொற்பொழிவுகளிலும்,கட்டுரைகளிலும் பலமுறை பதிவுசெய்துள்ளார்.ஆகவே தான் அவர் தென்ஆப்பிரிக்க போராட்டத்திற்கு ஆதரவு கேட்டு முதன்முதலில் 27 வயது இளைஞராக 1896ல் தமிழகத்தில் பிரசாரம் செய்தார். அப்போது பச்சையப்பன் மண்டபத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய காந்தி, "தமிழர்கள் ஒரு சிறு அவமதிப்பையும் சந்தித்து கொள்ளாத இனத்தினர்" என்றார்.
தென் ஆப்பிரிக்கா போராட்டத்திற்கு இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் காந்திக்கு தார்மீக ஆதரவு பெருகியது. அன்று தமிழகத்தலிருந்து தென்னாப்பிரிக்காவிற்கு நிதிஉதவி அனுப்பி ஆதரவளித்தவர்கள் ஜி.ஏ.நடேசன், அன்னிபெசன்ட், எஸ். சுப்பிரமணிய ஐயர்....போன்றபலர்! அதேபோல் காந்தியின் தென்ஆப்ரிக்க போராட்டத்தில் நாடுகடத்தப்பட்டும், சிறைச்சாலைகளில் நோயுற்றும், ஏராளமான தமிழர்கள் இறந்துள்ளனர். அவர்களில் தில்லையாடி வள்ளியம்மை, நாராயணசாமி, நாகப்பன் போன்றோர் குறிப்பிடத்தக்கவர்களாவர். டிரான்ஸ்வாலில் கந்தியின் கட்டளைக்கேற்ப தடையைமீறி பிரவேசித்த போராட்டத்திற்கு தலைமை தாங்கியது தம்பிநாயுடு என்ற தமிழராவார். இதனாலெல்லாம் தான் தமிழர்களை சந்திக்கும்போது ரத்தபாசத்துடன்கூடிய சகோதர உணர்வுக்கு தான் ஆட்படுவதாகவும், அவர்களின் அர்பணிப்பு,வீரம்,எளிமை ஆகியவை தன்னை மிகவும் ஆகிர்ஷித்த தென்றும்காந்தி எழுதியுள்ளார்.
தென் ஆப்பிரிக்கபோராட்டத்தில் வெற்றிஈட்டிய பின் தமிழகத்திற்கு 1915ல் வந்தபோது காந்தி தம்பதியருக்கு தமிழகத்தில் தடபுடலான வரவேற்பளிக்கப்பட்டது. அப்போது சென்னை விக்டோரியா மண்டபத்தில் பேசியகாந்தி, "தென்ஆப்பிரிக்கவிடுதலை போராட்டத்திற்கு இறைவனால் தேர்ந்தெடுத்து அனுப்பப்பட்டவர்கள் தான் தமிழர்கள்.....எந்தவித பலனையும் எதிர்பாராமல் பணியாற்றிய அந்த எளிய தமிழர்கள் தான் எனக்கு உணர்வூட்டினார்கள்.அவர்களெல்லாம் தியாகம் செய்ய எங்களுக்கு புகழ்கிடைத்தது" என்றார்.
இப்படி பேசுமிடங்களில்மட்டுமல்ல, எழுத்திலும் பலமுறை தன்னுடைய போராட்டங்களுக்கெல்லாம் அதிகளவில் தோளோடு தோள் நின்று அளப்பரிய தியாகத்தையும், அரிதினும் அரிதான உயிரையும், தமிழர்களே தந்தனரென்றும், 'இந்த அனுபவங்களை என்னுடைய வாழ்நாள் இறுதிவரை கருவூலம்போல் போற்றுவேன்' என்றும் காந்தி எழுதியுள்ளார்.
காந்தி ஆகமதாபாத் அருகே 'கோச்ரப்' கிராமத்தல் ஆசிரமம் அமைத்தபோது அதில் அவரோடு சேர்ந்து முதன்முதலில் தங்கி பணியாற்றியவர்கள் 25பேர். அதில் 13பேர் தமிழர்களாவர். அவரது சொந்த மாநிலமான குஜராத்தியினரை விட தமிழர்களே அதிகமாயிருந்தது கவனிக்கத்தக்கது. சபர்மதி ஆசிரமத்தில் தமிழ் பள்ளிகூடம் ஒன்றையும் காந்திநடத்தினார்.
காந்தியடிகளின் ஒத்துழையாமை இயக்கத்திற்கு தமிழக மக்களிடையே தன்னிகரற்ற ஆதரவு நிலை இருந்தது. மாணவர்கள் படிப்பை துறந்தனர். தேசப்பற்றுள்ளோர் அரசுவேலைகளை, பதவிகளைத் துறந்தனர். காந்திஅறிவித்த கள்ளுகடை மறியல் போராட்டத்தில் அந்நாளில் சென்னையிலிருந்த 9000 சாராயக்கடைகளை ஏலம் எடுக்க ஆளின்றி 6000க்கு மேற்பட்டவைகள் அடைக்கப்பட்டன. பல தாலுகா,ஜில்லாபோர்டுகள் தென்னை, பனை, மரங்களை கள்ளிறக்க குத்தகைக்கு விடுவதில்லை என தீர்மானம் இயற்றி லாபத்தை புறக்கணித்தன. கிராமங்களில் குடிகாரர்களை புறகணிப்பதும் நடந்தேறின. இவையாவும் இன்று நினைத்துப் பார்க்கவியலாத அதிசயங்களாகும்.
அதேபோல் காந்தியடிகள் தண்டியில் உப்புசத்யாகிரகயாத்திரை நடத்தியபோது அதற்கு இணையாக தமிழகத்தில் மட்டுமே வேதாரண்யத்தில் ராஜாஜியும், சர்தார் வேதரத்தினமும் உப்புசத்யாகிரகத்தை அரங்கேற்றினர். சென்னை மகாணத்தில் ராஜாஜியின் வீட்டிலிருந்தபோது தான் ரௌலட் சட்டத்தை எதிர்க்கும்.
போராட்ட அறிவிப்பை முதன் முதலாக அறிவித்து அதற்கான மாபெரும் பொதுக்கூட்டத்தையும் சென்னையில் நடத்தினார் காந்தி. 1921ல் மதுரை வந்த போது தான் காந்தி தன் வழக்கமான குஜராத்தி பாணி உடையை துறந்து அரைநிர்வாணபக்கிரியாக அவதாரமெடுத்தார்.
காந்தியை முதன்முதலாக உலகத்திற்கு "மகாத்மா" என்று அடைமொழியிட்டு அறிவித்தவர் 'சுதேசமித்ரன்' ஜீ.சுப்பிரமணிய ஐயர்தான்! காந்தியை 'தேசத்தந்தை' என்று இந்தியாவிற்கு தெரிவித்தவர்கள் தமிழக மாணவர்கள் தாம்! காந்தி வாழ்க்கை வரலாற்றுச் செய்திகள் இந்தியமொழிகளிலேயே முதன்முதலில் தமிழில் தான் வெளியாகி பல்லாயிரம் பிரதிகள் இலவசமாகத் தரப்பட்டன.
காந்தியின் பற்றிய ஆவணப்படத்தை அகிலமெல்லாம் சுற்றி,கர்மமேகண்ணாக, மூன்றாண்டுகள் முழுமுச்சாய் தவமிருந்து பதிவுசெய்தவர் தமிழரான ஏ.கே.செட்டியார்.தான்!
காந்தியடிகள் சிறைசென்ற தருணங்களிலெல்லாம் அவரது 'யங்இந்தியா' இதழுக்கு ஆசிரியர் பொறுப்பேற்றவர்கள் ராஜாஜி, மதுரை ஜார்ஜ் ஜோசப் , ஜே.சி.குமரப்பா போன்றவர்களே. ஜே.சி.குமரப்பா காந்தியின்'ஹரிஜன்' இதழுக்கும் ஆசிரியராய் இருந்துள்ளார்.
"வாழ்க நீ எம்மான்" என்று காந்தியை வாழ்த்தி , 'வாழ்விக்க வந்த காந்தி' என வையகத்துக்கு பறைசாற்றியவர் நம் தேசிய கவி பாரதியார். சென்னையில் மகாத்மாவை சந்தித்து பாரதியார் பேசியதும், பாரதியைப்பற்றி விசாரித்தறிந்த காந்தி ராஜாஜியிடம், "இவரை பத்திரமாக பாதுகாக்க வேண்டும்" என்று பகர்ந்ததும் மறக்ககூடியதன்றோ...! இதேபோல் தன்னலம்கருதா தனிபெரும் தியாகியான ஜீவானந்தத்தை அடையாளம் கண்டறிந்து, ' நீ தான் இந்தியாவின் சொத்து' என்று அறிவித்தவர் அண்ணலன்றோ...!
கர்மவீரர் காமராஜரை மக்கள் போற்றும் பெருந்தலைவராக உயர்த்தியது காந்தியமன்றோ.... அண்ணலின் அஹிம்சா போராட்ட முறைக்கு அங்கீகாரமளித்த நாகபுரி காங்கிரஸை தலைமைதாங்கி நடத்தியது சேலம் விஜயராகவாச்சாரியன்றோ...
காந்தியின் மனசாட்சிக்குரலாக ஒலித்த ராஜாஜி, காந்தியப் பொருளாதாரத்தின் கருவூலமான ஜே.சி.குமரப்பா, காந்திய வழியிலான ஆதாரக்கல்விக்கு வித்திட்ட அரியநாயகம், அண்ணலின் அடிச்சுவட்டில் உருவான தத்துவஞானி ராதாகிருஷ்ணன், அவரது இதயத்தை இளக வைத்த இசையரசி எம்.எஸ். சுப்புலெட்சுமி, வெள்ளை அரசுக்கும், அண்ணலுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளில் வில்லங்கங்களை விலக்கி வழிசமைத்த வி.எஸ்.சீனிவாசசாஸ்திரியார்......... போன்று காந்தியோடு தொடர்பு உள்ளவர்களின் பட்டியல் தமிழகத்தில் தாராளம்,ஏராளம்!
தென்ஆப்பிரிக்கா போராட்டத்திலும், தென்ஆப்பிரிக்காவிலிருந்து இந்தியா திரும்பியபோதும், காந்தியின் ஒவ்வொரு முக்கிய போராட்ட தருணங்களிலும் தமிழர்களும், தமிழகமும் சிறப்பான முக்கியத்துவம் பெற்றதும், இறுதியாக இந்தியாவிற்கு சுதந்திரம் தருவதற்கு முன் வந்த பிரிட்டிஷ் தூதுக்குழு காந்தியைச் சந்தித்து தன் முடிவைக் கூறியதும்தமிழகத்தில் தான் என்பது தமிழகம் செய்த தவப்பயனன்றோ......!!
தமிழைக் கற்பதிலும், தமிழ் கலாச்சாரம், பண்பாடு இலக்கியங்களை அறிந்து கொள்வதிலும் அளப்பரிய ஆர்வம்காட்டிவந்த அண்ணல், அதன்பொருப்டே அன்னை கஸ்தூரிபாவையும், மகன் மணிலாலையும் தமிழகம் அனுப்பினார். தமது மூன்றாவது மகனான தேவதாஸுக்கு தமிழ்பெண்ணான லட்சுமியை மணமுடித்து வைத்தார். திருக்குறள் மீது அளவற்ற மரியாதை கொண்ட காந்தி, " திருவள்ளுவ மாமுனிவரை இன்னும் வட இந்தியர்கள் தெரிந்து கொள்ளவில்லையே...." என்ற ஆதங்கத்தையும் தெரிவித்துள்ளார். ஒளவையின் ஆத்திச்சூடி, கவிச்சக்ரவர்த்தி கம்பனின் இராமாயணம், மாணிக்கவாசகரின் திருவாசகம் போன்றவைகளை தமிழாசிரியர்கள் துணைகொண்டு படித்தோடன்றி, அவை பற்றி பொதுக்கூட்டங்களில் மேற்கோள் காட்டி பேசியுமுள்ளார். அவரது சேவாகிராமத்திலும், சபர்மதி ஆசிரமத்தலும் நடந்த தினசரி பிரார்த்தனையில் திருவாசகப்பாடல் இடம் பெற்றது குறிப்பிடத்தக்கதாகும்.
மதுரைமீனாட்சி அம்மன் கோயிலுக்கு வந்து வழிபட்டபோது, 'எனதுநீண்டநாள் ஆசை நிறைவேறியது' என நெஞ்சுருக எழுதிவைத்தார் மகாத்மா. அண்ணல் காந்தியடிகள் மொத்தம் 20முறை தமிழகத்திற்கு வந்துள்ளார். குமரி தொடங்கி குமரன் உறையும் திருத்தணிவரை தமிழகத்தின் கிராமங்கள், பட்டிதொட்டிகள், சேரிகள், சிற்றூர்கள், நகரங்கள் என பல இடங்களுக்கும் பயணப்பட்டுள்ளார். அவரது முதல் பயணம் 1896 அக்டோபரில் ஆரம்பித்தது. கடைசிப் பயணம் 1946 ஜனவரி என்று காலப்பதிவேட்டில் முடிந்தது.
காந்தியுடன் கருத்துவேற்றுமைகள் பல கொண்டிருந்த போதும் காந்தி மறைந்தபோது பெரியார் ஈ.வே.ராமசாமி, "இந்த தேசத்திற்கு காந்தி தேசமென்று பெயரிட வேண்டும்" என்றார். காந்தியநெறிமுறைகளில் ஆழ்ந்தபற்றுள்ளவர்களாக, அதை வாழ்நெறியாக வகுத்துகொண்டதில் தமிழர்களுக்கு தனி இடமுண்டு. காந்தியின் சத்யாகிரக நூற்றாண்டு நிறைவுறும் தருவாயில் இத்தகு நெகழ்ச்சியான நிதர்சனங்களை நினைவுகூர்வதும், நெஞ்சில் நிறுத்துவதும் தமிழர்களாகிய நமக்கு அரசியல், சமூகத்தளத்தில் இழந்துபோன ஆன்மபலத்தை மீட்டெடுக்க உதவட்டும்.
உதவிய நூல்கள்
மகாத்மா காந்தி வாழ்க்கை,
தமிழ்நாட்டில் காந்தி,
விடுதலைப்போரில் தமிழகம்,
விடுதலை வேள்வியில் தமிழகம்

ஊடக வரலாறு

ஊடக வரலாறு எப்போது பத்திரிக்கைகள் வர தொடங்கினவோ, அப்போது முதல் அதிகாரமையங்கள் அட்டங்கொள்ள ஆரம்பித்தன. மன்னர்கள் தலைகளிலிருந்த மகுடங்கள் மக்கள் கைகளுக்கு மாறத்தொடங்கிய காலத்தின் அறிகுறியாக பத்திரிக்கைகள் ஆரம்பமாயின. அரசர்களை ஆண்டவனுக்குச் சமமாக அடையாளம் காட்டி, மக்களை உரிமைகளற்ற ஊமைப் பதுமைகளாகக் கருதிய மன்னராட்சி காலங்களில், அரசனாக விரும்பிவெளிபடுத்தும் செய்திகளின்றி வேறெந்த செய்திகளையும் மக்கள் தெரிந்துகொள்ள வழியில்லை. நாற்சந்தியில் முரசைரைந்து நாட்டு மக்களுக்கு சொல்லப்பட்ட அரசு செய்திகளும், வரலாற்றில் இடம்பெறவேண்டும் என்பதற்காக வைக்கப்பட்ட கல் வெட்டுகளும் மட்டுமே அன்றைய தினம் மக்கள் அறிந்து கொள்ள முடிந்த செய்திகளாயிருந்தன. 'நவீன நாகரிகத்தின் சின்னம்' என்றும், 'பிறரிடமிருந்து கற்றுக்கொண்ட தந்திரம்' என்றும் பாரதியாரால் அர்த்தப்படுத்தப்பட்ட பத்திரிக்கை தொழில் சீனாவில் வேர்விட்டது, ஜெர்மனியில் உருப்பெற்றது, இங்கிலாந்தில் வலுப்பெற்று வடிவம் கண்டது. 17ஆம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்தில் இங்கிலாந்தில் ஆங்கில செய்திதாட்கள் வெளிவரத்தொடங்கின. 17ஆம் நூற்றாண்டின் இறுதி காலக்கட்டத்தில் அமெரிக்காவிலும் செய்திதாட்கள் வெளிவரத்தொடங்கின. ஆனால் இந்தியாவிலோ இதற்கு ஒரு நூற்றாண்டுக்கு பிறகே, 1780ல் முதல் செய்திதாள் வெளியானது. இந்திய இதழியல் துறையின் முன்னோடியான 'ஜேம்ஸ் அகஸ்டஸ் ஹக்கியின்' 'பெங்கால்கெஜட்' அந்தாளில் கிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சிக்கு எதிராக பெரும் கிளர்ச்சி செய்தது. முதல் முப்பது ஆண்டுகள் ஆங்கிலத்தில் மட்டுமே செய்திதாட்கள் வெளிவந்தன முதன் முதலாக இந்திய மொழிகளில் தமிழ்தான் இதழியலுக்காக அச்சேறிய மொழியாகும். அச்சேறிய ஆண்டு 1812. இதழின் பெயர் மாசத் தினசரிதை. இந்த இதழின் ஆசிரியர் தஞ்சையை சேர்ந்த ஞானபிரகாசம்இந்த தகவல் கடந்த பல ஆண்டுகளாக தொடர்ந்து இதழியல் ஆய்வில் தொய்வின்றி ஈடுப்பட்டு வரும் மூத்த பத்திரிக்கையாளர் அ.ம.சாமியின் 'விடுதலை இயக்கத் தமிழ் இதழ்கள்' என்ற நூலில் உள்ளது. ஆனால் இது வரையிலான மற்ற பல ஆய்வாளர்கள் 1820களில் வெளியான வங்காள இதழ்களையே இந்திய பிரதேச மொழிகளில் வெளியான முதல் இதழ்களாக எழுதி வந்தனர்.'தின மாதச்சரிதை' விடுதலை இயக்கப்போராட்டத்திற்கு எந்த பங்களிப்பும் செய்ததாக தகவல் இல்லை. ஆனால் சுதேசிமித்தரனுக்கு முன்பாகவே பல தமிழ் இதழ்கள் விடுதலைப்போராட்டங்களுக்கு வித்தூன்றியது என்ற தகவல்கள் இப்போது தான் வெளியாக ஆரம்பித்துள்ளன. 1831ல் வெளியான 'தமிழ் மேகசின்' தமிழின் முதல் இதழ் என்றும்,. 1856ல் வெளியான தினவர்த்தமானியே முதல் வார இதழ் என்றும் கூறுகிறார் டாக்டர் மா.பா.குருசாமி. ஆயினும் சுதேசிமித்திரனுக்கு முன்பே 'சேலம் சுதேசாபிமானி' என்ற மாதமிருமுறை இதழை1877லிருந்தே சே.ப.நரசிம்மலு என்ற சிறப்புமிக்க செய்தியாளர் நடத்தியுள்ளார்.இதை மற்றொரு இதழியல் ஆய்வாளரான பெ.சு.மணியும் உறுதிப்படுத்துகிறார். தமிழின் முதல் புலனாய்வு இதழ் என்ற கூடுதல் சிறப்பும் இவ்விதழுக்குரியது. 1881 களிலேயே மாஜிஸ்திரேட்டுகளும், தாசில்தாரும், மலினப்பட்டு கையுட்டுப்பெறுவதை கண்டுபிடித்து எழுதியது இவ்விதழ். சிறந்த கவிஞர், எழுத்தாளர், பேச்சாளர், இதழாளர் எனக் கருதப்பட்ட நரசிம்மலு ஒரு கள ஆய்வாளருமாவார். கோவை குடிநீர் பஞ்சம் தீர மலை உச்சியிலிருக்கும் முத்துக்குளம் அருவியிலிருந்து தண்ணிர் கொண்டு வரமுடியம் என்று முதன் முதல் கண்டறிந்து எழுதியவர், வலியுறுத்திச் சொன்னவர் நரசிம்மலு. 1800களின் பிற்பகுதியலேயே தமிழில் சுமார் ஐநூறு இதழ்கள் வெளிவந்துள்ளன. வேறெந்த இந்திய மொழிகளிலும் இவ்வளவு அதிகமான இதழ்கள் வெளியாகியிருக்குமா....? என்பது கேள்விக்குறி. அதே சமயம் மக்களிடம் இதழ்கள் படிக்கும் ஆர்வம் அதிகம் இருந்ததாகச் சொல்ல வழியில்லை. ஏனெனில் அந்த காலக்கட்டத்தில் படித்தவர்களின் விகிதாச்சாரமே ஏழெட்டு சதவீததிற்கு மேலில்லை. அப்படி படித்தவர்களிலும் கூட நாட்டு நடப்புகளை, பொதுவிவகாரங்களை தெரிந்துகொள்ளும் ஆர்வம் கொண்டவர்கள் அதிகம் இல்லை. இதனால் பத்திரிக்கை ஆரம்பித்தவர்கள் பாடு,படு திண்டாட்டமாயிருந்துள்ளது. பத்திரிக்கை ஆரம்பித்தவர்கள் எப்படியாவது சந்தா சேர்பதற்காக முதல் சில நாட்கள் இலவசமாக அனுப்பியும்கூட மக்கள் இசைந்து கொடுக்கவில்லை. மேலும் ஆங்கிலம் படித்தவர்கள் தமிழ் பத்திரிக்கை படிப்பதை காட்டிலும் ஆங்கில பத்திரிக்கையில் தான் ஆர்வம்காட்டியுள்ளனர். எனவே மக்களை பத்திரிக்கை படிக்கவைக்க மன்றாடிபார்த்தும் அவர்கள் மசியாத காரணத்தால் மரித்து போன பத்திரிக்கைகள் அநேகம். பத்திரிக்கைகளின் விற்பனையோ சுமார் 50 படிகளிலிருந்து அதிகபட்சம் 500 படிகள் என்பதாயிருந்தது. விலையோ சுமார் ஒருபைசாதான். இதில் விதிவிலக்காக விற்பனையை அதிகபடுத்தி 1000 பிரதிகளை தொட்ட பத்திரிக்கை ஜி.சுப்பிரமணிய ஐயரால் தொடங்கப்பட்ட 'சுதேசமித்திரன்' தான். சுதந்திர வேட்கைக்கான சுடரொளி தாங்கிய இதழாக தமிழ்மக்களால் இது தலையில் வைத்து போற்றப்பட்டது. ஆரம்பித்த காலத்தில் அதிக பொருளாதார இடர்பாடுகளை சந்தித்த போதிலும் அழுத்தமான கொள்கைப்பற்றால் மெல்ல, மெல்ல ஆதரவு தளத்தை அதிகபடுத்தி கொண்டது. காங்கிரஸ் பேரியக்கத்தின் எண்ணங்களை, நோக்கங்களை மக்களிடையே கொண்டு சேர்ப்பதில் மகத்தான பங்குபணி ஆற்றியது இவ்விதழ். ஜி.சுப்பிரமணிய ஐயர் முற்போக்கு வாதியாக, முன்னோடியாகத் திகழ்ந்தவர். விதவைப்பெண்கள் சமூகத்தில் வெறுத்தொதுக்கப்பட்டு சகல இன்னல்களுக்கும் சாட்சியங்களாகி கொண்டிருந்த சமூகச் சூழலில், தன் விதவை மகளுக்கு மறு விவாகம் செய்து வைத்தார். இதனால் இந்து பத்திரிக்கையின் பாகஸ்தராக இருந்த ஜி. சுப்பிரமணிய ஐயர் பலர் இடர்பாடுகளுக்கு ஆளாகி கடைசியில் இந்து பத்திரிக்கையை தன் கூட்டாளி வீரராகவாச்சரியிடமே விட்டுவிட்டார். தி ஹிந்து பத்திரிக்கை ஜி .சுப்பிரமணிய ஐயருக்குப் பிறகு ஆங்கில அரசுக்கு அனுசரனையாக மாறியது. ஆங்கில அரசின் அடக்குமுறைசட்டங்களால் சிறைசாலைக்கு சென்று மனச் சிதைவுகளுக்கு ஆளானார் ஜி.சுப்பிரமணிய ஐயர். சுதந்திர வேட்கையில், சுதேசாபிமானத்தை சாதரண மக்களிடம் சரியாக எடுத்துசென்ற சமூக கடமையை செய்த ஜி. சுப்பிரமணிய ஐயர் தான், மதுரையிலுள்ள பள்ளிகூடத்தில் ஆசிரியராக வேலைபார்த்து வந்த பாரதியாரை சென்னைக்கு அழைத்து சுதேசிமித்திரனின் துணைஆசிரியராக்கி, பாரதியாரை இந்த பாருக்கே அறிமுகம் செய்தார். பற்றிக்கொள்ளும் நெருப்பு போல பத்திரிக்கைதளத்தில் கருத்துகளை பரப்பியவர் பாரதியார். சுதேசகருத்துகளை பரப்புவதே சுவாசமாக்கி கொண்ட பாரதியார் சுதேசமித்தரத்திரனை சுதந்திர வேட்கைகான போர்வாளாக மாற்றினார். ஆயினும் அவரது அதித ஆற்றலுக்கு சுதேசமித்திரன் மட்டுமே போதுமானதாக இருக்கவில்லை. அவரது கவிதைகளை பிரசுரிப்பதற்கு சுதேசமித்திரன் ஆசிரியர் அவ்வளவாக ஆர்வம் காட்டவில்லை. சுதேசமித்திரனில் துணை ஆசிரியராகவிருந்து கொண்டு 'சக்கரவர்த்தினி' மகளிர் மாத இதழின் ஆசிரியராக சமரசமற்ற கருத்துப்போர் நடத்தினார் பாரதியார். மண்டையம் குடும்பத்தாரின் ஆதரவில் நடத்தப்பட்ட 'இந்தியா' இதழின் ஆசிரியராக பாரதியார் பொறுப்பேற்ற ஆண்டு ஆண்டு 1907. அந்த ஆண்டில் தான் இந்திய தேசிய காங்கிரஸானது தீவிரவாதிகள், மிதவாதிகள் என இரண்டாக பிளவப்பட்டது. தீவிரவாதிகளின் அணியில் இருந்த பாரதியார் திலகரை தலைவராக ஏற்றுக்கொண்டு தீப்பிழம்பாக இந்தியாவில் கட்டுரைகளை எழுதினார். இதனால் இந்தியா இதழை அசிட்டவரான சீனிவாசனை ஆங்கில அரசு கைது செய்து ஐந்து வருடம் சிறையில் அடைத்தது. பாரதியார் தப்பிச்சென்று பாண்டிச்சேரியில் அடைக்கலமானார். பாண்டிச்சேரியிலிருந்து கொண்டே இந்தியா இதழை மூன்றாண்டுகள் மும்மரமாகக் கொண்டு வந்தார் பாரதியார். அந்நாளில் 'இந்தியா' இதழின் விற்பனை அதிகபட்சமே ஆயிரம் பிரதிகள் தான் என்றபோதிலும் ஒவ்வொரு இதழும் குறைந்தபட்சம் ஐம்பது பேரிடமாவது கைமாறியது; விவாதிக்கப்பட்டது; விரிவான கருத்துப் பரவலுக்கு வித்தூன்றியது. பாரதியார் இந்தியா இதழின் வருடச் சந்தாவை எப்படி நிர்ணயித்தார் என்பது சுவாரஷ்யமான செய்தியாகும். சாதாரண பொது ஜனங்களுக்கு ஆண்டு சந்தா ரூபாய் 3 என்ற பாரதியார், வசதியாக வருவாய் ஈட்டுவோருக்கு ரூபாய் 15 என்றும், ஜமீன்தார், ராஜாக்களாயிருந்தால் ரூபாய் 30 என்றும், வெள்ளை அரசாங்கத்தாருக்கு வேண்டுமென்றால் ஐம்பது ரூபாய்க்குகுறைந்து அனுப்ப முடியாதென்றும் அறிவித்தார். 'கார்டூன்' எனப்படும் கருத்து சித்திரத்தை தமிழ் பத்திரிக்கையில் முதன் முதலில் அறிமுகப்படுத்தி பெரும் வரவேற்பை பெற்றது இந்தியா இதழ். எப்படி இந்த கருத்து சித்திரத்தை ரசிக்கவேண்டும் என்பதற்கான விளக்கத்தையும் கூடவே வர்ணித்து எழுதினார் பாரதியார். இந்தியா இதழோடு 'பாலபாரதம்' என்ற ஆங்கில வார இதழும் துணை இதழாக வந்தது. இந்த ஆங்கில இதழின் ஆசிரியரும் பாரதியார் தான். புதுச்சேரி புகழிடம் தானே என்றில்லாமல் 'விஜயா' என்ற மாலை நாளிதழுக்கும் ஆசிரியராயிருந்தது எழுதிகுவித்தார் பாரதியார். இது புதுவையில் வெளியான முதல் நாளிதழாகும். பிறகு சூரியோதயம் என்ற வார இதழிலும் வரிந்து கட்டிக்கொண்டு ஆங்கில அரசை எதிர்த்து எழுதினார் பாரதியார். இதனால் இந்தியா இதழுடன் இவ்விதழுக்கும் தமிழ்நாட்டில் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டது. அரவிந்தர் ஆசிரியராகவிருந்து நடத்திய ஆங்கில இதழான கர்மயோகியின் தமிழ் பதிப்புக்கும் பாரதியார் ஆசிரியராக இருந்தார். இப்போது இலவசமாக வழங்கப்படும் இதழ்களைப் போல அன்றே இலவசமாக விநியோகப் பட்ட இதழின் பெயர் தர்மம். இதிலும் ஆசிரியர் பொறுப்பேற்று தர்மயுத்தம் நடத்தினார் பாரதியார். பாரதியின் வெற்றி பெறாத முயற்சிகளாக முளையிலேயே அழிந்தது 'அமிர்தம்' என்ற பெயரில் அவர் ஆரம்பிக்கவிருந்த இதழும், 'சித்திராவளி' என்ற பெயரில் முழுக்க முழுக்க சித்திரங்களின் வழியாகவே கருத்தை பரப்ப எண்ணிய இதழும்! பாரதியார் சுமார் 18 ஆண்டுகளே பத்திரிக்கை துறையில் பணியாற்றியுள்ளார். இந்த குறுகிய காலகட்டத்திலேயே அவர் ஈடிணையற்ற சாதனையாளராக சகலவிதங்களிலும் முத்திரை பதித்துள்ளார். அவர் எழுதிய காலகட்டங்களில் தமிழ்நாட்டில், இந்தியாவில், சர்வதேச நாடுகளில் நிகழ்ந்த பெரும்பான்மையான நிகழ்வுகளை ஊன்றி கவனித்து விமர்சித்துள்ளார். நிரந்தரமாக ஒரே இதழில் பணியாற்ற முடியாமை. ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட பத்திரிக்கைகளில் எழுதுவது, பற்பல புதிய யுத்திகளை இதழியலுக்கு கொண்டுவந்தது. லட்சிய நோக்கத்தோடு பத்திரிக்கை நடத்தி தொடரமுடியாமல் துவண்டது,அப்படியும் புதிய முயற்சிகளை மேற்கொண்டு புதிய இதழ்கள் கொண்டுவர முயன்று முடியாமல் போனது.... என எண்ணற்ற இன்னல்களை பத்திரிக்கை அனுபவத்தில் பார்த்தவரான பாரதி மீண்டும் சுதேசிமித்திரனிலேயே வந்து சேர்ந்துவிட்டார். பாரதியாரின் நெருங்கிய நண்பரான சுப்பிரமணியசிவா 'ஞானபானு', 'பிரபஞ்சமித்திரன்' என்ற இதழ்களை நடத்தி தீப்பிழம்பென சுதேசியத்தையும், தமிழையும் ஒருங்கே பரப்பினார். "உறங்கி கிடக்கும் தமிழ்சாதியாரை அறிவாகிய சாட்டையால் அடித்து எழுப்பி, அவர்களுக்கு ஊக்கத்தையும் உற்சாகத்தையும் உண்டு பண்ணி முன்னிலையில் கொண்டுவருவதே இப்பத்திரிக்கையின் நோக்கம்" ஞானபானுவின் 1915ஜூன் இதழில் பிரகடனப்படுத்தினார். கூடவே சமஸ்கிருதம் கலவாமல் தனித்தமிழில் எழுதப்படும் கட்டுரைக்கு ரூபாய் 5 பரிசாகத் தரப்படும் என்றும் சிவா அறிவித்தார். தென்நாட்டுத் திலகராக மக்களை தட்டி எழுப்பிய வ.உ.சிதம்பரனார், சுப்பிரமணிய சிவா சிறை சென்ற காலங்களிலெல்லாம் 'ஞானுபானு'வின் ஆசிரியப் பொறுப்பை ஏற்று திறம்பட செயல்பட்டுள்ளார். இது தவிர தென் ஆப்பிரிக்காவிலிருந்து வெளியான 'விவேகபாநு'விலும் இலங்கையிலிருந்து வெளியான வீரகேசரியிலும் தொடர்ந்து எழுதிய வ.உ.சி பத்திரிக்கை தொடஙுகும் முயற்சிகளில் ஈடுபட்டு அந்த எண்ணம் ஈடேறாமல் விட்டுவிட்டார். திரு.வி.கல்யாணசுந்தரனாரின் 'தேசபக்தன்' இதழ் 1917முதல் வெளியானது. தெருவெங்கும் தமிழ்முழக்கமும் ,தேசிய முழக்கமும் செய்யும் இதழாக இது வெளியானது. சமஸ்கிருதம் கலந்த மணிப் பிரவாள நடையிலேயே மற்ற பத்திரிக்கைகள் அன்று வந்து கொண்டிருந்த சூழலில் தனித்தமிழை, பழகு தமிழாக்கி மக்களிடையே பரவவிட்டார் திரு.வி.க. தொழிற்சங்க இயக்கத்தை உருவாக்குவதிலும் தொழிலாளர்களிடையே தமிழ்ப்பற்று, தேசப்பற்று வளர்வதற்கும் திரு.வி.க 'தேசபக்தன்' வழியாக தீவிர பணியாற்றினார். பிறகு 1920 தொடங்கி 1941 வரை 'நவசக்தி' என்ற வார இதழை திரு.வி.க நடத்தினார். அப்போது திரு.வி.கவின் குருகுலத்தில் உருவானவர்களே வெ.சாமிநாதசர்மா, கல்கி, கி.வா.ஜகந்தாதன் போன்றோர். மற்றொரு தேசபக்தரான வ.வே.சு ஐயரவர்களும் திரு.வி.க விற்கு பிறகு சிறிது காலம் 'தேசபக்தன் ஆசிரியர் பொறுப்பேற்று நடத்தினார். இவர் திரு.வி.கவை விடவும் தீவிரமாகத் தனித்தமிழை கையாண்டவர். பத்தரிக்கையின் பக்க எண்களைக் கூட தமிழ் எண்ணிலையே குறிப்பிட்டார் வ.வே.சு ஐயர். சேலம் மருத்துவர். வரதராஜூலு நாயுடுவால் நடத்தப்பட்ட தமிழ்நாடு இதழுக்கு தமிழ் இதழியல் வரலாற்றில் தனி முக்கியத்துவமுண்டு. 1923-ல் வார இதழாக ஆரம்பிக்கப்பட்டு 1926ல் நாளிதழாக்கப்பட்டு 1931வரை வெளியான தமிழ்நாடு இதழ், சுதேசிமித்திரனுக்கு போட்டி இதழாக பெரும் செல்வாக்குடன் திகழ்ந்தது. இந்த இதழ் பல முன்னோடி இதழலாளர்களை தமிழ் இதழ் உலகிற்கு தநதது. 'பேனா மன்னன்' என்றழைக்கப்பட்ட டி.எஸ்.சொக்கலிங்கம், ஏ.என்.சிவராமன், மணிக்கொடி சீனிவாசன், வ.ரா, தி.ஜ.ர , 'தமிழ் மணி' ரெங்கசாமி, 'வந்தேமாதரம்' சீனிவாசன், கல்வியாளர் நெ.து.சுந்தரவடிவேலு போன்ற பலர் இந்த இதழிலிருந்து உருவானார்கள். மருத்துவர் வரதராஜூலுநாயுடு தான் முதன் முதல் இந்தியன் எக்ஸ்பிரஸ்,ஆந்திரபிரஜா ஆகிய இதழ்களை ஆரம்பித்தார். டி.எஸ். சொக்கலிங்கம் 'தமிழ்நாடு' இதழுக்குப் பிறகு 'காந்தி' என்ற வாரமிருமுறை இதழை 1931ல் ஆரம்பித்தார். காலாணாவிலைக்கு விற்பனையான இவ்விதழ் காலப்போக்கில் நாளிதழானது. இவ்விதழ் நின்றபிறகு 1934ல் தினமணி ஆரம்பிக்கபட்டபோது அதன் ஆசிரியரானார். பாரதியின் நினைவுநாளான செப்டம்பர்11ல் ஆரம்பிக்குப்பட்ட தினமணி 'பாரதியின் கனவை நிறைவேற்றுவதே இதழின் லட்சியம்' என்று பிரகடனப்படுத்தியது. தினமணி ஆசிரியர்குழுவிலிருந்த அத்தனை பேருமே தேசபக்தர்களாகவும், சிறந்த எழுத்தாளர்களாகவுமிருந்தனர். இதில் சிலர் சுதந்திர போராட்டத்தில்சிறையும் சென்றுள்ளனர். ஏ.என். சிவராமன், புதுமைபித்தன், சி.சு.செல்லப்பா, கு.அழகிரிசாமி... போன்றோரை துணை ஆசிரியர்களாக கொண்டு சொக்கலிங்கம் ஆசிரியராகப் பணியாற்றிய காலம் தினமணியின் வரலாற்றில் ஓர் பொற்காலமாகும். பிரபல பத்திரிக்கையாளர் சதானந்த்தால் ஆரம்பிக்கப்பட்ட தினமணி பிறகு ராம்நாத்கோயங்காவின் கைக்குமாறியது. அதற்கு பிறகு ஏற்பட்ட நிர்வாக அணுகுமுறைகள், அவர்கள் ஆசிரியர் குழுவினரை நடத்தியவிதம் போன்றவற்றில் அதிருப்தியுற்று சொக்கலிங்கம் தினமணியிலிருந்து வெளியேறி 'தினசரி' என்ற பெயரில் நாளிதழ் ஆரம்பித்தார். அவருடனேயே வெளியேறியவர்களில் புதுமைபித்தன், சி.சு.செல்லப்பா, கு.அழகிரிசாமி குறிப்பித்தக்கவர்கள். பொருளாதார நெருக்கடிகளால் 'தினசரி' திணறி நின்றுபோனது. பிறகு ஜனயுகம்,பாரதம்,நவசக்தி போன்ற பல பத்திரிக்கையும் நடத்தினார் சொக்கலிங்கம். பொதுவாகவே அந்நாளில் பத்திரிக்கையாளர் பலர் தேசபக்தர்களாக இருந்தனர். அந்திய துணிக்கடை எதிர்க்கும் மறியலில் “சுயராஜ்ஜியா” பத்திரிக்கை ஆசிரியர் சுப்பாராவ் மற்றும் நிருபர் ஓ.பி.ராமசாமி இருவரும் போலிஸ்சாரால் கடுமையாகத் தாக்கப்பட்டு, வழக்கும் போடப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். 1920கள் வரை பத்திரிக்கைகளின் விற்பனை அதிகபட்சம் ஆயிரத்து சொச்சம் என்ற அளவில் தான் இருந்தது. இப்படியான நிலையிலிருந்த இதழியல் துறை மகாத்மாகாந்தியின் அரசியல் நுழைவு ஆரம்பமான பிறகு படிப்படியாக வளர்ச்சி கண்டது. மகாத்மா காந்தியின் ஒத்துழையாமை இயக்கம், கிலாபத் இயக்கம், போன்றவைகளின் போது இதழ்கள் ஒரளவு விற்பனை கூடியது. உப்புசத்தியாக்கிரக போராட்டத்தின் போதோ மிகவும் உச்சபட்ச விற்பனையை எட்டின அன்றைய இதழ்கள்! 1930ல் ஜனவரியில் ஆரம்பிக்கப்பட்ட 'சுதந்திரச்சங்கு' பத்திரிக்கை உலகில் ஒரு சூறாவளிபோல் சுழன்றது. எஸ்.கணேசன் என்ற தேசபக்தரால் நடத்தப்பட்ட சுதந்திரசங்குவின் ஆசிரியர் 'சங்கு'சுப்பிரமணியன். கதர்பிரச்சாரம், தீண்டாமை ஒழிப்பு, காந்தியின் பிரசங்கங்கள்..... போன்றவற்றை பிரசுரித்தே இப்பத்திரிக்கை ஒரு லட்சம் பிரதிகள் வரை விற்பனையானது. இதன் மக்கள் மொழியிலான நடை, எள்ளலும், துள்ளலுமான தலைப்புச் செய்திகள் போன்றவை மக்களிடம் பெரும்வரவேற்புபெற்றது. அந்தாளில் சுதந்திர போராட்டத்தில் சிறைசென்றுவெளியான தியாகிகள் வீட்டிற்கு செல்வதற்கு முன்பு 'சுதந்திரச்சங்கு' அலுவலகம் சென்று அருகிலுள்ள கதர் கடையில் அலுவலக கணக்கில் ஒரு ஜோடி கதர் துணிமணிகளைப் பெறுவதும். அடுத்திருந்த உணவுவிடுதியில் பசியாற இரண்டு வேளை இலவசமாக உணவருந்திச் செல்வதும் வழக்கமாயிருந்துள்ளது. சுதந்திர வேள்வியில் சுடர்விடும் அக்கினிக் குஞ்சாக வெளிவந்த 'சுதந்திரச்சங்கு' 1938ல் அஞ்சாத வாசம் கண்டது. அப்பழக்கற்ற தலைவராகவும், ஆளுமைமிக்க பேச்சாளராகவும், ஆற்றல்மிக்க இலக்கிய பேராசானாகவும் கருதப்பட்ட பா.ஜூவானந்தம் அவர்களால் ஆரம்பிக்கப்பட்ட 'ஜனசக்தி'வார இதழ் ஆரம்பத்தில் காங்கிரஸ் சோஷலிஸ்ட் கட்சியின் கருத்துகளை பரப்பியது. பிறகு 1942 செப்டம்பர் 30முதல் பொதுவுடைமை இயக்கத்தின் போர்வாளாகத் திகழ்ந்தது. ஏகாத்திய எதிர்ப்பில் மாணவர்கள், விவசாயிகள், தொழிலாளர்களை அணிதிரட்டியதில் ஜனசக்திக்கு தனியிடமுண்டு. 1930ல் ஆனந்த விகடன் இதழ் ஆங்கில அரசால் ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு சில காலம் வெளிவராமல் தடைப்பட்டது. இந்தியாவிற்கு தமிழகம் தந்த தலைசிறந்த பத்திரிக்கையாளர்களில் சதானந்தம் குறிப்பித்தக்கவராவார். தினமணியை ஆரம்பித்து வைத்த சதானந்தம் அதற்கும் முன்பே, முதன்முதலில் இந்திய அளவிலான செய்தி நிறுவனமாக 'அசோசியேட் பிரஸ் ஆப் இந்தியா'வை ஆரம்பித்து திறம்பட நடத்தியவர். ஆந்திரகேசரி பிரகாசத்தின் 'சுயராஜ்ஜியா' மகாத்மாகாந்தியின் 'யங் இந்தியா' ஆகியவற்றலெல்லாம் பணியாற்றியவர் சதானந்தம். 1939- 'பாரததேவி' என்ற பெயரில் நாளிதழ் மற்றும் வாரஇதழ் தொடங்கி நடத்தினார். இந்த பாரததேவியில் ஆசிரியராகப் பணியாற்றிய பக்தவத்சலம் பின்னாளில் தமிழகத்தின் முதலமைச்சரானார். மும்பையில் 'ப்ரீ பிரஸ் ஜெர்னல்' என்ற பிரபல ஆங்கில இதழையும், 'நவபாரத்' என்ற மராட்டிய இதழையும் சதானந்தம் கொண்டுவந்தார். இந்த அலுவலகம் அமைந்துள்ள சாலைக்கு மஹாராஷ்டிர அரசு 'ப்ரி பிரஸ் ஜெனரல் சாலை' என்று பெயர் சூட்டியுள்ளது. தமிழ் இலக்கிய உலகில் ஒரு மணிமகுடமென திகழ்ந்த மணிக்கொடி டி.எஸ். சொக்கலிங்கம், வ.ரா, ஸ்டாலின் சீனிவாசன் ஆகிய மூம்மூர்த்திகளால் 1937ல் தொடங்கப்பட்டது. பல இலக்கிய முன்னோடிகள் இந்த இதழால் தமிழ் இலக்கிய உலகிற்கு அடையாளம் காட்டப்ட்டனர். புதுச்சேரியிலும் பல இதழ்கள் விடுதலை வேட்கையுடன் வெளியாயின அவற்றில் மக்கள் தலைவர் வ.சுப்பையாவின் சுதந்திரம் இதழ் குறிப்பிடத்தக்கது. மகாத்மாகாந்தி அவர்களால் நடத்தப்பட்ட 'யங் இந்தியா' இதழுக்கு அவர் சிறை சென்ற தருணங்களிலெல்லாம். ஆசிரியர் பொறுப்பை ஏற்றவர்கள் தமிழகத்தைச் சேர்ந்த சி.ராஜகோபாலச்சாரியாரும், மதுரையைச்சேர்ந்த ஜார்ஜ் ஜோசப்பும் தான் என்பது ஒரு பெருமையான செய்தியாகும். அதேபோல தமிழகத்தைச் சேர்ந்த தலைசிறந்த காந்தியபொருளாதார நிபுணரான ஜே.சி.குமரப்பா காந்தி சிறை சென்ற காலங்களிலெல்லாம் 'ஹரிஜன்' இதழின் ஆசிரியர் பொறுப்பை ஏற்றவராவார். 1942ல் 'தந்தி' என்ற தமிழ் நாளிதழை தேசிய இதழாக தொடங்கினார் சி.பா.ஆதித்தனார். அதற்கு முன்பே தமிழன் என்ற பெயரில் பத்திரிக்கை நடத்தி விடுதலை வேட்கையை பரப்பினார் ஆதித்தனார்.நேதாஜிக்காக நிதித் திரட்டி அவரது இந்தியதேசிய இராணுவத்திற்கு உதவியது 'தினத்தந்தி'. இவை தவிர காந்தியுகத்திற்கு முன்பே தமிழில் தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைகுரலாகவும், ஆதிதிராவிடர்களின் ஆயுதமாகவும் பல இதழ்கள் வெளிவந்துள்ளன. அவற்றில் சூரியோதயம் (1869), பஞ்சமன்(1871) 'திராவிடமித்ரன்'(1885) இரட்டை மலை சீனிவாசனாரால் நடத்தப்பட்ட 'பறையன்'(1893) அயோத்திதாச பண்டிதரால் நடத்தப்பட்ட ஒரு பைசா தமிழன் (1907) போன்றவை குறிப்பிடத்தக்கவையாகும். மதுவிலக்கு கொள்கையை மக்களிடையே பரப்ப இராஜாஜியால் கல்கி கிருஷ்ணமூர்த்தியை ஆசிரியராகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட இதழ் 'விமோசனம்'. இதே போல காந்தியின் கதர் பிரச்சாரத்தை வலியுறுத்துவதற்கென்றே அந்தாளில் கணக்கற்ற சிற்றிதழ்கள் சிறப்பாக செயல்பட்டுள்ளன. இதே வகையில் தீண்டாமைக்கு எதிராகவும் ஏராளமான சிற்றிதழ்கள் தமிழில் ஆரம்பித்து நடத்தப்பட்டன. பொதுவாக நாட்டைபாதிக்கும் முக்கிய பிரச்சினைகள், போராட்டங்கள் வெடிக்கும் போது மக்களிடையே விழிப்புணர்ச்சி பெருகிறது. மக்கள் எண்ணங்களின் பிரதிபலிப்பாகவும், சில சமயங்களில் மக்களிடையே கருத்தாங்கங்களை உருவாக்கவும் இதழ்கள் பெரும் பணி ஆற்றியுள்ளன. இதழியலானது மக்களிடையே ஏற்படுத்தும் ஆழமான தாக்கங்களை அறிந்தே அன்றைய தினம் பெரும் தலைவர்களெல்லாம் இதழ்களை தொடங்கி நடத்தினார்கள். திலகர், கோபாலகிருஷ்ணகோகலே, அரவிந்தர், அபுல்கலாம் ஆசாத், வி.எஸ்.சீனிவாசாச்சிரியார். ஆந்திரகேசரி பிரகாசம், ராஜாஜி, ஜவஹர்லால்நேரு, மதன்மோகன் மாளவியா, அன்னிபெசன்ட் அம்மையார் போன்ற தேசிய தலைவர்கள் இதழியல் பொறுப்பேற்று மக்கள் திரளை தங்கள் கொள்கைகள், கருத்துகளுக்கேற்ப அணிதிரட்டினர். இவ்விதமே தமிழ்நாட்டிலும் ஜீவா 'ஜனசக்தி'யையும், ஈ.வே.ரா பெரியார் 'குடியரசு', 'விடுதலை' போன்றவற்றையும் சி.என்.அண்ணாதுரை 'ஹோம்லேண்ட்', திராவிடநாடு, காஞ்சி போன்ற இதழ்களையும், பிரிட்டிஸ் பேரரசை ஆதரித்து திராவிட இயகத்தினர் திராவிடன் நாளிதழையும், நீதிக்கட்சி தலைவர் டி.எம்.நாயர் 'ஜஸ்டிஸ்' ஆங்கில இதழையும் நடத்தினார்கள். இவ்விதழ்கள் பிரிட்டிஷ் பேரரசை தீவிரமாக ஆதரித்தன. காங்கிரஸ் கட்சியின் சுதந்திரப் போராட்டதை கண்டித்தன. அந்தாளில் தமிழகத்தில் காங்கிரஸ் இயக்கத்தில் பிராமணர் ஆதிக்கம் மேலோங்கி இருந்தது. இதனால் பிரமணரல்லாதோரில் பலர் தங்களுக்கு காங்கிரஸில் உரிய முக்கியத்துவம் இல்லை என கருதி காங்கிரஸுக்கு எதிராக இயக்கம் கண்டனர். மேலும் காங்கிரஸில் பிராமணர்களின் ஆதிக்கத்தால் பழமை, பிற்போக்கு சிந்தனைகள் சமூக சீர்கேடுகள் பாதுகாக்கப்படுவதாக இவர்கள் குற்றம் சாட்டினர். இதனால் ஆங்கில அரசின் ஆதரவால் விதவைமறுமணம். தேவதாசி ஒழிப்புச்சட்டம், இட ஒதுக்கீடு சட்டம் போன்றவற்றை நீதிக்கட்சியின் ஆட்சி நிறைவேற்றியது. திராவிட இயக்கத்தின் வருகையால் தமிழில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இதழ்கள் வெளிவந்தன. இவை பாமர மக்களிடையே படிக்கும் பழக்கத்தையும், விவாதிக்கும் ஆற்றலையும் வியக்கத்தக்க அளவில் வளர்த்தன. 19ஆம் நூற்றாண்டில் இந்தியாவில் பிரதேசமொழிகளில் பிரசவமான இதழியல் துறை வளர்ச்சி 20ஆம் நூற்றாண்டின் அரசியல், சமூக சூழல்களால் இணையற்ற வளர்ச்சிகண்டன. இப்போது 21ஆம் நூற்றாண்டின் தகவல் தொழில் நுட்ப புரட்சி இணைய இதழ்களின் சகாப்தத்தை முன்னேடுத்துச் செல்கிறது.

வாழ்க நம் அடிமை ஜனநாயகம்

சாவித்திரிகண்ணன்
எதிர்பாத்தபடியே பிரதீபா பட்டீல் குடியரசுத் தலைவராகிவிட்டார்.
ஊழல் குற்றச்சாட்டுகள், பொருளாதார மோசடிகள், கொலைகாரரை காபாற்றியவர் இவரா குடியரசு தலைவர் ....? என பலரும் கொதித்தும், குதித்தும், எழுதியும், பேசியும் ஒன்றும் நடக்கவில்லை
அப்படி எதுவும் நடக்காது, அதுதான் இந்திய சமூகம்!
இதை விட மோசமான குற்றச்சாட்டுகள் கொண்டவர்களை நாம் அமைச்சர்களாகவும், முதலமைச்சர்களாகவும், பிரதமர்களாகவும் ஏற்றுக் கொண்டு வந்திருக்கிறோம்.
இதற்கும் மேலாக, "அகத்தை தூய்மைபடுத்தவேண்டிய ஆன்மீக குருவே கூட யோக்கியமானவராக இருக்கவேண்டும்" என்று நம் சமூகம் எதிர்பார்ப்பதில்லை. "என் வேண்டுதலை நிறைவேற்றும் சக்தி அந்த குருவுக்கு இருக்கிறது..." என்ற நம்பிக்கை ஒன்றே போதுமானதாகி விடுகிறது.
முதலமைச்சர்களும், பிரதமர்களும் நாட்டின் தலை எழுத்தையே தீர்மானிக்க கூடியவர்கள். ஆனால் குடியரசு தலைவரோ தன்னுடைய தலையெழுத்தையே தீர்மானிக்க முடியாதவர். அப்படியிருக்க பலரும், 'ஐயோ இப்படியாகிவிட்டதே' என புலம்புவதை பார்க்கும் போது ஆச்சிரியமாக இருக்கிறது.
நல்லவேளை காந்தியவாதியான நிர்மலாதேஷ்பாண்டே போன்றவர்கள் இப்பதவிக்கு பரிந்துரைக்கப்பட்ட அளவிலேயே பாதுகாக்கப்பட்டுவிட்டனர். அவரை போன்றவர்களின் சமூகத்தொண்டு இந்த தேசத்திற்கு இன்னும் தேவைப் படுகிறது.
தேட்டத்தில் பூஞ்செடிகளை ரசித்து மகிழ்வது, நடனசிகாமணிகள், வித்வான்கள், கவிஞர்கள் போன்றோரின் கலை ஆற்றலை, ரசித்து கொண்டிருப்பது, அவர்களோடு போட்டோவுக்கு போஸ்கொடுப்பது, நாட்டில் எப்படிப்பட்ட அநீதிநடந்தாலும் அதை பற்றி வாய் திறக்காமல் மௌனிப்பது ...போன்ற வகையில் வாழ்வதற்கு ஒருவேளை நடைதளர்ந்த முதியவர்கள் வேண்டுமானால் ஆர்வம் காட்டலாம்.
இதனால் தான் பிராணாப் முகர்ஜியின் பெயர் பிரயோகிக்கப்பட்டபோது, "ஐயோ அவர் எவ்வளவு பெரிய திறமைசாலி, அவர் சேவை நாட்டிற்கு தேவை" என சோனியா மறுத்தார்.
இதன் மூலம், 'திறமையும், பொறுப்பும் தேவையில்லாத பதவி இது' என தீர்மானித்திருந்தார் சோனியா. அதில் நியாயமில்லாமலில்லை. வேலையே இல்லாத, பொறுப்பு சுமைகளற்ற அலங்கார அரசபதவியே அது. நமது சட்டமன்ற, பாராளுமன்றத்திற்கு போட்டியிட விண்ணப்பிக்கும் வேட்பாளர்களிடம் கூட, 'சொத்து எவ்வளவு?, கடன்காரனாக இருக்கிறாயா?, உன் மீது வழக்குகள் உண்டா?' என கேள்விகள் கேட்கப்படுகிறது ஆனால் அப்படி எந்தவித ஆய்வுமின்றி அளிக்கப்படும் பதவிகள் தான் கவர்னரும், குடியரசு தலைவரும்! எப்போதோ அரசியல் நெருக்கடி ஏற்படும் தருவாயில் தான் இவர்களின் தேவை உணரப்படும்.
'ஆட்டுக்கு தாடியும், நாட்டுக்கு கவர்னரும் தேவையா?' என்றார் அறிஞர் அண்ணா. 'கவர்னரை ஆடு என்றால் குடியரசுத்தலைவர் பூம்பூம் மாடு தானே' என்று புரிந்து கொண்டுள்ளனர் நம் அரசியல் வாதிகள்!
மன்மோகன்சிங்கும், பிரதீபா பட்டீலும் பெயர் அளவுக்கு தான் பதவியை சுமக்கிறார்கள். இந்த நிழல்களுக்கு பின்னிருந்து நிஜமாக இயங்கிக்கொண்டிருப்பவர் சோனியா தானே!.
குடியரசுத்தலைவர் பதவி என்பது 1969வரை ஆரோக்கியமாகத்தான் இருந்தது. பாபு ராஜேந்திர பிரசாத் ஒரு முறை'பிரதமரை காட்டிலும் எனக்குதான் அதிக அதிகாரம்' என பிதற்றியபோது அன்றைய பிரதமர் நேரு அதை அமைதியாகச் சமாளித்தார். பாபு ராஜேந்திர பிரசாத்தும், டாக்டர் ராதாகிருஷ்ணனும், ஜாகிர்உசேனும் மரியாதைக்குரியவர்களாக மதிக்கப்பட்டனர்.
இந்திராகாந்தி தான் குடியரசுத்தலைவருக்குரிய மதிப்பீடுகளை குலைத்துப்போட்டவர். தியாகத்தலைவர்களிடமிருந்து திசை மாறி பயணித்து, வி.வி.கி.ரியை வீராப்பாக வெற்றி பெறச் செய்து முதன் முதல் குடியசுத் தலைவர் பதவியை சர்ச்சைக் குள்ளாக்கியவர் இந்திராகாந்தி.
"இந்திராகாந்தி சொன்னால், துடைப்பமெடுத்து தரையை பெருக்குவேன்" என்றார் ஜெயில்சிங்! அன்றைக்கே வீழ்ந்து விட்டது அந்த பதவியின் கௌரவுமும், மரியாதையும். இந்திராகந்தியின் கண் அசைவுகளுக்கேற்ப காரியங்களை நிறைவேற்றினார் பக்ருதீன் அலிஅகமது. அந்த வரலாற்றின் நீட்சியாகத்தான் இன்றைய நிகழ்வுகளைப் பார்க்கவேண்டும்.
கே.ஆர். நாராயணன் என்ற மாபெரும் திறமைசாலி, நேர்மையாளர் குடியரசுத் தலைவரானதால் தாழ்த்தப்பட்ட சமுதாயம் தழைத் தோங்கி விடவில்லை.
அப்துல்கலாம் என்ற அணு விஞ்ஞானி அதிகார உச்சத்தை அடைந்ததால் சிறு பான்மை சமூகம் சிறப்புபெற்று விடவில்லை. அதேபோல் பிரதீபாபட்டீல் என்ற பெண், முதல் குடிமகளாய் வந்துவிட்டதால் பெண்குலத்திற்கு எந்த பிரயோஜனமும் கிடைக்க வழியில்லை.
இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகும் 1948 ஜீன் வரை மௌண்ட்பேட்டனையே கவர்னர்ஜெனரலாக இருக்கும்படி கைப்கூப்பி வணங்கியவர்களல்லவா நாம்!
அடிமை தளையிலிருந்த அறுப்பட்டு 60 ஆண்டாக போகிறது இந்திய தேசத்திற்கு! ஆனால் நாம் இன்னும் அடிமை மனோபாவத்திலிருந்து அகலாமல் 'பிரிட்டீஷ் வெஸ்ட் மினிஸ்டர்' பாணி அரசியல் அமைப்பை பின்பற்றி, 'இங்கிலாந்தில் அரசர் எப்படியோ அப்படியே இந்திய குடியரசுத்தலைவர்' என்று செயல்படுகிறோம்.
சுதந்திரமாக செயல்படமுடியாத சுதந்திர இந்தியாவின் முதல் குடிமகனுக்கோ அல்லது குடிமகளுக்கோ நாம் சூட்டியுள்ள பெயர் தான் குடியரசுத்தலைவர்.
வாழ்க நம் அடிமை ஜனநாயகம்.
மன்னராட்சி மாண்புகள்
கோடான கோடி மக்கள் ஒண்ட குடிசையின்றி, ஒட்டி வயிர்களுடன் பிளாட்பாரவாசிகளாய் வாழும் இந்தியாவில் குடியரசுத்தலைவர் வாழ்வதற்குரிய மாளிகையின் பரப்பளவு 330ஏக்கர்! அவருக்கு அங்கே சேவை செய்ய 1500 பணியாளர்கள். மன்னராட்சியின் மாண்புகளை நினைவு கூர்வோமாக.

சேது பாலம்- சிலதகவல்கள்

சாவித்திரிகண்ணன்
லகின் முதல் மனிதனான ஆதம்சும்,ஏவாளும், இலங்கையில் உளள ஈடன் தோட்டத்தில் தான் வாழ்ந்தார்களாம்.அப்போது கடவுள் 'வேண்டாம்-பறித்துவிடாதீர்கள்' என்ற கனியை அவர் பறித்து புசித்தார் என்பதெல்லாம் காலங்காலமாக சொல்லப்பட்டுவரும் கதையாகும். அந்த ஆதம்ஸ் வாழ்ந்ததற்கான அடையாளங்கள் இன்னும்இலங்கைத் தீவில் காணக்கிடைக்கின்றன. ஒரு சமயம் ஆதம்ஸ் இலங்கையிலிருந்து தென்னிந்தியாவிற்கு கடல் மார்க்கமாக கால்களால் நடந்துவந்த பாதையே கடலடி மணற்திட்டுகளால் ஆனபாதையே இன்று விவாதத்திற்கு உள்ளாகியுள்ளது. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னாலான இந்த நம்பிக்கையை கருத்தில் கொண்டே உலக அளவில் அந்த மணல் திட்டுகள் இதுவரை ஆதம்ஸ்பாலம் என அறியப்பட்டு வந்துள்ளது. எந்த நாட்டு உலகவரைபடத்திலும் அது ஆதம்ஸ்பாலம் அன்றே எழுதப்பட்டுளளது. ஆக, உலகின் கிறிஸ்த்துவர்களுக்கும், இஸ்லாமியர்களுக்கும் பொதுவாணவர்தான் ஆதாம். கிறிஸ்த்துவர்களின் பைபிள் படியும், இஸ்லாமியர்களின் குரான்படியும் ஆதாம் தான் கடவுள் சிருஷ்டியின் முதல் மனிதன். மூலபுருஷன். ஆனால் இதுவரை இதற்கு அவர்கள் உரிமை கொண்டாடவோ, புனிதம் கற்பிககவோ புறப்படவில்லை... என்பது ஒரு புறமிருக்க, இநத 30கி.மீ நீளமுளள கடலடிமணற்திட்டானது தலைமன்னாருக்கும், தனுஷ்கோடிக்கும் இடையில் இந்தியாவையும், இலங்கையையும் இணைக்கும் ஒரு இயற்கையின் அம்சமாக இருந்துளளது என்பது மறுகக முடியாத உண்மை, ஆங்காங்கே கண்ணுக்கு தெரிந்தும், தெரியாமலும் இருக்கும் இநத மணற்திட்டின் மேல், மேலும் கற்களைக் கொட்டி பாதை அமைக்கும் முயற்சிகள் இராமர் காலத்தில் நடந்திருக்க கூடும் என்று யூகிப்பவர்களும் இருக்கிறார்கள்.

காசில்லாமல் கடவுளைப் பார்ககமுடியாது

சாவித்திரிகண்ணன்
1799-ல் சர்.வில்லியம் ஜோன்ஸ் என்ற ஆங்கிலேயரால் அரசாங்க கெஜட்டில் இந்துமதம் என்று பதிவாவதற்கு முன்பு இந்தியாவில் இந்துமதம் என்ற சொற்றொடரே கிடையாது. பற்பல தெய்வங்கள், நம்பிக்கைகள், வழிபாடுகள் கொண்டிருந்த பாரத தேசத்தின் இதனை மதமாக குறிப்பிட விருமபாமல் 'சநாதனதர்மம்' என்றே பொதுவாக பெயரிடடனர். ஒவ்வொரு அரசர்களும், செல்வந்தர்களும் பிரம்மாண்டமாக கோவில்களை, கட்டியதற்கான காரணம் மக்களுக்கு ஏதோ ஒரு தெய்வநம்பிக்கை இருந்தால் ஒழுக்க நெறிசார்ந்துவாழ்வார்கள் என்பதாகும். அந்த கோயில்களுக்கு மக்களை வரவழைக்கும் விதமாகவே அரிய சிற்பங்களை அங்கு வடித்தனர். பற்பல கலைநிகழ்ச்சிகளை கோயில்களில் அரங்கேற்றினர். பசித்தோர் வந்துண்ணும் அன்னசாலையாகவும் ஆலயங்கள் விளங்கின. ஆனால் சமீபத்தில் கோயில்கள் வியாபார ஸ்தலங்களாக விஸ்வரூபமெடுத்து வருகின்றன. காஞ்சிபுரம் மாவட்டத்தில் சில முக்கிய கோயில்களை நாள்தோறும் குறிப்பிட்ட நேரத்திற்கு இழுத்து, மூடி பணம்கொடுத்தால் கோவிலுக்குள் விடுகின்றனர். வசதியற்றவர்கள் கோவில் பிரகாரத்திற்கு கூட வரவழியின்றி வாசலிலே தவம் கிடக்கின்றனர். கோயில்களின் வருமானத்தை பெருக்க சிறப்பு நுழைவுக்கடடணம் என்ற நடைமுறை ஏற்கெனவே உளளது. பொதுவழியில் பொதுமக்கள் நுழைவதற்கு சென்னையில் உளள கபாலீஸ்வரர், பார்ததசாரதி கோயில்களிலே கூட தடைசெய்தது இல்லை. ஆனால் புராதன கோயில்நகரமான காஞ்சியில் இப்படிப்பட்ட போக்குகள் இருப்பது பக்தர்களுக்கு வேதனை ஏற்படுததுவதாக உளளது. இது தொடர்பாக நியாயம் கேட்கும் பொதுமக்களை நிர்வாக அதிகாரிகளும், பணியாளர்களும் அலட்சியப்படுத்துவதும், அவமானப்படுத்துவதும் தொடர்கதையாகிவிட்டது. புண்ணியஸ்தலங்களான கோயில்கள் பணம்பறிக்கும் பாவஸ்தலங்களாக பரிணாம வளர்ச்சி கண்டுவிட்டதா? 'கோயில்கள்வேண்டாம் என்று கூறவில்லை கோயில்களின் கொள்ளை அடிப்பவர்களின் கூடாரங்களாகிவிடக்கீடாது என்றே சொல்கிறோம் என பராசக்தியில் வசனம் எழுதிய கலைஞர் ஆட்சியின் அறநிலையத்துறை ஆவண செய்யுமா?

மீடியா யுத்தம்

சாவித்திரிகண்ணன்
தி.மு.கவிற்கும், சன்குழுமத்திற்கும் இடையே ஏற்பட்ட பிரிவைத் தொடர்ந்து பல பிரம்மாண்டமான மாற்றங்கள் மளமளவென்று விஷூவல் மீடியாவில் விரியத் தொடங்கியுளளது. அரசாங்கமே கேபிள் டி.வி கார்ப்பரேஷன் ஆரம்பிக்கும் என்ற அறிவிப்பு வெளியானது. தமிழ்நாட்டில் சுமார் 80% கேபிள் இணைப்புகள் எஸ்.சி.வி எனப்படும் சுமங்கலிகேபிள் விஷனில் நேரடி மற்றம் மறைமுக கட்டுப்பாட்டில் தான் உளளன. இந்நிலையில் அரசு அறிவிப்பிற்கு அனைத்து கேபிள் ஆபரேட்டர்களும் பெரும் ஆதரவு தெரிவித்தனர். தமிழக அரசின் கேபிள் இனைப்பு அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்கக்கூடும் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது. இச்சூழலில் தொழில் நுட்பத்தின் அடுத்தகடடமான டிஷ்ஆண்டெனா மூலம் (டிடி.ஹெச்) தொலைக்காட்சி ஒளிபரப்புகளை நேரடியாக செயற்கைகோளிலிருந்து வீடுகளுக்கு பெறும் முறையை சன்குழுமம் மார்கெட்டிங் செய்ய ஆரம்பித்து இந்த விற்பனையும் சூடுபிடித்துளளது. ஏற்கெனவே ஜீ.டி.வி.யின் டிஷ் ஆண்டெனாவும், டாடாஸ்கையும் மார்கெட்டில் உள்ளன. இவை சமுமார் 4000ரூபாய் செலவில் செயல்படுத்தக்கூடியதாக்கும். ஆனால் சன்குழுமம் சுமார் ஆயிரம் ரூபாய் முதலீட்டில்மடிஷ்ஆண்டெனா தருவதாகவும் மாதம் 75ரூபாய் கட்டினால் போதுமென்றும் களத்திற்கு வந்துள்ளது. கேபிள் ஆபரேட்டர்கள் கதி கலங்கிபோய் சன்குழுமத்திற்கு எதிராக ஒருநாள் ஒளிபரப்பை நிறுத்தி போராடினார்கள். எவ்வளவுதான் டிஷ்ஆண்டெனா வந்தாலும் அமெரிக்கா போன்ற வெளிநாடுகளிலேயே 60சதவிகிதத்தினர் கேபிள் இணைப்பு மூலம் தான் தொலைக்காட்சிபார்க்கின்றனர். காரணம் அங்கே பைபர் ஆப்டிகலில், பிராட்பேண்டில், டிஜிட்டல் கேபிள் இணைப்பு தரப்படுகிறது. இதன் மூலம்இன்டர்ணெட் தொலைபேசி உள்ளிடட மற்றும்பல சேவைகளையும் துல்லியமாகப் பெறமுடிகிறது. ஆகவே அப்படிப்படட தொழில்நுட்பத்தை எந்த நிறுவனம் எடுத்து வருகிறதோ அதற்குத் தான் எதிர்காலம் இருக்கிறது. தமிழ்நாட்டில் இப்படி பைபர்ஆப்டிகல் மூலமான கேபிள் இணைப்புக்கு ரிலையன்ஸ், ஹாத்வே போன்ற நிறுவனங்கள் தயாராக உளளனவாம். ஆக பலரும் களத்திற்கு வந்தால் அதில் தரமான, விலை நியாயமான சேவையை தேர்ந்தெடுக்கும் உரிமை திருவாளர் பொது ஜனத்தின் வசம் வந்துவிடும்.

Friday, October 12, 2007

சேதுசமுத்திர திட்டம்; பேசமறுக்கும் உண்மைகள்;

ண்மைகளை உறங்கவைத்துவிட்டு, பொய்களுக்கு மட்டுமே போஷாக்கு தந்து கொண்டிருக்கும் தந்திரமே-உன்பெயர்தான் அரசியலோ....! என்று எண்ணத் தோன்றுகிறது. இனி என்னவாகும் சேதுசமுத்திர திட்டம்?
திட்டத்தை மாற்றுப்பாதையில் செயல்படுத்துதைக் குறித்து தன்னுடைய பதிலைக் கூற நீதிமன்றத்திற்கு மூன்று மாதகால அவகாசம் கேட்டுள்ளது மத்திய அரசு. இதற்குள் அடுத்த நாடாளுமன்ற தேர்தல் நெருங்கிவிட்டது.
தொல்லியல் துறை கருத்தை சொன்னதிலேயே 'தொலைந்துவிடுவோமோ' என பயந்த மத்திய அரசுக்கு இனி இராமர் பாலத்தின் மீது கைவைக்கும் தைரியம் வரப்போவதில்லை. அப்படி கைவைத்தால், 'காங்கிரஸ் காணாமல் போய்விடும். பா.ஜ.க காலூன்றிவிடும்.' என்ற யதார்த்தங்களை புறக்கணிக்க மத்திய அரசு தயாராக இருக்காது. இந்நிலையில் மத்திய கூட்டணி அரசில் இடம்பெற்றுளள தி.மு.க காங்கிரஸூடன் கலந்தாலோசித்து இணக்கமான ஒரு முடிவுக்கு வராமல் தானடித்த மூப்பாக இந்தப் பாதையில் மட்டுமே இத்திட்டத்தை செயல்படுத்த முடியும் என்று அறிவித்துவிட்டது. மத்திய அரசிடம் மாற்று கருத்து தனக்கு ஏற்பட்டுவிட்டது என்பதை உணர்தத தமிழகத்தில், 'உண்ணாவிரதம்', 'பந்த்' என இரண்டையும் ஒரு சேர நடத்திமுடித்துவிட்டது.இங்கே உண்மைகள் மறைக்கப்பட்டு ஒரு ஊமை நாடகம் அரங்கேற்றப்பட்டு கொண்டுள்ளது. கட்சிகள் பேச மறுக்கும் உண்மைகளை நாம் கொஞ்சம் கவனிப் போமாக.
தி.மு.க பேச மறுக்கும் உண்மைகள்:
தமிழர்களின் தலை எழுத்தையே மாற்றிவிடக்கூடிய 150 ஆண்டு கனவு நிறைவேறப் போகிறது என்றோம். ஆனால் சேது சமுத்திரதிட்டம் இப்போது சிக்கலாகிவிட்டது. தூர்வாரிய பிறகும், ஆழப்படுத்திய பிறகும் மீண்டும், மீண்டும், காற்று மற்றும் கடலலைகளின் போக்கால் சேறும், மணலும் பல ஆயிரம் டன் சேருவதால் மன்னார்வளைகுடா பகுதியில் செலவு தான் கூடிக்கொண்டிருக்கிறதே தவிர செயல் வடிவம் கிடைத்தபாடில்லை! திட்ட மதிப்பீடு 2427 கோடியிலிருந்து இரு மடங்காக எகிறிவிட்டது. ஏறத்தாழ 5000கோடி ஒதுக்கினால் தான் சேது சமுத்திர சாத்தியமாகும். இந்த கூடுதல் நிதியை ஒதுக்க, செயல்படுத்த பொருளாதார ரீதியாக இத்திட்டம் வெற்றிகரமானது என்றுசொல்ல முடியவில்லை. இவ்வளவு செலவழித்தாலும் இத்திட்டத்திற்கு செலவழித்த பணத்தை ஒரு போதும் திரும்ப எடுக்க முடியாது என்ற கருத்து வலுப்பெற்றுள்ளது. இப்படிப் பட்ட இக்கட்டான சூழ்நிலையில், பா.ஜ.கவின், "இராமர் பாலம் காப்போம்", கோஷம் எங்களுக்கு கைகொடுத்துள்ளது. இது தான் சாக்கு! 'தமிழர்களின் லட்சியக்கனவு, பொருளாதார ரீதியில் தமிழகத்தை பூத்து குலுங்க வைக்கும் திட்டம்' என்ற மாயைகளை விலக்கி கொள்ளாமல், வில்லன் பழியை பா.ஜ.கவின் மேல் போட்டாயிற்று. 'திட்டத்தின் மதிப்பீடு இரு மடங்காகிவிட்டது, அதற்கான நிதி ஆதாரத்திற்கு அனுமதியில்லை. அப்படியே கிடைத்தாலும் இது வெற்றிகரமான திட்டமில்லை. ஆழம்தெரியாமல் காலைவிட்டுவிட்டோம். மூழ்கிச்சாவது முட்டாள்தனம், கால்களை எடுத்துக் கொள்வோம். காரணங்களை மறைத்துக் கொள்வோம்'
பா.ஜ.க பேச மறுக்கும் உண்மைகள்:
பாபர் மசூதியை இடிக்க முடிந்ததே தவிர இன்று வரை அங்கே ராமர்கோயிலை கட்டி எழுப்ப முடியவில்லை. இப்போது அயோத்தி பிரச்சினையைப் பேசும் அருங்கதையை இழந்துவிட்டோம். அடுத்ததாக சங்கராச்சாரியர் கைது விவகாரமும் சரிவர கைகொடுக்கவில்லை. அடுத்த ஆண்டு வரும் தேர்தலுக்கு ஒட்டு அறுவடைக்கு என்ன செய்ய? என அங்குமிங்கும் அலை பாய்ந்து கொண்டிருந்த நேரத்தில் தி.மு.க தானாகவே வந்து தாரை வார்த்து தந்தது தான் ராமர் பாலவிவகாரம். தி.மு.க காட்டிய பிடிவாத அணுகுமுறை! மாற்று வழி முறைகளை பரிசிலீக்க மறுத்ததுமற்றும் அதன் இந்துமத துவேஷமும் பா.ஜ.கவிற்கு பலம் சேர்க்க உதவிற்று. எப்படி பார்த்தாலும், எந்த வழியில் செயல்படுத்தினாலும் ஆதம்ஸ் பாலம் எனப்படும் 30 கி.மீ நீளமுள்ள ஏழு மணல்திட்டுகளைக் கொண்ட -5 அடிமுதல் 11 அடிவரையே ஆழம் கொண்ட- அந்த பாதையை பிளந்து தான் சேது சமுத்திர கால்வாய் சாத்தியமாகும். பா.ஜ.க நம்பும் பகுதிவரை மட்டுமே ராமர் நடந்துவந்து மீதிப்பாதையை நடக்காமலேயே பறந்து சென்றுவிட்டரா? என்பதை யாரும் கேட்கவில்லை இப்போதைக்கு ராமர்பாலம் என்பது வருகிற தேர்தலுக்கு கைகளில் வழுக்கி விழுந்த 'ஜாக்பாட் பரிசு' அவ்வளவே!.
காங்கிரஸ் பேச மறுக்கும் உண்மைகள் :
சிறுபான்மை அரசு என்பதால் தி.மு.க தந்த நிர்பந்தத்தால் சேது சமுத்திர திட்டத்தை பொருளாதார ரீதியாக, சுற்றுச்சூழல் ரீதியாக, பூகோள ரீதியாக பலனா? பாதகமா? என ஆராயமல் ஏற்றுக் கொண்டு விட்டோம். இன்று எல்லாவகையிலும் பாதகம் என அறியவந்த நிலையிலும் அதை அறிவிக்கத் தயக்கமாயுள்ளது. திட்ட மதிப்பீடு 2427 கோடியிலிருந்து இரு மடங்காக எகிறியுளள நிலையில் அதற்கு நாடாளுமன்ற ஒப்புதலை பெற முடியாது . இதுவரை நிதி திரட்டி தந்த ஆக்ஸிஸ் வங்கியும் நிச்சயமாய் இனி உதவமுடியாது என கைவிரித்துவிட்டது. தி.மு.கவின் இந்துமத துவேஷத்தை ஏற்கவும் வழியின்றி, எதிர்க்கவும் வழியின்றி இரண்டுங்கெட்டானாய், இருதலைக் கொள்ளியாய் இருப்பு கொள்ளாமல் தவிக்கிறோம், சேதுசமுத்திரதிட்டம் செயல்படுதத முடியாதது என்பதை சொல்லமுடியவில்லை. அ.தி.மு.க பக்கம் கதவு அடைபட்டு இருப்பதால் தி.மு.கவை விட்டால் வேறு திடமான துணையில்லை. விரும்பவும் முடியாத, வெறுத்தாலும் காட்டிக் கொளள வழியின்றி தி.மு.கவை வைத்திருக்கிறோம். தமிழகத்தில் தி.மு.க, அ.தி.மு.க தவிர்தத மூன்றாவது அணி பலம் பெற்று அதில் காங்கிரஸ் பங்கு பெற்றால் பல உண்மைகள் வெளிவரலாம்.
சிறுபான்மையினர் பேசமறுக்கும் உண்மைகள்:
உலகவரைபடங்கள் அனைத்திலுமே தலைமன்னாருக்கும். தனுஷ்கோடிக்கும் இடையிலான அந்த கடலடி மணற் திட்டுகள் ஆதம்ஸ் பாலம் என்றே அறியப் பட்டு வந்துளளது. ஆதாம் என்பவர் தான் கிறிஸ்த்துவ சிந்தாந்தப்படியும், இஸ்லாமிய சிந்தாந்தப்படியும், உலகின் முதல் சிருஷ்டி, கடவுளால் உருவாக்கப்பட்ட முதல் மனிதன். அவர் இன்றளவும் இருக்கும் இலங்கையின் ஈடன் தோட்டத்திலிருந்து இந்த வழியே தென்னிந்தியா வந்ததை குறிக்கும் வகையில் தான் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இந்த மணல்திட்டுகளுக்கு 'ஆதம்ஸ் பாலம்' என பெயரிடப்பட்டது. அகில முழுமையும் இது, 'ஆதம்ஸ் பாலம்' என்றே அறியப்பட்டுவந்துள்ளது. அதை ராமர்பாலம் என பா.ஜ.க அழைத்த நிலையில் நாங்கள் அதை 'ஆதம்ஸ் பாலம்' தான் என அறுதியிட்டு கூறி, அதன் மூலம் மதச்சார்ப்பறற காங்கிரஸூக்கும், தி.மு.க.விற்கும் சங்கடத்தை உருவாக்க விரும்பவில்லை. எப்படியோ சேது சமுத்திர திட்டத்தை நிறுத்திய பழி எங்கள் மேல் விழவில்லை.
சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் பேசி வந்த உண்மைகள்:
சேது சமுத்திரதிட்டம் சுற்றுச் சூழலை சீரழிகக கூடியது. உலகில் அரியவகை உயிரினமான பவளப்பாறைகள் பல தீவு கூட்டங்களாக இந்த மன்னார்வளைகுடாவில் இயற்கை மாளிகைகள் அமைத்துள்ளன. இந்த இயற்கை அரண்களே இராமேஷ்வரம், இராமநாதபுரம், தூத்துக்குடியை இதுவரை அழிவிலிருந்து காப்பாற்றியுள்ளன. பல்லாயிரக்கணக்கான கடல்வாழ் உயிரினங்கள், கடற்பசு, டால்பின்கள், கடல்ஆமை, கடற்குதிரை போன்றவை சேதுதிட்டசெயல்பாடுகளால் காலாவதியாகிவந்தன. இனி ஒரளவு காப்பாற்றபட போகின்றன. கோடிக்கணக்கான ரூபாய் பெருமானமுள்ள மீன்வலைகள் இத்திட்ட செயல்பாடுகளால் இதுவரை அறுபட்டு நாசமடைந்துள்ளன. ஆதம்ஸ் பாலம் என்ற அபூர்வ மணல்திட்டுகளை அழிக்க கூடாது. அவை சுனாமியிலிருந்து தென்னிந்தியாவை காப்பாற்றும் இயற்கை அரண்களாகும். சூயஸ், பனாமாகால்வாய் போன்றவை நிலத்தை வெட்டி கடல்களை இணைத்தவை. ஆனால் சேதுபகுதியிலோ சேறும், மணலும் இடையறாது சேர்ந்து கொண்டிருப்பதால் கடலை ஆழப்படுத்த வழியில்லை இது இயற்கைக்கும், மீனவர் நலன்களுக்கும் எதிரான திட்டம். இன்று உண்மை உணரப்பட்டுவிட்டது. சுற்றுச்சூழல் ஆர்வலர்களால், விஞ்ஞான பூர்வமான உண்மைகளைச் சொல்லி தடுத்து நிறுத்த முடியாத திட்டத்தை மதவாதிகள் ராமர் பெயரை வைத்து நிறுத்திவிட்டனர்.
எப்படியோ ராமர் கலகம் நன்மையில் முடிந்தது.