Thursday, May 24, 2007

சர்வாதிகார சாம்ராச்சியம் நடத்திய சன்குழுமம்



-சாவித்திரி கண்ணன்

சந்தேகத்திற்கு இடமின்றி தெளிவாகப் புரிந்து விட்டது. சன் தொலைக்காட்சிகுழுமத்தின் அசுரமான ஊடக பலம் கழகவளர்ச்சிக்கு கைகொடுக்கும் என்பது கனவானது. அது கட்சியை கபளிகரம் செய்யத்துடிக்கிறது என்பது நிருபணமாகிவிட்டது.

கருத்துகணிப்பு என்பதாக தினகரன் திணித்து வந்த கருத்தாக்கங்கள், தமிழ்நாட்டில் தயாநிதியை தனிப்பெரும் தலைமை சக்தியாக அடையாளப்படுத்த எடுக்கப்பட்ட சூட்சும திட்டங்கள் என்பது சுளீரென உரைத்தது கருணாநிதிக்கு!காலங் கடந்து இதை கண்டுணர்ந்தார் கருணாநிதி எனினும், 'தன் காலம் முடிந்து போகும் முன்பே சுதாரித்து கொண்டார்தலைவர்' என்பது தான் கழக உடன் பிறப்புகளிடம் மட்டுமல்ல குடும்ப உறவுகளிடமும் நிம்மதியை உருவாக்கியது.

தமிழ் நாட்டிலிருந்து மத்திய அமைச்சர் ஆனவர்களில் சிறப்பாக செயல்படுபவர் யார்? என்ற கருத்துகணிப்பில் தயாநிதிக்கு 66 மதிப்பெண்ணும், ப.சிதம்பரத்திற்கு 24 மதிப்பெண்ணும் , அன்புமணிக்கு 2மதிப்பெண்ணும் தந்து, கூட்டணிக்குள் குழப்பம் உண்டானாலும் பரவாயில்லை தம்பி தயாநிதியின் தகுதியை முன் நிறுத்த வேண்டும் என்று கலகத்திற்கு தயாரானார் கலாநிதி. தனக்குதானே கிரிடம் சூட்டிக்கொள்வது என்பது ரத்தவழியாக தாத்தா கருணாநிதியிடம் கண்டுணர்ந்த பால பாடம் அல்லவா? ஆக, இன்னும் கூட புரிந்து கொள்ளதவர்களுக்கு இப்போதாவது உணர்த்த வேண்டாமா...? இன்னும் எத்தனை காலம் தான் அன்புப் பிள்ளை ஸ்டாலினை தூக்கி, கக்கத்தில் இருத்தி, 'இவன் தான் அடுத்தவாரிசு' என அறிவிக்க முடியாமல் அறிவுறுத்திக் கொண்டிருப்பார்.

அவரோ பாவம் முப்பது வருட பயிற்சிக்குப்பின் கருணாநிதியின் முழங்காலளவுக்குத்தான் வளர்ந்திருக்கிறார்.... ஆனால் மூன்றே ஆண்டுகளில் தயாநிதி கருணாநியின் கழுத்திற்குமேல் வளர்ந்து விட்டார். இந்தியாவே போற்றும்இளம் அமைச்சர் தமிழ்நாட்டிற்கு தலைமை தாங்கக் கூடாதா...? என்று 'கார்பரேட் தாதா' கலாநிதிபோட்ட அவசர கணக்கில் உருவான கருத்துகணிப்பு எல்லாவற்றையும் அலங்கோலமாக்கிவிட்டது.


கருணாநிதியின் வாரிசாக மு.க ஸ்டாலினுக்கு 70 சதவிகிதமும் மு.க அழகிரி, கனிமொழிக்கு தலா 2 சதவிகிதமும், மற்றவர்கள் என்பதாக 20சதவிகிதமும் வழங்கப்பட்டிருந்த கருத்துகணிப்பில் அந்த மற்றவர்கள் என்ற பெயரில் மறைந்து கொண்டிருப்பது தயாநிதிமாறன் என்பதை தயக்கமின்றி புரிந்துகொண்டார்கருணாநிதி.


இந்தப்பின்ணணியில் தான் அழகிரி ஆதரவாளர்கள் ஆவேசம் கொண்டு பத்திரிகைகளை எரித்து, பஸ்களை உடைத்து செயல்படும் செய்தி காலை 9.30க்கே மணிக்கே கவனத்திற்கு கொண்டு வரப்பட்டபின்பும், காவல் துறைக்கு தலைமைதாங்கும் அமைச்சரான அவர், காவல் துறையினருக்கு நிலைமைகளை கட்டுப்படுத்தும் கட்டளைகளை பிறப்பிக்கவில்லை, பிறகு 11மணியளவில் தான் தினகரன் அலுவலகம் தீயிட்டு கொளுத்தப்பட்டு, மூவர் மூச்சு திணறி இறந்தனர்.


கருணாநிதி உயிரோடு இருக்கும் போது அவரது அடுத்த வாரிசு குறித்த விவாதத்தை 'தினகரன்' மக்களிடம் நடத்தியது. அவரது நீண்ட ஆயுளை வேண்டி அவரது மனைவியும், துணைவியும் நித்தநித்தமும் பல பூஜை புனஸ்காரங்கள், யாகங்கள், வேள்விகள் நடத்தி கொண்டிருக்கும் சூழலில் குடும்பத்தினரிடம் கோப உணர்வே மேலோங்கியது.


இந்த சூழலில் தான் மதுரையில் அழகிரி ஆதரவாளர்கள் ஆவேசம் கொண்டு நர்த்தனமாடியதை அமைதியாக வேடிக்கை பார்த்தது காவல் துறை. மதுரையில் கலவரம் ஆரம்பித்தவுடன் முதல்வர் கருணாநிதி அழகிரியை தொடர்பு கொண்டு பேசினார் என்றும் பத்திரிக்கைகளில் செய்தி அடிப்பட்டது இதற்கு பிறகு தான் மீண்டும் தினகரன் அலுவலகத்திற்கு திரும்பிய தி.மு.க வினர் தீவைத்தனர். கலவரம் திசை மாறி போனது. ஆக காவல் துறையினரிடமும், அழகிரியிடமும் முதல்வர் தொடர்பு கொண்டபிறகே விபரிதங்கள் நடந்தேறின.


இதனால் தான் அவ்வளவு அத்துமீறல்களுக்குபிறகும் அவமானப்பட ஏதுமின்றி அழகிரியை சிறப்புபாதுகாப்புடன் சென்னைக்கு வரவழைத்ததும், முதல்நாள் பிரதமர் நிகழ்ச்சியில் பிரதானமாக முன் வரிசையில் அமரவைத்ததும், அடுத்த நாள் சட்டமன்றத்திற்குள்ளேயே, அழகிரி சகஜமாக வந்து சென்றதும், நடைப்பட்டுகொண்டிருப்பது சன், தினகரன் குழுமத்திற்கும், அழகிரிக்குமான பிரச்சினையல்ல. இது கட்சிதலைவரான கருணாநிதிக்கும், ஊடக செல்வாக்கில் ஓங்கிநிற்கும் சன், தினகரன் குடும்பத்திற்குமான பிரச்சினை என்பதே பிரதியட்ச உண்மையாக வெளிப்பட்டது.


கருணாநிதியின் கசப்புணர்வை புரிந்து கொள்ள வேண்டுமெனில் மாறன் குடும்பத்தின் பின்னணி, சன், தினகரன் குடும்பத்தின் அசுர பலத்திற்கு அச்சாணியாக விளங்கிய கருணாநிதியின் அரசியல் பலம் போன்றவைகளை பின்னோக்கிப் பார்க்க வேண்டும். நியாயங்களை புரிந்து கொள்ளலாம்.


மணம் வீசாத பூமாலை


1989-ஆம் ஆண்டு- 13வருட வனவாசத்திற்கு பிறகு மீண்டும் தி.மு.க அரியனை ஏறிய- அந்தகாலக்கட்டத்தில் தான் 'பூமாலை' என்ற வீடியோ இதழை விற்பனைக்கு கொண்டுவந்தனர் மாறன் சகோதரர்கள். இதற்கு முன்பு ஏக்நாத் என்பவரின் திரைபட செய்திகளை கூறும் வீடியோ இதழ் ஒன்று விற்பனையில் இருந்தது. பூமாலை இதழுக்கென்று புதிதாக யாரையும் வேலைக்கு அமர்த்தாமல் குங்குமம், முத்தாரம், வண்ணத்திரையில் பணியாற்றிய பத்திரிக்கையாளர்களையே சம்பளமில்லாத செய்தியாளர்களாக, பேட்டியாளர்களாக பயன்படுத்திக்கொண்டனர் மாறன் சகோதரர்கள்.


வீடியோ கடைகள் மற்றும் நூலகங்களின் வாயிலாக விற்பனைக்கு கொண்டு செல்லப்பட்ட இந்த வீடியோ இதழை விரும்பி பார்க்க ஆளில்லை. ஆனால் ஆட்சி அதிகாரம் தி.மு.க வசமிருந்த காரணத்தால் விற்க மறுத்த வீடியோ நூலகத்தினர், 'வில்லங்கத்தில் மாட்டநேரிடும், ரெய்டு நடத்தி ஆபாச கேசட்டுகள் இருந்ததாக வழக்குப்போட்டு லைசென்ஸ் ரத்தாகக் கூடும் ' என எச்சரிக்கப்பட்ட சம்பவங்களெல்லாம் நடந்தேறியது.


1991ல் கருணாநிதி அரசு கவிழ்ந்தது. ஜெயலலிதா ஆட்சிக்கு வந்ததும் மாறன் சகோதரர்கள் மௌனமானர்கள். மணம்வீசாத, யாரும் விரும்பிச்சூடாத இந்த பூமாலை பிணத்தின் மீது சாத்தப்பட்ட மாலையாக, மண்ணோடு மண்ணானது. காமாலைப்போல் கண்களை உறுத்திய - கலைநேர்த்தியற்ற- பூமாலை இதழ் உதிர்ந்தது கண்டு உள்ளப்படியே உள்ளம் மகிழ்ந்தனர் வீடியோ கடைக்காரர்கள்.அதன் பிறகு ஈராண்டுக்காலம் இருக்கும் இடம் தெரியாமல், செய்யக்கூடியத்தொழில் இன்னதென்று தெளிவில்லாமல் மாறன் சகோதரர்கள் சும்மயிருந்தனர்.


சன் தொலைக்காட்சியின் தொடக்கம்


அக்டோபர் 1992ல் ஜூ தொலைக்காட்சி (Zee Tv) இந்திய தனியார் சேட்டிலைட் தொலைக்காட்சிகளின் முன்னோடியாக களத்திற்கு வந்தது. அது முதல் மாறன் சகோதரர்கள் தாங்களும் அதுபோல் தனியார் தொலைக்காட்சி ஆரம்பிக்க வேண்டுமென தந்தையை நச்சரிக்க தொடங்கினர்.


பத்திரிக்கையாளர் சசிகுமார் மேனன் என்பவர்தான் முதன் முதலில் தனியார் சேட்டிலைட் சேனல் பற்றிய அறிமுகத்தை முரசொலிமாறனுக்கு சொன்னவர். அவர் அரபு நாடுகளில் வாழும் மலையாளிகளுக்காக தினசரி நான்கு மணி நேரம் நிகழ்ச்சி தயாரிக்கும் வாய்ப்பு கிடைக்கப்பெற்றார் அதில் சுமார் அரை மணிநேரம் தமிழ் நிகழ்ச்சிகளை தயாரித்து தாருங்கள்' என மாறன் சகோதரர்களை அணுகினார். அப்போது அவரிடம்,'எப்படி இந்த வாய்ப்பு உங்களுக்கு கிடைத்தது' என தோண்டித்துருவி விசாரித்த முரசொலி மாறன் அவரிமிருந்து பெற்ற தகவல்களைக் கொண்டு, சசிகுமார் மேனனுக்கே தெரியாமல் அவரை முந்தி சென்று, சம்பந்தபட்டவர்களிடம் பேசி நேரடி வாய்ப்பை உருவாக்கிக் கொண்டார்.


சசிகுமார் மேனன் 'ஏசியானெட்' என்ற மலையாளச் சேனலை ஆரம்பித்த அதே நேரத்தில் தான் - ஏப்ரல் 1993ல் -சன் தொலைக்காட்சியை தமிழகத்தில் தோற்றுவித்தார் முரசொலி மாறன். அப்போது மாதமாதம் சேட்டிலைட் ஒளிப்பரப்பிற்காக செலுத்த வேண்டிய பணம் ஒரு பெரும் சுமையாக இருந்தது. எனவே மாறன் மாற்று வழிகளை ஆராய்ந்தார்.


'சன்' சேனலை நடத்த பெரும் பணம் தேவைப்பட்டநிலையில், அதற்காக இந்தியன் வங்கியை அணுகியபோது இணக்கமான பதில் கிடைக்கவில்லை இதனால் கட்சி சொத்தை -ஆயிரமாயிரம் உடன் பிறப்புகள் திரட்டி தந்த நிதியை- மந்தை வெளியிலுள்ள கும்பகோணம் சிட்டி யீனியன் வங்கியில் போட்டு, பெரியதொரு நிதி உதவி வங்கியிடமிருந்து வாங்கப்பட்டது .


1967 தொடங்கி தொடர்ந்து மாநிலங்களவை, மக்களவை உறுப்பினராகவும், அடுத்து வி.பி.சிங் ஆட்சியில் நகர்புற மேம்பாட்டுத் துறை மந்திரியாகவுமிருந்த முரசொலிமாறன், தொழில் அதிபர்கள் பலருக்கு பற்பல காரியங்களை நிறைவேற்றித்தந்து நெருக்கமாக உறவுகொண்டிருந்தார். மேக்னம் டாட்டியா என்ற தொழிலதிபர் பல ரிசார்டுகளை நடத்திவந்தார். அவருக்கு உலகின் பெரும்செல்வந்தரான புருனே சுல்தான் ரஷ்ஷிய சேட்டிலைட் காரிஜான்டரின் டிரான்ஸ்பான்டர் ஒன்றை பரிசாகத் தந்திருந்தார். அதை எப்படி பயன் படுத்துவதென யோசித்து கொண்டிருந்த டாட்டியாவிடம், முரசொலிமாறன் தனக்கு தரும்படி கேட்க, அவரும் தந்துவிட்டார். இப்படியாக கிடைத்த சேட்டிலைட் ஒளிப்பரப்பு உதவியுடன் தான் மாறன் சகோதரர்கள் சன் தொலைக்காட்சி ஒளிபரப்பை சங்கடமின்றி சமாளித்தனர். முரசொலி வளாகத்தில் இயங்கிய சுமங்கலி பப்ளிகேஷன்ஸ் நிர்வாகிகளே சன் தொலைகாட்சிக்கும் பொறுப்பேற்றனர். அதன்படி சன் தொலைக்காட்சியை முரசொலிமாறனை சேர்மனாகவும், மல்லிகா மாறன் மற்றும் தயாளு அம்மாளை இயக்குநர்களாகவும் கொண்டு ஆரம்பித்தனர். மேலும் கலாநிதி மாறன், தயாநிதிமாறன், மு.க.ஸ்டாலின் போன்றோர் பங்குதாரர்களாகப்பட்டனர். அப்போது கோடம்பாக்கம் முரசொலி அலுவலக வளாகத்திலேயே சன்தொலைகாட்சி செயல்பட்டது. குங்குமம், வண்ணத்திரை, முத்தாரம் பத்திரிகையாளர்கள் சிலரையே கூடுதலாக 500 ரூபாய் சம்பளம் தந்து சன் தொலைக்காட்சிக்கு பணிபுரியும் படி கட்டாயப்படுத்தினர்.


பிரகாசிக்கமுடியாத 'சன்'


நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் சன் தொலைக்காட்சியை நிமிர்ந்தும் பார்க்காத- விளம்பரத்தாரர்கள் பொருட்ப்டுத்தாத- அந்த நேரம் தூர்தர்ஷன் மட்டுமே தூள்கிளப்பிக் கொண்டிருந்தது.மாறன் சகோதர்களுக்கு படைப்பற்றல் கிடையாது. நிர்வாகத் திறமையும் இல்லை. பார்வையாளர்களை கவரமுடியவில்லை எவ்வளவோ அனுகூலங்கள் அமைந்தும் முதலிரண்டு ஆண்டுகள் மூச்சுத் திணறி நஷ்டப்பட்டது சன் தொலைக்காட்சி.


அதிகாரத்தால் அமைந்த வளர்ச்சி


மீண்டும் 1996-ல் கருணாநிதி ஆட்சிக்குவந்தார். உதயசூரியனின் அதிகாரச் சுடர் சன் தொலைக்காட்சியின் சாம்ராஜ்ஜியத்திற்கு வழிகோலியது. அப்போதைய தூர்தர்ஷன் இயக்குநராயிருந்த நடராஜன் கருணாநிதிக்கு உதவியாக பல கைங்கரியங்களைச் செய்து அரசு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை அவலத்திற்கு ஆளாக்கினார். மத்திய அரசிடம் சம்பளம் பெற்றுக்கொண்டு மாறன் மகன்களுக்கு மதியூகியாகச் செயல்பட்டார்.



அப்போது ஒவ்வொரு பண்டிகை நாளிலும் தூர்தர்ஷன் ஒளிபரப்பில் சிக்கல் வரும். பார்வையாளர்கள் வீட்டிலிருந்தபடியே தொலைப்பேசி வழியாக பங்கேற்கும் பல பிரபலநிகழ்ச்சிகளின் போது தொலைப்பேசி வயர்கள் துண்டிக்கப்படும். இப்படியாக சன் தொலைக்காட்சி பக்கம் மக்களை திருப்ப பல சதிதிட்டங்கள் அரங்கேறின. தூர்தர்ஷன் விளம்பரதாரர்களுக்கு தூண்டில் விரிக்கப்பட்டது. ஆட்சி அதிகாரமும் பல அனுகூலங்களை தந்தது. மத்தியில் வாஜ்பாய் அமைச்சரவையில் மாறனுக்கு தொழில், வர்த்தகத் துறை கிடைத்ததும் சன் தொலைக்காட்சிக்கு யோகம் அடித்தது. அப்பாவின் அதிகாரப் பலத்தால் மிகப்பெரிய தொழில் வர்த்தக நிறுவனங்களின் விளம்பரங்கள் சரசரவென வந்தது. சன் தொலைக்காட்சிக்கு! மளமளவென்று வெவ்வெறு மொழிகளில் சேனல்களைத் துவங்கினர். 2000ஆவது ஆண்டில் தி.மு,க ஆட்சியிலிருக்கும் போது, 'சுமங்கலி கேபிள் விஷன்' என்ற கேபிள் நெட்வொர்க் தொழிலை தயாநிதிமாறன் ஆரம்பித்தார். அது நாள் வரை சென்னையில் கேபிள் நெட்வொர்க்கின் 60சதவிகித்தை 'ஹாத்வே' என்ற வட இந்திய நிறுவனம் தன்வசப்படுத்தியிருந்தது. 40சதவிகிதம் ஆங்காங்கே சிறிய கேபிள் உரிமையாளர்கள் வசமிருந்தது. தயாநிதிமாறன் தடாலடியாக சென்னைகேபிள் ஆபரேட்டர்களை அழைத்து சொந்த முயற்சிகளை, ஒளிபரப்புகளை அப்படியே கைவிட்டு, சுமங்கலி கேபிள் விஷனின் கமிஷன் ஏஜென்டாகும் படி நிர்பந்தித்தார். மறுத்த கேபிள் ஆபரேட்ட்ர்கள் மிரட்டப்பட்டனர். சென்னை மாநகராட்சி ஸ்டாலின் வசமிருந்த காரணத்தால் கேபிள் ஆபரேட்டர்களுக்கு மாநகராட்சி அதிகாரிகள் தந்த தொல்லைகள் அவர்களை மண்டியிடச் செய்தன மாறன் சகோதரர்களிடம்!


'ஹாத்வே'யின்கேபிள் ஒயர்கள் ஆங்காங்கே அறுத்தெறியப் பட்டன. இந்நிறுவனம் பைபர் கேபிள் நெட்வொர்க் சிஸ்டத்திற்கு பலமான ஏற்பாடுகள் செய்துவிட்ட நிலையில் மாநகராட்சி அனுமதி மறுத்தது. மறுபுறம் தயாநிதி தந்த நெருக்கடிகளால் ஹாத்வேயின் கீழ் இருந்த கேபிள் ஆபரேட்டர்களில் 90சதவிகிதத்தினர் எஸ்.சி.வி வசம் மாறினர்.


இந்தியாவில் வேறெங்கும் இல்லை


இந்தியாவில் மும்பை, டெல்லி, ஹைதராபாத், கல்கத்தா உள்ளிட்ட எந்த நகரத்திலுமே இதுபோல் ஒட்டுமொத்த கேபிள் ஆபரேட்டர்களும் ஓரே குடையின் கீழ் சென்றதில்லை. குறைந்தது மூன்று,நான்கு நிறுவனங்களாவது ஒவ்வொரு நகரத்திலும் செயல்பட்டன. ஆனால் தனது அதிகாரபலத்தால் போட்டியாளர்களை அழித்தொழிக்கும் வேலையை அசராமல் செய்தது சன் குழுமம்.


தமிழகத்தின் பிரதான நகரங்கள் அனைத்திலும் இன்று எஸ்.சி.வியை எதிர்க்கவே ஆளில்லை . இதனால் தான் தமிழன் தொலைக்காட்சி, விண்தொலைக்காட்சி, தினத்தந்தியின் ஏ.எம்.என். நியூஸ் சேனல் உள்ளிட்ட தமிழ் சேனல்கள் தரக்குறைவான அலைவரிசைகளில் ஒளிப்பரப்பட்டு ஓரம்கட்டப்பட்டன. கேரளாவில் பிரபலமான 'ஏசியாநெட்' தொலைக்காட்சி தமிழில் 'பாரதி' தொலைக்காட்சியைத்தொடங்கி பற்பல தொல்லைக்களுக்காளாகி சன் குழுமத்தால் சவக்குழிக்குள் தள்ளப்பட்டது. இந்தியா டுடே குழுமத்திலிருந்து வெளிவரும் 'ஆஜ்தக்'சேனலை தமிழ்நாட்டிற்குள் ஒளிப்பரப்ப மறுத்துவந்தார் கலாநிதிமாறன். கருணாநிதி கைதான சம்பவத்தை மீண்டும் மீண்டும் வட இந்தியாவில் ஒளிப்பரப்பி மாறன் சகோதரர்களின் மனதில் இடம்பிடித்தது 'ஆஜ்தக்'. இதனால் உடனே 'ஆஜ்தக்' சேனல் தமிழ்நாட்டில் ஒளிப்பரப்ப ஒப்பந்தமானது . இதற்கு பிரதியுபகாரமாக இந்திய முதலமைச்சர்களின் நிர்வாகத்திறமை வரிசையில் ஜெயலலிதா ஆகக்கடைசியில் இருப்பதாக ஒவ்வொரு ஆண்டும் கருத்துகணிப்பு வெளியிட்டது இந்தியாடுடே.


இப்படியாக கேபிள் வலைப்பின்னல் மூலமாக தாங்கள் விரும்புவதை மட்டுமே- தங்கள் நலன் களுக்கு அனுகூலமானதை மட்டுமே-மக்கள் பார்வைக்கு கொண்டுச்செல்லும் சர்வாதிகாரம் மாறன் சகோதரர்கள் வசம்போனது. வியாபாரத்தில் கிடைத்த வெற்றி அரசியல் ஆசைக்கு அடித்தளமிட்டது. இந்த நிலையில் தான் தாத்தா கருணாநிதியிடம் முரசொலிமாறனுக்குப் பிறகான ஒரு அரசியல் முக்கியத்துவம் கருதி கலாநிதியும், தயாநிதியும் காய்நகர்த்தினார்கள். அரசியல் அதிகாரம் என்பது வியாபார எதிரிகளைவீழ்த்துவதற்கு எவ்வளவு உறுதுணையானது என்பதை அவர்கள் அனுபவ பூர்வமாக அறிந்திருந்தனர். அப்பாவின் அதிகாரபலத்தால் தானே முதலில் டிரான்ஸ்பாண்டரும், பிறகு மிக சுலபமாக வெளிநாடுகளிலிருந்து கருவிகளை இறக்குமதிச்செய்யும் TRAI லைசென்சும், இந்தியாவிலிருந்து நிகழ்ச்சிகளை ஒளிப்பரப்புவதற்கான WPC கிளியரன்ஸும் கிடைத்தது. ஆனால் ஜெ.ஜெ.தொலைக்காட்சியினர் இதுபோன்ற முயற்சிகளில் ஈடுப்பட்டு முடியாமல் போய், வழக்கம்போல் அத்துமீறி செயல்படமுயன்ற போது அன்னியசெலவானி மோசடியில் அகப்பட்டு அடங்கிப்போனர்கள்.


கருணாநிதியின் உடன் பிறந்த அக்கா சண்முகசுந்தரத்தம்மாளின் மகன் தான் முரசொலி மாறன்.'1967ல் தி மு க சட்டமன்றத்தில் பெரும்பான்மை பெற்று ஆட்சிக்கு வர நேரிட்ட போது முதலமைச்சர்பொறுப்பு ஏற்கவேண்டி பாராளுமன்ற உறுப்பினர் பொறுப்பை அறிஞர்அண்ணா ராஜூனாமா செய்தபோது, அந்த சீட்டை அண்ணாவிடம் மன்றாடி மாறனுக்கு பெற்றதந்தவரல்லவா கலைஞர். அந்த கலைஞர் இன்று கழகத் தலைவர். மாறனுக்கு தந்த முக்கியத்துவத்தை மகனும் கேட்டுப்பெற்றால் என்ன?" என்று குடும்பத்தினர் தந்த தைரியத்தில் தயாநிதியும் தயாரானார்.


ஏ.என். கல்யாண சுந்தர ஐயரின் மகள் தான் முரசொலிமாறனின் மனைவி மல்லிகா மாறன். தயாநிதியின் மனைவி பிரியா, ஹிந்து ரமேஷ் ரங்கராஜனின் குடும்பத்திலிருந்து வந்தவர். ஆண்டாண்டு காலமாக கட்சிக்கு ஊனும், உயிரும் தந்து உழைத்த உடன் பிறப்புகள் ஆயிரமாயிரமாய் இருக்க, அவர்களிலும் அறிவிற்சிறந்த. அரசியல் அறிந்தவர்கள் பலர் இருக்க, H.F.O எனப்படும் இரவுநேர விடுதி நடத்தி கேளிக்கைகளில் ஈடுபட்டிருந்த தயாநிதி மாறனை அவரது குடும்பத்தினர் அரசியலுக்கு ஆயத்தப்படுத்தினர்.


தயாநிதிக்கு தரப்பட்ட முக்கியத்துவங்கள்


அரசியலில் அடிஎடுத்து வைத்தவுடனேயே தயாநிதி மாறனுக்கு மத்திய சென்னை நாடாளுமன்ற தொகுதி தாரை வார்க்கப்பட்டது. முதன்முதலாக பாராளுமன்றத்தில் கால் பதிக்கும் போதே 'காபினெட்' அந்தஸ்த்து அமைச்சரானார் தயாநிதிமாறன். ஸ்டாலினை அரசியலில் முன்நிறுத்தும் போதெல்லாம் கருணாநிதி வாரிசு அரசியல் செய்கிறார் என்று வரிந்து கட்டிய ஊடகங்கள் தயாநிதியை முன்நிறுத்தியபோது பெரியளவு விமர்சனக்கணைகளை வீசவில்லை.


அதே சமயம் தொலைப்பேசியில் ஒரு ரூபாய் கட்டணத்தில் இந்தியா முழுவதிலும் பேசலாம் என்ற திட்டத்தை கொண்டுவந்தது, ரோமிங் கட்டணத்தை சமச்சீராக்கியது, ஏராளமான வெளிநாட்டு நிறுவனங்களை இந்தியாவில் - குறிப்பாக தமிழ்நாட்டில் செய்யதூண்டியது, தகவல் தொழில் நுட்ப வளர்ச்சிக்கு ஆர்வம் காட்டியது... போன்றவற்றால் படித்தவர்கள் மத்தியில் பிரபலமானார் தயாநிதி மாறன்.


திஹிந்துவும், தினமலரும், விகடன் குழும இதழ்களும் தயாநிதியை தாங்கிப்பிடித்து, தனிப்பெரும் திறமையாளராக அடையாப்படுத்தினர். மு.க.ஸ்டாலினைக்காட்டிலும் தயாநிதி மாறன் தமிழகத்திற்கு தலைமை தாங்க பொறுத்தமானவர் என்று மிக வெளிப்படையாக தினமலர் வாசகர் கடிதப்பகுதியில் விலாவாரியான கடிதங்கள் வெளியாகின.


தயாநிதிமாறன் தனிபெரும் திறமையாளரா...?


புதுப்புது அறிவிப்புகள் மூலம் நாளும் தன்னை பிரபலப்படுத்திக் கொண்டார் தயாநிதி. ஆனால் அவரது செயல்பாடுகளால் BSNL எனப்படும் தொலைத்தொடர்பு துறை வளர்ந்ததா? பலன் பெற்றதா என பார்க்கவேண்டும் . 'தனியார் தொலைப்பேசிகள் புழக்த்திற்கு வந்து விட்ட பிறகு அதற்கு ஈடாக BSNLஐ வளர்ப்பதற்கு மாறாக வாட்டி வதக்கினார் தயாநிதி' என BSNLன் உயர் அதிகாரிகளும், ஊழியர்சங்கங்களும் பல முறை குற்றசாட்டியுள்ளனர்.


ரிலையன்ஸ் நிறுவனம் அத்துமீறல் மூலமாக BSNLக்கு சுமார் 7,000 கோடிக்கு மேல் இழப்பு ஏற்படுத்தியது. ஆனால் ரிலையன்ஸுக்கு ஆதரவாக இந்த விஷயத்தை தயாநிதி மூடிமறைக்க முயன்றார். இது போன்ற நடவடிக்கைகளால் இடது சாரி உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் தயாநிதி மாறனை எச்சரிக்கும் சூழலும் ஏற்பட்டது.


சர்வதேச நிறுவனங்கள் ஜி.எஸ்.எம் நெட்வொர்க் அமைப்பதற்கான சாதனங்களை வழங்குதல் மற்றம் ஜி.எஸ்.எம் இணைப்புகள் அமைப்பதற்காக வழக்கமான சந்தை மதிப்பைவிடவும் கூடுதல் தொகையை BSNL லாபம் பெற்று கொள்ளையடித்து வந்துள்ளனர் என இப்போது அம்பலமாகி யுள்ளது புதிய தகவல் தொழில் நுட்ப துறை அஅமைச்சராக வந்த ஆ.ராசா சமீபத்தில் இதை கண்டுபிடித்து ஒரு டெண்டரை நிறுத்தி வைத்ததன் மூலம் BSNL இழக்கவிருந்த ரூ 1, 800காடி காப்பாற்றப்பட்டது. ஆனால் இதற்கு முன் நிகழ்ந்த இழப்புகள் எவ்வளவோ?


மற்றொரு சிறிய புள்ளி விவரத்தை பார்ப்போம் BSNL வலுவான கூட்டமைப்பும், மிகப்பெரிய ஊழியர் பலமும் சுமார் 50000கோடிக்குமேல் கையிருப்புமுள்ள மிகப்பெரிய நிறுவனம் ஆனால் கடந்த டிசம்பர், ஜனவரி, பிப்ரவரி, மார்ச் ஆகிய மாதங்களில் தனியார் நிறுவனங்கள் 8,82,000 புதிய இணைப்புகளை தந்துள்ள நிலையில் BSNLவெறும் 5,006 இணைப்புகள் மட்டுமே தந்துள்ளது இப்படிப்பட்ட திறமையுடன் துறையை நிர்வகித்த தயாநிதிமாறனின் பதவி பறிப்பின் போது சில ஊடகங்கள், "ஐயோ ஒரு நல்ல திறமை யாளரை இழந்துவிட்டோமோ....." என புலம்பி தீர்த்ததை நினைத்தால் வியப்பாக இருக்கிறது


போட்டியாளர்களை பொசுக்குவேன்


'தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சகம் தான் வேண்டும்' என தாத்தாவிடம் வாதாடி பதவிப் பெற்ற தயாநிதிமாறன் செய்த அதிகார அத்துமீறல்கள் அளவற்றவை. தென் இந்திய மொழிகளில் குறிப்பாக தமிழில் சேனல் ஆரம்பிக்க வேண்டி வந்த விண்ணப்பங்களை அலட்சியம் காட்டினார். TRAI லைசென்சும், W.P.C கிளியரன்சும் இல்லையென்றால் தொலைக்காட்சி ஆரம்பிக்க முடியாது. இவை இரண்டையும் அனுமதிக்கும் அதிகாரம் தம்பி தயாநிதியின் கையிலிருந்தது. அண்ணன் கலாநிதியின் கட்டளைப்படி காட்சி ஊடகங்கள் எதையும் கால் பதிக்க விடாமல் தடுத்தாண்டார் தயாநிதி.'மலர் தொலைக்காட்சி' என்பதாக தினமலர் குழுமத்திலிருந்து திட்டமிட்ட சேனல் முயற்சிகளுக்கு மூன்றாண்டுகள் முட்டுக்கட்டை. இதே நிலை ஜெ. தொலைக்காட்சியிலிருந்து திட்டமிட்ட 24மணிநேர நியூஸ் சேனலுக்கும் ஏற்ப்பட்டது. (ஜெயா தொலைக்காட்சி நீதி மன்றம் சென்று போராடியும், அரசியல் பலத்திலும் உரிமம் பெற்று விட்டது) 'தமிழ்த்திரை' தடம் தெரியாமல் மறைந்தது. 'லைசென்சை' புதுப்பிக்க காலதாமதமானதை காரணங்காட்டி 'ராஜ் ப்ளஸ்' சேனல் ஒளிப்பரப்பு ரத்துச்செயப்பட்டது. இப்படியாக சுமார் 60 சேனல்களுக்கு அணைப்போட்டு தடுத்து அண்ணன் கலாநிதிக்கு அனுசரனையாக அதிகாரத்தை கையாண்டார் தயாநிதி.


ராஜ் தொலைக்காட்சியிலும், விஜய் தொலைக்காட்சியிலும் செய்திகள் ஒளிப்பரப்பு தடைசெய்யப்பட்டது விஜய் தொலைக்காட்சியில் 'மக்கள் யார் பக்கம்' என்ற பிரபல அரசியல் நிகழ்ச்சியை 'உடனே நிறுத்தாவிட்டால் விளைவுகள் விபரிதமாகும்' என தயாநிதியே தொலைபேசியில் மிரட்டி நிறுத்தினார். 'சன் தொலைக்காட்சி பார்வையாளர்களை திசை திருப்பும் எந்த ஒரு ஊடக செயல்பாட்டையும் சகித்து கொள்ளமுடியாது' என்பதே தயாநிதி அமைச்சகத்தின் எழுதப்படாத தாரக மந்திரமாயிருந்தது.


கதிகலங்கிய கருணாநிதி


இப்படியாக எவ்வளவு வில்லங்கங்கள் செய்து வியாபாரத்தை விரிவுபடுத்தியபோதும் கருணாநிதி கண்டு கொண்டாரில்லை. உலகப்பெரும் பணக்காரரான பில்கேட்ஸை தமிழகம் அழைத்து வந்து கலாநிதி வீட்டில் விருந்துண்ண வைத்தார் தயாநிதி. ரிலையன்ஸ் குழுமத்துடன் நெருங்கிச் சென்று வியாபார பரிவர்தனைகளை விருப்பம் போல் ஏற்படுத்திக் கொண்டார். பரம்பரை பணக்காரான ரத்தன் டாட்டாவிடம் வியாபார உறவு வேண்டி நிர்பந்தித்த போது, ' இது வில்லங்க கூட்டம்' என அவர் விலகிச் சென்றார்.'விட்டேனா பார் உன்னை' என தயாநிதி தடாலடியாக ரத்தன் டாட்டாவை மிரட்டிய போது கூட, கருணநிதி, பேரனை அழைத்து கண்டித்ததாகச் செய்தி இல்லை.


கட்சியின் மூத்த நாடாளுமன்ற உறுப்பினர்களை, மற்ற அமைச்சர்களை கடுகளவும் மதிக்காமல், தானடித்த மூப்பாக தயாநிதி டெல்லியில் வலம் வந்தபோதும் கருணாநிதி இதையெல்லாம் கவனித்தாக காட்டிக் கொள்ளவில்லை. எல்லாவற்றுக்கும் மேலாக திராவிடஇயக்கச் சித்தாந்தங்களுக்கு எதிரான, பழைமைவாத, மூடநம்ப்பிக்கையை பரப்பும் பத்தாம் பசலித்தனமான கருத்துகளை மீட்ருவாக்கம் செய்வதில் சன்தொலைகாட்சி சளைக்காமல் சாதனை புரிந்த போதும், கருணாநிதி வேதனை கொண்டாவராகக் தன்னை வெளிக்காட்டவில்லை. கூட்டணிகட்சிகளுக்கிகிடையே குளறுபடி உருவாக்கும் செய்திகளை பரப்பிய போதும் கருணாநிதி கோபப்பட்டு எழுந்தாரில்லை. ஆனால், 'தனக்கு பிறகு கட்சித் தலைமையைக் கைப்பற்ற கணக்கு போட்டுவிட்டனர்' என அறிய வந்த போது தான் கதிகலங்கிப் போனார். கட்சியையும், ஆட்சியையும் கபளிகரம் செய்யத்துடிப்பவர்களை வெட்டிவிடுவது தான் விவேகம் என வேகமாக முடிவெடுத்தார்.


எப்போது முதல் இந்தப் பிளவு ?


1993-ல் கட்சியின் சொத்தை வங்கி அடமானம் வைத்து பெரும் தொகை தந்து சன் குழுமத்திற்கு வித்திட்டவர் கருணாநிதி. இன்று சன் குழுமத்திற்கு14 தொலைகாட்சி சேனல்கள், 2 பிரபல நாளிதழ்கள், 3 பருவ இதழ்கள், 4 வானொலி நிலையங்கள், 2 ஜெட் விமானங்கள் சொந்தம். சன்தொலைகாட்சி பப்ளிக் லிமிடெட் கம்பெனியாக 2005 முதல் அறிவித்து கொண்டு களத்திற்கு வந்து விட்டதால் இன்று அதன் மொத்த ஷேர்கள், அவற்றின் மதிப்பு போன்றவற்றை கணக்கிட்டு இந்தியாவின் முதல் 20 பணக்காரர்களில் ஒருவராக கலாநிதி மாறன் கணக்கிடப்பட்டு அறிவிக்கப்பட்டார். அதன் படி , சன் தொலைகாட்சியில் கலாநிதி மாறனின் 90சதவிகித பங்குகளின் மதிப்பு இன்றைய பங்குமார்க்கெட் நிலவரப்படி, கலாநிதியின் சொத்து மதிப்பு சுமார் 9,000 கோடி..! அதாவது இது அதிகாரப்புர்வமான, சட்டப்படியான சன் தொலைகாட்சி மூலமான சொத்துமதிப்பு மட்டும் தான்!


இதை கணக்கிட்டுத்தான் இந்தியாவின் இருபதாவது பணக்காராக கலாநிதிமாறன் அறிவிக்கப்பட்டார். ஆனால் சன்குழுமம் தவிர்த்த 25 நிறுவனங்களையும் அவர் நடத்தி வருகிறார். ஜெமினி தொலைகாட்சி , உதயா தொலைகாட்சி, தினகரன்ன்ன் குழுமம், குங்குமம் உள்ளிட்ட பருவ இதழ்கள் , எப்.எம் வானொலி நிலையங்கள் கால் கேபிள்ஸ் , கால் கம்யூனிகேஷன்ஸ், DMS எண்டர் டெயின்மெண்ட் பிரைவேட் லிமிடேட், D.K. எண்டர் பிரைசஸ் போன்ற 25 நிறுவனங்களிலும் அவர் தான் மிகப் பிரதான பங்குதாரர்கவும், மனைவி, அம்மா மல்லிகா, தம்பி தயாநிதி... உள்ளிட்ட குடும்ப உறவுகளை சிறிய பங்கு தாரர்களாகவும் கொண்டு நடத்திவருகிறார்.இவை அனைத்தையும் கணக்கிலெடுத்தால் கலாநிதிமாறன் குறைந்த பட்சம் 40,000 கோடி ரூபாய்க்கு அதிபதியாகிறார்.


கலாநிதியின் எந்த ஒரு நிறுவனத்திலும் கருணாநிதியின் ரத்த உறவுகள் பங்குதாரர்களாக அனுமதிக்கப்படவில்லை என்பது கவனத்திற்குரியது. தனது சித்தப்பா முரசொலி செல்வத்திற்கும் அவருடைய மனைவியாகவுள்ளதால் செல்விக்கும் ஓரிரு நிறுவனங்களில் மிகச்சில பங்குகளை அனுமதித்துள்ளார். (ஆகவே தான் முரசொலி செல்வம் மாறன் சகோதரார்களை தீவிரமாக ஆதரிக்கிறார்)


ஆரம்பத்தில் சன்தொலைகாட்சியில் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் பிரதான பங்குதாராக இருந்தார். மற்ற சிலரும் இருந்தனர். ஆனால் காலப்போக்கில் இவர்கள் எப்படி கழட்டி விடப்பட்டனர் என்ற சூட்சுமம் தெரியவில்லை. ஆனால் நவம்பர் 2005 -ல் அதிகார பூர்வமாக தயாளு அம்மாள் தனது 20 சதவிகித பங்குகளை விட்டுக்கொடுத்து விட்டு விலகினார் என செய்தி வெளியானது. அதில் ஒரு பகுதியாக பத்துகோடியை தனக்கு தந்தார் என கூறிய கருணாநிதி, அதில் ஐந்துகோடியை தன் பெயரிலான அறக்கட்டளை அமைத்து தமிழறிஞர்களுக்கு உதவப்போவதாக அறிவித்தார். ஆனால் 20 சதவிகித பங்கின் மூலமாக மொத்தம் சிலநூறு கோடி ருபாய் தயாளு அம்மாளுக்கு தரப்பட்டிருக்க வேண்டும். தயாயாளு அம்மாள் தொடர்ந்திருந்தால் இன்றைய பங்குசந்தை நிலவரப்படி (ஒரு பங்கின் மதிப்பு ரூ 1400) அவர் பங்கிற்கு கிடைக்க வேண்டிய தொகை இருமடங்காகியிருக்கும். வேகமாக விஸ்வரூபமெடுத்து வளரும் நிறுவனத்திலிருந்த தனது பங்குகள் முழுவதையும் தயாளு அம்மாள் விருப்பப்பட்டு விலக்கி கொண்டாரா? அல்லது வெறுப்புற்று வெளியேற நிர்பந்திக்கப் பட்டாரா என்ற தகவல் இதுவரை தெரியவில்லை. ஆனால் சன் குழுமம் ஆக்டோபஸ் மிருகமாய் விஸ்தரித்துக கொண்டு போகும் தருவாயில் ஆணிவேராய் தங்களுக்கு ஆரம்பத்தில் உதவிய கருணாநிதியின் குடும்ப உறவுகளுக்கு எந்த பலனுமில்லாமல் பார்த்துக் கொண்டனர் மாறன் சகோதரர்கள்!


தொடர்ந்து செய்த துரோகங்கள்


ஆனால் மாறன் சகோதரர்களால் ஏற்பட்ட மனகசப்புகளை எந்த நிலையிலும் வெளிப்படையாக வெளிப்படுத்தாமல் விவேகமாகவும், பல நேரங்களில் பெருந்தன்மையாகவுமிருந்தார் கருணாநிதி.


தனது கலையுலக அனுபவங்களை தொடராக எழுத விரும்பினார் கருணாநிதி. அதை குங்குமம் இதழுக்கு சில ஆரம்ப அத்தியாயங்களை எழுதித்தந்தார். ஆனால் அதை பல மாதங்களாக பிரசுரிக்காமல் அலட்சியப் படுத்தினார் கலாநிதி. கலாநிதியின் கட்டளையால் தான் தனது கட்டுரைகள் பிரசுரமாகவில்லை. என்பதை அறிந்த கருணாநிதி அதை ஆனந்த விகடனுக்கு அனுப்பி வைக்க, அது விகடனில் வாராவாரம் வெளியாகி வாசகர்களால் விரும்பி படிக்கப்பட்டது.


பல நேரங்களில் கருணாநிதியின் முக்கிய அறிக்கைகள் போதுமான முக்கியத்துவமின்றி சுருக்கி சொல்லப்படுவது, அவர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளில் சிலவற்றை ஓளிபரப்பாதது, பேராசிரியர் அன்பழகன், மு.க. ஸ்டாலின் போன்றவர்களின் நிகழ்ச்சிகளையும்,அறிக்கைகளையும் கூடுமானவரை தவிர்த்தது, நாடறிந்த கவிஞரான கனிமொழி 'கருத்து' என்ற அமைப்பை தோற்றுவித்த போதும், சென்னை சங்கமம் நிகழ்ச்சியை நடத்திய போதும் இயன்றவரை இருட்டடிப்பு செய்தது... போன்ற பல சம்பவங்கள் கருணாந்ிதியை பலமாக பாதித்த போதும் வெளிப்படையான மோதலை அவர் விரும்பவில்லை.கருணாநிதிக்கு நெருக்கமானவராக அறியப்பட்டதால் மாலன், கலாநிதிமாறனால் அவமானப் படுத்தப்பட்டு வெளியேற்றப்பட்டார். கருணாநிதி சிபாரிசு செய்யும் யாரையும் சன் செய்தி பிரிவிலோ அல்லது வேறுபிரிவிலோ சேர்ப்பதில்லை என்பதை அறிவிக்கப்படாத கொள்கையாக கடைபிடித்தார் கலாநிதி .


சன் டிவியின் சமூக சேவை


பெரியார், அண்ணா கொள்கை வழி வந்த குடும்பத்தின் வாரிசுகளல்லவா... பகுத்தறிவு கருத்துகளை பரப்ப வேண்டாமா? அன்று அண்ணாவின் வேலைக்காரி, ரங்கோன்ராதா, கருணாநிதியின் பராசக்தி, மனோகரா, கலைவாணரின் கருத்தான நகைச்சுவைகள் போன்றவை சமூகத்தில் ஏற்படுத்திய விழிப்புணர்ச்சியை சவக்குழிக்குள் தள்ளுவதற்காகவே அவதார மெடுத்து 'சன் தொலைகாட்சி ' வேப்பிலைக்காரி, கோட்டை மாரியம்மன், விக்கிரமாதித்தன், சொர்க்கம்...... போன்ற தொடர்கள் மூலமாக 'சன்' சமூகத்திற்குத் தந்த விழிப்புணர்ச்சி கொஞ்சமா,நஞ்சமா?

ஜோசியதை மதிக்காதவங்க நாசாமப் போயிடுவாங்க...

சூனியவாதிங்க, மந்திரவாதிங்க கோபத்துக்கு ஆளானால் அதோகதிதான்!

சாமியார்கள் நினைத்தால் எந்த அதிசயத்தையும் சாத்தியப்படுத்தலாம்...

அடடா, எவ்வளவு மகத்தான கருத்துகள்.........

இவையெல்லாம் விஷத்தையே வெட்கப்படவைக்கும் வீரிய நச்சல்லவோ!

தமிழ் தெரியாதவர்கள் தான் நிகழ்ச்சி அறிவிப்பாளர்களாக இருக்கமுடியும் என்ற போக்குகள். இவை மட்டுமின்றி குடும்பங்களின் அமைதியைக்குலைக்கும் குரோதச் சிந்தனைகளின் குவியல்களாக எண்ணற்ற தொடர்கள், அவற்றில் விதவிதமாக வெளிப்படும் பாலியல் பிறழ்வுகள், பழிவாங்கும் போக்குகள், கொலை,கற்பழிப்பு,வன்முறை....

என்ன பாவம் செய்தார்களோ.... தமிழக மக்கள்!



சன் தொலைக்காட்சியோடு நிற்கவில்லை இவர்களின் சமூகசேவை. "எந்நேரமும் மக்கள் சினிமா பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும், அவர்களின் சிந்தனை மழுங்கவேண்டும்" என்ற கருணை உணர்வில் 'கே' சேனல்,


'நாட்டின் வளர்ச்சிக்கு அடிபடையாக உள்ள இளம் தலை முறையினர் எப்போதும் இன்பம் எனும் சினிமா இசை வெள்ளத்தில் மூழ்கிச் சீரழிய வேண்டும்' என்ற சீரிய முயற்சியில் 'சன் மியூசிக் சேனல்' , 'தங்கள் அரசியலுக்கு உகந்த செய்தியை மட்டுமே மக்கள் எப்போதும் அறிந்து கொள்ள வேண்டும்' என்ற பெருந்தன்மையோடு 'சன் நியூஸ் சேனல்',

இப்போது குழந்தைகளையும் குட்டிச்சுவராக்கிவிட 'சுட்டி சேனல்' இவற்றை பார்க்காவிட்டால் மக்களின் பகுத்தறிவு மங்கிவிடும்' என்று தான் இலவச தொலைக்காட்சியை அறிவித்தாரோ..... என்னவோ கருணாநிதி.


யாருக்கு யாரால் நன்மை :


1996 தொடங்கி ஒவ்வொரு சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தலிலும், உள்ளாட்சி தேர்தல்களிலும் தி.மு.க வின் வெற்றிக்கு சன் தொலைகாட்சியின் பலம் பிரதானமாகக் கருதப்பட்டது. பெருவாரியான பார்வையாளர்களை தன் வசம் வென்றெடுத்திருந்த சன் குழுமத்தின் செய்திகள், நேர்காணல்கள், விவாதங்கள், கருத்துகணிப்புகள் போன்றவை தி.மு.கவின் வெற்றிக்கு கணிசமான பங்காற்றியது.


கருணாநிதி 100 கூட்டங்களில் பேசினாலும் ஏற்படுத்தமுடியாத தாக்கத்தை சன் தொலைகாட்சியின் பத்து நிமிட ஒளிபரப்பு ஏற்படுத்துகிறது.... அவரது காலடி தடம் படமுடியாத குக்கிராமங்களுக்கெல்லாம் தங்கள் சேனல் தான் அவரது கருத்துகளை கொண்டு சேர்க்கிறது... என்றும், சன் குழுமத்தின் பிரச்சார பலமில்லாமல் தி.மு.க வால் தேர்தலை எதிர்கொள்வது இயலாததென்றும் மாறன் சகோதரர்கள் மனக்கணக்கு போட்டனர். ஆக, எப்படியாயினும் தங்களை அனுசரித்து போவதை தவிர கருணாநிதிக்கு வேறுவழியில்லை என்றமுடிவுக்கு வந்தனர்.


அதுவும் சமீபத்திய தேர்தல்களில் போட்டியிட்ட குறிப்பிடத்தக்க வேட்பாளர்களுக்கு சன் குழுமத்திலிருந்து நிறைய பண உதவியும் தரப்பட்டுள்ளது. திமு.க தலைமை கஞ்சத்தனமானது என்ற பெயரை மாற்றி தராளமாக கட்சிக் கரார்களுக்கு பணம் தந்தனர் மாறன் சகோதரர்கள். திமு.க தலைமையகத்தை 'கார்ப்பரேட்' அலுவலகமாக ஆக்கியதுபோல் மாவட்ட கட்சி அலுவலகங்களையும் மாற்ற திட்டமிட்டனர் மாறன் சகோதரர்கள். பிரச்சாரம் செய்ய கருணாநிதிக்கு சொசுகு கார் தந்ததுபோல் மாவட்ட செயலாளர்களுக்கும் கார்கள் தரவும் அவர்களுக்கு அந்த அந்த மாவட்டத்து கேபிள்நெட் வோர்க் தொழில் வாய்ப்பை தரவும் திட்டமிட்டனர் மாறன் சகோதரர்கள். இந்த சூழலில் தான் கருணாநிதியின் அடுத்த வாரிசு பற்றிய கருத்துகணிப்பை நடத்தியது தினகரன் நாளிதழ். 'சோழியன் குடுமி சும்மா ஆடுமா...' என கருணாநிதி உசாரானார்.


தயாநிதியின் தணியாத பேராசை


மத்திய தகவல் தொழில் நுட்ப அமைச்சர் பதவியை தங்கள் வியாபார விஸ்தரிப்பிற்கும், பாதுக்காப்பிற்கும் போட்டியாளர்களை பொசுக்குவதற்கும் தயாநிதி தயங்காமல் பயன்படுத்தினார். அதே சமயம் மிகப்பெரும் தொழில் அதிபர்களிடம்-அவர்களது நிறுவனங்களில்- அண்ணன் கலாநிதியையும் பங்குதாராக சேர்க்கும் படி பகிங்கமாகக் கேட்டார்.


ஏர்டெல் நிறுவனத்திலிருந்து 500 செல்போன்களை இலவசமாக சன் குழுமத்திற்கு பெற்றுத்தந்தார். ஸடார், விஜய், ராஜ் தொலைக்காட்சிகள் கட்டண தொலைக்காட்சிகள். அதற்கான கட்டணங்களை எஸ்.சி.வி. வாடிக்கையாளர்களிடம் வசூலித்த போதும் மேற்படி நிறுவனங்களுக்குத் தருவதில்லை. எஸ்.சி.வி.யே விருப்பப்பட்டு எப்போதாகிலும் கொடுத்தால் தான் உண்டு. அமைச்சரின் கோபத்திற்கு ஆளாவது தொழிலுக்கே ஆபத்து என அவர்களும் அடங்கிப் போனார்கள்.


மன்னராட்சி மனோபாவம் மாறன் சகோதரர்களுக்கும் ஏற்பட்டுவிட்டது. கருணாநிதியின் அடுத்த தகுதியான வாரிசாக தயாநிதி இருக்க , அதற்கு தடைக்கற்களாக ஸ்டாலினும், அழகிரியும், கனிமொழியும் இருப்பது தங்கள் லட்சியத்திற்கு இடையூராகக் கருதினார்கள்.


ஓரணியில் ஒன்றாக இருக்கும் ஸ்டாலினையும், அழகிரியையும் பிரிப்பது, இருவரையும் ஒருவருக்கொருவர் எதிரியாய் மாற்றுவது, கருத்துக்கணிப்பின் விளைவாய் அழகிரி ஆதரவாளர்கள் செய்யும் அராஜகங்களை அடிப்படையாக வைத்து அவரது அரசியல் செல்வாக்கை அழிப்பது...... போன்றவையே மாறன் சகோதரர்களின் திட்டம்.


மதுரை மாவட்டத்தில் எஸ்.சி.வியின் ஏகபோகத்தை தடுத்து, சிறுகேபிள் ஆபரேட்டர்களின் தொழிலுக்கு அரணாக அழகிரி செயல்படுவதும் மாறன் சகோதரர்களின் மட்டற்ற கோபத்திற்கு மற்றொரு காரணமாயிருந்தது.


மதுரை தினகரன் அலுவலகம் தீயிட்டு கொளுத்தப்பட்டு, மூவர் உயிர் பலியான பிறகு அழகிரியை சட்டத்திற்கு மீறிய அதிகாரமையமாய் செயல்படுகிறார் என்று மீண்டும், மீண்டும் ஒலமிட்ட சன் தொலைக்காட்சியும், தினகரனும், இத்தனை ஆண்டுகளில் சட்டத்திற்கு அப்பாற்பட்ட அதிகார மையமாக அழகிரி செயல்ப்பட்டு வந்த போது அதை ஒருநாளும் சுட்டிக் காட்டியதில்லை என்பது கவனத்திற்குரியதாகும்.


அரசியலில் லாபமும், நஷ்டமும் சகஜமே ஆனால் கருணாநிதி தயவால் லாபத்தை மட்டுமே அனுபவித்து வந்த மாறன் சகோதரர்கள், நஷ்டத்தை கண்டு கதிகலங்கி குமுறி தீர்த்தனர். "அழகிரியை சிறைக்குள்தள்ளாமல் நாங்கள் ஓயப்போவதில்லை....." என மார்த்தட்டினார்கள்.அழகிரி ஆதரவாளர்கள் செய்தது அக்கிரமாக இருக்கலாம் ஆனால் அதை எதிர்த்து தர்மாவேஷம் கொள்வற்கு மாறன் சகோதரர்களுக்கு தார்மீக தகுதி இல்லாமல் போய்விட்டது.


தன்னால் உருவாக்கப்பட்டவர்கள் தன்னை கடந்து சென்று தன் மகன் அழகிரியை அழித்தொழிக்க நினைப்பதை தனது ஆளுமைக்கு விடப்பட்ட அறை கூவலாகத்தான் கருணாநிதி எதிர்க்கொண்டார். பொது மக்கள் மத்தியிலேயே பட்டப்பகலில் பகிங்கரமாக தனது கட்சிக்காரர்களால் பத்திரிக்கை அலுவலகம் தாக்கப்பட்டு கொளுத்தப்பட்டதையும், அதில் அப்பாவிகள் மூவர் உயிரிழிந்த அவலத்தையும், அதை தடுக்கத்தவறி காவல் துறையினர் செயலற்று வேடிக்கை பார்ததால் தன் ஆட்சிக்கு ஏற்பட்டுள்ள அவப்பெயரையும் சி.பி.ஐ விசாரணைக்கு ஆணையிட்ட தன் மூலம் சீர்படுத்தி விட்டதாக மக்களை நம்ப வைக்க முயற்சித்தார். அவர் அழகிரியை அரவணைப்பதால் அழகிரியின் அராஜகங்களை அங்கிகரித் துள்ளதாக மக்கள் கருதினார்கள். துரோகம் செய்தவர்களைத் தூக்கி எறியவேண்டும் என்ற கோப உணர்ச்சி தான் அவரிடம் மேலோங்கி நின்றது.தன்னை தவிர தாங்கிப்பிடிக்க ஆளில்லாத தயாநிதிமாறனை அமைச்சர் பதவியிலிருந்து அகற்ற அவருக்கு சிறிதளவும் சிரமம் ஏற்படவில்லை. கட்சியின் அனைத்து மட்டத்தினரிடையேயும் மாறன் சகோதரர்கள் குறித்த மனக்கசப்பு மண்டிக்கிடந்தது. அது அவர்களை, கருணாநிதியே கைவிட்டபின்பு பொது குழுவில் பொங்கி பிரவகித்தது. மாறன் சகோதரர்களின் வளர்ச்சி கட்சிக்கும், ஆட்சிக்கும் ஆபத்து என தி.மு.க திட்டவட்டமாக தீர்மானித்தது. மாறன் சகோதரர்களின், பேராசை பெருநஷ்டத்தில் முடிந்தது.


கலாநிதியின் கணக்கற்ற தில்லுமுல்லுகள்


ஜெமினி தொலைக்காட்சியில் ரவிபிரசாத், மனோகர்பிரசாத் என்ற சகோதரர்கள் பங்கு தாரர்கள். இவர்கள் இருவரும் இந்தியன் வங்கியில் ரூ700கோடி கடன் பெற்று இன்று வரை வட்டி உட்பட கட்டவில்லை. இதை இந்தியன் வங்கி தமிழ் தினசரியில் விளம்பரமாகவே வெளியிட்டது. ஜெமினியில் கலாநிதி மாறனின் பங்கு 56.5 சதவிகிதமாகும். ஜெமினி நல்ல லாபகரமாகவே தொழில் செய்து பணம் ஈட்டுகிறது.இன்று வரை பிரசாத் சகோதரர்கள் இதன் இயக்குநர்களாகதான் இருக்கிறார்கள். மாறன் சகோதரர்களின் அதிகார செல்வாக்கின் முன்பு சட்டம் தன் கைகளை கட்டிக் கொண்டு விட்டது. இதே ஜெமினியில் மற்றொரு பங்குதாரராக சேர்ந்து பெரும் பணத்தை முதலீடு செய்து, கடுமையாகப் பாடுபட்டு சேனலை தூக்கி நிறுத்திய சரத் என்ற கலாநிதியின் நண்பர் ஏமாற்றப்பட்டு வெளியேற்றப்பட்டார்.


பங்குசந்தையில் சன் குழுமத்தை முக்கியப்படுத்துவதற்காக, உண்மைக்கு மாறான தகவல்களையும், கணக்குகளையும் கலாநிதி காண்பித்துள்ளார். இதன் மூலம் மத்திய அரசின் SEBI அமைப்பையும், மக்களையும் முட்டாளாக்கி சன் குழுமத்தின் சந்தை மதிப்பை பிரம்மாண்டமாக உயர்த்திக்கொண்டார்.1993ல் தொடங்கிய சன் குழுமத்தை 1985லிருந்து செயல்படுவதுபோல் அவரால் எப்படிதான் கணக்கு காட்ட முடிந்ததோ..... தெரியவில்லை. சன் குழுமத்தின் கேபிள் ஆபரேஷன் கணக்குகளில் இது வரை பாதிக்கும் குறைவான வாடிக்கையாளர் கணக்கே வருமான வரித்துறைக்கு காட்டப்பட்டு வருகிறது. இதன் மூலம் பல கோடி வருமானவரி ஏய்ப்பு செய்து வருகின்றனர்.


புதிதாக வரும் திரைப்படங்கள் சன் தொலைக்காட்சிக்குதான் விற்க்கப்படவேண்டும் என நிர்பந்திக்கிறார்கள். இந்த நிர்பந்தங்களுக்கு உடன் படாதா திரைப்படம் எவ்வளவு நன்றாக இருந்தாலும் சன் தொலைக்காட்சியின் 'டாப் 10 மூவிஸ்' திரை விமர்சனத்தில் கடைசி எண் தந்து கண்டபடி தாக்கி விடுகின்றனர்..! போதாகுறைக்கு தினகரன், குங்குமம் இதழ்களும் குதறி தீர்த்து விடுகின்றன சம்மந்தப்பட்ட திரைப்படத்தை ! இந்த ஊடகப் பலத்தை கண்டு மிரலும் தயாரிப்பாளர்கள் சன் குழுமத்திடம் சரணாகதியாகிவிடுகின்றனர்.


போட்கிளப்பில் 36கிரவுண்ட் பரப்பளவில் கலாநிதி மாறனின் 25,000சதுர அடியில் கட்டப்பட்ட பிரம்மாண்டமான பங்களா உள்ளது. ஐந்து நட்சத்திர ஹோட்டலைப் போல் அமெரிக்கா மற்றும் லண்டனிலிருந்து தருவிக்கப்பட்ட பைபர் மற்றும் விலை உயர்ந்த மரப்பொருட்களைக் கொண்டு அழகூட்டப்பட்டு சொர்க்கபுரியிலிருக்கும் சொகுசு மாளிகைப் போல் வடிவமைக்கப்பட்டுள்ளது. சென்னையே தண்ணீர் பஞ்சத்தில் வாடினாலும் இந்த பஙுகளாவில் உள்ள நீச்சல் குளத்தில் எப்போதும் நீர் நிறைந்திருக்கும். இந்த ஆடம்பர பங்களாவை விவரிக்க ஆரம்பிப்பது பக்கங்களை வீணாக்கிவிடும் என்பதால் இத்தோடு விட்டு விடுகிறேன். ஆனால் ஒரு காலத்தில் காமராஜர் வாழ்ந்த திருமலை பிள்ளை சாலை இல்லத்தை புகைப்படமெடுத்து, 'ஏழைபங்காளன் வாழும் பங்களா பார்த்தீர்களா....? என்று ஏளனம் செய்தவர்களின் நினைப்பு ஏனோ வந்து தொலைகிறது.


சுமார் 40,000கோடிக்கு அதிபதியான கலாநிதி மாறன் தன் தந்தை முரசொலி மாறனின் மருத்துவ செலவுக்காக மத்திய அரசு செலவிட்ட ரூபாய் 40கோடியை இன்று வரை திருப்பிதர மனமில்லாதவராய் இருக்கிறார்.


வாரிசுபோட்டி வந்தது எதனால்?


அறிஞர் அண்ணா, திராவிட முன்னேற்ற கழகத்தை ஒரு ஜனநாயக இயக்கமாக தொடங்கி நடத்தினார். அவர் தனிப்பெரும் தலைவராக அறியபட்டநிலையிலும் என்.வி.நடராஜன், இரா.நெடுஞ்செழியன், கே.ஏ. மதியழகன் போன்றவற்கு சம மதிப்பளித்து அவர்களை அடுத்து தலைதாங்க தக்கவருகளாக ஆயத்தப் படுத்தினார். கருணாநிதியின் திறமைகளையும், ஆற்றல்களையும் அறிந்த அண்ணா அவர் உட்பட எவரையுமே தன தலைமைக்கு ஆபத்தான தம்பியாக கருதவில்லை.


எம்.ஜி.ஆரின் செல்வாக்கு தனக்கு ஆபத்தாகி விடுமோ என அவரை புறக்கணித்தார் கருணாநிதி. கட்சி இரண்டானது.கருணாநிதியின் தலைமையை ஏற்றுக்கொண்டபிறகும் நாவலர் நெடுஞ்செழியனை நல்ல முறையில் நடத்தவில்லை அதனால் அவரும் 1977ல் வெளியேறினார். வைகோவின் வளர்ச்சி தன் வாரிசுகளுக்கு ஆபத்துஎன்று அவரையும் அகற்றினார். இப்படி கருணாநியின் குடும்ப உறவுகள் கட்சியில் கோலோச்சமுடியும் என்ற நிலை ஏற்பட்டதால் தான் தயாநிதி மாறன் போன்றவர்கள் தான்தோன்றிதனமாக உயர் நிலைக்கு வரமுடிந்தது. கொள்கை அடிப்படையில் ஒரு இயக்கம் செயல் பட்டால் அங்கே குடும்ப ஆதிக்கம் வராது. அதுவே கொள்ளை அடிப்படையில் செயல் பட்டால் உடைமை உணர்வும், உறவுமனப்போக்கும் மேலோங்கி விடுகின்றது.


இப்போது கலைஞர் தொலைக்காட்சி ஆகஸட் 15லிருந்து ஒளிப்பரப்பாகும் என கருணாநிதி அறிவித்துள்ளார். சுமார் 60 சேனல்கள் மூன்றாண்டுகளாக அனுமதி மறுக்கப்பட்டு காத்திருப்பு பட்டியலில் இருக்கும் நிலையில், கருணாநிதி நினைத்தவுடன் ஒரு தொலைக்காட்சியை தொடங்க முடிகிறது. ஜெயலலிதா ஆட்சியில் கேபிள் டி.வி.நெட்வொர்க்கை தமிழக ஆரசு பொறுப்பில் எடுத்துக்கொள்ளும் என்று அவசரச் சட்டம் கொண்டுவந்தபோது அதை அடுத்த நாளே கவர்னரை சந்தித்து ஒப்புதல் அளிக்கவேண்டாம் என்று கேட்டவர் கருணாநிதி. அது எவ்வளவு பெரிய தவறு என இன்று அவர் உணர்ந்திருக்ககூடும். ஒரு வேளை அதே சட்டத்தை கருணாநிதியே இப்போது அமல் படுத்த முனைந்தாலும் ஆச்சிரியப்படுவதற்கில்லை.


மேலைநாடுகளில், அமெரிக்கா, ஐரோப்பாவில், ஒரே குடும்பத்திலுள்ளவர்கள் அரசியல், ஊடகம் இரண்டிலும் மேலாதிக்கம் செய்வதை தடுக்கும் சட்டம் ஒன்று உள்ளது. அமெரிக்கா, ஆஸ்திரேலியா, பிரான்ஸ், ஜெர்மன் உள்ளிட்ட நாடுகளில் ஊடகத்துறையில் தனியொரு நிறுவனமே ஒட்டுமொத்த பார்வையாளர்களையும் கபளிகரம் செய்வது மாதிரியான போக்குகளுக்கு தடை ஏற்படுத்தும் சட்டங்கள் உள்ளன. குறிப்பாக ஒரேநிறுவனம், ஒரேபிரதேசத்தில் பல சேனல்களை ஆரம்பிப்பது, காட்சி ஊடகம், அச்சு ஊடகம், வானொலி போன்ற அனைத்திலுமே ஒரே குடும்ப நிறுவனம் தனி மேலாதிக்கம் (Monopoliy) செய்வதை தடுப்பது மாதிரியான சட்டங்கள் 1980,1990களிலிருந்து அமலில் உள்ளது. இது போன்ற சட்டத்தை இந்தியாவிலும் அமல்படுத்த வேண்டி சில ஆண்டுகளாக பாராளுமன்ற உறுப்பினர்கள், சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றன. இதற்கு எல்லா தரப்பிலும் வலுவான ஆதரவு வெளிப்படவேண்டும்.